இதழ்கள் இளைஞர் முழக்கம்

2016 சட்டப்பேரவை தேர்தல்கள்: ஒரு பருந்துப்பார்வை வெங்கடேஷ் ஆத்ரேயா

 

புதுவை உள்ளிட்டு ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய மாநில அரசுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலில் போடப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 31 சதவீதம் மட்டுமே பெற்று (இது மொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு) பெரும்பான்மை இடங்களை வென்ற பாஜக தனது அரசின் இரண்டு ஆண்டு “சாதனைகளை” விளக்கும் விழாக்களை நடத்தி முடித்துள்ள தருணத்தில் நாம் உள்ளோம். இந்திய –தமிழக –அரசியல் களம் எப்படி உள்ளது? கேரளா நீங்கலாக மற்ற நான்கு மாநிலங்களில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அப்படியானால், தொடரும் பாஜக மதவாத, தாராளமய ஆட்சியில் இருந்தும், தமிழகத்தில் இரு முக்கிய கழகங்களின் ஊழல் நிறைந்த மக்கள் விரோத  கிடுக்குப்பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்க முடியாதா?

தேர்தல் முடிவுகளை சற்று விரிவாக பார்ப்போம். அஸ்ஸாம் மாநிலத்தில், மூன்று முறையாக தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோற்றுள்ளது. அஸ்ஸாம் கண பரிஷத், போடோ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் உடன்பாடு கொண்டு 89 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 60 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் 26 இடங்களில் வெற்றி பெற்றன. 122 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் மட்டுமே கிடைத்தது. எனினும், வாக்கு சதவிகிதம் என்று பார்த்தால், காங்கிரசுக்கு 31ரூ. பாஜக அணிக்கு 41.5ரூ , பாஜகவிற்கு மட்டும் 29.5ரூ  வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக அணி, காங்கிரஸ் இரண்டையும் எதிர்த்து போட்டியிட்ட, முஸ்லிம் சிறுபான்மை மக்களிடையில் செல்வாக்கு உள்ள  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஹஐருனுகு) என்ற கட்சி 74 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களையும் 13ரூ வாக்குகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசின் ஊழல் மிக்க, மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு என்று கூறலாம். ஆனால் பாஜகவிற்கு பெரும் ஆதரவு இருந்ததாக கூற இயலாது. எனினும், மக்களை மத ரீதியில் பிளவு படுத்தி, பொய்களை அள்ளிவிட்டு பாஜக நடத்திய தேர்தல் பிரச்சாரமும், மாநிலத்தின் இனவாத/பிரிவினைவாத கட்சிகளின் ஆதரவும் பாஜக வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளன. அதே சமயம், ஹஐருனுகு பெற்றுள்ள கணிசமான வாக்கு மத அடிப்படையிலான அரசியலை பாஜக கொண்டு செல்வதன் எதிர்விளைவு என்பதை பார்க்க வேண்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரினாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 211 இடங்களையும் 44.9ரூ  வாக்குகளையும் பெற்றுள்ளது. இடது முன்னணியும் இதர எதிர்கட்சிகளும் திரினாமூல் காங்கிரசின் கொலைவெறி தாக்குதல்கள் மத்தியில் தான் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. திரினாமூல் தாக்குதல்கள் இடது முன்னணியை கூடுதலாக குறிவைத்தது. திரினாமூல் அரசின் ஊழல்கள் – சாரதா, நாரதா, இன்னபிற – அம்பலத்திற்கு வந்தும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகளை திரட்டுவது களச்சூழலின் காரணமாக கடினமாக இருந்தது. பாஜக கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருப்பதை முழுமையாக பயன்படுத்தி வங்கத்தில் வளர்ந்துள்ளது. இந்த முறை பாஜக அனைத்து (294) தொகுதிகளிலும் போட்டியிட்டு 10.7ரூ வாக்குகளையும் 3 தொகுதிகளையும் பெற்றுள்ளது. ஆர் எஸ் எஸ் மதவெறி பிரச்சாரம், மறுபுறம் பாஜக தலைவர்களின் “வளர்ச்சி” பற்றிய இரட்டை நாக்கு பிரச்சாரம் இதன்பின் உள்ளது. பாஜக தலைதூக்குகையில்  முஸ்லிம் சிறுபான்மை மக்கள் த்ரினாமூல் ஆட்சிபொறுப்பில் இருப்பதனால் அதனை தக்க மாற்றாக கருதும் போக்கும் வலுப்பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்ட இடது முன்னணி 199 தொகுதிகளில் போட்டியிட்டு  கிட்டத்தட்ட 26ரூ வாக்குகளையும் 32 இடங்களையும் தான் பெற முடிந்துள்ளது. காநிகிராஸ் கட்சி 92 இடங்களில் போட்டியிட்டு, 44 இடங்களையும் 12.3ரூ வாக்குகளையும் பெற்றுள்ளது. மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் முற்போக்கு சக்திகளுக்கு  மிகுந்த ஏமாற்றமளிப்பவை. இதுபற்றி விவரமான ஆய்வு தேவை. எனினும், கடும் கொலைவெறி சூழலிலும் பணபலத்திற்கு எதிராகவும் மத்திய மாநில ஆளும் கட்சிகளின் பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்தும் ஒரு வீரமிக்க அரசியல் போராட்டத்தை மேற்கு வங்க இடது முன்னணி நடத்தியுள்ளது. பல தோழர்களும் ஆதரவாளர்களும் உயிரையே தியாகம் செய்துள்ளனர். தேர்தலுக்குப்பின்பும் கொலைவெறி தாக்குதல்கள் தொடர்கின்றன. பாஜக ஊழியர்களும் தலைவர்களும் கூட தாக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய பாஜக தலைமை மம்தாவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்பதை பார்க்கலாம். தோழர் எச்சூரி கூறியுள்ளதுபோல் இது மேட்ச் பிக்சிங் தான்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (இஜமு) மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மொத்த செல்லுபடியான வாக்குகளில் 43.3ரூ  ஐயும் 91 தொகுதிகளையும்  இஜமு பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஐஜமு) 38.86ரூ வாகுகளையும் 47 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜக அணி 15ரூ வாக்குகளையும் ஒரு இடத்தையும் பெற்றது. ஐஜமுவின் ஊழல்மலிந்த ஆட்சிக்கு எதிராகவும் பாஜகவின் மதவாத பிரச்சாரம், மத்திய அரசின் மகள் விரோத கொள்கைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியும், மக்கள் முன்பு ஒரு புதிய, நவீன கேரளாவிற்கான தெளிவான திட்டத்தை முன்வைத்தும் இஜமு தேர்தலை எதிர்கொண்டது. நாடு முழுவதுமான முற்போக்கு ஜனாயக சக்திகளுக்கு கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் இஜமு பெற்றுள்ள மகத்தான வெற்றி பெரும் ஊக்கம் தரும். எனினும் காங்கிரச்தொடர்ந்து பலவீனப்பட்டுவரும் சூழலில் அதனால் உருவாகும் அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்ப பாஜக மதவெறி என்ற ஆயுதத்தையும் பொய்யாக வளர்ச்சி என்ற  முழக்கத்தையும் முன்வைத்து பிற்போக்கு சாதீய சக்திகளுடன் கரம் கோர்த்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக தமிழ் நாடு சட்டப்பேரவை தேர்தல் பெரும் பணபலத்தை வைத்து இரு பெரும் திராவிட கட்சிகள் தங்களது இருதுருவ அரசியலை திணித்துள்ளனர். முன்னெப்பொழுதும் கண்டிராத அளவிற்கு, எல்லா தொகுதிகளிலும் வாக்குகளுக்கு பணப்பட்டுவாடா, விளம்பரம், பிரச்சாரம், இதர தேர்தல் செலவுகளுக்கு பணத்தை வாரி இறைத்தல், தேர்தல் பணிகள் அனைத்தையுமே காசுக்காக, தொழில் ரீதியாக செய்யப்படும் வேலைகளாக மாற்றியது என்பவை மூலமே  இரு பெரும் கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டன. ஊழல், மது ஒழிப்பு, வெளிப்படையான ஆட்சி, லொக் ஆயுக்தா, இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுப்பது, சாதிஆதிக்கத்தையும் கவுரவக் கொலைகளையும் அழித்தொழிப்பது, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம், கல்வி ஆரோக்யத்திற்கு அரசு முன்னுரிமை அளித்தல் என்ற பல அரசியல் பொருள் மிக்க அம்சங்களை மக்கள் நல கூட்டணி தேர்தலில் முன்வைத்த போதும், எந்த கேள்விக்கும் பதில் கூறாமல், அரசியலற்ற லாவணி கச்சேரியாகவே இருபெரும் கட்சிகளும் தேர்தலை ஆக்கின. இதில் கார்ப்பரேட் ஊடகங்களும் இரு பெரிய கட்சிகளுக்கு ஆதரவாக செயல் பட்டும், தேர்தல் களம் சூடு பெற்றவுடன் மக்கள்நலகூட்டணி – தேமுதிக – தமாக  அணியின் பிரச்சாரத்தை முழுமையாக இருட்டடிப்பு செய்தும் தங்கள் “ஜனநாயக” பங்கை ஆற்றியுள்ளனர். எனினும், இதையெல்லாம் மீறி மக்கள் மத்தியில் ஓரளவு மாற்று அரசியலின் அவசியம் சொல்லப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இப்பணி மேலும் வலுப்பெற்று கொள்கை அடிப்படையிலான அரசியல் வலுப்பெற நாம் அனைவரும் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும். சாதிவெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் ஓரளவு ஓரம்கட்டப்பட்டது இத்தேர்தலின் ஆறுதலான அம்சம்.

 

 

Related Posts