அரசியல் சமூகம்

சாலியமங்கலம் கூட்டு வன்புணர்வு, விழித்திடுமா சமூகத்தின் மனசாட்சி?

474570334-Rape_6

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் மீதும் தாக்குதல்கள் ஏராளம் நடைபெற்று வருகின்றன. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஆதிக்க சாதி வெறியர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதும், அந்த சம்பவம் நிகழும் போது மட்டும் கண்டன குரல் பல திசைகளிலிருந்து வருவதும்  நீடித்து தொடர்ச்சியாக இம்மக்களுக்காக பலரும் துணை நிற்பதில்லை எனும் நிலையும் இருக்கிறது. இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவமாக பார்க்காமல், சமூக படிநிலைகளில் நிகழ்ந்து வரும் பொருளாதார, வாழ்வியல் மாற்றங்களின் தாக்கம் இது போன்ற தாக்குதல்களுக்கு காரணியாகவும் அமைகிறது என்ற உண்மையை பலர்  வசதியாக மறக்கவும் செய்கின்றனர்.. உலகமயம் பொருளாதார மாற்றங்களை மட்டும் கொண்டு வரவில்லை. சேர்த்தே , சமுதாய சீர்கேடுகளையும் சத்தமில்லாமல் பெரும்பாலான மக்களின் ஆழ்மனதில் உளவியல் மாற்றங்களையும் , உருவாக்கியுள்ளது என சொன்னால் மிகையாகாது. அந்த அடிப்படையில் இன்று சமூகத்தில் நிகழ்ந்து வரும் பல கொடுமைகளின் ஊற்றுக்கண்ணாக உலகமயம் இருக்கிறது எனும் அடிப்படை உண்மையை நாம் எக்காரணம் கொண்டும் மறக்க இயலாது.

கல்வியில் துவங்கி வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இதன் தாக்கம் இருப்பதால் பள்ளி பருவத்திலிருந்தே பிரச்சனைகள் துவங்குகிறது. முழுவதும் வணிகமயமான கல்வி எதை சொல்லி தரும்? நற்பண்புகளை கண்டிப்பாக சொல்லி தராது ….ஒப்பிட்டு பார்க்க வைக்கும், பிரிவினையை உருவாக்கும், அப்படி தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை மெல்ல சாதி நுழைகிறது. அதன் வெளிப்பாடு பள்ளிகூடங்களிலேயே பாகுபாடுகள், மனதில் ஆழமாக புதையும் சாதிய வேற்றுமைகள் ….என மீண்டும் கற்காலத்திற்கு செல்லும்நிலை… இது போன்ற விவரங்களெல்லாம் யாருக்கும் தெரியாத புது விவரங்களல்ல… இருந்தும் மீண்டும் அசை போடுகிறோம்.

தமிழகத்தில் சாதியின் கூறுகள் ஆயிரமாயிரமாக பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் என சில அடையாளங்கள், அதையொட்டி பிரிவுகள், கலாச்சாரம், உணவு, வாழ்விடம் , என அனைத்தும் வேறுபடுகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் சாதிய அடையாளங்களை பொது வெளியில் வெளிப்படுத்தி கொள்வது அதிகமாகி வருகிறது. இதன் வெளிப்பாடுகளை கிராமப்புறங்களிலும், அதையொட்டிய நகரங்களிலும் பார்க்கிறோம். திருமணம், கோவில் திருவிழாக்கள், குடுப்ப விழாக்கள், பிறந்த நாள் என வெவ்வேறு வடிவங்களில் இதை பார்க்க முடிகிறது. இதன் தாக்கங்கள் அன்றாட வாழ்விலும் பிரதிபலிக்கின்றது.

இந்த பின்னணியில், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது. சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த பகுதியான சாலியமங்கலத்தில் ஆதிக்க சாதியினர் நிரம்ப வசிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் சிறு எண்ணிக்கையில் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். விளை நிலங்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டிலும், அதை சார்ந்து வேலை பார்க்கும் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கின்றனர். பல தலைமுறைகளாக நீடிக்கும் வழக்கமிது.  இதையும் கணக்கில் கொண்டு கலைச்செல்வியின் கொலை, கூட்டு பாலியில் வன்புணர்வு கொடுமைகளை பார்க்க வேண்டும். நாகப்பட்டினம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருக்கிறது கலைச்செல்வியின் வீடு. எந்த விதமான அடிப்படை வசதிகளும் அவ்வீட்டில் இல்லை. தமிழகம் முழுவதும் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படாமல், அரசால் அலைகழிப்பிற்குள்ளாகும் காட்டுநாயக்கர் (பழங்குடியினர்) சமூகத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. மொத்தமாகவே, சாலியமங்கலத்தில் இந்த சமூகத்தை சார்ந்த 5 அல்லது 6 குடும்பங்கள் மட்டுமே உள்ளது.

31/07/2016 மாலை, சுமார் 6 மணியளவில், இயற்கை கடனை கழிக்க செல்கிறார் கலைச்செல்வி. நீண்ட 1470182468நேரமாகியும் திரும்பாததால் அச்சமடையும் குடும்பத்தினர் அப்பகுதி முழுவதையும் அலசி தேடுகின்றனர். முயற்சி தோல்வி….என்ன செய்வதென தெரியாமல் அச்சமடைகின்றனர். இரவு உறக்கத்திற்கு பின்னர், அதிகாலை காலை கடனை கழிக்க சென்றவர்கள், அப்பகுதியில் கலைச்செல்வி, அரை நிர்வாண கோலத்தில் கோரமாக படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை காண்கின்றனர். எதிர்பாராத அதிர்ச்சி….காவல் துறைக்கு தகவல் அளிக்கப்படுகின்றது . உடலை கைப்பற்றி மேல் நடவடிக்கைகளுக்கு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. விவரம் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட   இயக்கங்கள் தலையிடுகிறது. உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உடற்கூறாய்வு நடைபெற்று உடல் 01/08/2016 இரவே அடக்கம் நடைபெறுகிறது. கலைச்செல்வி அடக்கம் நடைபெறுவதற்கு முன்னரே, சம்பவத்தை அறிந்து எவிடென்ஸ் அமைப்பினர் அதன் நிறுவனர் திரு. கதிர் அவர்கள் சாலியமங்கலம் சென்று, குடும்பத்தினரை சந்தித்து, காவல் துறை உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்திகிறார்.

அடுத்த நாள் 02/08/2016 பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்கும், காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு , குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சாலியமங்கலம் சென்று, மேற்கண்ட பணிகளை செய்கின்றனர். 01/08/2016 அன்று மாலையே  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யபடுகின்றனர்.  சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரி உட்பட பலரும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைத்திடும் வகையில் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, முறையான விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர். இக்கட்டுரைக்கு இந்த பகுதி ஒரு பின்னணிக்காக. ஆனால் சாலியமங்கலம் பகுதியில் கலைச்செல்வி மரணம் முதற் சம்பவம் அல்ல…  பல சம்பவங்களில் ஒன்று. கூட்டுவன்புணர்வு,

அதையொட்டி கொலை என்பது இப்பகுதியில் வாடிக்கையாகி வருகிறது.

ஒராண்டிற்கு முன்பு, அதாவது 2015 துவக்கத்தில், சாலியமங்கலத்தை ஒட்டியுள்ள பச்சக்கோட்டை எனும் பகுதியில் தாழத்தப்பட்ட சாதியை சார்ந்த பெண் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலையும் செய்யப்பட்டார். குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். வழக்கு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.  ஆனால் தற்போது அந்த 7 குற்றவாளிகளும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.  காரணம்…..உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாத அவல நிலை…..ஆதிக்க சாதியினரின் அரசியல் தலையீடு, அதிகார அழுத்தம் என பல நிர்வாக பிரச்சனைகள்.

அடுத்ததாக சாலியமங்கலம் தினசரி சந்தையில் சுற்றி திரிந்து வந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வு செய்யபட்டு, கொலை செய்யப்படுகிறாள்…..எப்போதும் போல குற்றவாளிகளை தேடுதல், தடயம் சேகரித்தல் என மேலோட்டமாக காவல் துறை விசாரணையை நடத்திட, குற்றவாளி என யாரையும் கண்டுபிடிக்காமல், வழக்கும் நீர்த்து போகிறது….பாதிக்கப்பட்டது யாரும் ஆதரவில்லாத மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணல்லவா? முதலில் சொல்லப்பட்ட பெண்ணின் குடுபத்தினருக்கு எவ்வித பின்புலமும் இல்லாததால், நியாயம் விலை பேசப்படுகிறது.

இதே பகுதியில் ஒரு சிறு பெண்ணை கூட பாலியல் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தகவல் வருகிறது. அக்குழந்தையின் உறவினர்கள் அதை பொது வெளிக்கு கொண்டு வந்தால் எதிர்காலம் பாதிப்படையும் என்பதால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  இதைத்தவிர இப்பகுதியில் நிறைய கூட்டு பாலியல் கொடுமைகள் நடப்பதாகவும், பாதிப்படைந்தவர்கள் சாதிய ஆதிக்க கட்டுப்பாட்டுக்களுக்கு பயந்து எதுவும் சொல்வதில்லை. பகிர்ந்து கொள்வதுமில்லை. சாதிய ஆதிக்கம் காவல், நீதி, நிர்வாகம் என பல இடங்களில் மறைமுகமாக ஆட்சி செய்வதாலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வறிய நிலையில் உள்ள, செல்வாக்கு செலுத்த முடியாத மக்களாக இருப்பதால் இந்த கொடுமைகள் தொடர்கதையாகி வருகிறது.

பெண்கள், அதுவும் குறிப்பாக இளம் பெண்கள், மீதான வன்முறை அதிகமாகி வரும் சூழல்….கட்டுப்பாடற்ற பொது வெளி , என்ன குற்றம்  செய்தாலும் காப்பாற்ற நினைக்கும் சாதிய ஆதிக்கத்தின் பின்புலம், போதை கலாச்சாரம், மூளை சலவை செய்யும் திரைப்படங்கள் என பல காரணிகளின் தாக்கத்தால் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டால் முடியாது. சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் வாழும் நிலை, அரசின்  நல திட்டங்கள் கிடைக்காத கையறு நிலை, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசம்.

கலைச்செல்வி கொலை செய்யப்பட்ட இடம் கருவேல மரங்கள் நிரம்ப இருக்கும் ஒரு முக்கால் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி. இப்பகுதிக்கு மிக அருகாமையில் பயன்பாட்டில் இல்லாத ஒரு அரிசி ஆலை, ஒரு தனியார் பள்ளி…. மனதில் குரூரமான எண்ணங்கொண்ட காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் கொலைகள் நடந்தேறியுள்ளதாக கிடைக்கும் தகவல்…. பிஞ்சு மழலைகளை அந்த குரூரம் விட்டு வைக்குமா? எதைப்பற்றியும் கவலை படாத நெஞ்சங்கள் குழந்தைகள் என்றால் கரையுமா? திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் காட்சிகள், வன்முறைகள், கூட்டு வன்புணர்வு விஷயங்கள் என அனைத்தும் ஈவு இரக்கமற்ற புத்தியை அல்லவா உருவாக்கும்….

சாலியமங்கலம் குற்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் முதல் குற்றவாளி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. இவர் செய்துள்ள மாபாதக செயலால் அவர் மனைவியும் குழந்தைகளும் பொது வெளியில் என்ன துயரங்களை அனுபவிப்பார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன?

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தான் நாம் இருக்கிறோம் என்றாலும் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நம்மால் மேலே எழுந்த கேள்விகளை புறந்தள்ள முடியவில்லை….

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் அதற்காக வந்து நிற்க மாட்டார்கள் எனும் ஆதிக்க நிலை புத்தி, ஆணாதிக்க வக்கிரம், என அனைத்து அம்சங்களும் கலைச்செல்வியின் மரணத்திற்கு பின்னால் இருக்கிறது ..இது வெறும் அடையாள அரசியல் பாணியில் தீர்த்து வைக்க கூடிய பிரச்சனை அல்ல… மாறாக அனைவரும் கரம் கோர்த்து மாற்ற வேண்டியவை…அப்படி செய்தால் மட்டுமே தமிழ் சமூகத்தின் முகம் மாறும் .. மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.

 – என்.சிவகுரு.

 

Related Posts