பிற

உலகமெங்கும் பரவிக்கிடக்கிற இஸ்லாமோஃபோபியா எனும் வெறுப்பரசியல் . . . . . . . . !

“இப்படித்தானடா எங்களுக்கும் இருக்கும்…” என்று ஒரு கமென்ட்.. படிக்கும்போது நியாயமான கமென்ட் போலத்தான் தெரியும். நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு வீடியோவில் யாரோ ஒருவர் போட்டிருந்தது. இதுபோல நிறைய பேர் சொன்னார்கள். `அவனுகளுக்கு வேணும்ங்க. சாகட்டும்ங்க’ என்றெல்லாம் நேர்பேச்சில் சொன்னவர்கள் அத்தனை சாதுக்கள். துப்பாக்கியை கண்ணாலும் கண்டிரதாவர்கள். இருந்தும் எங்கிருந்தோ ஒரு வன்மம். ஒரு வெறுப்பு. அந்த `எங்கிருந்தோ’ என்பது எங்கிருந்து வந்தது?

துப்பாக்கிச்சூட்டில் செத்துப்போனவர்கள் எல்லோருமே கொடூரமானவர்கள் அல்ல. நம்மைப்போல நேற்று வரை சின்ன சின்ன வாழ்க்கை சவால்களோடு தப்பும் சரியுமாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். அவர்களை ஏன் இவ்வளவு சபிக்கிறார்கள். ஒரே காரணம்தான் உலகமெங்கும் பரவிக்கிடக்கிற இஸ்லாமோஃபோபியா எனும் வெறுப்பரசியல்.

9/11க்கு பிறகு உலகம் முழுக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட கேடுகெட்ட தொற்றுநோய் இது. மேற்கத்திய ஊடகங்களும் அவர்களுடைய படைப்புகளும் தொடர்ந்து உலகெங்கும் உண்டாக்கிய மாற்றம். தீவிரவாதம் என்றாலே இஸ்லாம்தான் என்று தொடர்ந்து பதிவு செய்த பரப்புரை. இந்தியாவிலும் அப்படித்தான். சில இஸ்லாமிய இயக்கங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களைவிடவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரப்போர் ஆபத்தானது. உலகில் எங்குமே இன்றைக்கு ஒரு இஸ்லாமியனால் நிம்மதியாக பயணம் செய்ய முடியாது. அவனுடைய பெயர் போதும் அவன்மேல் சந்தேகத்தை எழுப்ப… அவனை நிர்வாணமாக்கி சோதனையிட.

உலகில் வாழுகிற 130 கோடி இஸ்லாமியர்களையும் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளாக மாற்றிய பிரச்சாரம் இது. இதில் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி என பல நாட்டு அதிகார மைய ஆட்களுக்கும் பங்கிருக்கிறது. வெள்ளை மேலாதிக்க மனோநிலை (White Supremacy) திட்டமிட்டு உருவாக்குகிற போலியான சித்திரம் இது. இங்கிலாந்தில் இருந்து இயங்கிவந்த வெள்ளை மேலாதிக்க தீவிரவாத இயக்கத்திற்கான பெருந்தொகை மேற்சொன்ன அத்தனை நாடுகளிலிருந்து வந்திருப்பதை கார்டியன் சில மாதங்களுக்கு முன்பு வெளிக்கொணர்ந்தது. இதுபோல ஏராளமான இயக்கங்கள் உலகெங்கும் உண்டு. கடந்த இருபதாண்டுகளில் இப்படிப்பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது என சமீபத்திய ஆய்வுகள் எல்லாமே சொல்கின்றன. ஆனால் அதைப்பற்றி அதிகமாக எந்த சர்வதேச ஊடகமும் வெளிச்சமிட்டு காண்பிப்பதில்லை. அதைப்பற்றி பேசுவதில்லை. ஏன்?

சாம்பிளுக்கு ஒரு தகவல் தருகிறேன். 9/11க்கு பிறகு அமெரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் இறந்து போனவர்கள் எண்ணிக்கை 106, அதே அளவு (90) இந்த வெள்ளை மேலாதிக்க நிறவெறி ஆட்களாலும் அமெரிக்காவில் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் எதை ஊதி பெரிதாக்குகின்ற?

இஸ்லாத்திலேயே ஏகப்பட்ட பிரிவுகள் உண்டு… வழிமுறைகள் உண்டு, வாழ்க்கை முறை, சட்டதிட்டங்கள் என அத்தனை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அத்தனை பிரிவுகளையும் அத்தனை வழிமுறைகளையும் ஒன்றடக்கி எப்படி ஒட்டுமொத்தமாக எக்ஸ்டீமிஸ்டுகள் என்கிற சட்டகத்தில் அடைக்கமுடிகிறது. காரணம் இந்த இஸ்லாமிய வெறுப்பு மனநிலையை உருவாக்கும் பரப்புரை நெட்வொர்க்.

வெறுப்பு என்பது சும்மா தீவிரவாதி என்பதாக மட்டுமில்லை. இஸ்லாமோபோபியா ஆழமானது.

இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இயங்குபவர்கள், மேற்குலக வளர்ச்சி கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்பர்கள்,  சிந்திக்கும் திறனற்றவர்கள், நாகரிகமற்றவர்கள், கல்வி அறிவில்லாதவர்கள், காட்டுமிராண்டிகள், அளவில்லாத வன்முறை குணம் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் ரகசியக்குழுக்களை அமைத்து திட்டம் போட்டு மக்களை கொல்பவர்கள். அவர்கள் பெண்களை ஒடுக்குபவர்கள், குற்றவாளிகளுக்கு இடமளிப்பவர்கள், போரை நேசிப்பவர்கள், உளவு பார்ப்பவர்கள்… சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது. இது மேற்குலகால் உருவாக்கப்பட்ட கற்பிதங்கள். எல்லா மதங்களிலும் இருக்கிற எல்லா அடிப்படை வாத குழுக்களிலும் இருக்கிற அத்தனை பிற்போக்கான விஷயங்களும் இஸ்லாத்திலும் உண்டு. ஆனால் அதற்கென ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்தையும் அதன் மக்களையும் இப்படி பிரித்துப்பார்ப்பதும், அவர்களை குறிவைத்து விலக்கி வைக்க முயல்வதும் எத்தனை பெரிய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த துப்பாக்கிச்சூடே சான்று.

உலகெங்கும் இந்த வெள்ளை மேலாதிக்க ஆட்கள் விதைத்த வெறுப்பின் விதைகள் இப்போது அப்பாவி உயிர்பலிகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறது. அதன் சாம்பிள்தான் இந்த நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு. வெள்ளைமேலாதிக்கம் இவ்வகை தூண்டுதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றன. அவர்களுக்கு தங்களை வலிப்படுத்திக்கொள்ளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் போதுமான ஆதரவை பெறவும் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து மோசமான எதிர்வினைகள் தேவையாக இருக்கிறது. அதற்கான தூண்டுதல்களாகவும் இவ்வகை திடீர் தாக்குதல்களை பார்க்கலாம்.

மதசார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா மாதிரி தேசத்தில் இஸ்லாமிய ஆதரவு என்பதும் கூட தீவிரவாத ஆதரவாக, பாகிஸ்தானுக்கான ஆதரவாக திரிக்கிற வேலையெல்லாம் தொடர்ந்து நடந்து, இன்று அது சாதாரணமாகிவிட்டது. இஸ்லாமியர்களுக்கு தேசபக்தி கிடையாது என்கிற பரப்புரைகள் கடந்த முப்பதாண்டுகளாக இங்கேயும் தொடர்ந்து செய்யப்படுகிற அயோக்கியத்தனங்களில் ஒன்றுதான். இராணுவத்திலும் தேசபாதுகாப்பிலும் இஸ்லாமியர்களின் பங்கு குறித்து பேசுவதை வேண்டுமென்றே தவிர்க்கிற தகிடுதத்தங்கள் சாதாரணமாகிவிட்டன. புல்வாமா தாக்குதலின் போது இறந்துபோனவர்களில் இஸ்லாமியர்களே இல்லை என்று கூட பிரச்சாரங்கள் இங்கே மேற்கொள்ளப்பட்டன!

இஸ்லாமியர்களில் தீவிரவாதிகளே இல்லையா என்றால்… இருக்கிறார்கள் என்பதே என்னுடைய பதிலாகவும் இருக்கும். அதே நேரம் உலகம் வலது சாரி வெள்ளை மேலாதிக்க இயக்கங்களை, அதன் தாக்குதல்களை எப்படி ட்ரீட் பண்ணுகிறது. அதே நேரத்தில் இஸ்லாமிய தும்மலைக்கூட எவ்வளவு பூதாகரமாக பெரிதுபடுத்திக்காட்டுகிறது என்பதை கவனித்தால் இந்த சிக்கல் புரியும்.

நியூஸிலாந்து விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். கொலைகாரனை தீவிரவாதி என்று குறிப்பிடாமல் GUNMAN என்று குறிப்பிடுவதன் அரசியல் முக்கியமானது. கிறிஸ்தவனான அந்த குற்றவாளியை கிறிஸ்தவ தீவிரவாதி என்று யாரும் குறிப்பிடுவதில்லை. அதே நேரம் இதையே ஒரு இஸ்லாமிய இளைஞன் செய்திருந்தால் உடனடியாக இஸ்லாமிய தீவிரவாதி என்று அடுத்த நொடியே முத்திரை குத்திவிடமாட்டோமா…

இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக தொடர்ந்து உரையாட வேண்டியகாலத்தில் இருக்கிறோம். அதற்கு முதலில் நாமும் இஸ்லாமோபோபியாவின் பலியாடுகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இங்கே இஸ்லாமியர்களை இஸ்லாத்தை ஆதரிக்கிற ஒரு இந்து கூட சந்தேகித்திற்குள்ளாகிற மோசமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இஸ்லாமோபோபியாவிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல. தலித்துகள் குறித்தும் பெண்களைப்பற்றியும் நம்மிடையே இத்தகைய ஒரு கற்பிதங்கள் ஏராளமாக உண்டு. இவையெல்லாம் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. இத்தனை கல்வி வளர்ச்சி பெற்றுவிட்ட போதும் நம்மால் அந்த கற்பிதங்களின் கதவுகளை தாண்டி வருவது சுலபமாக இல்லை. அதே பாணிதான் இங்கேயும். அதை எதிர்கொள்ள இஸ்லாத்தை தெரிந்துகொள்ளும் அவகாசம் இல்லையென்றாலும் நமக்கு அருகில் இருக்கிற இஸ்லாமியர்களையாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

இஸ்லாம் என்றால் ரம்ஜான் பிரியாணி என்பதை தாண்டி நிறைய இருக்கிறது, நம்முடைய புரிதல்கள் எல்லாம் எத்தகைய கற்பிதங்கள் என்பது புரியவரும். அதுதான் இஸ்லாமோபோபியா என்னும் பிரிவினைவாதத்திலிருந்து நம்மை விடுவிக்கிற ஒன்றாக இருக்கும். ஏனெனில் நம் கைகளிலும் இருக்கிறது அந்த வெறுப்பரசியல் துப்பாக்கி.

– அதிஷா.

Related Posts