பிற

மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 1)

உலகத்தில் மேதாவிலாசர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் அத்துனை பேரும் உலகை புரட்டி போடும் அளவிற்கு எவ்வளவு படைத்திருக்கிறார்களோ, அதைப்போலவே உலகையும், சக படைப்பாளிகளையும், சக விஞ்ஞானிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தும் வகையில் அல்லது ஒரு பெரும் விவாதத்திற்க்கு வழி வகுக்கும் வகையில் சில முற்றுபெறாத  படைப்புகளையும் விட்டுச் செல்கிறார்கள். வின்சென்ட் வான்காவின் ஓவியங்கள் சில, மார்க்சின் முலதனத்தின் கடைசி சில பகுதிகள், பல விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் என இந்த விந்தைமிக்க “முற்றுபெறாத” லிஸ்ட்  வெகுநீளம்.

அவ்வகையில் இந்திய புரட்சிக்கென, இந்திய நிலைமைகளை கணெக்கிலெடுத்து எழுதப்பட்ட அறிவியல்பூர்வமான நூல்களுள் மிகமிக முக்கியமான ஒன்று  மாமேதை அம்பேத்கர், ஆராய்ச்சி செய்து அறிவியல் பூர்வமாக எழுதிய “இந்தியாவும் கம்யூனிசமும்” என்னும் இந்நூல்.

1950களின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்த நூல், அம்பேத்கர் இறந்தவுடன் அவரது கோப்புகளில் இந்நூலுக்காக அவர் திட்டமிட்ட தலைப்புகளும் அதில் ஒரு தலைப்பை முழுதாக 63 பக்கங்கள் தட்டச்சு செய்து வைத்திருந்ததும் கண்டெடுத்து பிரசுரிக்கப்பட்டது. இந்த நூலின் பல  பதிப்புகள் இதுவரை வந்துவிட்டன. சமீபத்தில் வெளியான பதிப்பு LeftWord பதிப்பகம் வெளியிட்ட “இந்தியாவும் கம்யூனிசமும்” என்ற தலைப்பிலான புத்தகம். பிரபல சமூக செயல்பாட்டாளரும், தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கெதிராக குரலை ஓங்கி ஒலிப்பவரும், இடதுசாரி சிந்தனையாளருமான ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகத்துடன் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது. ஆனந்த் டெல்டும்டே  இதற்க்கான அறிமுகத்தை சிலவருடங்களுக்கு முன்னே எழுதி இருந்தாலும், அவரது அறிமுகமும், அம்பேத்கரின் எழுத்தும் சேர்த்து இந்த புத்தகத்தில் பதிப்பிக்கப்படுள்ளது சிறப்பானது. கூடுதலாக, “நான் ஏன் இந்து இல்லை” என்ற தலைப்பில் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியான “இந்து மதத்தின் குறியீடுகள் ” எனும் பகுதியும் இந்த புத்தகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. துரதிர்ஷ்டசமாக இதுவும் முற்றுபெறாத படைப்பு!! .

இந்தியாவும் கம்யூனிசமும் என்ற புத்தகத்திற்க்கான அம்பேத்கரின் திட்டம் பின்வருமாறு;

பகுதி ஒன்று: கம்யூனிசத்திற்க்கான முன்நிபந்தனைகள்

1. கம்யூனிசத்தின் பிறப்பிடம்

2. கம்யூனிசமும் , ஜனநாயகமும்

3. கம்யூனிசமும் சமூக அமைப்பும்

பகுதி இரண்டு: இந்தியாவும்  கம்யூனிசத்திற்க்கான முன்நிபந்தனைகள்

4. இந்து சமூக அமைப்பு

5. இந்து சமூக அமைப்பின் அடிப்படை

6. சமூக அமைப்பிலிருந்து கம்யூனிசம் எழுவதற்க்கான தடைகள்

பகுதி மூன்று : நாம் செய்ய வேண்டியது என்ன? (எங்கேயோ கேட்டது போல் உள்ளது அல்லவா? போகட்டும்!!)

1. மார்க்சும் ஐரோப்பிய சமூக அமைப்பும்

2. மனுவும் இந்து சமூக அமைப்பும்

நமக்கு கிடைத்தெல்லாம் பகுதி இரண்டு, இந்து சமூக அமைப்பு என்னும் தலைப்பில் அம்பேத்கர் எழுதிய இரண்டு சிறு பகுதிகள் மட்டுமே.  இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் இருந்து நாம் இதை பெற்றோம். மற்ற தலைப்புகளை அவர் எழுதும் முன்னரே காலமாகிவிட்டார்.

அம்பேத்கர் அப்படி என்ன பெரிதாக  சொல்லிவிடப் போகிறார், தலித்துகள் இந்நாட்டில் கொடுமைப்படுத்தவதாக சொல்லி இருப்பார், அதைத்தான் நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே” என எண்ணும் “முற்போக்காளர்களுக்கும்”, “சில இடதுசாரி” சிந்தனையாளர்களுக்கும் கூட  இந்த புத்தக அறிமுகத்தின் அடுத்த இரண்டு பகுதிகளை சமர்பிக்கலாம் என நினைக்கிறேன்!

திட்டுவதற்க்காகவோ கிண்டலடிப்பதற்க்காகவோ இல்லை…

கற்றுக் கொண்டு முன்னேறுவதற்காக…

பலங்கொண்ட எதிரியை எதிர்ப்பதற்க்காக…

Related Posts