அரசியல்

அமையப்போவது ‘மைனாரிட்டி’ அதிமுக அரசு

“அண்ணே! யாருக்கு ஓட்டு போட்டீங்க?”
“நான் ​​​​____ கட்சிக்கு ஓட்டு போட்டேன்”
“ஏன்னே அந்தக் கட்சிதான் எக்கச்சக்க ஊழல் செய்த கட்சியாச்சே! அதுக்கா ஓட்டுப் போட்டீங்க?”

“ஜெயிக்கிற கட்சிக்குதானப்பா ஓட்டுப் போடணும். இல்லைனா, நம்ம ஓட்டு வீணால்ல போயிடும்?”

ஊழல்வாத மற்றும் மக்கள் விரோதக் கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவது ஏன் என்பதற்கு இது போன்ற பதில்களை பலரும் சொல்வதைக் கேட்கமுடிகிறது. மக்களைக் குறைசொல்வதற்கு எதுவுமில்லை. ஏனெனில் நம்முடைய தேர்தல் அமைப்புமுறை அப்படி இருக்கிறது.

இந்தியாவில் நடக்கிற தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற, எவ்வளவு பேர் வேண்டுமானால் போட்டியிடலாம். ஆனால் வெற்றிபெறுகிற ஒருவருக்கே எல்லா அதிகாரமும் போய்சேர்ந்துவிடுகிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் அதிகாரத்தில் பங்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இத்தேர்தல் முறையில் இல்லை. ஒரு மாநிலத்தில் நூறு தொகுதிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.  அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு இலட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அனைவருமே தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோமே. “அ” என்கிற கட்சி, “க” என்கிற கட்சியைவிட அந்த நூறு தொகுதிகளிலும் ஒவ்வொரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், “அ” என்கிற கட்சிக்கு 100 எம்.எல்.ஏ. க்கள் கிடைப்பார்கள். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேயொரு ஓட்டு குறைவாகப் பெற்றதாலேயே, “க” கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. 50,00,100 வாக்குகள் பெற்ற “அ” கட்சிக்கு நூறு எம்.எல்.ஏ.க்கள். ஆனால் 49,99,900 வாக்குகள் பெற்ற “க” கட்சி சட்டசபைக்கே போகமுடியாது.

ஆக இத்தனை இலட்சம் மக்களின் வாக்குகளும், கருத்துக்களும், எண்ணங்களும், விருப்பங்களும் ஆட்சிமன்றத்தில் ஒலிக்கப்படாமலே போகிறது. மன்னராட்சிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. மன்னராட்சியில் மன்னரை நம்மால் தேர்ந்தேடுக்கமுடியாது. ஆனால், இங்கே போட்டியில் இருக்கிற இருவரில் ஒருவரை மன்னராக தேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதே உதாரணத்தில், ஒரு கோடி வாக்காளர்களில் பாதிப்பேர்தான் வாக்களிக்கிறார்கள் என்றால், அந்த பாதியில் யார் பெரும்பான்மை பெறுகிறார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிக்காதர்வர்களையும் சேர்த்து ஆளும் உரிமையுண்டு. ஆக வாக்களிக்காதர்வர்களின் வாக்குகளையும் அவர்களே பெற்றுவிட்டதைப்போன்ற ஏமாற்றுவேலை தான் இத்தேர்தல் முறை.

 

2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொள்வோம். 282 தொகுதிகளில் வெற்றிபெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது பா.ஜ.க. ஆனால், அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமானால், அவர்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 168 தான்.

india

 அதோடு, ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தோமானால், அவர்கள் பெற்றது வெறும் 20% தான். அதனை வைத்துப்பார்க்கும்போது, அவர்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 112 தான். ஆக அவர்களுக்கு ஆட்சியமைக்கும் அதிகாரமே இல்லை. ஏனெனில் 112 என்பது ஒட்டுமொத்த பாராளுமன்ற தொகுதிகளில் (545) ஏறத்தாழ 5இல் ஒரு பங்குதான். காங்கிரசுக்கு 70 தொகுதிகளும், அதிமுகவிற்கு 12 தொகுதிகளும், சிபிஎம் க்கு 12 தொகுதிகளுமே கிடைத்திருக்கும்.

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:

2011 ஆம் ஆண்டின் தமிழகத் தேர்தல் முடிவுகளை எடுத்துகொண்டால், அதிமுகவிற்கு 150 தொகுதிகளும் திமுகவிற்கு 23 தொகுதிகளும் தேமுதிகவிற்கு 28 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் வாக்கு சதவிகிதத்தை வைத்துப்பார்த்தால், அதிமுகவிற்கு 90 தொகுதிகளும் திமுகவிற்கு 53 தொகுதிகளும் தேமுதிகவிற்கு 18 தொகுதிகளுமே கிடைத்திருக்கும்.

tn
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையையும் கணக்கிலெடுத்தால், அதிமுகவிற்கு வெறும் 70 தொகுதிகள்தான் கிடைத்திருக்கும். ஒரு மைனாரிட்டி அதிமுக அரசுதான் நம்மை கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது.
2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:
இப்போது 2016 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். 134 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கக் காத்திருக்கும் அதிமுக ஏறத்தாழ 40.9% ஓட்டுகள் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் திமுக கூட்டணி 39.5% வாக்குகள் பெற்று 98 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வேறெந்தக்கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
tn2016
ஓட்டு சதவிகிதத்தை வைத்துப் பார்க்கையில், அதிமுகவிற்கு 95 தொகுதிகளும், திமுகவிற்கு 92 தொகுதிகளும், மநகூ விற்கு 14 தொகுதிகளும், பாமகவிற்கு 12 தொகுதிகளும், பாஜகவிற்கு 7 தொகுதிகளும் கிடைத்திருக்கவேண்டும். யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்காத தேர்தல் முடிவுகள் இவை. அதிலும் ஒட்டுமொத்த வாக்காளர்களைக் கணக்கிலெடுத்துப் பார்த்தோமானால், அதிமுகவிற்கு 70 தொகுதிகளும், திமுகவிற்கு 68 தொகுதிகளுமே கிடைத்திருக்கக் கூடும்.
உண்மையிலேயே ஒரு தொங்கு சட்டசபைக்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய தேர்தல்முறை தான் அதிமுகவை அரியணையில் ஏற்றி அழகுபார்க்கப் போகிறது. ஆக அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது, மைனாரிட்டி அதிமுக அரசு தான்.

Related Posts