சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

இறைவி – ” எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்”

123812_Iraivi

கதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் (அதிலும்கூட பல படங்கள் அறிவுள்ள பெண்களுக்கு புத்திமதி சொல்லி அறிவற்றவர்களாக அடங்கி நடக்கச் சொல்வது வேறு கதை). 90 சதவிகிதம் படங்கள் ஆணின் வீரதீர செயல்களும் அவற்றின் துதிபாடல்களும் அவர்களது “பழிக்குப் பழியும்” தான் (பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற அட்வைஸ் மட்டும் இலவசமாக தரப்படும்). அந்த வகையில் “இறைவி” என்ற பெயர் அளவிலேயே இந்த படம் முக்கியாத்துவம் பெறுகின்றது. ஆனால்..

பெண்மையை போற்றுகிறோம் என்று கற்பு, தாய்மை, பொறுமை, என்று சொல்லி விலங்கிடுவதில் நம் ஆட்களை அடித்துக்கொள்ள முடியாது, நம் காவியங்களே அதற்கு சாட்சி. “இறைவி” அறிவுள்ள, கனவுகள் உள்ள, சுதந்திரத்தை நேசிக்கின்ற பெண் கதாப்பாத்திரங்களை கட்டி அமைத்ததோடு மட்டுமல்லாமல் பல முக்கியமான கேள்விகளையும் கேட்டுள்ளது. அவற்றுள் சில..

முதல் கேள்வி- ஒரு பெண், சுதந்திரக் கனவுகளுடன் தன் காதலனை திருமணம் செய்துகொள்கிறாள், அவன் கணவன் ஆனதும் முழுநேரமும் குடிப்பதற்கும், அதற்கான காரணங்களை தேடுவதற்குமே செலவிடுகிறான், (பல முறை மன்னித்தும் கேட்காமல்) என்றால் அவள் என்ன செய்ய வேண்டும்?

1.கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் .
2. விவாகரத்து வாங்கிக்கொண்டு தன் வழியில் பயணிக்கலாம்.

இரண்டாம் கேள்வி – தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒருவன் தொழில் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறான். அவளுக்கு அதன் பின்பு மண வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கிறாள். தான் சுதந்திரமாய் இருப்பதையே தேர்ந்தெடுக்கிறாள். அவள் காமம் கொள்வது

1. நம் கலாசாரத்தில் அது தவறு. நிச்சயம் அப்படி செய்யக்கூடாது.
2.சரி.

மூன்றாம் கேள்வி – தன்னை நேசிக்காமலேயே ஒரு தாயாக மற்றும் மாற்றிவிட்டு, வேறு பெண்னுடன் உறவுகொண்டிருந்து, தன்னை பற்றி சிறிதும் யோசிக்காமல் ஒரு கொலையும் செய்துவிட்டு, சிறை சென்று திரும்புபவனை வேறு வழி இல்லாமல் அவள் மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள். தான் சிறையில் இருந்த நேரத்தில் அவள் கற்புடன் தான் இருந்தாளா என்று கேள்வி கேட்கும் போது அவள் அந்த கேள்விக்கு பதில்

1.நிச்சயமாக சொல்ல வேண்டும், தீயில் இறங்கி சீதை தன் கற்பை நிரூபிக்கவில்லையா?
2. சொல்லக்கூடாது.

இந்த கேள்விகள் புதிதல்ல ( இது போன்ற கேள்விகள் ) நம் சினிமாக்களும், இலக்கியங்களும் இதை திரும்பத் திரும்ப பலமுறை கேட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் ஆப்சன் 1-ஆகவே ( அதுபோலவே ) பதில்களை குடுத்து பெண்களை பூட்டி வைத்திருக்கும் விலங்கினை மேலும் வலுவாக்கியுள்ளன.

துணிச்சலாக பொதுப்புத்தியை செருப்பால் அடித்திருக்கும் சினிமாக்களும், இலக்கியங்களும்(mainstream) மிகமிக சொற்பம். இறைவி அதை செய்திருக்கிறது.

“ஒரு நல்ல திரைப்படம் நாம் திரை அரங்கினை விட்டு வெளியே வந்த பிறகு தான் தொடங்க வேண்டும்”. அந்த வகையில் ஒரு நல்ல சினிமாவை படைத்துவிட்டனர் கார்த்திக் சுப்புராஜும் குழுவினரும்.

– ராஜேஷ்வர்.

Related Posts