இதழ்கள் இளைஞர் முழக்கம்

2 லட்சம் கோடி முதலீடு: கண்கள் முன் பறக்கும் கலர் பூச்சிகள்

– சாமிநாதன்

தமிழகத்தின் தலைவிதியே செப்டம்பரில் மாறிவிட்டது, இதோ முதலீடுகள் கொட்டத் துவங்கிவிட்டன 48 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 240000 கோடி முதலீடுகள் வருகை 4,70,000 வேலைவாய்ப்புகள் என அறிவிப்புகள் தூள் பறக்கின்றன.இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் சென்னையில் நடைபெற்று முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்படுத்தியிருக்கும் ஹைப் இது கண்கள் முன்னே கலர் பூச்சிகள் பறக்கின்றன.

இதுவெல்லாம் வருமா? என் ஒருவர் இரயில் பயணத்தில் கேட்க அபசக்குனமாய்க் கேட்காதய்யா! என்று இன்னொருவர் வாயடைத்துவிட்டார்.நாம் இங்கே பேசப்போவது அதிகமாய் மின்னுகிற அந்நிய முதலீட்டும் பூச்சிகளைப் பற்றியே.

உலகம்… உலகம்… உலகம்…

மூலதனத்தின் இப்பாட்டு உலகம் முழுவதிலும் எதிரொலிக்கிற காலம் இது. நொடிக்கு நொடி விரல்கள் நர்த்தனமாடும் கம்யூட்டர் கிளிக்குகளால் மூலதனம் ரெக்கை கட்டிப் பறக்கிற உலகமய யுகம் இது. இப்படிப்பட்ட உலப் பொருளாதாரத்துடன் இணைக்கப்படாமல் ஒரு நாடு இருக்க முடியும். இதுவே உலகமய ஆதரவாளர்களாக முன் வைக்கப்படும் கேள்வி. சிக்கரி கலக்காத சுத்தமான பொருளாதார பிரமைகளோடு எழுப்பப்படுகிற வாதம் இது. இக்கேள்விக்கும் பதிலளிப்பதற்கு முன்பாக பொருளாதார வரலாற்றுக்குள் பயணித்து வருவது அவசியம்.

இன்று இந்தியாவின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் ஜி.டி.பி 22 சதமாக உள்ளது. ஒரு சுகமான கற்பனை செய்து பாருங்கள் இந்தியாவின் ஜி.டி.பி 30 சதவீதமாக இருந்தால் எப்படி இருக்கும. அப்படியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் பயணிப்போம்.

கி.பி 1 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் இருந்திருக்கிறது. அதிலிருந்து 1850 ஆண்டுகள் கி.பி 1850வரையிலும் கூட இந்தியா, சீனா ஆகிய இரண்டின் ஜி.டி.பி யின் கூட்டல் உலக ஜி.டி.பி யில் 50 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்புறம் எப்படி இவ்வளவு சரிவு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி ஒர் காரணமா? ஆமாம் ஆனால் அது மட்டுமில்லை. உலகம் முழுவதிலும் தங்களின் தங்களின் தொழிற்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி மேலை நாடுகள் விரித்த காலனியாதிக்க வலைதான் சூரியனே அஸ்தமிக்காத இராஜ்யம் எங்களுடையது என பிரிட்டன் ஆணவாகப் பேசியது வெறும் பொருளாதாரம் அல்லவே! அரசியல்தானே! உலக நாடுகளின் 10 மட்டுமே காலானியாதிக்கத்திற்குள் சிறைப்படாதவை என்றால் பாருங்களேன்!

இரண்டு உலகப்போர்களும் சந்தையைப் பிடிக்க நடந்தவை தானே. போருக்குப் பிந்தைய பனிப்போர்க் காலமும் உலகமய யுகமும் மூலதனத்தின் உலகளாவிய வேட்டைக்கான காலங்களை வெவ்வேறு வடிவங்களில் அமைத்துத் தந்துள்ளன. எனவே வெறும் பொருளாதார விதிகள் மட்டும் எந்த நாட்டிற்கு எவ்வளவு பங்கு என்பதைத் தீர்மானிப்பதில்லை அரசியலே தீர்மானித்துள்ளது. தீர்மானிக்கிறது தீர்மானிக்கும்.

பூங்கதவே தாள் திறவாய்:-

இப்போது உலகப் பொருளாதாரத்துடனான இணைப்பிற்கு வருவோம் கதவைத் தாழிட்டுக் கொண்டு தனிமையில் இருக்க வேண்டுமென யாரும் சொல்லமாட்டார்கள் ஆனால் யாருக்குத் திறக்க வேண்டும், எப்போது திறக்க வேண்டும், எவ்வளவு திறக்க வேண்டும், எப்போது மூடவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற இறையாண்மை தேசங்களுக்கு முக்கியமில்லையா! பரஸ்பர புரிதலில் அடுத்த வீட்டு, எதிர் வீட்டுக் கதவுகளும் திறப்பதும் அவசியமல்லவா. இதை விட்டுவிட்டு நமது வீட்டுச் சாவியையே வேறொருவரிடம் ஒப்படைப்போமா? இவையெல்லாம் விவாதத்திற்கு வரவேண்டிய கேள்விகள். எனவே இந்தியாவும் உலகப் பொருளாதாரத்துடன் இணைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே இந்தியாவும் உலகப் பொருளாதாரத்துடன் இணைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எங்கெங்கு அந்நிய முதலீடுகளை வரவழைக்கலாம்? வரையறைகள் என்ன? அரசின் கடிவாளம் இருக்கிறதா? நாட்டின் நலனுக்கேற்ப அந்திய முதலீடுகளின் செயல்பாடுகள் அமைகிறதா? என்பது மிக முக்கியமானவை. அந்நிய முதலீடுகள் எந்தெந்த வடிவங்களில் பொதுவாக வருகின்றன எனில்

1 நிதி 2. தொழில்நுட்பம் 3. நிர்வாகத்திறன் மற்றும் நடைமுறைகள் இவற்றையெல்லாம் என்னென்ன வரையறைகளுக்குட்பட்டு ஏற்கலாம்? நிராகரிக்கலாம்?

  • உற்பத்திக்கான முதலீடுகளாக (ழுசுநுநுசூ குஐநுடுனு ஐசூஏநுளுகூஆநுசூகூளு) வர்த்தக நாட்டின் தேவைகளுக்கு உட்பட்டு வரவேற்கலாம்.
  • நிதிச் சந்தையில் யூக பேரங்களுக்காக, இலாப நோக்கங்களுக்காக மட்டுமே வருகிற அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மீது கட்டுப்பாடு வேண்டும்.
  • நம் நாட்டில் ஒரு தொழில்நுட்பம் இல்லையெனில் அத்துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்போம். அது உற்பத்தித் திறனை, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
  • உள்நாட்டுத் தொழில்களை, வேலைவாய்ப்புகளை பாதிக்கிற துறைகளில் அனுமதிக்கக் கூடாது சாதக,பாதகங்களை பெரும்பான்மையான மக்களின் நலன் என்ற தராசில் நிறுத்தப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
  • அந்நிய முதலீடுகளை வரவேற்கும் போது இத்தகைய கடிவாளம் நம் கைகளில் இருக்கிறதா? கை நழுவிப் போகிறதா? என்பதே கேள்வி.

உள்ளுர் மாடும் உலக சந்தையும்

ஆனால் அந்நிய முதலீடுகளைச் சார்ந்த பொருளாதாரப் பாதை வெற்றி பெற்றதில்லை என்பதே உலக அனுபவம். இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சி.பி.சந்திர சேகர் தனது “மேக்ரோ ஸ்கேன்” இணையதளத்தில்

“இந்த அணுகுமுறைகளில் புதுமை எதுவுமில்லை கடந்த 40 ஆண்டுகளில் இது பரிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பல வளர்முக நாடுகளில் அறுதிப் பெரும்பான்மை நாடுகள் தோல்வியையே தழுவியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். இத்தோல்விக்கு காரணம் என்ன? “உள்ளுரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை போகாது” என்பார்கள். அது உலகமயத்திற்கும் பொருந்தும் உள்நாட்டுச் சந்தையை விரிவாக்காமல் அந்திய முதலீடுகளை ஈர்ப்பதன் வாயிலாக வளர்ச்சியை எட்டுவதென்ற வழிமுறை வெற்றிபெற முடியாது. உள்நாட்டுச் சந்தையை விரிவாக்குவதென்றால் மக்களின் கைகளில் வருமான அதிகரிப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம், கல்வி, சுகாதாரம் ஆகியனவாகும் இதைத்தான் “சமூகக் கட்டுமானம்” என்கிறார்கள்.

உள்நாட்டுச் சந்தை பலமாக இருந்தால் அந்நிய முதலீடுகளின் லகானும் நமது கைகளில் இருக்கும். ஆனால் உலகமயம் இத்தகைய “வளர்ச்சி மாதிரியை” ஏற்றுக் கொள்ளவில்லை “கடன் சார்ந்த பொருளாதார வளர்ச்சி” என்று செயற்கையான சந்தையை உருவாக்கினார்கள். அதன் வீழ்ச்சியை 2008 உலக நிதி நெருக்கடியில் கண்டோம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பல கவிழ்ந்து போயின அதற்குத் தீர்வாக “சிக்கன அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை” முன்வைத்தார்கள். கிரிஸ் நாட்டின் தற்போதைய நிலைமை அதன் தோல்விக்கான சாட்சியம் ஆகும். இப்போது இந்திய ஆட்சியாளர்கள் “ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி” என்று பேசுகிறார்கள். அதுவே “மேக் இன் இந்தியா” முழுக்கம் சில மாநிலங்கள் மேக் இன் குஜராத், மேக் இன் மத்தியப் பிரதேசம்,மேக் இன் ராஜஸ்தான், மேக் இன் கர்நாடகா, என்று வரிசையாகப் புறப்பட்டுவிட்டார்கள் தமிழக முதல்வரின் அணுகுமுறையும் அதுதான் என்றாலும் முழுக்கத்தை காப்பியடிக்கவில்லை.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூட மேக் ஃபார் இந்தியா என்றார். மேக் இன் இந்தியா என்பது மேக் ஃபார் இந்தியாவுக்கு நேர் எதிரானது அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கு மோடியின் கைகளில் உள்ள ஒரே அஸ்திரம் மலிவான உழைப்புதான். உரிமைகள் பறிக்கப்பட்ட நிராயுதபாணிகளாய்த் தொழிலாளர்களை மூலதனத்திடம் ஒப்படைப்பது தான் தொழிலாளிகளின் வருமானம் மீது மீண்டும், மீண்டும் கை வைத்தால் என்ன நடக்கும்? இன்னும் சந்தை சுருங்கும் நெருக்கடிக்கான உண்மையான தீர்வு கிடைக்காது. அந்நிய மூலதனமும் வராது சீனா கடந்த 10 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர்கள் அந்நிய போஸ்மென்ட் வீக் முதலீட்டை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் 229 பில்லியன் டாலர்கள் தான் வந்துள்ளது.காரணம் சீனாவின் உள்நாட்டுச் சந்தை வலுவாக உள்ளது. ஒப்பிட்டளவில் லகானும் சீனாவின் கைகளில் இருக்க முடிகிறது. நோபல் அறிஞர் அமர்த்தியா சென் “இந்தியாவில் சமூகக் கட்டுமானம்” பலவீனமாக இருப்பதே காரணம் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்தாமல் உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதில் நன்மைகளைப் பெற இயலாது என்கிறார். இதைச் செய்யத் தவறினால் இங்கேயுள்ள மூலதனமும் பறந்துவிடும். அண்மையில் ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜா டெக்ஸ் டைல்ஸ் ரூ.240 கோடி முதலீட்டை குஜராத், ஆந்திராவில் போடுகிற முடிவை மாற்றி வடகரோலினாவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

சமூகக் கட்டுமானத்திற்கு இணையாகத் தேவைப்படுவது ஆதாரத் தொழில் வளர்ச்சி, மின்சாரம் ,சாலை வசதி, ரயில் வசதி, துறைமுக மேம்பாடு, கடற்வழி போக்குவரத்து… ஆகியன மேம்பட வேண்டும். தமிழக, உலக முதலீட்டாளர் மாநாட்டையொட்டி ஜப்பான், இந்தியா வணிக ஒத்துழைப்புக் குழுவின் சேர்மன் முனியோ கருயாச்சியிடம் “மெட்ரோ ரயில் திட்டத்திலுள்ள தாமதம் பற்றிக் கேட்கிறார்கள்”.

“அது கவலைக்குரியது இந்தியாவை பொருத்தவரையில் எதுவுமே எளிதாக நடப்பதில்லை”.

என்கிறார் மின்சாரத்தின் நிலையோ இன்னும் கவலைக்குரியது அரசு பொருளாதாரத்திலிருந்து விலகுதல் என்ற உலகமயத்தின் தாரக மந்திரத்தால் மின்சார முதலீடுகளை மத்திய, மாநில அரசுகள் வெகுவாகக் குறைத்தன. அந்நிய முதலீடுகள் மின்சாரத்துறைக்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்றார்கள். ஆனால் அமெரிக்காவின் என்ரான் மகாராஷ்ட்ராவில் தோல்வியைக் கண்டது. ஒரிசாவில் ஏ.இ.எஸ் கார்ப்பரேஷன் நடையைக் கட்டியது.

இந்திய ரயில்வே மேம்பாட்டிற்கு எல்.ஐ.சி ஐந்தாண்டுகளில் 150000 கோடிகளை தருவதாக ஏற்றுக்கொண்டது. அந்நிய முதலீடுகளைச் சார்ந்த வளர்ச்சிக்கு நேர் எதிரான சாட்சியம் இது. ஆனால் முதலாண்டில் ரூ.30,000 கோடிகள் எல்.ஐ.சி யிடம் தயாராக உள்ளது. ஆனால் இரயில்வேயிடம் திட்டங்கள் தயாராக இல்லை. கோவிந்தராஜ் டெக்ஸ்டைல் அமெரிக்காவுக்கு ஒடுவதற்கு ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாமையும் முக்கியக் காரணம்.

காசு…பணம்… துட்டு… Money .. Money :-

அந்நிய முதலீடுகள் லாபம் இருந்தால் மட்டுமே எட்டிப்பார்க்கும் உள்நாட்டுச் சந்தை வலுவாக இருந்தாலே சம்பந்தப்பட்ட நாட்டின் நிபந்தனைகளுக்கு உட்படும். சமூக நலன் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியன பற்றியெல்லாம் கவலைப்படாது. இதுவே உலக நடப்பும் இந்திய நிகழ்வுகளும் ஆகும். இந்திய ஜி.டி.பி யில் 57 சதவீதம் சேவைத்துறை உற்பத்தியேயாகும். தொழில் உற்பத்தி 17 சதவீதம் மட்டுமேயாகும். தமிழக உள்நாட்டு உற்பத்தியில் கூட 2005ல் 20 சதவீதமாக இருந்த தொழில் உற்பத்தி 2015ல் 17 சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளது. இது பொருளாதார தற்சார் பிறகு உதவக் கூடியதல்ல.

சேவைத்துறை ஊழியர்களின் வருமானங்கள் பெரும்பாலும் அந்நிய நுகர்வுக்கே வழிவகுக்கும் இது ரூபாய் மதிப்பின் சரிவில் முக்கிய பங்கு வகிக்கிறது. தோழில்துறை உழைப்பாளிகளின் நுகர்வே சிறுதொழில்களின் உய்ப்பிற்கு உதவி புரிவதாய் இருக்கும். அந்நிய முதலீடுகள் ஏற்றுமதி உயர்வுக்கு வழிவகுக்குமென்பது தொழில்துறையில் சாத்தியமாகவில்லை. மாறாக சேவைத்துறையிலுள்ள அந்நிய முதலீடுகளே 70 சதவீதம் விற்பனையை அந்நிய மண்ணில் செய்கின்றன. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தின் உயர்வும், தாழ்வும் இந்திய உயர் நடுத்தர வர்க்கத்தின் பதட்டத்தை உருவாக்குகின்றன.

ஒபாமா இந்தியத் தொழிலாளர் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்தவுடன் இங்கு பொறியியல் கல்லூரி அனுமதிகளில் “கம்ப்யூட்டர் சயின்ஸ்” கோர்ஸ்களுக்கு கிராக்கி குறைந்துவிட்டது. சீனா அனுபவம் வித்தியாசமானது அங்கு தொழில் உற்பத்தி துறை ஜி.டி.பியில் 32 சதவீதம் உள்ளது. அது உள்நாட்டு உற்பத்திக்கான ஊக்கத்தை சந்தைக்கு அளிக்கிறது. சில்லரை வியபாரத்தைக் குறி வைப்பதற்கு காரணம் அங்கு பெரிய சந்தை கிடைக்குமென்பதுதான் 2020ல் சில்லரை வணிகச் சந்தை ரூ.15,60,000 கோடிகளாக இருக்குமென்பது கணக்கு. பெரிய, பெரிய பன்னாட்டு வியபார நிறுவனங்கள் வந்தால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? “யானைகள் காதல் செய்தால் புல்வெளிகள் நசுங்கத்தானே செய்யும்” என்று உலகமய ஆதரவாளர்கள் நளினமாய் விளக்கம் கொடுக்கிறார்கள். பன்னாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களெல்லாம் கிராமங்களை, சாதாரண மக்களை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. கரும்பு எனக்கு சக்கை உனக்கு என சமூகப் பொறுப்புகளையெல்லாம் அரசு நிறுவனங்களின் தலைகளில் கட்டி வருகிறார்.

தொழில்நுட்பத்தை இவர்கள் கொண்டு வருவதில்லை. வருவல்,ஊதுபத்தி, குளிர்பானம் என குடிசைத் தொழில்கலுக்ளெல்லாம் நெருப்பு வைத்தது தான் மிச்சம். ஹுண்டாய், ஃபோர்டு நிறுவனங்கள் என கவர்ச்சிகரமான கார்களைக் கொண்டு வந்தால் சில நூறு பேருக்கு வேலை கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் நோட்டார்ஸ் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான வேலை பறிப்போகிறது. இந்தியாவில் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அரசின் நிதி, முனைப்பு குறைந்து போவதால் திறமைமிக்க தொழிலாளர்கள் வெளிநாட்டு மோகத்திற்கு ஆளாகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் இவர்கள் உதவுவதில்லை. இந்தியாவிற்கு அதிகமான அந்நிய முதலீட்டை 35 சதவீதம் கொண்டு வருகிற நாடு மொரிசியஸ் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

உலகிலேயே மக்கள் தொகையில் 156வது இடத்தில் உள்ள மதுரை மாநகரத்தின் மக்கள் தொகை அளவே கொண்ட ஒரு நாடு இவ்வளவு அந்நிய முதலீட்டைக் கொண்டு வரமுடியும். அமெரிக்காவிலிருந்து வருவது 6 சதவீதம் மட்டுமே, ஜப்பான் 8 சதவீதம், பிரிட்டன் 9 சதவீதம் எப்படி? இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் என்கிற சலுகை மொரிசியசுக்கு இருப்பதால் எல்லா நிறுவனங்களும் போலியாக அங்கு பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். தெரிந்தே விடப்படும் ஓட்டை இழக்கிற வரிகளோ கோபானு கோபு. இந்தியாவின் அந்நிய நேரடி மூலதன நிறுவனங்கள் கொண்டு வரும் நிகர அந்நியச் செலவாணி அரபு மைனஸ் என்கிறது ஓர் கணக்கு வருவதைவிட கொண்டு செல்வது அதிகம். உற்பத்தி முதலீடாக வராமல் யூக முதலீடுகளாக வந்து நடத்துகிற சூதாட்டங்களின் விளைவே பங்குச்சந்தை சரிவுகள்.

வரும் ஆனா வராது.

இப்படி நிலைமைகள் இருக்கும் போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முதலீடுகள் வருமா? 24,0000 கோடிகளில் அந்நிய முதலீடுகளும் உள்ளன. சிவ் நாடார் போன்றவர்கள் அறிவித்துள்ள முதலீடுகளும் உள்ளன.ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஆ.டீ.ரு) என்பது முதலீட்டை வெல்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிற ஆவணமே. அது ஈடேறுவது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது” என்கிறார் இன்டியா ரேட்டிங் ஏஜென்சியின் முதன்மை பொருளாதார நிபுணர் அனில் குமார் சின்கா இந்து நாளிதழின் செப் 12, 2015 தலையங்கமும், “இப்போதுதான் சவால் துவங்குகிறது.”

முதலீட்டிற்கான வாக்குறுதிகளில் எவ்வளவு உண்மையான முதலீடுகளாக மாறின என்பதற்கான ஆதாரங்கள் மிக மிகக் குறைவே. இது தமிழகத்தின் நிலைமை மட்டுமல்ல இந்தியாவின் அனுபவமாகும் என்று எழுதியது. ஏனவே அந்நிய முதலீடு வருமா? வராதா? என்கிற பட்டிமன்றத்தை விட எது இந்தியப் பொருளாதாரம் பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக அமையும்? அந்நிய முதலீடுகள் எந்தெந்த நிபந்தனைகளுடன் வருகின்றன? என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கின்றன? எடுக்கிற முடிவுகளில் நிகர பயன் நாட்டிற்கு உள்ளதா? எவ்வளவு பேரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது? தேசத்தின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கிறது? என்பது குறித்த விவாதங்களே முக்கியம். லகான் நமது கைகளில் இருப்பதும், அந்நிய முதலீட்டுக் குதிரையைக் கடிவாளம் போட்டு நமது நாட்டிற்கான வளர்ச்சிப் பயணத்தில் செலுத்துவதும் முக்கியம். ஆனால் அதற்கான வாய்ப்பு உள்நாட்டுச் சந்தையை விரிவாக்காமல் கிடைக்காது.

Related Posts