தமிழ்நாட்டு மக்கள் இன்னொரு ஜனநாயகத் திருவிழாவுக்கு தயாராகிவிட்டார்கள். ஒருபுறம் திமுக பொருளாளர் ஸ்டாலின் கடந்த காலத்தை மறந்துவிட்டது போல திடீர் என “நமக்கு நாமே” என்று தமிழ்நாட்டை புதிதாகப் பார்ப்பது போல ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். மறுபுறம் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கண்ணுக்கு எட்டியவரை நமக்கு எதிரிகளே இல்லை, நூறு ஆண்டு செய்ய வேண்டிய பணிகளை நான் ஐந்தாண்டில் செய்து விட்டேன். தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதனால் மீண்டும் நான்தான் முதல்வர் என்ற கனவில் போயஸ் தோட்டத்திலிருந்து ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்ய  தயாராகிக் கொண்டிருக்கிறார்.

மக்களோ திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நாற்பத்தி ஒன்பது ஆண்டு காலம் நம்மை ஆண்டு, நம்முடைய வாழ்வாதாரம் உயரவில்லையே இதற்கு யார் காரணம்? என மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மஞ்சள் பையோடுதான் நான் சென்னைக்கு வந்தேன் என்று கூறுகிற கலைஞருக்கு ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி? எனக்கு குடும்பம் கிடையாது, எனக்கு சுயநலம் கிடையாது, எனக்கு எல்லாம் மக்கள்தான் என்று கூறுகிற ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கிடைக்க காரணம் என்ன? என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மக்கள் எப்பொழுதெல்லாம் ஆட்சியாளர்களால் சுரண்டப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களோ அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மக்கள் ஏற்றுகொள்ளும் வகையில் ஒரு அறிவிப்பை அறிவிப்பார்கள். அதற்கு பிறகு அரசாங்கம் அதை பற்றி கவலைப்படுவதில்லை, மக்களும்  அந்த திட்டம் அமலுக்கு வந்ததா என்று  யோசிப்பதில்லை.

ஞாபக மறதி என்ற நோய் மக்கள் மத்தியில் அதிகளவில் இருப்பதால், ஆட்சியாளர்கள் மக்களை சந்தோஷப்படுத்த தங்கள் வாயில் வருவதெல்லாம் திட்டமாக அறிவிக்கிறார்கள். மக்களும் ஒவ்வொருமுறையும் புதுப்புது திட்டத்தை கேட்டுக்கொண்டு தங்கள் வறுமை ஒழிந்துவிடாதா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு நான் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா இலவச மின்சாரம் வழங்கப்படும், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ இரயில் திட்டம் தொடங்கப்படும், தென்தமிழகத்தில் ஏரோ பார்க் ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டு நதிகளை இணைக்க நவீன நீர்வழிச்சாலை செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா 2011 ஆண்டு தேர்தலில் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தார். இதன் நிலை என்ன என்பதற்கு நமக்கு எந்தவித ஆதாரமும் தேவை இல்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் தான் கானல் நீராகப் போகிறது என்றால் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களாவது அமலுக்கு வருகிறதா?.

தமிழ்நாட்டு வரலாற்றிலியே 110 விதியின் கீழ் 185 அறிவிப்புகள் அறிவித்தது முதல்வர் ஜெயலலிதாவாகத்தான் இருப்பார். 185 அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் நிதி 84 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழக அரசு ஒதுக்கிய நிதியோ வெறும் 12 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஆக அரசு சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது. மக்களுக்கு எழுகிற கேள்வி என்னவென்றால் இந்த திட்டங்களை செயல்படுத்த பாக்கித் தொகையை தமிழக முதல்வர் எப்பொழுது ஒதுக்குவார்கள்? ஒரு வேலை நூற்றாண்டு சாதனையால் மீண்டும் முதல்வர் ஆனால் இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்வரை 110 விதியின் கீழ் வேறு திட்டங்கள் அறிவிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதிதாக வரக்கூடிய முதல்வர் இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவாரா?

முதலில் 110 விதியின் கீழ் திட்டங்களை ஏன் அறிவிக்க வேண்டும்? 110 விதியின் நோக்கம் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டம் 208 பிரிவு 1 வது உட்பிரிவின் படிதான் தமிழநாடு சட்டமன்ற விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இதில் 23 அத்தியாயங்களும் 292 விதிகளும் உள்ளன. 110 விதியின்படி “பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி  பேரவைத் தலைவரின் அனுமதியோடு அறிக்கையை அமைச்சர் வைக்கலாம். அப்படி வைக்கின்ற அறிக்கையின் மீது எந்தவித விவாதமும் நடத்தக்கூடாது. உதாரணத்துக்கு இயற்கை பேரிடர் காலத்தில், அசாதாரண சூழ்நிலையில் சட்டமன்றத்தில் அறிக்கை வைத்து விவாதம் செய்வது காலதாமதம் ஆகும் என்ற உயரிய நோக்கத்தோடுதான் 110 விதி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றோ தான் சட்டமன்றத்தில் அறிவிக்கின்ற எந்த திட்டத்துக்கும் மாற்றுக் கருத்தே யாரும் சொல்லக் கூடாது என்ற ஒரு எதேச்சதிகார போக்கில் 110 விதியை பயன்படுத்திவருகிறார்.  சட்டமன்றக் கூட்டம் நடைபெற்ற 197 நாட்களில் 185 அறிவிப்புகளை அறிவித்து சாதனை படைத்துள்ளார் என்று சபாநாயகரே பாராட்டுகிறார். முதல்வர் மற்றும்தான் எல்லாதுறைக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றால் பின்னர் துறைவாரியாக அமைச்சர்கள் எதற்கு?

110 விதியின்படி அறிவித்த சில அறிவிப்புகளை இங்கு காண்போம்.

26/08/2011 அன்று, அரசாங்கப் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை எற்படுத்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கு 5000 பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

12/8/2014 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சுகாதார சேவை வழங்க சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் பல்வேறு வசதிகளுடன் கூடிய 50 நகரும் மருத்துவமனைகள் 19 கோடியே 62 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 9 இடங்களில் 7000 தொழிலாளர்கள் தங்குவதற்கு 106 கோடி ரூபாயில் தூங்கும் அறைகள் கட்டப்படும்.

29/09/2015 அன்று, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா 150 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். இதன் மூலம் 6000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலே அறிவித்த திட்டங்கள் அமலுக்கு வந்திருந்தால் இன்னமும் மாணவர்கள் ஏன் கழிப்பறையை  சுத்தம் செய்யப் போகிறார்கள்? கட்டுமானத் தொழிலாளர்கள் ஏன் தெருக்களில் தூங்கப் போகிறார்கள்? இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு ஏன் வரப்போகிறார்கள்? 15 சதவீததிற்கும் மேல் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 217000 பேர். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 86 லட்சம்.

ஏற்கனவே அறிவிக்கின்ற திட்டங்கள் போதுமானதாக இல்லை, அறிவிக்கின்ற திட்டங்களும் முழுமையாக அமலுக்கு வருவதில்லை. இப்படி இருக்கும் சூழலில் “அமைதி – வளம் – வளர்ச்சி,” “ஒளிரும் பாரதம் – மிளிரும் தமிழகம்,” “தொடரட்டும் அறம் – குளிரட்டும் மனம்”  என்ற கோஷங்கள் உங்களை நம்பி வாக்களித்த கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களை ஏமாற்றுவதற்கா? இல்லை தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கின்ற வைகுந்த ராஜன், பி.ஆர்.பழனிசாமி அவர்களின் வளர்ச்சிக்காகவா?

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உங்கள் பேச்சை கேட்க என்னவோ மகிழ்ச்சியாகதான் இருக்கிறது. ஆனால் உங்களுடைய சொல் மக்களுக்காகவும், உங்களுடைய செயல் உங்கள் பின்னால் இருக்கக்கூடிய சில நபர்களுக்கானதாகவும் இருக்கிறது. குட்டக் குட்ட குனிய உங்கள் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் தயாராக இருக்கலாம், ஆனால் மக்கள் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். 2011 இல் திமுகவுக்கு மாற்றாக உங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு, 2016 இல் மனிதர்கள் மாற்று தேவையில்லை, கொள்கை மாற்றுதான் தேவை என்று புரிய ஆரம்பித்துவிட்டது.

– செல்வராஜ்

8220554826

smartselva100@gmail.com

Related Posts