சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

உறியடி – ஒரு இயக்குநரின் பார்வையில் . . . . . . . .

uri-1024x683

புலம்பும் தமிழ் தலைமுறையின், அக்கினி குஞ்சுகள் செய்யும் சீர்திருத்த அழித்தொழிப்பே “உறியடி”..

1999-ல் நடக்கும் தேர்தலை குறிவைக்கின்றது ஜாதி சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்ப பொறுப்பாளர்கள். அதன் ஆரம்பகட்டமாக எளிதில் பதிக்கப்படும் சிலையை திட்டமிட்டே நிறுவ, அரசோ அதற்கு அனுமதி மறுக்கின்றது. தங்களின் சிலையை திறக்க அரசியல் தேவைப்படுகின்றது.

இந்த வேளையில் ஜாதி சங்க பொறுப்பாளருக்கும் நான்கு கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு தொடர்பு, மது மற்றும் உணவு கடை(Dhaba) வழியாக ஏற்படுகின்றது. மதிநிலை மறந்து ஆதிக்க அடையாளத்தின் மற்றொரு கரம் விபச்சார விடுதியை நடத்தி வரம்பு மீறலின் உச்சமாக கல்லுரி மாணவியை பேருந்தில் வைத்து பாலியல் வல்லுணர்வில் ஈடுபட, அந்த நால்வரில் ஒருவரான மாணவன் பொங்கி அடிக்கின்றான். இவ்வகை ஆதிக்க மற்றும் அரசியல் வெறி போன்ற சாதிய தொடர் சங்கிலிகளில் இருந்து நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீண்டனரா இல்லையா என்பதே படத்தின் கதை.

”பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளிகள் ஒரு அணியில் திரண்டு புரட்சியை நடத்திவிட முடியாது அதற்கான ஆதரவு கரம் எல்லா தளங்களில் இருந்தும் திரள வேண்டும்” என்ற லெனின் சொன்ன வார்த்தைகள் உறியடி படத்தின் வழியாக பாட்டாளியின் இடத்தில் சாதியத்தைப் பொருத்திப் பார்க்க உதவுகின்றது.

வழக்கமான தமிழ் சினிமா ஆதரவு கரம் என்ற பெயரில் விளிம்பு நிலையாளர்களை ரசித்துக் கொன்று குவிக்கும் நடைமுறை சினிமாவில் இருந்து இயக்குனர் மாறுபட்டு விளிம்பு நிலையாளர்களின் உணர்வோடு பயணிப்பதும், சமூக இழிவின் வேர் தேடி சென்று அதன் கழுத்தை அறுப்பது படத்தின் சிவப்பு கோடிட்டு சொல்லப்பட வேண்டிய இடங்கள்.

திரைப்படம் எங்கும் செங்கொடி தழும்புகள் கதாநாயகன் பெயரில் தொடங்கி, தான் ஹிந்து அல்ல என்பதை மறைமுகமாக சொல்வது, மறுதாக்குதல் என்ற அத்தியாத்தில் இருந்து எதிர் தாக்குதல் செயலாக்கம், அழித்தொழிப்பு நடந்த பின்னர் மறைமுக வாழ்க்கை, கதநாயகன் முக தோற்றம் சாரு மஜூம்தார் வடிவில்.

இன்றைய நடைமுறையில் மலையாளம், மராத்தி, ஹிந்தி மொழி திரைப்படங்கள் என்றோ மாற்று சினிமாவை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர் ஆனால் தமிழ் நாட்டின் மாற்று சினிமா சமூக இழிவை தவிர மற்ற எல்லா காரணிகளை உள்ளடக்கி புதிய ட்ரெண்டை செட் சமஸ்கிருதமாக்கல் என்னும் பெயரில் தொடர்ந்து தந்துகொண்டே இருக்கின்றது. எந்த அதிர்வையும் கடல் கரைக்கு கொண்டு செல்லாமல் வந்துபோகும் அலையை எப்படி வெள்ளம் என்று சொல்ல முடியும். எவ்வகை அதிர்வை காண காத்துக்கிடந்தோமோ அதை இருபது நிமிடத்தில் தந்து செல்கின்றார் “உறியடி” இயக்குனர் விஜயகுமார்.

படத்தில் வரும் காட்சி லாட்ஜின் கதவை வந்து தட்டுகின்றான் ஒரு சிறுவன் கதவை திறக்கும் நபரின் கையில் ஒரு நீட்ட குச்சி அதின் கீழ் முனையில் ரத்தம் ஒழுகிக்கொண்டு இருக்க காட்சியை தெளிவு படுத்தி பார்க்கும்போது அறையில் ஒரு திருநங்கை இருக்கின்றார், வில்லன்கள் கையில் இருக்கும் புதிய வடிவ பட்ட கத்திகள், எதிரிகளின் தலையை கருமுவது, கல்லூரி விடுதியின் தோற்றம், லாங் ஷாட்டில் இருந்து விடுதியை காண்பிப்பது, இடைவேளைக்கு பிறகு க்ளோஸ் ஷர்ட்டில் இருந்து தொடங்குவது என்று காட்சி மொழியை கொரிய திரைப்படங்களுக்கு இணையாக கொடுப்பதிலும் இயக்குனரை வரும்காலத்தின் தலைசிறந்த ஒரு படைப்பாளியாக பார்க்க முடிகின்றது.

படம் பார்த்த சாமானியன் சொல்கின்றான் “விட்டு வெளுத்திருக்கான் டைரக்டரு”

ஒட்டுமொத்தமாக இயக்குனர் விஜயகுமார் ஒரு வைப்ரன்ட் காட்சிமொழி ஓவியன், தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாட வேண்டிய புது வரவு, புதிய இயக்குனரின் பிரகாச நட்சத்திரம், மொத்தத்தில் மக்கள் பயின்ற ஒரு அக்கினி குஞ்சு.

– வினோத் மலைச்சாமி.

(அணில் கூட்டம் & குறியீடு குறும்பட இயக்குனர்)

Related Posts