சினிமா தமிழ் சினிமா

பெரியமாயத்தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கின பட்டமா பாரதிராஜா சார்?

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த கேமராக்களை கிராம வரப்புகளின்மீது, மானைப்போல் பாய்ந்தோடும் நடிகைகளுடன் ஓடவிட்டவர் இயக்குநர் சிகரம் பாரதிராஜா. இதுதான் என் மொழி, இதுதான் என் இனம், இதுதான் என் கலாச்சாரம் என தமிழ் மக்களின் பண்பாட்டை காதலோடு ரத்தமும், சதையுமாக உலகுக்குச் சொன்னவர்.

தமிழ்நாட்டில் பாரதிராஜாவின் படைப்பும், கதாபாத்திரங்களும் தொடாத ஆன்மாவே இல்லை. ‘16 வயதினிலே’ சப்பாணி, தமிழர்களின் மனதில் சம்மணமிட்டான். ‘கிழக்கே போகும் ரயி’லோடு 80களில் கல்லூரிகளில் படித்த காதலுணர்வுள்ள ஒவ்வொரு இளைஞனும் பயணித்தான். ‘அலைகள் ஓய்வதில்லை’ யாரை நனைக்கவில்லை? அதன் ஈரம்படாத இதயம் எது?

இப்படி கதையும், திரைக்கதையும் தொட்டுப்பேசாத இடமேயில்லை எனலாம். கருத்தம்மா வரையிலும் இவரது வெற்றி என்பது யாராலும் அசைக்கமுடியாததாக இருந்தது. பாரதிராஜா என்ற கலைஞனை தமிழ்ச்சமூகம் கொண்டாடியது. இந்தி, தெலுங்கு திரையுலகங்கள் தங்களுக்காக படம் எடுக்க வரிசைகட்டி அழைத்தன. சொல்லியே தீரவேண்டிய கதைகளை மட்டும் மாற்றுமொழிகளில் ரீமேக் செய்தார்.

பொதுஜனத்தின் கலைஞனாக இருந்த பாரதிராஜாவின் படங்கள், எத்தனையோ நடிகர்களுக்கு முகவரியாக அமைந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலம் எனப்படும் 80களில் முன்வரிசையில் நின்று, தமிழ் சினிமாவை கட்டி இழுத்துச்சென்ற முன்னத்திஏர். கலாச்சாரம், பாரம்பரியம், உறவுச்சிக்கல் என அனைத்தையும் பாரபட்சமின்றி வெளிக்கொட்டினார். மாடர்ன் காலத்திலும் அன்னக்கொடி என்ற படத்தின்மூலமாக, நான் என்றும் மண்ணின் மைந்தன் என மார்தட்டிப் பேசிய பாரதிராஜா 90-களிலேயே தடம் மாறிவிட்டார்.

மண்ணும் மண்சார்ந்த காதலுமாகப் பயணித்த பாரதிராஜாவின் தடம் எங்கே மாறியது, எப்போது?

வேதம் புதிது திரைப்படம், பாரதிராஜாவின் திரையுலக வரலாற்றில் மிகப்பெரும் புரட்சிப்படமாக அமைந்தது. வேதம் புதிதில் வரும் ‘பாலுங்குறது உங்க பேரு, தேவருங்குறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?’ என்ற சிறுவனின் கேள்வியை, இன்றுவரையிலும் மக்கள் மறக்காததற்குக் காரணம் படத்தின் கனம். ஒரு புரட்சிக்காரனாகவும் இந்தப் படத்திலிருந்து பேசப்பட்டார் பாரதிராஜா. பாரதிராஜாவின் குரலுடன் தொடங்கிய படங்களில் பெரும்பாலானவை உறவுமுறைகளுக்குள் கட்டுண்டவை. தாய் – மகன், அக்கா -தம்பி, அண்ணன் – தங்கை என ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் இருக்கும் பிரச்னைகளைப் பேசினார், விவாதித்தார், விளக்கினார் – குடும்பத்தில் ஒருவராக மாறினார். இந்த உறவுப் பாத்திரங்களில் ராஜமரியாதை கிடைத்தது ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில்தான். பீம்சிங்கின் ‘பாச மலர்’ திரைப்படத்துக்குப்பிறகு, சிறந்த அண்ணன்-தங்கை பாசத்தை விளக்கக்கூடிய திரைப்படமாக இது வெற்றிபெற்றது. கிழக்குச் சீமையிலே படத்தை இப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் கண்கலங்கும் அண்ணன் – தங்கையைக் காணலாம். உணர்வுபூர்வமான அந்த திரைப்படத்தின் வெற்றி, ஜாதிய வரைமுறைகளுக்குக் கிடைத்ததாக புரிந்துகொள்ளப்பட்டது. அடுத்தடுத்து வந்த படங்களில் பாரதிராஜாவின் அடையாளங்களைவிட ஜாதிய நெடி அதிகம் அடித்தது. சமீபத்தில்கூட ‘குற்றப்பரம்பரை’ என்ற நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குநர் பாலாவுடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்னை ஜாதிப் பிரச்னையாகத்தான் பார்க்கப்பட்டது.

பாரதிராஜாவின் முயற்சிகள் தோற்றுவிட்டதால், குற்றப்பரம்பரை கதையை படமாக்கி, மீண்டும் புகழ்பெற நினைக்கிறார் பாரதிராஜா என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அவர்தான் ஜாதிரீதியான படங்கள் எடுப்பதில் வல்லவர் என்று பேசவும் செய்தனர்.

அப்போது, ‘எனக்கு ஜாதிகள் முக்கியமல்ல. நல்ல கதை அது. குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் உரிமை என்னிடம்தான் இருக்கிறது’ என ஆவேசப்பட்டார் பாரதிராஜா. உண்மைதான். குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் உரிமை பாரதிராஜாவிடம்தான் முதலில் விற்கப்பட்டது. ஆனால், அது சிறுகதையாக வெளிவந்த காலத்தில் விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்கதையாக மாறி, நாவலாக உருவானபிறகுதான் பாலாவிடம் விற்கப்பட்டது. அமைதியாக, அமர்ந்துபேசி தீர்க்கவேண்டிய பிரச்னையை இப்படி பெரிதாக்குகிறார்களே! என கவலைப்பட்டனர் பலரும். பாரதிராஜா ஜாதிக்கு ஆதரவானவர் இல்லையே! என அவருக்கு ஆதரவாகப் பேசியவர்களையும் அதிரவைத்துவிட்டது அவரது தற்போதைய ஃபேஸ்புக் பக்கம். ‘பெரியமாயத்தேவர் பாரதிராஜா’ என்று, தனது பெயரை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார். இவரையா ஜாதிக்கு எதிரான, பொதுமனிதராகப் பார்த்தோம்! என்று, பலரும் ஃபேஸ்புக் பக்கத்தில் பாரதிராஜாவை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். இதே பிரச்னை பாரதிராஜாவின் நண்பரான வைரமுத்துவுக்கும் ஏற்பட்டது. அவரது தந்தையின் பெயரை ‘ராமசாமித்தேவர்’ என விக்கிபீடியாவில் குறிப்பிட்டிருந்தபோது, எழுந்த ரசிகர்களின் எதிர்ப்புக் குரலுக்கு வைரமுத்து னெ அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது. கேரளாவுடனான முல்லைப் பெரியாறு பிரச்னையின்போது தொடங்கப்பட்ட ‘அன்னக்கொடி’ படத்தில், ராதா மகள் கார்த்திகாவின் பெயரிலிருந்த ‘நாயர்’ என்ற ஜாதியைக் குறிக்கும் சொல்லை எடுத்துவிட்டேன் என, அவரது பிறந்த ஊரான தேனி-அல்லிநகரத்தில் கர்ஜித்த பாரதிராஜா இன்றும் நினைவில் இருக்கிறார். ஆனால், அன்று கேமராவை நிறுத்தியதுமே அந்த பாரதிராஜா காணாமல் போய்விட்டார் என்பதுதான் தெரியாமலேயே இருந்திருக்கிறது.

பெரியமாயத்தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கின பட்டமா பாரதிராஜா சார்?

– மணிவர்மா.

Related Posts