இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற மாற்று‍ சினிமா

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

iraivi2

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு ஏதோ பங்கம் வந்துவிட்டது போல் கேள்வி கேட்டு துளைத்ததால் சரி இறைவி என்ற திரைப்படத்தை காணலாம் என அப்படத்தை தெரிவு செய்தேன்..! சரி விடுதி தோழிகளுடன் படம் பார்க்க செல்லலாம் என்றால் அவளுங்க படத்தையே பார்க்க விடமாட்டாளுங்களே…!!? என்று எண்ணி பெரும்பாலும் தனியாக சென்று படம் பார்த்துவிட்டு வருவேன்.

அப்படி நேற்று சென்றதும் டிக்கெட் கவுன்டரில் ஏற்கெனவே நடந்த அதே சம்பவம் :- தம்பி இறைவி படம் ஒரு டிக்கெட் வேண்டும் என்றேன், அதற்க்கு கவுன்டரில் உள்ளவன் ஒரு டிக்கெட்டா.!!! என்றான் ,ஆமாம் என்றேன், ஒன்னே ஒன்னா..!!? என்றான் ,அதற்க்கும் ஆமாம்பா என்றேன்…பிறகும் திரும்ப ,திரும்ப ஒரே ஒரு டிக்கெட்டா.? என்றான்….ஆனால் இம்முறை நான் சமுகத்தின் மட்டமான சிந்தனையால் வளர்ந்துள்ள அவனை ஒரு கனல் பார்வையால் மட்டுமே எனது கன்டனத்தை பதிவு செய்தேன்..சென்ற முறை இதே கேள்வியை கேட்டவனை கோபத்தில் பளார் என்று கவுன்டரில் கைவிட்டு அடித்துவிட்ட பின்பே அங்கிருந்து நகர நேர்ந்தது…!

பெண் தனியாக படம் பார்க்க வந்தால் அது என்ன அவ்வளவு பெரிய தேசதுரோக குற்றமா என்ன ….???!!! அப்படிதான் இருக்கிறது இச்சமுகம்..!! ஒரு மன மாறுதலுக்காக சென்ற எனக்கு கோபம் இரட்டிப்பானதுதான் மிச்சம்..! சரி இப்பொழுது கதைக்கு வருகிறேன்..

எனது பார்வையில் இப்படம் ஆண்டாண்டு காலமாக சமுக கற்பிதங்களால் சிக்குண்டு கிடக்கும் பெண்களின் மீதான ஆண்களின் ஆதிக்க மனோபாவத்தை இப்படம் ஏதோ ஆட்டம் காணவாவது வைத்ததா என்று பார்த்தால் இல்லை என்றே கூறுவேன்..! அதே நேரம் பெண் விடுதலைக்காண எந்த தீர்வையும் இப்படம் முன்வைக்கவில்லை என்றே கூறுவேன்….காரணம் மலர் என்றொரு கதாபாத்திரம் தவிர்த்து வேறெந்த பெண்கள் பாத்திரமாகவும் இருந்தாலும் சரி திருமணம் என்கின்ற அமைப்பை எங்கும் கேள்விக்குட்படுத்தவில்லை..! மாறாக யாழினி என்கின்ற கதாபாத்திரம் குடிகார கனவணுடனாண அப்பெண்ணுக்கு , திரும்பவும் வேறொரு குடும்பவாழ்வையையே தீர்வாக காட்டுவது அதுவும் யாழினியின் விருப்பமின்றி அவளின் வாழ்வின். மீதான முடிவை அவரது அப்பாவை வைத்து சொல்லுவது, மணமாகி வளர்ந்த வயதில் குழந்தையிருந்தாலும் அவளை எவ்வித சங்கோஜமவுமின்றி அவளை மணக்க தயாராக இருக்கும் இன்னொரு ஆடவனை காட்டுவதிலும் முற்றிலும் படம்பார்க்க வரும் சராசரி மனம் கொண்டவர்களிடமும் சரி, முற்போக்கு என்ற முகமூடியை போர்த்திக்கொண்டு ஆண்களின் மீதான கரிசனையை,ஏதோ பெண்ணியம் பேசுவதைப் போல மிக லாவகமாக பதியவைக்கிறார் இயக்குனர்.

அடேங்கெப்பா இது பெரிய யுக்திதான் , (நிறைய முற்போக்கு பேசும் பெண்ணியலாளர்களே கவிழ்ந்துவிடும. அளவுக்கு) எஸ்.ஜே.சூரியாவின் தம்பியாக வரும் அந்த கல்லூரிப் பையனை வைத்து பெண்ணியம் பேச வைக்கிறாராம் அதுவும் விஜய் சேதுபதி மனைவியிடம் காதல் கொள்ளும் அவன், அவளின் மகிழ்வான வாழ்வை தன்னால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதிலாகட்டும்,(அதுவும் இவனும் ஒரு குடிகாரனே….!) பெண் கடைசிவரை ஆண்களையே சார்ந்து வாழ வேண்டும் என்பதைப் போல் உள்ளது, அதிலும் தன் அம்மா(வடிவுக்கரசி) முதற்கொண்டு தன் அண்டை வீட்டுப் பெண்கள் ஆண்களால் படும் துன்பத்தை அந்த கல்லூரிப் பையனை வைத்து (ஆணை) பேசவைப்பது, பிறகு அவனே விஜய் சேதுபதியின் செயலை கண்டிப்பதில் மலர் என்ற பெண்ணை கொச்சைப்படுத்துவதிலாகட்டும் , சுற்றி, சுற்றி படம் பார்க்க வரும் சராசரி மக்களின் மனதில் ஆண்கள் பாவமானவர்கள் என்ற கரிசணையையே மறைமுகமாக தூவிவிடும் யுக்தியையே இயக்குனர் இலாவகமாக சொல்லவருகிறார்.

குடிகார கணவனால் யாழினி படும் துன்பதிற்கு இன்னொரு குடும்பமெனும் சிறையையே கைகாட்டிவிட்டு, அதையையும் ஆண் நெடில் ,பெண் குறில் என்ற வசனத்தை குடிகாரனான சூர்யாவைவைத்து பெண்ணியம் பேச வைத்து விட்டு அந்த ஐடெக் குடிகாரனை ஏதோ பெரிய தியாகியைப் போல் காட்டுகிறது படம்.(அதுவும் நீ என் தம்பிமாறிதான் அவன் என் தம்பி என்று கூறும் சுயநலக்காரனை) மலர் என்கின்ற கதாபாத்திரத்தில் மட்டும்தான் பெண் தன் வாழ்வின் மீதான முடிவை தான் சுதந்திரமாக தீர்மாணிக்க வல்லவள், என்பதில் மட்டும் இப்படத்தின் அத்துணை பிழையையும் மறக்கடித்து இதை ஒரு பெண்ணிய படமாக முத்திரையை பதிக்கச்செய்கின்றதே அல்லாமல்…. இதில் வேறெங்கும் பெண்ணியம் என்று பெரியதாய் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.

ஆண்களை தியாகிகளாகவும், பெண்களைப் பற்றியே சிந்திக்கும் பெண்ணியவாதியாகவும், அப்பாவிகளாகவும், சூதுவாது ஏதுமற்ற கள்ள கபட உள்ளம் கொண்டவர்களாகவும் மட்டுமே படம் சொல்கிறது..! படத்தின் முடிவில் திரையரங்கில் கரகோஷம் எழுந்தது நான் திரையரங்கிற்குள் தனியாக படம் பார்க்க வந்ததை ஏதோ வித்தியாசமாகவும்,தேச துரோக குற்றமாகவும் நோக்கியவர்கள் , பட இறுதியில் அப்படத்தை எவ்வாறு புரிந்துக் கொண்டு கைகளை தட்டியிருப்பர் என்பதனை படம் பார்த்த உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..!

ஆண், பெண் திருமணத்திற்க்காண ஏற்பாடே இயற்க்கைத் தேவையான பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்க்காண ஒரு ஏற்பாடாக மட்டுமே பார்ப்பது நாகரீகச் சமுகத்துற்க்கு ஏற்புடையதாகாதுதான். அதையும் தாண்டி அன்பு, பாசம், கருணை, நற்பண்புகள், தனிமனித ஒழுக்கம் என பலவும் ஒன்றிணைந்த ஓர் கலவை அது.! ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லாமல் போனதால்தான் என்போன்ற பெண்கள் இத்தகைய அடிப்படை கட்டமைப்பான திருமணம், குடும்பவாழ்வு, இல்லறம், தனியுடைமை என அனைத்தையும் கேள்விக்குட்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்…

ஆதியில் மனித இனம் யார் யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்து கொள்ளலாம் என்கின்ற நிலைமாறி மனித சமுகம் நாகரீக வாழ்வை நோக்கி நடைப் போட்டதில் தனக்கான ஓர் விதிமுறையை வகுத்துக் கொண்டது அது கலவி ஒழுக்கமும் கூட.. (கற்பிதம் தான்)அந்நாகரீக சமுகத்திற்க்கு வித்திட்டதில் பௌத்ததிற்கு பெரும் பங்கு இருந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்..அத்தகைய பாலியல் ஓழுக்கத்தை நெறிப்படுத்தவே இத்தகைய இல்லறம், என்ற அமைப்புகளெல்லாம் தோன்றியிருக்கக் கூடும்.ஆனால் மனிதருக்காகத்தான் விதிமுறைகள் என்கின்ற நிலை மாறி… விதிமுறைகளுக்காகத்தான் மனிதர்கள்..! என்கின்ற நிலை உருவானபோதுதான் இங்கே வன்முறை, அடிமைத்தனம் , கொலை போன்ற சமூக சிக்கல்கள் உருவாக அடித்தளமிடுகின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது..

ஆண்கள் பெண்களின் உடல் மீதான ஆதிக்கத்தில் அவளை தனக்குரிய ஒரு சொத்தாகவும், சமையலறை வேலைக்காரியாகவும், நகைமாட்டுகின்ற ஒரு ஸ்டேண்டுகளாவும், பிள்ளைப் பெறும் கருவிகளாகவும், படுக்கையறைப் பதுமைகளாகவும் பாவித்து வருவதாலேயே இங்கே குடும்பம் என்கின்ற அமைப்பையே நாம் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை வருகிறது…!

– மு.சவிதா(உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னை )

Related Posts