பிற

L & T Infotech மோசடி, கல்லூரி வளாகத் தேர்வுகளின் உண்மை முகம் . . . . . . . !

lt_infotech

விடுமுறை காலமான  மே , ஜூன் மாதங்களில்   பொதுவாக   மாணவர்களில் இரு பிரிவினர் மட்டும் சற்றே பயம் கலந்த உணர்வோடு நாட்களை நகர்த்திக் கொன்டிருப்பர். இக்கட்டுரையை அவர்கள் படித்தார்களேயானால்  நான்  எந்தப் பிரிவை குறிப்பிடுகிறேன் என்று அவர்களுக்கு  சொல்லி தெரியவேண்டியதில்லை. மற்றவர்களின் வசதிக்காக கூறுவதானால் , ஒன்று பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்லவிருக்கும் பிரிவினர்கள் . மற்றொன்று கல்லூரி படிப்பை முடித்துவிட்டு  வேலைக்கு செல்லும் என்னத்தோடு இருக்கும் பிரிவு.  கடந்த ஒருமாதமாக தொலைக்காட்சிகளிலும் , இணையதளங்களிலும் கல்லூரிகளுக்கான விளம்பரங்களை பார்க்காதவர் அனேகமாக தொலைகாட்சியையே பார்க்காதவர்களாகத்தான் இருக்கக்கூடும்.  குறிப்பாக பொறியியல் கல்லூரி விளம்பரங்கள் .  இவ்வகை விளம்பரங்களில் ஒரு பொதுவான அம்சம்  தாங்கள் தலை சிறந்த பொறியாளரை நாட்டுக்கு உருவாக்குவதாக கூறவில்லை மாறாக அந்த கல்லூரியில் படித்தால் 100 % வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றே  விளம்பரப்படுத்தப்படுகிறது.

 

இவ்வகையான விளம்பரங்களுக்கு மூலாதாரம் , இந்த கல்லூரிகளில் நடக்கும்  வளாக நேர்முகத்தேர்வுகள்  (campus interviews) . இவ்வகை  நேர்முகத்தேர்வுகள், மாணவர்கள் படிப்பை முடிக்கும்  தருவாயில்  நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தேர்விலும் ஆயிரம் பத்தாயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்பதும் , பல நூற்றுக்கணக்கில் , ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தேர்வாகி , அவர்களுக்கு  பணியாணைகள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகும். குறைதது  3-5 சுற்றுகளில் இருந்து அதிகபட்சம் 6-7 சுற்றுகள் வரை நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வாகின்றனர். இது போன்று தேர்வு நடத்துவது   பெரும்பாலும் பண்னாட்டு நிறுவனங்களேயாகும் . மாணவர்களின் தொழிலுட்ப திறனில் இருந்து , ஆளுமைத்திறன் வரை நன்கு சோதிக்கப்பட்டே மாணவர்களுக்கு பணியாணைகள் வழங்கப்படுகின்றன.

 

கடந்த 15-20 வருடங்களாக இம்முறையிலேயே  தனியார் சேவைத்துறையின் பெரும்பான்மையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பது , தெரு தெருவாக வேலை தேடும் அவலம் ,  பொன்ற சங்கடங்கள் இல்லாததால் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளைக்கு மிகப்பெரும் காரணமாக இது இருக்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.  இவ்வாறு வேலைக்கு தேர்வானவர்களுக்கு  படிப்பு முடிந்தவுடன் சில மாதங்களிலேயே பணியாணை வழங்கிய நிறுவனம் ஊழியராக நிறுவனத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் .

 

நிலைமைகள் இவ்வாறு இருக்க , 2008 பொருளாதார மந்தம் ஏற்பட்ட பிறகு இது போன்ற வளாக  நேர்முகத்தேர்வுகளின் நிறம் மாறத்துவங்கியது. ஆயிரக்கணக்கில் ஆட்களை பணிக்கு எடுப்பதும். பட்டப்படிப்பு முடிந்து மாதக்கணக்கில்  , வருடக் கணக்கில் காத்திருக்க சொல்லி பின்பு பணி ஆணைகளை ரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. 2012 இல் HCL நிறுவனம் இது போன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை 2 வருடம் காக்க வைத்து அலைக்கழித்து பின்பு பணியானைகளை ரத்து செய்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு பல அமைப்புகளின் கீழும் , தனியாகவும்  HCL  நிறுவனத்தின் மோசடி செயலை எதிர்த்து போராடியதும் , அதன் விளைவாக நிர்வாகம் அவர்களில் பலரை பணியில் சேர்க்க வேண்டி வந்ததும் அப்போதைய செய்தியானது .

 

வருடாவருடம் , இது போல வளாக நேர்முகத்தேர்வு என்ற பெயரில் மோசடிகளை பல பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வரிசையில் L & T Infotech தற்பொழுது சேர்ந்திருக்கிறது. 20,000 பணியாளர்களை கொண்ட இந்நிறுவனம் கடந்த வருடம் 5000 பேரை வளாக நேர்முக தேர்வு என்ற பெயரில் எடுத்து “விருப்ப” பணியாணைகளை வழங்கி , இதில் 1500 பேரை 1.5 வருடம் பணி நியமன ஆணைக்காக காக்க வைத்துவிட்டு பின்னர்  மறுபடியும்  மோசடி தேர்வு ஒன்றை நடத்தி 90%  பேரின் விருப்பப்பணியாணைகளை ரத்து செய்து மின்னஞ்சல் அனுப்பியது.

 

வேலைவாய்ப்பை பெருக்குவதாக கூறியே இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருது பல சலுகைகளை பெறுகின்றன. உதாரணமாக L & T Infotech சென்னையில் இருக்குமிடம் போருரில் உள்ள DLF சிறப்பு பொருளாதார மண்டலத்திலாகும் . குறைந்த விலையில் மின்சாரம் , தண்ணீர் , தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு , என பல  சிறப்பு சலுகைகள் , வேலை வாய்ப்பு பெருக்கம்  என்ற ஒற்றை காரணத்திற்காக அரசாங்கத்தால் தரப்படுகிறது. ஆனால் பணியாணைகளை, துண்டுப்பிரசுரங்கள் போல் வழங்கிவிட்டு,  வருடக்கணக்கில் மாணவர்களின் கனவுகளை பயன்படுத்தி காக்க வைத்துவிட்டு, இவர்களின் நிர்வாக குளறுபடியால்  ஏற்ப்படும் பிரச்சனைகளை காரணம் காட்டி மாணவர்களின்  பணியாணைகளை ரத்து செய்வது என்பது மோசடியன்றி வேறில்லை.

 

இந்தியாவிலும் , குறிப்பாக தமிழகத்தில் , மாணவர் அமைப்புகள்  இருந்தாலும் கல்லூரிக்குள் சுதந்திரமான செயல்பட முடியாததாலும் , மாணவர் பேரவை தேர்தல்  நடத்தும் ஒரு வழக்கமே இல்லாததாலும் ,  பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள்  ஒன்றிணைவதில் பிரச்சனைகள் உள்ளது.  எனவே இது போன்ற தருணங்களில் அவர்கள் ஒன்றிணைந்து போராடி அரசின் கவனித்திற்க்கு இதைக் கொண்டு செல்வதே அரிதாக உள்ளது. இதையும் மீறி L & T Infotech நிறுவனத்தின் இந்த மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து KPF என்ற ஐ.டி ஊழியர்களுக்கான அமைப்போடு இணைந்து போராடி தமிழக அமைச்சரவையின் கவனத்திற்க்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 30.6.2016 அன்று 70+ மேற்பட்டவர்கள்  சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் உண்ணாவிரதம் இருந்தது , அச்சு மற்றும் காட்சி  ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும்  சென்ற வாரம் முதன்மை  செய்தியானது . அரசியல்  தலைவர்கள் பலர் , பாராளுமன்ற உறுப்பினர் , சமூக செயல்பாட்டாளர்கள் என பலர்  இந்த ஒரு நாள் உண்னாவிரதத்தில் கலந்து கொண்டிருப்பினும், தமிழகத்தின் பிராதான  செய்தி தொலைகாட்சிகள் பல இதை தெரிந்தே இருட்டடிப்பு செய்தது   என்பது ஊடக அறம் தமிழத்தில் எவ்வாறு கீழ்நிலையில் இருக்கிறது என்பதை எவரும் தெரிந்து கொள்ளலாம்.

 

இது வெறும் மாணவர்களுக்கான பிரச்சனையாக பார்பது , இந்த பிரச்சனையின் மற்ற பரிமாணங்களை  மறைத்துவிடும் . பன்னாட்டு  பெருநிறுவனங்கள் , குறிப்பாக  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த  நிறுவனங்களின் தொழிலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் அளவு நிறுவனத்திற்க்கு  நிறுவனம் வேறுபடும். ஆக ,  அரசு இது போன்ற வளாக நேர்முகத் தேர்வுகளை கண்காணிக்க வேண்டும். துண்டு சீட்டு போல பணியாணைகளை வழங்குவதை முறைப்படுத்தி , பணியாணைகள் வழங்கிய வரை அனவருக்கும் வேலை கிடக்க உத்திரவாதம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளிலும்  , நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பும், இந்த கல்லூரி வளாகத் தேர்வுகளை முறைப்படுத்தி ,  பெருநிறுவனங்கள் முறையாக தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு பணி வழங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் கல்லூரிகளின்  வேலைவாய்ப்பு பிரிவுக்கும் (placement cells), பெருநிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத்துறைக்கும்  (HR departments)  இடையில் இருக்கும் கூட்டே இது போன்ற மோசடிகளுக்கு காரணம். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் (Employment exchange)  கிட்டத்தட்ட சிலந்திகளின் இருப்பிடமாக மாறிவிட்ட  நிலையில் ,  இந்த நேர்முகத் தேர்வுகளை  முறைப்படுத்தி , அரசும்  தொழிலாளர் துறையும் தங்கள் கண்காணிப்பின் கீழ் இவற்றை  கொண்டு வந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் பல இலட்சக்கணக்கானவர்களின்  வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

– சீதாராமன்

செயலாளர் , KPF (knowledge Professionals Forum)

Related Posts