இலக்கியம்

நரோடா காவ்ன் . . . . . . . !

பின்புறம் டீ பாய்லர் வைத்துக் கட்டப்பட்ட சைக்கிளில் முகமெல்லாம் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் ரபீக். அன்று காலை எண்ணெயால் துடைக்கப்பட்டிருந்த பச்சை வண்ணமடிக்கப்பட்ட அவனது சைக்கிள் பளிச்சென்று இருந்தது. ஹாண்டில்பார்களின் இரு முனையிலும், பெண்கள் சடை முடியப் பயன்படுத்தும் குஞ்சம் போன்ற ஒரு பொருள் அழகுக்காக பொருத்தப்பட்டிருந்தன. அவை ஹாண்டில்பார்களுக்கு வால் முளைத்தது போல காற்றில் படபடத்துப் பின்னோக்கிப் பறந்தது. ஒரு மஞ்சள் நிறத் துணிப்பை ஹாண்டில் பாரில் தொங்கிக் கொண்டு இருந்தது. அதிலிருந்த பொருளை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். சைக்கிளின் வேகத்தில் அந்தப் பொருள் சைக்கிளில் மோதி உடைந்துவிடாதவாறு கவனமாக தள்ளித் தொங்கும்படி மாட்டியிருந்தான்.

நாற்பது வயதைத் தொட்டவனைப் போல காட்சியளிக்கும் அவனுக்கு வயது முப்பதுதான் என்பதை யாரும் நம்ப முடியாது. அவனது பணிச் சூழலும் வாழ்வியல் சூழலும் அவனுக்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இரண்டு மூன்று வாரங்களாக டிரிம் செய்யப்படாத தாடி, பீடியிழுத்துக் குழி விழுந்து ஒட்டிப்போன கன்னங்களில் மொசுமொசுவெனப் படர்ந்திருந்தது. முன் தலையை மூடியபடி ஒரு பழுப்பு நிறத் தொப்பி அணிந்திருந்தான். ரத்தச் சிவப்பாய் இருந்த கண்களின் ஓரத்தில் ஏதோ ஒரு ஆர்வம் மின்னிக் கொண்டு இருந்தது அவனுக்கு.

நரோடா காவ்ன் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து சரியாக 15 வது கிலோ மீட்டரில் உள்ள அந்த இரயில் நிலைய பிளாட்பார்ம்தான் அவனுக்கு வியாபார ஸ்தலம்.. காலை 3.30 மணிக்கு தேநீர் பாய்லரை சைக்கிளின் பின்புறம் கட்டிக் கொண்டு கிளம்பினால் முக்கால் மணி நேரப் பயணத்தில் அங்கே சென்றுவிடலாம். இரயில் நிலைய நிர்வாகத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ள தனியார் தேநீர்க் கம்பெனிக்குச் சென்று பாய்லரை நிரப்பிக் கொண்டு பிளாட்பார்ம் செல்ல 4.30 ஆகிவிடும். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் தேநீரில் இவனது பங்கு ஒரு ரூபாய். ஒரு நாளைக்கி நான்கு பாய்லர் வீதம் இருநூறு டீ விற்றால் குடும்பத்தின் நாளைய உணவு உத்திரவாதமாகிவிடும். ஏதாவது சீசன் சமயங்களில் மட்டும் ஒன்றிரண்டு பாய்லர் சேர்ந்து ஓடினால் ஜாக்பாட்தான். மதியம் இரயில்நிலையக் கேண்டீனில் இருபது ரூபாய் சாப்பாடு. வழக்கமாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் வியாபாரம் முடிந்துவிடும். ஆறுமணிக்கு முன்பாகவே வீட்டிற்குப் போய்விடுவான்.

வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்தும்போதே கவனித்தான். ரீப்பர் பலகைகளால் செய்யப்பட்டு எண்ணெய் டின்களின் தகடால் மறைக்கப்பட்டிருந்த கதவு பாதியளவு திறந்திருந்தது. யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

”இம்ரான்…”

தனது ஆறு வயது மகனை அழைத்தபடியே இறங்கினான். பதிலில்லை. வழக்கமாக தெருவின் முனையைக் கடந்து திரும்பும்போதே சைக்கிள் சத்தத்தை வைத்து அவன் வருவதை தெரிந்து கொண்டு தத்தித்தத்தி வருவான் இம்ரான். இன்று இல்லை. ஏமாற்றமாக இருந்தது ரபீக்குக்கு.

ஹாண்டில் பாரில் தொங்கிய பையை எடுத்துக் கொண்டு இறங்கினான். கதவருகே சென்று மீண்டும் அழைத்தான்.

”இம்ரான்..”

இப்போதும் பதிலில்லை. உள்ளே சென்று, மூன்று டிரங்குப் பெட்டிகள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மேசைபோல அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுருட்டப்பட்ட பாய்களும் சில தலையனைகளும் இருந்தன. அதன் பக்கத்தில் பையை வைத்துவிட்டு கீழே அமர்ந்து மரத்தூணில் சாய்ந்தான். கூரையில் எங்கோ  ஒளிந்திருந்த பல்லியொன்று கத்தியதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். கூரைச் சட்டங்கள் உலுத்துப்போய் இன்றோ நாளையோ என்றிருந்தன. அதன்மேல் வேயப்பட்டிருந்த கலாய்த் தகடுகள் துருப்பிடித்து கன்னங்கரேலென்று இருந்தன. அங்கங்கே நெளிந்தும் வளைந்தும் கிழிந்தும் அலங்கோலமாக இருந்தன. கூரையில் அங்கங்கே இருந்த ஓட்டைகளில் இருந்து மழைநீர் உள்ளே வந்துவிடாமல் தடுக்க அதன் மேற்புறம் இரு பிளாஸ்டிக் தார்ப்பாய் போர்த்தப்பட்டு இருந்தது. பக்கவாட்டுச் சுவர்களும் தகடுகளாலும் டின்களாலும் ஒப்பேற்றப்பட்டிருந்தன. ரெட் ஆக்சைடு கலந்து பூசியதால் சிவப்பாக்கப்பட்ட சிமெண்ட் தரை சுத்தமாக இருந்தது.

மனம் முழுதும் இம்ரானையே சுற்றிக்கொண்டு இருந்தது. திருமணமாகி இரண்டு வருடத்திலேயே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்து போதிய ஊட்டச்சத்து இல்லாததால் இறந்து போய்விட்டன. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பலவீனமாகப் பிறப்பதும் இறந்துபோவதும் இங்கே சகஜமான ஒன்று. அதன் பிறகு ஆறாண்டுகள் கழித்துப் பிறந்தவன் இம்ரான். ஈ எறும்பு கடிக்காமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்க்கும் மகன். ரபீக்குக்கு இம்ரான் என்றால் உயிர். அவனது வாழ்க்கையின் அர்த்தமே இம்ரான்தான் என்று அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக் கொள்வான். அவனுக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியில் அனைவருக்குமே இம்ரான் என்றால் கொள்ளைப் பிரியம். அந்தப் பகுதியே அவனைக் கொண்டாடியது. அவ்வளவு அழகாகவும் அதேநேரத்தில் சமத்துக் குழந்தையாகவும் இருப்பான்.

ஆணியில் மாட்டப்பட்டிருந்த இம்ரானின் பள்ளிப் பையை எடுத்து அதிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஏதேதோ படங்கள் இருந்தன. படங்களுக்குக் கீழே எழுத்துக்களும் இருந்தன. ஏதோ வேற்று மொழியில் எழுதப்பட்ட எழுத்தைப் போல அந்த எழுத்துக்களைப் பார்த்தான். எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு எல்லா மொழியும் வேற்று மொழிதானே. அதை வைத்துவிட்டு பையிலிருந்து சிலேட்டை எடுத்தான். மண்ணாலான சிலேட் இரண்டாக உடைந்திருந்தது. சுற்றியிருந்த மரச்சட்டம் அவை கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த எழுத்துக்களை பெருமையோடு பார்த்தான். இம்ரான் எழுதியிருந்தவை அவை. அந்த எழுத்துக்கள் அழிந்துவிடாதவாறு கவனமாக அவற்றைத் தடவிப் பார்த்து மகிழ்ந்தான். கட்டி முடிக்கப்பட்ட புதுவீட்டைப் பார்ப்பவனைப் போல அந்த சிலேட்டையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

’மூணு வயசு வர மத்த குழந்தைகள மாதிரி இம்ரானும் நல்லாத்தான் இருந்தான். ஏதோ தடுப்பூசின்னு அரசு மருத்துவ மனையில் போட்டாங்க. என்ன முசீபத்து ஊசியைப் போட்டுத் தொலச்சாங்களோ காலக் கீழ ஊனாம அழுதுட்டே இருந்தான். மருத்துவமனையில் கேட்டதுக்கு சுடுதண்ணி ஒத்தடம் வைங்க ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ரெண்டுநாள்ல அழுகை நின்னுச்சு. கூடவே அந்த காலோட வளர்ச்சியும் நின்னுருச்சு. தொடையில இருந்தே சூம்பிப்போய் போலியோ தாக்குன கால் மாதிரி ஆயிடுச்சு.

இதுமாதிரி கால் ஊனமா இருக்கிறதால இம்ரான எந்த ஸ்கூல்லையும் சேத்துக்கல. ஒரு வருசமா எத்தனையோ தடவ ஸ்கூல் படி ஏறி எறங்கியும் ஒரு புண்ணியமும் இல்ல. நேரா வாத்தியார் வீட்டுக்கே போய் அவர் கால்ல விழுந்து அழுது பொறண்டு கெஞ்சினேன். இம்ரானோட மொகத்தப் பாத்ததும் அவர் மனசு எளகிடுச்சு. இம்ரான யாருக்குதான் பிடிக்காது..? புதுசா பூத்த ரோசாப்பூ மாதிரி அவ்வளவு அழகா இருப்பான். அவன யார் பார்த்தாலும் ஒரு தடவயாவது கொஞ்சாம போகமாட்டாங்க. இம்ரான பாத்ததும் ஒரு வழியா அவர் பெரிய மனசு பண்ணி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார். ஆறு மாசந்தா ஆகுது. ஏ.பீ.சீ.டி எல்லாம் எழுதிப் பழகிட்டான்.’

ஏதேதோ யோசனைகளுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிடியை எடுத்துப் பற்றவைத்தான் ரபீக். குழிவிழுந்த கண்ணங்கள் மேலும் சில இஞ்ச்சுகள் குழி விழும்படி ஆழமாக இழுத்துப் புகையை விடவும் அவன் மனைவி சாயிரா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“வீட்டுக்குள்ள பீடி குடிக்காதீங்கன்னு எவ்வளவு தடவ சொல்றது..? கொழந்த இருக்கிற வீடுன்னு நெனப்பே இல்லையா உங்களுக்கு..?”

கடிந்து கொண்டபடியே தலையிலிருந்த பிளாஸ்டிக் குடத்தை கீழே இறக்கி வைத்தாள். மூன்று கிலோமீட்டர் சென்று தண்ணீர் சுமந்து வந்த களைப்பால் மூச்சிறைத்தாள். அவள் அணிந்திருந்த அழுக்கடைந்த சல்வாரின் மேல்பகுதி முழுதும் நனைந்திருந்தது.

“இம்ரான் இல்லன்னுதான்..” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவனை ஒரு முறைப்பில் அடக்கினாள். சட்டென பீடியைக் கசக்கி வெளியே எறிந்தான்.

“இம்ரான் எங்க..?”

“பாத்திமா ஆப்பா எடுத்துட்டுப் போனாங்க.. இருங்க கூட்டிட்டு வரேன்..” என்றபடி வெளியே சென்றாள்.

அவன் கைகால் முகம் கழுவி பேண்டைக் கழற்றிவிட்டு லுங்கிக்குள் நுழைந்து கொண்டு இருக்கும்போதே சாயிரா வந்துவிட்டாள். “அத்தா…” என்று கத்தியபடி சாயிராவின் இடுப்பிலிருந்து ரபீக்கின் மீது தாவிய இம்ரானை அள்ளியெடுத்துக் கொஞ்சினான். இரண்டரையடி உயரப் பால்கோவா துண்டுக்கு சட்டை டிராயர் மாட்டிவிட்டது போல அவ்வளவு அழகாக இருந்தான். ஐஸ்கிரீமின் மீது நவாப் பழங்களைப் புதைத்ததுபோல அழகிய முகத்தில் நீலநிறக் கண்கள் ஜொலித்தன.

”இம்ரான் உனக்கு அத்தா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் சொல்லு..”

“மிட்டாய்..?”

“அதுவும் இருக்கு..

ஆனா இன்னொன்னும் இம்ரானுக்கு வாங்கியிருக்கேன்..

பெருசா இருக்கும்..

அது என்னன்னு சொல்லு பாக்கலாம்..”

“ம்ம்ம்… தெரியலையே..”

”கண்ண மூடிக்கோ அத்தா காட்டுறேன்..” என்றதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். பக்கத்தில் நின்றிருந்த சாயிராவும் ஆர்வத்தோடு ரபீக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

துணிப்பையிலிருந்து ஒரு புதிய சிலேட்டை வெளியிலெடுத்தான் ரபீக்.

“இப்ப கண்ணத் தொறந்துபாரு..”

“ஹையா.. சிலேட்டு…” என்று சந்தோசம் பொங்க இருக்கமாகக் கட்டிப்பிடித்து ரபீக்கின் கண்ணத்தில் நான்கைந்து முறை முத்தமிட்டான். ஆர்வத்தோடு சிலேட்டை வாங்கிக் கொண்டு கீழிறங்கி அவனது பையிலிருந்து பென்சிலை எடுத்து எதையோ எழுதத் தொடங்கினான். பக்கத்தில் அமர்ந்து அவன் எழுதும் அழகை மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ரபீக். சாயிராவும்தான். அரைக்கால் சட்டைக்கு வெளியே தெரிந்த கால்களில் ஒன்று இயல்பாகவும் இன்னொன்று குச்சிபோல மெலிந்தும் காணப்பட்டது.

’இம்ரான் போட்டிருக்கிற டிரஸ் பாத்தீங்களா..? பாத்திமா ஆப்பா வாங்கி போட்டிருக்காங்க..” சாயிரா சொன்னதும்தான் ரபீக் அதைக் கவனித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் இம்ரானைத் தங்கள் பிள்ளையாக நினைத்துக் கொண்டாடுவதில் இருவருக்குமே சொல்லவியலாத பெருமைதான். ’இவ்வளவு அழகா புள்ளைய கொடுத்துட்டு கால மட்டும் கொறையா பண்ணிட்டானே அல்லா..?’ என்று இருவரும் மனதுக்குள் அழுவதை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வதே இல்லை.

எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். வெளியே அங்கங்கே சில நாய்கள் ஊளையிடும் சத்தம் மட்டும் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இருந்தது. வீட்டுக்கு வெளியே ஜலதாரையில் பாய்லரையும் எவர் சில்வர் பக்கெட்டையும் கழுவிக் கொண்டிருந்த ரபீக் இம்ரான் அழுவதைக் கேட்டு எழுந்து உள்ளே ஓடினான்.

“என்னடி ஆச்சு..?” பதட்டத்துடன் கேட்டான்.

“சாப்பாடு ஊட்டுனேன்.. மிளகாய கடிச்சிட்டான்..” அவளும் பயந்துகொண்டேதான் சொன்னாள். இம்ரான் அழுதால் ரபீக் வெறிபிடித்தவன் போல கத்த ஆரம்பித்துவிடுவான் என்பது அவளுக்குத் தெரியும்.

“கொழந்தைக்கு ஊட்டும்போது பாத்து ஊட்டறதில்லையா..? கண்ண என்ன பொடனிலையா வெச்சுட்டு இருந்த..? சைத்தானே..” என்று கத்தியபடி அடிக்கப் பாய்ந்தான். இடுப்பில் இம்ரான் இருந்ததால் அடிக்கவில்லை. குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சக்கரையை அவன் வாயில் போட்டு சமாதானம் செய்ய நினைத்தான். ஆனாலும் இம்ரான் அழுவதை நிறுத்தவில்லை. திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருந்தது. கடித்த மிளகாயை விழுங்கிவிட்டான் போலும்.

“ஏன் பாத்துட்டே நிக்கற..? தயிரு இருந்தா எடு..”

வீட்டில் தயிர் இல்லாமல் பக்கத்து வீடுகளுக்குச் சென்று கேட்டு அங்கும் கிடைக்காமல் திரும்பி வந்து சொன்னாள். இம்ரான் அழுது கொண்டே இருந்தான்.

“ஒனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் அறிவிருந்தா ஆகும்.. எப்படி அழுகிறான்னு பாரு, கொழந்த தொண்டைக்குழி வயிரெல்லாம் எரியுது போல..”

குழந்தை மிளகாய் கடிச்சதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று ரபீக்கின் மீது அவளுக்கு கோபம் வந்தாலும், இது வெளிக்காட்டும் நேரமில்லை என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள். அவன் எப்போதுமே இப்படித்தான் குழந்தைக்கு எதாவது என்றால் துடித்துப் போய்விடுவான்.

“இருப்பா.. அழாத அத்தா போய் தயிர் வாங்கிட்டு வறேன்..” குழந்தையை சாயிராவிடம் கொடுத்துவிட்டு சைக்கிளில் ஏறிப் பறந்தான். இருபது நிமிடத்தில் திரும்பி வந்தபோது இம்ரான் அழுகையை நிறுத்தியிருந்தான். ஆனாலும் வாங்கிவந்த தயிரை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினான். இம்ரானுக்கு குடல் எரிச்சல் நின்றதோ என்னவோ, ரபீக்குக்கு மனதின் எரிச்சல் அதன் பின்புதான் நின்றுபோனது.

அதிகாலை மூன்று மணிக்கு சாயிராவுக்கு விழிப்பு தட்டியது. ரபீக்கின் நெஞ்சின் மீது படுத்தபடி இம்ரான் தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் தூக்கம் கலைந்துவிடாதபடி மெதுவாக அவனை எடுத்து கீழே படுக்கவைத்துவிட்டு ரபீக்கை எழுப்பினாள். ரபீக் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சைக்கிள் கேரியரில் பாய்லரைக் கட்டிக் கொண்டிருந்தான்.

“அத்தா..” இம்ரான் குரல் கேட்டு உள்ளே சென்றான்.

“என்னத்தா இப்பவே எப்திருச்சுட்ட..? இன்னும் விடியலத்தா தூங்கு..”

“அத்தா.. இன்னிக்கு யேவாரத்துக்கு போகாத்தீங்கத்தா.. எங்கூடவே இருங்க..”

“இன்னிக்கு உனக்கும் ஸ்கூல் இருக்கில்ல.. நீ வரும்போது அத்தா வீட்ல இருப்பேன் சரியா..?”

இம்ரான் என்ன நினத்தானோ சட்டென எழுந்து ரபீக்கை இருக்கமாகக் கட்டிக் கொண்டான். சில நிமிடத்தில் அப்படியே தூங்கிப்போனான். அவனைப் படுக்க வைத்துவிட்டு சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான். நூரானி மசூதியின் வாசலில் கட்டப்பட்டிருந்த சோடியம் விளக்கின் வெளிச்சம் அந்தச் சாலையில் மஞ்சள் கரைத்து ஊற்றியதுபோல மாற்றியிருந்தது.

முக்கால் மணிநேரப் பயணத்தின் முடிவில் சைக்கிளை ஸ்டாண்டில் போட்டுவிட்டு, பாய்லரை நிரப்பிக் கொண்டு அவனின் வாடிக்கையான இரயில் நிலையமான கோத்ராவை வந்தடைந்தான். சக டீக்காரர்கள் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சிக்னல் பாலியா பகுதியைச் சேர்ந்தவர்கள். சிக்னல் பாலியா கோத்ரா இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பகுதி. கீழ்த்தட்டு இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், ஆட்டோ வேன் ஓட்டுபவர்கள், ரிக்‌‌ஷா இழுப்பவர்கள், சட்டவிரோத செயல்களில் வருமானம் ஈட்டும் ’காஞ்சி’ இனத்தைச் சேர்ந்த ஏழை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

ஏனோ சபர்மதி எக்ஸ்பிரஸ் நான்கு மணிநேரம் தாமதமாக வந்தது. ரபீக்குக்கு ஏனோ அந்த இரயில், கன்னங்கரேலென்று ஒரு பெரிய சவப்பெட்டி வருவது போலத் தோன்றியது. பஜ்ரங்தள் ஆட்கள் திபுதிபுவென்று அதிலிருந்து இறங்கினர். அவர்கள் கரசேவைக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் நபர்கள். அவர்களின் கைகளில் பலவித ஆயுதங்கள் வைத்திருந்தனர். அச்சமூட்டும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கர கோசங்கள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தனர். சிலர் அருகிலிருந்த கடைகளிலும் பிளாட்பார்ம் டீக்காரர்களிடமும் தேநீர், பன், பிஸ்கட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சண்டையிட்டனர். பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த முஸ்லிம்களைத் தேடித்தேடி தாக்கினார்கள். ஜெய் ஸ்ரீராம் சொல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். சொல்லாதவர்களை அடித்துக் காயப்படுத்தினர். இரயிலிலிருந்து நீல நிறச் சுடிதார் அணிந்திருந்த ஒரு இளம்பெண் இறங்கி ஓடினாள். அவளைத் துரத்திக் கொண்டு சிலர் ஓடினர். ஒருவேளை அவளிடம் கேட்டால் இரயிலுக்குள்ளும் முந்தைய நிறுத்தங்களிலும் நடந்த கதைகளைச் சொல்லக்கூடும்.

ஒரே கூச்சலும் குழப்பமும் களேபரமாக இருந்தது அந்தச் சூழல். தப்பியோட நினைத்த ஒரு வயதான டீக்காரரைத் துரத்திப் பிடித்துத் தாக்கினர். கீழே விழுந்த அவரது தாடியைப் பிடித்து தரதரவென ஒருவன் இழுத்து வந்தான். அருகிலிருந்த ஒருவன் தன் கையிலிருந்த திரிசூலம் போன்ற கத்தியால் சதக் சதக் சதக் என்று வெறியெடுத்தவன் போலக் குத்திவிட்டு ஓடினான். ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு புர்கா அணிந்த பெண்ணை இருவர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு S6 பெட்டியை நோக்கி ஓடினர்.

இதே கரசேவகர்கள் கோத்ராவைக் கடந்து செல்லும்போதும் இதேபோல களேபரங்களையும் தாக்குதல்களையும் செய்தபடிதான் சென்றனர். ஆனால் இப்போதைய செயல்கள் மிகவும் மூர்க்கமாகவும் ஏதோ ஒரு முடிவோடும் திட்டத்தோடும் செயல்படுவது போலவும் தோன்றியது. வழக்கமாக இந்த நிறுத்தத்தில் ஐந்து நிமிடம் நிற்க வேண்டிய இரயில் அரைமணி நேரமாக ஏன் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று குழம்பினான் ரபீக். எவனோ ஒருவன் ஓடிவந்து ரபீக்கைப் பிடித்து பின்னோக்கி இழுப்பதுபோல் உணர்ந்தான். சட்டென விடுவித்துக் கொண்டு ஓடினான். நிலைமை மோசமாவதையும் ஏதோ ஒரு சதித்திட்டம் அரங்கேறப் போவதையும் உணர்ந்த ரபீக் கண்களை மூடிக்கொண்டு ஓடத் துவங்கினான்.

வீட்டிற்கு வந்த பிறகுதான் அவனுக்கு உயிரே வந்தது. தோள் பட்டையோரம் சட்டை கிழிந்திருந்தது. கால்கள் வின் வின்னென்று வலித்தது. இரயில் பெட்டி முஸ்லிம்களால் எரிக்கப்பட்டதாகவும் அறுபது பேருக்கும் மேல் இறந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின. நகர் முழுதும் ஒரே பதட்டமும் பரபரப்புமாகவும் இருந்தது. இரவு வரையிலும் அதிர்ச்சியூட்டக்கூடிய பல்வேறு பல்வேறு செய்திகள் உண்மைகளையும் வதந்திகளையும் தாங்கியபடி வந்த வண்ணமிருந்தன. எதுவுமே நல்ல செய்தியில்லை. தொலைக்காட்சிகளில் முதல்வர் உட்பட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஆவேசமாக பேசி வெறியேற்றிக் கொண்டிருந்தனர்.

அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக இரவு நீண்டு அச்சமூட்டும்படி இருந்தது. ஒரு பேரழிவைக் காணப்போகும் மூர்க்கத்துடன் நிலவு பொழிந்து கொண்டிருந்தது.

விடிந்தும் கூட மக்கள் வெளியே அஞ்சிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். இம்ரானும் ஸ்கூலுக்கு போகவில்லை. மிகுந்த குழப்பமும் பதட்டமும் ரபீக்கைக் கவ்விப் பிடித்திருந்தது. இறுக்கத்தைக் கலைக்க ஏதாவது செய்தாக வேண்டும் போல இருந்தது. கொஞ்சதூரம் காலார நடந்துவிட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது. சூரியனின் வெப்பத்தை வைத்துப் பார்த்தால் மணி எட்டைத் தாண்டியிருக்கும் போல. அவன் வீடு இருக்கும் சேரி போன்ற பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு நடந்தான். கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் கடைகளும் அடைக்கப்பட்டுக் கிடந்தன.

விடையில்லாத ஏராளமான கேள்விகள் அவனது தலைக்குள் புழுவைப் போல நெளிந்து அவனைக் குடைந்து கொண்டேயிருந்தது. இரயில் நான்கு மணிநேரம் தாமதமாய் வந்தது ஏன்..? ஐந்து நிமிடம் நிற்கும் ஸ்டேசனில் அரை மணிநேரம் ஏன் நின்றது..? இரயிலை அபாயச் சங்கிலியை இழுத்து மூன்று முறை நிறுத்தியது யார். கூப்பிடும் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் ஏன் போலீஸ் வரவில்லை. காலை எட்டு மணிக்கு வைக்கப்பட்ட தீ மாலை வரை எரிந்தது ஏன்..? தீயணைப்பு வண்டிகள் ஏன் தாமதமாய் வந்தது..? பிணங்களை எடுத்துக் கொண்டு ஏன் நகர் முழுதும் ஊர்வலம் சென்றார்கள்..? தொலைக்காட்சிகளில் தோன்றிய அனைவரும் அமைதிகாக்கச் சொல்லாமல் ஏன் வெறியூட்டிப் பேசினார்கள்..? நேற்று இரவோடு இரவாக எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் இருந்து பேரல் பேரலாக பெட்ரோல் சேகரிக்கப்பட்டதாக சொல்கிறார்களே எதற்கு..? இன்றைய பந்த்தில் என்ன செய்யப் போகிறார்கள்..?

திடீரென காவிக் கொடிகளுடன் சிலர் இருசக்கர வாகனத்தில் எதிரே வருவது தெரிந்தது. சட்டென அருகிலிருந்த ஒரு சந்துக்குள் சென்று ஒளிந்து கொண்டான் ரபீக். அவனைக் கடந்து சிலதூரம் சென்று வண்டியை நிறுத்தி இறங்கினார்கள் அவர்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் கையில் சிறிய குச்சிகளில் கட்டப்பட்ட காவிக் கொடிகள் ஏராளமாக இருந்தது. சில வீடுகளைத் தேர்ந்தெடுத்து அந்த வீடுகளின் மேல் அந்தக் கொடிகளைச் சொருகிக் கொண்டிருந்தனர். அந்த வீடுகள் அனைத்தும் இந்துக்களின் வீடுகள் என்று ரபீக்குக்கு அப்போது புரியவில்லை.

அவர்கள் சென்றதும் வீட்டுக்கு ஓடினான். அவன் வீடு உள்ள பகுதியில் எந்த வீட்டிலும் கொடிகள் சொறுகப்படவில்லை. அந்தப் பகுதி முழுதும் இஸ்லாமிய வீடுகள். அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. வீட்டுக்குச் சென்றதுமே தத்தித் தத்தி ஓடிவந்த இம்ரான் ரபீக்கின் மீது தவ்விக் கட்டிக் கொண்டான்.

“என்னத்தா அம்மா சாப்பாடு ஊட்டுனாளா..?

“இல்லத்தா.. இன்னிக்கு நீங்க யேவாரத்துக்கு போகலைல, எனக்கும் ஸ்கூல் லீவுதான.. நீங்களே கத சொல்லி ஊட்டி விடுங்க..”

“அம்மா எங்க..?”

“கடைக்கு போயிருக்கு..”

“ஓக்கே.. இன்னிக்கு என்னோடு இம்ரான் குட்டிக்கு நான் நெறைய கதை சொல்லப்போறேன்.. இம்ரான் பாப்பா கதகேட்டுட்டே சாப்பிடுமாம்..” என்றபடி ஒரு தட்டில் உப்புமாவைப் போட்டு பிசைந்தான்.

”ஐயோ.. அல்லா.. பஜ்ரங்தள் ஆளுங்க வர்றாங்க.. எல்லாரும் ஓடுங்க..” என்று கதறியபடி ஒரு பெண் ரபீக்கின் வீட்டைத் தாண்டி ஓடினாள். பதட்டத்துடன் வெளியே வந்து எட்டிப் பார்த்தான். சாயிரா தலைதெறிக்க ஓடி வருவது தெரிந்தது. மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்த சாயிராவின் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. பேச்சே வரவில்லை. கடுமையாக இருமினாள்.

“என்னாச்சுடீ..” ரபீக்கின் குரல் அவளுக்கு கேட்டதாகவே தெரியவில்லை. இருமிக் கொண்டேயிருந்தாள். எதையோ பார்த்து கடுமையாக பயந்திருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அவளைப் பார்க்கவே பரிதாபமாகவும் பயமாகவும் இருந்தது. என்னவோ ஏதோவென்று பயந்து இம்ரான் வீல் வீல் என்று அழத் தொடங்கினான். சாயிராவை மார்போடு அணைத்துக் கொண்டு அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான். பக்கத்துவீட்டு பாத்திமா ஆப்பா தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

”ரபீக் பாய் பஜ்ரங் ஆளுக நூறு எரநூறு பேர் கூட்டமா வர்றாங்களாம். நூரானி மஜித்த மொத்தமா இடுச்சிட்டாங்கன்னு சொல்றாங்க. இப்ப இங்கதான் வர்றாங்க சீக்கிரமா ஓடுங்க..” சொல்லியபடியே ஓடினாள். அவளைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் பலரும் ஓடிக் கொண்டிருந்தனர். ரபீக்குக்கு பதட்டத்தில் உடல் நடுங்கியது.

”சீக்கிரம் போகலாம் வாங்க.. அவங்க எல்லாத்தையும் கொல்றாங்க.. பாக்குற எல்லாரையும் வெட்டறாங்க..” திக்கித் திக்கி சொல்லி முடித்தாள் சாயிரா. சட்டென வெளியே வந்து கதவை இழுத்துப் பூட்டினான். இம்ரானைத் தூக்கிக் கொண்டு அவளை இழுத்தபடி கூட்டத்தோடு சேர்ந்து ஓடினான். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சுயநினைவே இல்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர். திடீரென முன்னே சென்ற கூட்டம் திரும்பி ஓடி வந்தனர். ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு விழுந்தனர். யாரோ வந்து மோதியதில் இம்ரானோடு சேர்ந்து ரபீக்கும் கீழே விழுந்தான். சட்டென சுதாரித்து எழுந்து இம்ரானைத் தேடினான். சாயிரா கையில் இருந்தான் இம்ரான்.

“அல்லாவே.. அங்கிருந்தும் வர்ராங்க.. திரும்பி ஓடுங்க..”

பல இடங்களிலும் கூச்சல் குழப்பம். பெண்கள் குழந்தைகள் அஞ்சி அலரும் சத்தம் அனைவருக்கும் பதட்டத்தை அதிகரித்தது. அது ஒரு சந்து போன்ற பகுதி இரண்டு பக்கமும் பஜ்ரங் ஆட்கள். நடுவில் அவர்கள் மாட்டிக் கொண்டனர். அச்சமூட்டும் கோசம் காதைக் கிழித்தது. ஐயோ.. அம்மா.. அல்லா என்ற குரல்கள் எல்லாப் பக்கமும் எதிரொலித்தது. இருபுறமும் சூழ்ந்து கொண்ட கும்பல் கண்மண் தெரியாமல் அனைவரையும் வெட்டி வீசினர். அருகிலிருந்த வீடுகளுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்கள் சிலர். சிலர் கூரைகளின் மீது ஏறி அடுத்த தெருவில் குதித்தனர். ரபீக்கும் ஒரு வீட்டின் கூரை மீது ஏறினான். முன்னதாகவே சாயிராவையும் இம்ரானையும் ஏற்றி விட்டிருந்தான். அடுத்த தெருவில் குதிக்கும் முயற்சியும் எடுபடாது. ஏனென்றால் அவர்கள் அங்கேயும் வந்துவிட்டிருந்தனர். அவர்களோடு இன்னும் சிலரும் ஏறினார்கள். அந்தக் கூரையும் அடுத்தவீட்டுக் கூரையும் சந்திக்கும் இடத்தில் மழைநீர் ஓடும் பண்ணைத் தகடு அமைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றுவிட்டனர். கீழிருந்து பார்த்தால் பிறர் பார்வைக்கு தெரியாதபடி நன்றாகப் படுத்துக் கொண்டனர். கீழே எங்கு பார்த்தாலும் மரண ஓலம். பெண்கள் குழந்தைகள் கதறல் குரல். நெஞ்சு படபடபடவென வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

“யா.. அல்லா.. எப்படியும் ஐயாயிரம் பேர் இருப்பாங்க..” அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. கீழே வெறிக் கும்பல் அனைவரையும் வெட்டியும் குத்தியும் கொன்றனர். வீடுகளைக் கொழுத்தினர். உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி நெருப்பில் எறிந்தனர். பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் இரத்தம், நெருப்பு, பிணங்கள்..

திடீரென்று அடிப்பக்கத்திலிருந்து வெப்பம் பரவியது. திடுக்கிட்ட ரபீக் கூரையிலிருந்த ஒரு ஓட்டைப் பிரித்துப் பார்த்தான். உள்ளே நெருப்பு தகதகவென எரிந்து கொண்டிருந்தது. அந்த வீடும் கொளுத்தப்பட்டுவிட்டது.

“சாயிரா எந்திரி.. இந்த வீட்டுக்கும் நெருப்பு வெச்சுட்டாங்க..”

எழுந்து ஓடத் தொடங்கினார்கள். சட்டென ஒரு ஓடு உடைந்து தடுமாறி விழுந்தாள் சாயிரா. இம்ரானோடு சேர்ந்து அந்தச் சாய்ந்த கூரையில் உருண்டு சென்று கீழே விழுந்தாள். விழுந்தவள் எழ முடியாமல் முனகிக் கொண்டே கிடந்தாள். கர்ண கொடூரமான கோசத்தோடு ஒரு கும்பல் அவளை நெருங்கியது. முழு சக்தியைத் திரட்டி எழுந்து அமர்ந்தாள். அவள் மீது மயங்கிக் கிடந்த இம்ரானைப் பக்கத்திலிருந்த ஒரு தொட்டிக்குப் பின்னே தள்ளிவிட்டாள்.

என்னசெய்வதென்று தெரியாமல் பித்துப் பிடித்தவன் போல இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரபீக். திபுதிபுவென்று அவளை நெருங்கிய கும்பல் முண்டியடித்துக் கொண்டு அவள் மேல் விழுந்தது. சில நிமிடங்களில் உடையில்லாத சாயிராவின் உடல் சிதைந்து கிடந்தது. ஒரு பெரிய வாளால் அவள் இடுப்பில் வெட்டி இரு துண்டுகளாக்கினான் ஒரு வெறியன். கடைசியாக ஒருமுறை துடித்து அடங்கினாள் சாயிரா. அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்டாள்.

எந்த உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியாமல் இந்தக் கொடூரக் காட்சிகளை வெறித்தபடி நின்றிருந்தான் ரபீக். தொட்டிக்குப் பின்னாலிருந்த இம்ரானை கால்களைப் பிடித்து தலைகீழாக தூக்கிவந்தான் ஒருவன். இதைக் கண்ட ரபீக்குக்கு தலை வெடிப்பது போலிருந்தது. அழுது கொண்டிருந்த இம்ரானின் வாயைப் பிளந்து ஒருவகைக் கரைப்பான்கள் கலக்கப்பட்ட பெட்ரோலை அவன் வாயில் ஊற்றினார்கள். கிட்டத்தட்ட ஒரு முழு ஒரு லிட்டர் பாட்டிலிலிருந்த பெட்ரோல் கரைப்பான் கலவையை குடிக்கச் செய்த பின் அவனைத் தூக்கியெறிந்தான் ஒருவன். கடுமையாக இருமிக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான் இம்ரான். ஒரு காலை ஊன்றியிருக்க இன்னொரு கால் கயிரைப்போல தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இருமும்போது மூக்கிலும் வாயிலும் பெட்ரோல் கரைசல் பொக் பொக்கென்று வெளிவந்தது. ஒருவன் இம்ரானை நெருங்கிச் சென்றான். அழுது கொண்டிருந்த இம்ரானின் வாயில் ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டான். ’பொம்’ என்ற சத்தத்துடன் ஒரு பட்டாசு வெடிப்பது போல இம்ரான் வெடித்துச் சிதறினான். எரிந்து கொண்டிருந்த உடலை நெருப்புக் குண்டத்தில் தூக்கி எரிந்தான் ஒருவன். ரபீக் எழுந்து நின்றான். அவனைப் பார்த்துவிட்ட கும்பல் “டேய் அவனப் பிடிங்கடா.. கொல்லுங்கடா..” என்று கூச்சல் போட்டது. கூரை மேலிருந்து நெருப்புக் குண்டத்தில் குதித்தான். இம்ரானைக் கட்டிப் பிடித்தபடி படுத்துக் கொண்டான்…

2002, பிப் 27, நரோடா காவ்ன், குஜராத்..

 – சம்சுதீன் ஹீரா

மெளனத்தின் சாட்சியங்கள் நூலின் ஆசிரியர்.

Related Posts