அரசியல் வரலாறு

சுதந்திரப் போராட்ட தியாகியா வாஞ்சிநாதன் . . . . !

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,

R.வாஞ்சிஅய்யர்

R. Vanchi Aiyar of Shencotta.

1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.

மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருந்தன. தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.

இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையுமே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ”கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை”  எனும் வரிகள் மாட்டுக் கறி உண்ணும் உழைக்கும் வர்க்கத்தினரின் மீதான உச்சபட்ச வெறுப்பை உமிழும் இடமாகவும், இன்றளவும் திட்டுவது என்றால் கூட குறிப்பிட்ட சிலசாதிப் பெயர்களை பயன்படுத்தி திட்டும் வழக்கத்தின் முன்னோடியாக ஜார்ஜ்-ஐ பஞ்சமனாக வரிந்து எழுதியதில் காண முடிகிறது.

புஷ்யமித்ரசுங்கன் துவங்கி காலந்தோறும் பிராமணீயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொலை செய்யவும் சூழ்ச்சிகள் செய்யவும், தேவைகளை பொறுத்து தன் எதிரிகளுடன் இணங்கியும், எதிர்த்தும், வளைந்து நெளிந்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதே வரலாறு.

ஆனால் எழுதப்பட்ட வரலாறுகள் பெரும்பாலும் பிராமணீயத்திற்கு ஆதரவாகவே எழுதப்பட்டு நம்மை நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் ஆட்சி பொற்காலமென்றும் களப்பிரர்களின் ஆட்சி இருண்ட காலமென்றும் படித்திருக்கிறோம். பொன்னால் மக்களை அலங்கரித்து பாராட்டி சீராட்டி சோழர்கள் வளர்த்தனால் சோழர்களின் ஆட்சி பொற்காலம் ஆனதா? மக்களை வெளிச்சத்திற்கு வர விடாமல் இருட்டில் வைத்து அடைத்து வைத்து ஆட்சி புரிந்ததால் களப்பிரர்களின் ஆட்சி இருண்ட காலம் ஆகிப் போனதா? போன்ற கேள்விகளை இதுவரையில் நாம் எழுப்பியதே இல்லை.

சரிங்க, என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் நம்மள அடிமைப்படுத்திதான வச்சிருந்தான், அதனால அவன கொன்னது புரட்சி தான என்று நீங்கள் நியாயப்படுத்த முயலலாம். ஆனால் காலனி ஆட்சி நிலை கொள்வதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கே உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் நாய்களை விட பூனைகளை விட பன்றிகளை விட தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதே நீங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் நிதர்சனமான உண்மை.

அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் சம்மாக நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷ் unnamedவலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது ”தமிழன்” பத்திரிக்கையில் ”சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.

வ.உ.சி யை கைது செய்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று காலப் போக்கில் நம்ப வைக்கப்பட்டாலும் வ.உ.சி கைது குறித்து எந்த குறிப்பும் மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரசவ வலியால் துடித்த அருந்ததிய சமூகப் பெண்ணை அக்ரஹார வீதி வழியாக பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி தன் சாரட் வண்டியில் கூட்டி சென்றார் ஆஷ். ஆகவே அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை என கூறப்பட்டாலும். அதற்கான உறுதிபடுத்தப்பட்ட வரலாற்று தகவல் ஏதும் இல்லை. மேலும் யார் அந்த பெண்? அவருக்கு குழந்தை பிறந்ததா? ஒரு வேளை பிறந்திருந்தாலும் அவர்களின் இரண்டாவது தலைமுறை தற்போது வாழ்ந்து வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்களை யாரேனும் சந்தித்திருக்கிறார்களா? என்றெல்லாம் கேள்விகளும் எழாமல் இல்லை.

அதே போன்று குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்ததை மாற்றி 201406082219518432_1934--Mahatma-Gandhi-arriving-in-the-year-to-commemorate_SECVPF தாழ்த்தப்பட்டவர்களையும் குளிக்க அனுமதித்து ஆணை பிறப்பித்தார் என்றும் சொல்லப்படுகிறது. 1934-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு. 1911-க்குள்ளாக ஆஷ் இந்த உரிமையை வாங்கி தந்திருக்கும் பட்சத்தில், ஏன் 1934-ல் காந்தியின் வருகையிலும் இது தொடர்ந்தது என்கிற கேள்விக்கும் விடை தேவை.

பிராமாணீயத்தை எதிர்த்து சிற்சில சீர்திருத்தங்கள் செய்திருந்தாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு துணை நின்றவரே கலெக்டர் ஆஷ். அன்று எழுந்து வந்த சுதந்திரப் போராட்டத்தையும் தொழிலாளர்கள் போராட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய தன் அதிகாரத்தை பயன்படுத்தி முயற்சிகள் எடுத்தவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதியமைப்பை முழுவதுமாக புரிந்து கொண்டு சாதிகளை அழித்தொழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அவர் இதை செய்தார் என்று புரிந்து கொள்ள முடியாது.

ஆனாலும் காலனி ஆதிக்கமே அடிமைப்பட்டுக் கிடந்த தலித் களின் வாழ்வில் சற்றே ஆசுவாசமான பகுதி என்னும் மறுக்க முடியாத உளவியல் உண்மையே இன்றைக்கு ஆஷ்-ஐ கொண்டாடுவதிலும், வீர வணக்கம் செலுத்துவதிலும் வந்து நிற்கிறது. எந்த ஒரு சம்பவங்களையும் அது நடந்த கால கட்டத்தோடு பொருத்திப் பார்த்து புரிந்து  கொள்வதே சரியான அறிவியல் பூர்வமான அணுகுமுறையாக இருக்க முடியும்.

சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும், பிராமணீய ஆதிக்கம் என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே வாஞ்சிநாதனின் குறிக்கோள் என்றால் சுரண்டலை பாதுகாப்பதும் பிரிட்டீஷ் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியை தக்கவைப்பதுமே ஆஷ்-ன் குறிக்கோள்.

“நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம்” என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை சரியான முறையில் உள்வாங்கி வரலாறு அணுகப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதிர்பார்க்கும் உண்மையான சமத்துவ சமூகத்தை நோக்கி பயணிக்க முடியும்.

– முத்தழகன்.

உதவிய நூல்கள்:

1. காலந்தோறும் பிராமணீயம் பாகம் V – அருணன்.

2. அருந்ததியர் வாழும் வரலாறு – மாற்கு.

3. ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் – சி.மகேந்திரன்.

Related Posts