அரசியல்

21 ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று உள்ளதா ?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 170 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரிஸ் கம்யூன் உருவாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் அவல நிலைமையில் இருந்து முதன் முதலில் மனிதனுக்கு விடுதலை தந்த 20 ஆம் நூற்றாண்டு கண்ட மாபெரும் விஞ்ஞான நிகழ்வுகளுள் ஒன்றான ரஷ்ய புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. இதன் தாக்கத்தில் பின்னர் உண்டான சீன, வியட்னாம், கியூப புரட்சி ஆகியன முடிந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. யாவற்றிற்கும் மேலாக ரஷ்ய புரட்சிக்கு பின்னால் உருவான மகத்தான சோவியத் ஒன்றியம் கலைந்து 25 வருடம் ஆகி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் விண்ணைத் தொடும் அளவிற்கு வளர்ந்து விட்டன . நவீன பாட்டாளி வர்க்கத்துக்கும் இடதுசாரி அரசியலுக்கும் பெரிய இடைவெளி உருவாகியுள்ளது . இது போல இக்கட்டான சூழலில் பல விதமான கருத்துகள் வருவது, கருத்து மோதல்கள் உருவாவதும் , இவ்வகை விவாதங்கள் நேர் மறை தாக்கங்களையும் , பல சமயங்களில் எதிர் மறை தாக்கங்களையும் கூட ஏற்படுத்தும். அவ்வாறான ஒரு கருத்தியல்தான், வரலாற்றில் , முதலாளித்துவ வளர்ச்சிபோக்கில் தொழிலாளி வர்கத்தின் பங்கை நிராகரிப்பது. அவ்வாறான வர்க்கமே இல்லை, இருந்தாலும் மிக சொற்ப அளவில் இருக்கும் பகுதியே அது என வாதிடும் போக்கு, ஆக 21 ஆம் நூற்றாண்டில் .

கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையின் முடிவில் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ்- ஏங்கல்ஸ் எழுதியபோது , தொழிலாளி வர்கத்தின் பங்கு உலக மக்கள் தொகையில் 2 % முதல் 3 % , கிட்டத்தட்ட 2 கோடி பேர். ஆனால் இன்றைய நிலை என்ன ?? 2013 உலக தொழிலாளர் அமைபான ஐ எல் ஓ வின் கணக்குப்படி மனித வரலாற்றில் முதல் முறையாக உலகத்தொழிலாளர்களில் ஆகபெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட இது 160 கோடி பேர் என்ற அளவில் உள்ளது. இதில் 60 கோடி பேர் , 90-களின் மத்தியில் இருந்து புதியதாக தொழிலாளிகள் ஆனவர்கள் . இருப்பினும் முதலாளித்துவதிற்கு சவால் விடும் வகையில் இந்த எண்ணிக்கை தயாராகவில்லை. பல இடதுசாரி அறிஞர்களே இந்த தொழிலாளி வர்கத்தின் எதிர்க்கும் குணாம்சத்தை கருத்தில் கொள்ளவில்லை. மாறாக இத்தொழிலாளி வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு காட்ட அஞ்சுவதாககவும் , இதில் கணிசமான பங்கு தனக்கான கூலி மற்றும் இன்ன பிற சலுகைகளை அனுபவித்து கொண்டு அமைதி காப்பதாகவும் கூறுகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் வர்கங்களை புரிந்துகொள்ள இம்மாதிரியான நிகழ்வுகளிலிருந்து நமது வாதங்களை கட்டமைப்பது தவறாகும்.

மார்க்ஸ் வரலாற்றில் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை வரையறுக்கும்போது,

“முதலாளித்துவத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானதும் சிறப்பானதும் ஆகும். இந்த வரலாற்று பாத்திரமே தொழிலாளி வர்க்கத்திற்க்கு , முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் வல்லமையை தருகிறது”

என்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை சொந்தம் கொள்ளவில்லை மாறாக பயன்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கம் , புரட்சிகர மாற்றத்தை உண்டாக்க தயாராகும் வேளையில் முதலாளி வர்க்கம் மேலும் லாபம் சேர்ப்பதற்க்கு இந்தத் தொழிலாளி வர்க்கத்தையே நம்பி உள்ளது.

தொழிலாளி வர்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை விளக்கவேண்டுமென்றால் , மனித வரலாற்றில் போராட்டங்கள் ஒவ்வொருமுறை நிகழும் இடைவெளியை பார்த்தாலே புரியும். அடிமை சமுதாயத்தில் ஒவ்வொரு முறை அடிமைகளின் எழுச்சி நடக்கும்போது, மறுமுறை நடப்பதற்கு கிட்டத்தட்ட 50- 100 வருடங்கள் பிடிக்கும். விவசாய எழுச்சிகள் 20- 30 வருடங்களுக்கு ஒருமுறை நிழந்திருக்கிறது. ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் அப்படி அல்ல. ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே தொழிலாளர்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் முதாலாளித்துவத்தின் மீது அடுத்த கட்ட தாக்குதல் தொடுப்பதற்கு தயாராகி விடுவார்கள்.
பல சமயம் தன் நலன்களுக்கு எதிராக தானே பகுத்தறிவற்று செயல்பட்டாலும் உழைக்கும் மக்கள் மத்தியிலான ஒற்றுமை பல குணங்களில் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

தொழிலாளி வர்க்கம் பொதுவாக சிக்கலான தருணங்கள் வரும்போது மட்டும் போராடும் தன்மையுடன் செயல்படும் குணம் கொன்டதாகவும். சில சமயங்களில் தன்னுடைய புரட்சிகர பாத்திரத்தையும், முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதற்கான வல்லமையும் தனக்கு இருக்கிறது என உணர்ந்து போராடும் தன்மையுடன் செயல்படும் குணம் கொண்டதாகவும் இருக்கிறது.

சிலர் தொழிலாளர்கள் என்றவுடன், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என மாத்திரம் நினைத்து கொள்கின்றன்ர். இது தவறான கருத்து, எந்த நாட்டிலும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் , மொத்த தொழிலாளர் எண்னிகையில் பாதிக்கு மேல் எந்த காலத்திலும் கொண்டதில்லை. மிகக்குறைந்த அளவில் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலைபார்த்தாலும் , எந்திர மயமாக்கத்தால் , உற்பத்திக்கு குறைவு வந்ததில்லை. ஆனால் தொழிற்சாலையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவதால் தொழிலாளர்கள் குறைகிறார்கள் என அர்த்தம் இல்லை. மாறாக, மார்க்ஸ் தொழிலாளிகள் என வரையறுத்தது , வெறும் பொருள்களை உற்பத்தி செய்யும் ஆட்களை மாத்திரமல்ல , நவீன பாட்டாளி வர்க்கத்தின் அளவுகோலை மார்க்ஸ் தெளிவாகவே வைக்கிறார்.

“தொழிலாளிகள், முதலாளித்துவத்தின் லாபத்தை அதிகரிக்க உழைப்பவர்களே ஆவர்”

எடுத்துகாட்டாக அமேசானில் பண்டிகை நாட்களில் மட்டும் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக வேலை செய்கையில் வேலை நிறுத்தம் செய்து தனக்கான நன்மைகளை பெறும் வாய்ப்பு உள்ளது. நேராக இலாபத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபடாவிட்டாலும் நித்துறை பணியாளர்களுக்கும் இது பொருந்தும். ஏனெனில் இந்த முதலாளித்துவ அமைப்பு சுமூகமாக பணி செய்ய அவர்கள் உதவுகிறார்கள். 2011 பிரிட்டனில் நடந்த பென்சனுக்கான போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது போன்ற வேலை நிறுத்தங்களே அணிதிரட்டப்படாத தொழிலாளருக்கு உத்வேகமளிக்கும்.

தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் பல இடதுசாரி பொருளாதார சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வகை தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த போராடுவதே முதலாளித்துவத்தின் மீது தொடுக்கும் தாக்குதலாகும். மார்க்சின் காலத்தில் மிக அதிகமான தொழிலாளர் “வீட்டு வேலை” செய்யும் பணியாளர்களாக இருந்தார்கள். ஆயினும் அவர்களை விட, எண்னிக்கையில் குறைவாக இருந்த துறைமுக தொழிலாளர்களே போராட்டக் களம் கண்டு மாற்றங்கள் கொண்டுவர முயன்றனர்.

ஆக அமெரிக்காவின் இடதுசாரி சிந்தனையாளர் டால் ஹாபர் கூறுவது போல, தொழிலாளிகள், கூலிவாங்கி தொழில் செய்தவதால் மட்டும் அவர்கள் தொழிலாளிகள் என்று கூற இயலாது , போராட்ட குணம் பிறந்தால்தான் அவர்கள் முழுமையாக தொழிலாளர்கள் ஆகிறார்கள். இன்று பல கோடி தொழிலாளர்கள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளனர். ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் மிக முக்கியமான போராட்டத்தில் இருந்து வெளியில் உள்ளனர். இன்று எந்த நாட்டில் கேட்டாலும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக உள்ள மக்களில் பாதி கூட இடதுசாரி அரசியல்மாற்றை காணும் நிலையில் இல்லை. இந்த அழுகிப்போன முதலளாளித்துவ சமூக அமைப்பை மாற்ற நாம்தான் நவீன பாட்டாளி வர்கத்தை சென்றடைய வேன்டும். நாம் சென்றடையாத காரணத்தினால் , அவர்கள் அரசியல் படாத காரணத்தினால் அப்படிப்பட்ட ஒரு வர்க்கமே இல்லை எனக்கூறுவது விஞ்ஞானமாகாது.

Related Posts