ஆணாதிக்க மனோபாவத்தோடு பார்த்தாலோ அல்லது பெண்ணுரிமைக்கு ஆதரவளிக்கும் ஆண் மையச் சிந்தனையோடு பார்த்தாலும் கூட இது ஒரு தவறான படமாகத் தோன்றக்கூடும். ஒரு கட்டிங் வேணும் என்று டாஸ்மார்க் வாசலில் நின்றால் எப்படிச் சமூகம் பார்க்குமோ அப்படிதான் 90ML டிக்கட் வாங்கும்போது இருந்தது. அரங்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய பெண்களைத் தவிர முழுக்க முழுக்க இளைஞர்கள்தான். A சான்று வழங்கிய படத்திற்கு இரவுக்காட்சி வந்துவிட்டோமே என்று கூட ஒரு வினாடி தோன்றியது.

நாமதான் உலகத் திரைப்பட விழாக்களில் பல படங்களைப் பார்த்து இருக்கிறோமே, அதில் வரும் உடலுறவுக் காட்சிகளை சர்வ சாதாரணமாக இயல்பாக கடந்து போயிருக்கிறோமே என்றுதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் இதுவும் அப்படி ஒரு இயல்பான படமே. ஆனாலும் முன் எச்சரிக்கைக்காக அ சான்று வாங்கியது கூடுதல் சிறப்பு. காரணம் பல படத்தில் பாடல் காட்சியில் வரும் அரை நிர்வாண உடையை பார்த்திருக்கிறோம். கட்டிபிடிப்பதே வைத்தியம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோம். என்ன மருத்துவ முத்தம்தான் இங்கு அதிகமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வா குவட்டர் கட்டிங், கோவா, சரோஜா எனத் தொடங்கி பல படங்களில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் ஆண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். அதுமட்டுமல்லாமல் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை கொச்சைப்படுத்தியே பெயர் எடுத்த கதாநாயகர்களும் உண்டு. அப்படங்களை யாரும் கலாச்சார சீர்கேடு, குடும்பத்தோடு பார்க்கக் முடியாத படம் என்று கொக்கரிக்கவில்லை. ஆனால் இப்படத்தில் பெண்கள் கூடினால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை, நகைச்சுவை உரையாடல்களே இந்த படம்.

தண்ணி அடிக்கும் ஆண்கள் தவறானவர்கள் என்று சொல்வதில்லை, தியானம் என்ற பெயரில் கஞ்சா அடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் சாமியார்களை யாரும் தவறானவர்கள் என்று சொல்வதில்லை. அதனால்தான் அவர்கள் ஒரு படி மேல போய் கும்பமேல, மகா சிவராத்திரி போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களை கூட்டி வைத்து சாமியார்கள் ஆட்டம்போடும் காட்சி தொலைக்காட்சியில் அமோகமாக விளம்படுத்தி Marketing செய்து வருகின்றனர்.

ஏன் மங்காத்தா தல அஜித் சரக்கடித்தால் ஏற்றுக் கொள்ளும் சமூகம். Big Boss தலைவி ஓவியா செய்தால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இப்படத்தில் வரும் மனநல மருத்துவர் நீங்கள் குடிக்க மாட்டிங்களா என்று கணவனை பார்த்துக் கேட்கும்போது,  நான் குடித்துக் கொண்டுதான் இருந்தேன். மனைவி குடிக்க ஆரம்பித்த பிறகு சரக்கை பார்த்தால்  அறுவறுப்பா இருக்கு என்பான்.

Why should boy alone have all the fun…

ஆண்களுக்கு மட்டும்தான் எல்லா கொண்டாட்டங்களுமா? போன்ற பைக் விளம்பரத்தை தொலைக்காட்சியில் சமீபத்தில் பார்த்தேன். இந்த படம் அந்த விளம்பரத்தின் பிரதிபலிப்பாக பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களை மையப்படுத்தி எல்லா பரிமாணங்களிலும் காட்சிப்படுத்தும் படமாக இப்படம் இருக்கிறது.

பானுமதியின் அலிபாபா 40 திருடர்கள் படம் பார்க்கும்போது ஏற்படக்கூடிய உணர்வே இப்படம் பார்க்கும்போது ஏற்பட்டது. ஆணாதிக்க மனோபாவத்தோடு இப்படத்தை பார்ப்பவர்களுக்கு இது ஒரு தவறான படமே…

90ML… பெண்களுக்கும் மனசு, உணர்வு, தைரியம், கோபம் உள்ளது என்பதை சொல்லும் படம். பெண்களை விட ஆண்கள் பார்ப்பதே அவசியம் என்பதை உணர்ந்து ஆண்களை பார்க்க வைக்க தூண்டும் விதத்தில் படம் எடுத்ததற்கே இந்த படத்தின் இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் இப்படத்தில் இயக்குநர் பெண் என்பது தனி சிறப்பு.

பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்ற தனுஷ் வசனம்தான் இப்படத்தில் ஓவியாவுக்கு பொறுந்தும். ஒரு குடியிருப்பில் புதிதாக வாடகைக்கு வரும் ஓவியாவை முதலில் பார்க்கும் பெண்களின் மனநிலை. பிறகு அவளின் வெளிப்படையான இயல்பான வாழ்க்கையை பார்த்து நண்பர்களாகிவிடுகிறார்கள்.

நட்புக்காக, நண்பேண்டா என்று ஆண்கள் மட்டும் மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். திருமணம் நடந்தவுடன் சொந்த வீடே அந்நியமாகும்போது நட்புமட்டும் தொடருமா என்ன? இப்படத்தில் நட்புக்காக எதையும் தைரியமாக எதிர்க்கொள்வோம், எங்கள் நட்பை எதற்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று உறுதியான பெண்களாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் என்னோடு பைக் டிரைவிங் செய்ய விருப்பப்படும் தோழிகளின் மனநிலையும், கேட்க ஆள் இல்லாமல் கிடந்தேன். உன் நட்பால் என் குடும்பம் பயந்து என்னை மதிக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒரு முறை வந்து தலையை காட்டிவிட்டு போ என்று என் தோழிகள் என்னிடம் சொன்னதும் இப்படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது.

அசிங்கம், அவமானம், கௌரவம் என்பதை பெண்களுக்கு சொல்லி சொல்லி வளர்க்கும் இந்த கலாச்சார சமூகம் வெறும் குடும்பத் தலைவி என்ற பட்டம் மட்டும் கொடுத்து அடக்கி வைத்திருப்பவர்களின் ஆழமான மனதை தெரிந்துக் கொள்ள கட்டாயம் 90ML தேவைப்படுகிறது.

குடிகாரிகளாக சித்தரிக்காமல் நண்பர்கள் கூடுகையில் Social drink என்பதுபோலதான் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  குடித்த பிறகே பெண்கள் அவரவர் பிரச்சனையை வெளிப்படையாக பேச முன் வருகிறார்கள் என்பதை பார்க்கும்போது பெண்களுக்கு வடிகால் இல்லை என்ற உளவியலை  போறபோக்கில் சொல்லிச் செல்கிறது இப்படம்.

குடித்துவிட்டு வரும் கணவன் செய்யும் அட்டுழியத்தை சகித்துக் கொண்டு வாழும் மனைவியின் நிலை எப்படி இருக்கும் என்பதை இப்படத்தில் ஆணுக்கு உணர்த்தியுள்ளது. பல வகையான அழகான உடைகளை உடுத்திக் கொண்டு நாமும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

தான் வாழும் இடத்தில் புடவை தவிர எந்த உடையும் உடுத்தாத பெண்கள் எங்காவது வெளியூர் பயணம் என்றால் சுடிதார் போன்ற உடையை உடுத்துவார்கள். சுடிதார் உங்களுக்கு அழகாக இருக்கே. உள்ளுரில் பயன்படுத்தலாமே என்றால் ஐயோ, அது அசிங்கம் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க என்று சொல்வார்கள். இப்படித்தான் தனக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவர்களுக்கு பிடிப்பதைதான் செய்ய வேண்டும் என்ற கலாச்சார திணிப்பில் எல்லா பெண்களும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

எதற்கு நடிக்கணும் யாருக்காக நடிக்கணும்… எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வேன். தனியாதான் உள்ள வந்தேன் தனியாதான் போகப்போறேன் நடுவில் உள்ள பூந்து கேள்வி கேட்க நீயாரு… எப்ப போவேன் தெரியாது எப்படி போவேன்னு தெரியாது என்பதே கதாநாயகியின் நிலை.

தன் பொருள் என்று வந்தவுடனே அதன் மீது ஆதிக்கம் செய்யும் மனோபாவமும் சேர்ந்து வந்துவிடும். ஆகையால் நான் யாருடைய சொத்தும் அல்ல. என்னை யாரும் தன்னுடைய பொருளாக பயன்படுத்த முடியாது என்று  வாழும் பெண்தான் கதாநாயகி.

மேலும் இதுபோன்ற படத்தின் மூலமாக தற்பாலின ஈர்ப்பு உள்ளவர்களின் உணர்வு, பிரச்சனை, வலி போன்றவற்றோடு கூடவே உச்சநீதிமன்றம் தீர்ப்பும் அவர்களுக்கான உரிமையும் இளைஞர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த 4 பேர் வாழ்க்கை வழியே பொதுவான பெண்களின் நிலையை உணர முடிகிறது. இந்த படத்தில் நடித்த அத்தனை பெண்களுக்கும் என் மனபூர்வமான வாழ்த்துகள்…

காதல், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம், அடிதடி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்று குடியை போதிக்கும் தமிழக அரசுக்கு கட்டிங் அடித்து கத்திச் சொல்லும் Adults only படம்தான் 90ML.

– ஹேமாவதி

Related Posts