அரசியல்

தேர்தல் முடிவுகளால் 5 விசயங்களை மாற்ற முடியாது…

Five
இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, நாளை முடிவுகள் வெளியாகப்போகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்(?!?) யாவும், பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெறப்போவதாக தத்தமது விருப்பத்தினை தெரிவித்துவிட்டன. அதன் விளைவாக உயர்ந்திருக்கிற பங்குசந்தைக்குறியீடுகளே, அது யாருக்கான விருப்பம் என்பதனை தெளிவாக்கியுமிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இரவு பகல் பாராது, மோடி என்கிற மாய இயந்திரத்தை முறியடிக்க, முற்போக்கு எண்ணங்கொண்ட பலர் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.  பாசிசத்தை எதிர்த்த அவர்களது போராட்டத்தில், கடுமையான தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் தான், நம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டியவர்கள். இது அயர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்திருப்பது உண்மைதான். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்றதொரு தேர்தல் முடிவுகள் வருமோ என்கிற அச்சம், மிகப்பெரிய அயர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்திருப்பது உண்மைதான். ஊடகங்களைப் பயன்படுத்தி ஊதிப்பெருக்கியும், கோடிக்கணக்கில் பணத்தினை வாரியிறைத்தும் நடத்தப்பட்ட தேர்தலாகத்தான் இது இருந்திருக்கிறது. இதனை மிகச்சிலர் அறிந்து கொண்டு, இத்தேர்தலை அணுகினர். ஆனாலும், இந்தியாவின் சமீப காலத்தைய தேர்தல் அரசியலில் வலதுசாரிகளின் கையோங்குவதையும் மறுப்பதற்கில்லை. கடந்த சில ஆண்டுகளின் இந்திய அரசியலின் போக்கை உற்றுநோக்கினால், தற்போதைய தேர்தலின் முடிவுகள் என்னவாகவிருப்பினும், மிகமுக்கியமான மாற்றங்களைத் தந்துவிடப்போவதில்லை என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்….

1. வகுப்புவாதம்:

முசாபார்நகரில் ஏற்பட்டதை போன்ற வகுப்புவாத கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதோடு, அவை மக்களிடையே பிரிவினை எண்ணங்களை உருவாக்கி, சிலரின் ஓட்டு இலாபத்திற்கும் உதவி புரிவதாகவும் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் வளர்ச்சி பெற்றால், இது போன்ற பல கலவரங்கள் உருவாகும் நிலை ஏற்படும். இந்தியா ஒரு இந்து நாடு என்கிற எண்ணத்தை நிலைநிறுத்தும் கூட்டம் இதனால் பயனடைவதுதான் மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. மதச்சார்பின்மை என்கிற கொள்கை வலுவடைந்துவிட்டதான கருத்தும் பரப்படுகிறது. வங்காளதேசத்து அகதிகள் குறித்தும், மாட்டிறைச்சி ஏற்றுமதி குறித்தும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடியின் பேச்சுகளும் இதற்கு வலுசேர்ப்பதாகவே இருந்தன. மோடி மட்டுமல்ல, “இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையானோர். எனவே அவர்கள்தான் ஆள வேண்டும். அவர்களின் விருப்பங்களைத்தான் மற்றனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்” என்கிற வாதங்கள் இங்குமங்குமாக பலதரப்பு மக்களால் இன்று வைக்கப்படுகிறது. இப்படியாக எண்ணங்களை கட்டமைக்கிறவர்களின் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்தாதவரை, இத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவ்வெண்ணங்களில் எவ்வித மாறுதலும் ஏற்படப்போவதுமில்லை. அவர்களின் திட்டங்கள்தான் என்ன? இந்துத்துவ இந்தியாவைக் கட்டமைத்து, அதனைச் சாராதவர்கள் அனைவரையும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவது; பன்முகத்தன்மையும் பலவகைப்பட்ட கலாச்சார, வாழ்வியலைக் கொண்ட இந்திய மக்களைக் கட்டாயப்படுத்தி “இந்து” என்கிற ஓர் அடையாளத்தின் கீழ் கொண்டு வருவது; குலவழக்கம் என்கிற பெயரில் நவீன அறிவியலை மறுத்து, சாதி என்கிற வழக்கத்தை ஏதாவதொரு வடிவத்தில் எல்லோர் மீதும் திணிக்கிற கலாச்சாரத்தை முன்வைப்பது; ஒட்டுமொத்தத்தில், இந்துக்கள்தான் மற்றனைவரையும் விட மேன்மையானவர்கள் என்கிற இனவெறியினை விதைப்பதுதான் இச்செயலின் நோக்கமாகவே இருக்கிறது.

2. பெரு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் இந்திய அரசியல்:

பெருநிறுவனங்கள் யாவும் இந்தியாவை ஒரு விலை பேசி வாங்கும் நோக்கிலேயே, இத்தேர்தலில் மிக அதிகளவிலான பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நீண்ட காலமாகவே இந்தியா பின்தங்கியிருந்த போதும், வரித் தள்ளுபடியும் வரிச் சலு‍கைகளும் வேண்டியும், தடையின்றி இயற்கை வளங்களைச் சுரண்ட அனுமதியும் கோரியுமே, பெருநிறுவனங்கள் அனைத்தும் காய்கள் நகர்த்துகின்றன. இதனால், நம்முடைய இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பெருமளவிலான சேதங்களையும் ஏற்படுத்தும்.

3. பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ற வளர்ச்சி:

மாநகரங்களும், பெரிய பெரிய கட்டிடங்களும், அங்கே அகலமான சாலைகளும், ஐ.ஐ.டி.களும் மட்டுமே வளர்ச்சி என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்கும் குஜராத் வழியை, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான மாதிரியாக முன்வைக்கப்பட்டது. இதுவே இத்தேர்தலின் மற்றொரு மோசமான வழிகாட்டியாக அமைந்திருந்தது. வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், எல்லா பிரச்சனைகளுக்கும் மாநகரங்களின் மாடமாளிகைகள் மட்டுமே தீர்வாகிவிடும் என்பது அபத்தத்திலும் அபத்தம். இதனை செய்ய முயலும் எந்தவொரு அரசும், மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றின் நிதியினை குறைக்கவும், “100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம்” போன்ற மக்களுக்கான திட்டங்களில் கை வைப்பதையும் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இதன் விளைவாக, மக்களின் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் தனியாரை உள்ளே அனுமதித்து, காசு இருப்பவனுக்கே எதுவும் கிடைக்கும் என்கிற நிலையினை உருவாக்கும்.

4. அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வு:

நாட்டு மக்களின் நலனைவிட, ஜிடிபி.யும் பெருநிறுவனங்களுக்கான் கட்டமைப்பு வசதிகளுமே அவசர அவசியம் என்கிற கருத்து மேலோங்கிவருகிறது. ஏழைகளும் பிற்காலத்தில் இதனால் சிறிதளவு பயனடைவார்கள் என்கிற வாதத்தை கூட சிலர் முன்வைக்கிறார்கள். விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், பெண் உழைப்பாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவர்களின் உழைப்பால்தான் இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் சொத்துக்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவர்களோ கஞ்சிக்கும் ஒரு வேலை சோற்றுக்கும் அல்லல்படும் நிலைமையில், அவரகளைப் பயன்படுத்திக் கொள்கிற பெருமுதலாளிகள் அனைவரும் செல்வச் செழிப்புடன் வாழும் நிலைதான் இருக்கிறது. இதனால், வளர்ச்சியடைந்த இந்தியா என்பது ஒரு சிலருக்கானதாகத்தான் இருக்கிறது.

5. பக்க சார்புடைய ஊடகங்கள்:

செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சிகள் போன்ற பிரதான ஊடகங்கள், தங்களது நம்பகத்தன்மையினை இழந்துவிட்டன. இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் யாவும், மிகச்சிலரின் நலனுக்காகவே குரல் கொடுக்கின்றன. பிராந்திய ஊடகங்களோ, அவை சார்ந்திருக்கிற பிராந்திய அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டே செயல்படுகின்றன. அர்த்தமற்ற இரைச்சல்களையே பிரதானமாக்கி, மக்கள் பிரச்சனைகளைப் பேசாத விவாதங்களும் வாதங்களுமே தொலைக்காட்சிகளின் அன்றாட பணியாகிவிட்டிருக்கிறது. இவை மக்களின் நம்பிக்கையினை இழந்தாலும், அம்பானியின் பணம் விளையாடாத தொலைகாட்சி சானல்கள் இல்லை என்கிற நிலை உண்டாகிற்று.

இத்தேர்தலின் முடிவுகள் என்னவாக இருப்பினும், இதுபோன்ற ஆபத்தான போக்குகள்இன்று மாறப்போவதில்லை. பா.ஜ.க. வெற்றியினால், இப்பிரச்சனைகளின் தீவிரம் அதிகரிக்கும். ஆனால் தோல்வியினால், பிரச்சனைகள் மறையப் போவதுமில்லை. அவர்கள் தோல்வியுறுகிற நிலையில், மதவெறியை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டு வருவார்கள். மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிற உழைக்கும் மக்களோடு கைகோர்த்து, அவர்களின் உரிமைகளைப் பறிப்பதல்ல வளர்ச்சி என்றும் உணர்கிற, சமநிலைச் சமூகத்தினை படைக்க விரும்புகிற, முற்போக்கு சக்திகள் அனைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியமான நேரமிது.

அனைவரும் ஒருங்கிணைந்து புது வகையான பிரச்சாரங்களையும் முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரப் பிரச்சனைகளையும், அதனை தீர்ப்பதற்கான போராட்டங்களையும் பதிவு செய்கிற “மாற்று மக்கள் ஊடகத்தை”யும் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இப்படியானதொரு கூட்டுமுயற்சி தான், இந்தியாவை மெல்ல சூழ்ந்துகொண்டிருக்கும் வலதுசாரிகளின் வளர்ச்சியை தடுத்துநிறுத்தி அழிக்க முடியும்.

ஆங்கில மூலம் : 5 things that will not change, whatever the results are

Related Posts