அரசியல் சமூகம் பிற

பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பு என்பது பூட்டி வைத்து பாதுகாப்பதல்ல..

13153391_1712768879003262_2055482680_n

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர்  என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை (28.04.2016) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார். ஜிஷாவின் தாயார் ஒரு சாதாரண ஏழை  கூலித் தொழிலாளி ஆவார். மிகுந்த ஏழ்மையிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர் எப்படியாவது படித்து ஒரு வழக்கறிஞர் ஆகவேண்டுமென்று போராடி வந்தார். மிகவும் ஏழ்மையில் வாடி வந்த அவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் புறம்போக்கு நிலத்தில் ஒரு அறை மட்டுமுள்ள சிறு குடிசை போன்ற வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். ஜிஷாவின் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகக் கூறபடுகிறது. பிறப்புறுப்பின் வழியாக கூர்மையான ஆயுதத்தைச் குத்தி வயிற்றின் வழியாக கிழித்ததன் மூலம் கருப்பை, குடல் முதலிய பாகங்கள் கிழிந்து வெளியேற்றப்பட்டும், மார்பகங்கள் அறுதெறியப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் விரும்பத்தகாத வக்கிரத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் துப்புரவு பணி  செய்து வந்த ராதா என்ற 48 வயது பெண்மணி சிலகாலம் முன்பு  இது போன்ற வக்கிர புத்திக்காரர்களுக்கு இரையான சம்பவம்  இது போன்ற அதிர்வை உருவாக்கியது. ராதா கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலுள்ள குளத்தில் கோணிப்பையில் கட்டப்பட்ட நிலையில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலைக்குக் காரணமான குற்றவாளிகளில் ஒருவர் கேரள மின்துறை அமைச்சர் திரு.ஆரியாடன் முகமதின் உதவியாளர் பிஜு என்பது குறிப்பிடத்தக்கது.  அது போன்று பத்தனம்திட்டை மாவட்டத்தில் 3 மாணவிகள் கடத்தப் பட்டு கொலை செய்யப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஜிஷாவின் கொலைக்குப் பிறகு மேலும் இரண்டு சம்பவங்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளன. அதில் வர்க்கல என்ற இடத்தில் தாதியர் பயிற்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி, தனக்கு பாலியல்ரீதியாக தீங்கிழைத்த குற்றவாளிகளை அடையாளம் கட்டியும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போன்று இன்னொரு சம்பவத்தில் 61 வயதான ஒரு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆசிட் ஊற்றுவது, கௌரவக்கொலைகள் என்ற வடிவத்திலும், பெங்களூரு போன்ற இடங்களில் இரவு நேரம் பன்னாட்டு கணிணி நிறுவனங்களில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருவது, உத்திரப்பிரதேசம் போன்ற வட இந்தியப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவைச் சார்ந்த பெண்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளுக்கு பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படுவது என தொடர்ந்து நாடெங்கிலும் பெண்கள் சமீபகாலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. பெண்களைப் பாதுகாக்கவே பிறப்பெடுத்தவராகக் தற்பெருமை பேசிக்கொள்ளும் மம்தா பானர்ஜியின் ஆட்சி கால மேற்குவங்கம் பற்றி சொல்லவே வேண்டாம்.

என்றாலும் மிகவும் படித்த மக்களைக் கொண்ட கேரளாவில் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக தோன்றுகிறது.  இதில் ஒரு  வருந்தத்தகுந்த விஷயம் என்னவெனில் கேரளத்தில் சமீபகாலமாக நடந்த எல்லா சம்பவங்களிலும் போலிசும் அரசும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாண்டுள்ளன என்பது தான். ஜிஷாவின் விஷயத்தில் நடந்தது மிகவும் மனிதாபிமானமற்ற செயல் என்று அனைவராலும் ஒரே குரலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவமாகும். மரணம் நடந்த அன்று இரவு சுமார் 8 மணியளவில் அவரது தாயார் பணி முடிந்து வீடு திரும்பிய போது தான் சம்பவம் வெளி உலகத்திற்கு தெரியவருகிறது.  உடனடியாக காவல்துறை ஜிஷாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை நடத்தி வீட்டிற்கு கூட கொண்டு செல்ல விடாமல் அவசர அவசரமாக பிணத்தை எரித்து விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டு செயல் பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையை பொறுப்பிலுள்ள மருத்துவ அலுவலரைக் கொண்டு நடத்தாமல், மருத்துவ முதுநிலை பட்டதாரி மாணவரைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.  இப்பொழுது நீதிமன்ற உத்தரவுப்படி எல்லா பிரேதப் பரிசோதனைகளும் காணொளிப் பதிவு நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு  காணொளிப் பதிவு செய்யப்படவில்லை. பிரச்சனை பெரிதானதும் போலீசார், உண்மையான குற்றவாளிகளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, ஆயுதப்படைப்  பிரிவைச் சார்ந்த 2 போலீசாரை தலையைத் துணியால் மறைத்து குற்றவாளிகளை அழைத்துச் செல்வது போல் ஊடகங்களுக்கு முன்பு நாடகம் நடத்தியுள்ளனர். போலிஸ் உயர் தரப்பிலிருந்து தேர்தல் நேரமாகையால் இந்த பிரச்சனையை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள வழிகாட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. காவல்த்துறை மற்றும் அரசின் தரப்பில் இத்தகைய அணுகுமுறையே ஏறத்தாழ அனைத்து சம்பவங்களிலும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 5 வருடங்களில் கேரளத்தில் மட்டும் சுமார் 6500 பெண்களுக்கு எதிரான அத்துமீறல் வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன. பாலியல் பலாத்காரம், கொலை, அபாசமாக நடந்துகொள்ளுதல், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், பெண்குழந்தைகள் கடத்தப்படுதல் போன்ற குற்றங்கள் இந்த பட்டியலில் அடங்கும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய சிலகாரணங்கள், பொதுமக்களால் கூறப்பட்டு விவாதிக்கப் பட்டு வருகின்றன. அரசு தரப்பில் இது போன்று பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கவனக்குறைவாக அணுகுவது. பகிரங்கமாக பொது வெளிகளில் பெண்களை கேவலப்படுத்தும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாதது. இது போன்ற அவமானகரமான செயல்களை  சில இயக்கங்களின் சார்பாகவே நடத்தப்பட்டு, அதற்காக அந்த சம்பத்தப்பட்ட ஊழியர்களை அந்த இயக்கங்கள் கௌரவப்படுத்துவது போன்றது குறிப்பிடத்தக்கது. மது, கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதன் மூலம் சமூக விரோதிகளின் ஊடுருவல்  அதிகரித்திருப்பதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.  இத்தகைய நிகழ்வுகளை தடுப்பதற்குப் பதில் ஆளும் காங்கிரஸ் அரசு CPIM உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணி கட்சிகளின் மீது குற்றத்தைச் சுமத்தி அரசியல் லாபம் தேட நினைக்கிறது.  நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தங்களிடம் வைத்துக்கொண்டு, CPIM மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏன் போராடவில்லை என்று அர்த்தமற்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் தங்கள் மீது தேர்தல் நேரத்தில் குற்றம் சுமத்தப்படக்கூடாது என்பதில் காங்கிரஸ் குறியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய கையாலாகத்தனத்தை விமர்சிக்க வக்கற்ற கேரள BJP-யும் தனது பங்குக்கு இடது முன்னணியையும் CPIM-யும் இவ்வளவு நாள் ஏன் போராடவில்லை என்ற அல்ப காரணங்களை சொல்லி குறை கூறுவதிலேயே காலத்தை ஒட்டுகின்றன. ஆனால் CPIM உள்ளிட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளும் AIDWA, DYFI SFI போன்ற வெகுஜன அமைப்புகளும் தான் இந்த பிரச்சனையை பொதுமக்களிடம் போராட்டங்கள் மூலம் எடுத்துச்சென்றது.

சமீப காலமாக நாடெங்கும் பிற்போக்கு சக்திகள் மற்றும் கலாச்சாரக் காவலர்களின் குரல் பெண்களுக்கு எதிராக உயர்ந்து  வருவது மிகுந்த எச்சரிக்கையோடு பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது. பெண்கள் பொதுவெளிகளில் பாதுகாப்பாக நடமாடுவதற்கு உத்தரவாதமில்லாத நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிற்போக்கு சக்திகளின் அச்சுறுத்தல்கள் பெருகி வருகின்றன. கேரளாவிலேயே இதற்கு சில உதாரணங்கள் கண் முன் சாட்சிகளாய் வந்து நிற்கின்றன. ஏசியாநெட் தொலைகாட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிந்து சூரியகுமாருக்கு, பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது சம்பத்தப்பட்ட விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, RSS ஊழியர்கள் அவரை பகிரங்கமாக விபச்சாரி என்று அழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியதோடு, RSS காரரான மேஜர். ரவி என்ற திரைப்பட இயக்குனர் இந்த காரணத்திற்காக சிந்து சூரியகுமாரின் முகத்தில் காறி உமிழ்ந்து விடுவேன் என்று கூறியது போன்று மிக இழிவாக நடந்து கொண்டனர். அது போன்று கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டார் என்ற காரணத்திற்காக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவரின் உருவ பொம்மையை தயாரித்து அதனை பாலியல் பலாத்காரம் செய்வது போல மக்கள் மத்தியில் முஸ்லிம் லீக் கட்சியினர், பெண்களுக்கு எதிரான கடும் அத்து மீறலை பகிரங்கமாகச் செய்தனர். அது போன்று மலப்புறம் மாவட்டத்தில் இடதுசாரி சிந்தனை கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பத்திலுள்ள பெண்கள் பரதநாட்டியம் பயிற்சி பெற்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள் என்பதற்காகவே ஊர் விலக்கம் செய்யப்பட்டு அவமானப் படுத்தப் பட்டார்கள். ஆனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதுபோல நடிகர் பகத் ஃபாசில்- நடிகை நஸ்ரியா திருமண வேளையில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஒருவர் நஸ்ரியாவை இழிவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். முஸ்லிம் லீக் கட்சியினர் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெண்கள் 16 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்யப்பட சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டுமென்று பிற்போக்குத்தனமான பிரச்சாரங்களை செய்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் விபச்சாரிகள் என்று கூறிய சங்கராச்சாரியார் போன்றோரும் தங்கள் பங்கிற்கு இது போன்ற பிற்போக்குத்தனமான விஷயங்களை பேசி வருகின்றனர். 2004-ல் மத்தியப் பிரதேசத்தில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பினரால் பாலியல் பலாத்காரம் செய்த கன்னியாஸ்திரிகளின் பிரச்சனையில், விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஆச்சர்யா கிரிராஜ் கிஷோர் ஜி என்பவர், “தேசபக்த இளைஞர்கள், தேசவிரோதச் செயல்களுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததால் ஏற்பட்ட எழுச்சியின் விளைவே இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். சர்ச்சைக்குரிய பீப் பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத் ஆகியோருக்கு ஆதரவாக சில இந்து மதவாத அமைப்புகள் தீவிரமாக ஆதரவளித்ததும், சிம்பு இந்து என்பதால் தான் எதிர்க்கப்படுகிறார் என்ற நோக்கில் பிரச்சனையை திசை திருப்பவும் முயற்சிகள் செய்தன. ஜிஷா சம்பவத்திற்கு பிறகு ஆனந்த விகடனின் ஒரு கட்டுரையை இணையம் மூலம் படிக்க நேர்ந்தது. உண்மையில் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் அத்தகைய கட்டுரையை எழுதத் தகுதி படைத்ததா என்று பார்த்தால் இல்லை என்றே பதில் சொல்ல நேரிடும். இத்தகைய பத்திரிக்கைகள் தங்கள் வெளியிடும் இதழ்களில் பெண்களை வணிக நோக்கில் அணுகுகின்ற, போகப் பொருளாக பாவிக்கின்ற மனப்பான்மையில்லாத ஒரு வெளியீடு கூட இல்லையென்னும் அளவுக்கு பெண்கள் சம்பந்தமாக மிகவும் பிற்போக்குத்தனமான பார்வையைக் கொண்டுள்ளன. இத்தகைய பத்திரிகைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு பெண்கள் சம்பந்தமாக ஒருவிதமான போதையை ஊட்டிக்கொண்டே இருகின்றன. பெண்களின் நட்பு இல்லாதவர்களோ அல்லது காதலி இல்லாதவர்களோ இந்த உலகத்தில் பிறந்து ஒரு பயனும் இல்லையென்று சொல்லாமல் சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றுகின்றன. வணிகரீதியான விளம்பரங்களைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. வாகனத்தில் ஆரம்பித்து பற்பசை, நறுமணப் பொருட்கள் வரை அனைத்துமே இந்த மனோநிலையிலேயே விளம்பரப்படுத்தப் படுகின்றன.

இத்தகைய செயல்களிருந்து,  நம்மை அதிகம் கவலைகொள்ளச் செய்யும் விஷயம் என்னவெனில், வணிகரீதியாக பெண்களை நோக்கும் ஊடகங்களும், போகப் பொருளாக பெண்களைப் பார்க்கும் ஆணாதிக்க சிந்தனையும் மட்டுமன்றி, மதவாத பிற்போக்கு சக்திகளும் இத்தகைய நிகழ்வுகளுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கின்றன என்பதே.

இங்கு குறிப்பிட்ட எந்த சம்பவங்களிலும், சில கலாச்சாரத்தை காக்க அவதாரம் எடுத்திருக்கும் அவதார புருஷர்கள் சொல்வது போல பெண்கள் அணியும் ஆடையும் அவர்களின் நடை உடை பாவனைகளும் இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமே  அல்ல என்பது உறுதியாகின்றன. இங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் மிகவும் ஏழைக் குடும்பப் பெண்கள், சாதாரண தொழிலாளிகள், மாணவிகள், தங்களுக்கு நடக்கும் விபரீதம் என்னவென்றே உணரத் தெரியாத பச்சிளம் சிறுமிகள் முதலானோரே. சிறுமிகள், இளம்பெண்கள், மூதாட்டிகள் என்று வயது வித்தியாசாமில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

 

பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான அத்துமீறல்கள் என்பது பெண்கள் சமூகம் மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்சனையன்று. இந்த ஒட்டு மொத்த சமூகத்திற்கான பிரச்சனையாக இவைகளைக் கருத வேண்டும். பெண்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு அப்பால் அவர்களை போகப்பொருளாகக் காணும் போக்கை மாற்ற இந்த சமூகத்தைப் பயிற்றுவிக்கவேண்டும். சகஜீவியாக பெண்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையோடு அணுக இளம் பருவத்திலேயே இந்த சமூகத்தின் இளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்ணை பிறந்ததிலிருந்து பத்திரமாகப் பேழையில் அடைத்து வைத்து கண்ணும் கருத்துமாய் கண்காணித்து, அவளை கட்டுபெட்டித்தனமாக வளர்ப்பதால் மட்டும் தான், அவளது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற கருத்துப் போக்கை உடைக்கவேண்டும். கோழிக்கோடு மாவட்ட ஆட்சியாளர் பிரசாந்த், “பெண் குழந்தைகளை பூட்டிப் பாதுகாப்பதை விட ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பது தான் முக்கியம்” என்று குறிப்பிட்டதை எளிதில் புறம்தள்ளி விட முடியாது.

பெண்கள் சக்தி சரியாக பயன் படுத்தப்படாமல் போயிருந்தால் இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் யூனியன் எதுவும் சாதிக்காமல் போயிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. போர்முனையில் ஆண்கள் யுத்தம் செய்துகொண்டிருந்த போது, உள்நாட்டில் விவசாயம், தொழிற்சாலை, கல்வி, அரசு உயர்பொறுப்புகள் என்று யுத்த வேளையில் சோவியத் பெண்கள் சமூகம் பணியாற்றாத துறையே இல்லையென்னும் அளவுக்கு, பெண்களின் சக்தியை சரியாக சோவியத் அரசு பயன்படுத்தி வெற்றி கண்டது என்பது மனிதகுலம் முழுவதற்கும் என்றென்றும் நினைவில் நிறுத்த, பொதுவுடைமை சமூகம் முன்வைக்கும் நம்பிக்கையளிக்கும் உதாரணம்.

     இந்த நேரத்தில் தோழர் பினராயி விஜயன் கூறிய, “ஜிஷா போன்றவர்கள் கொடூரமான நினைவாக மட்டுமல்லாது, சமூகத்திற்கு விட்டு சென்ற எச்சரிக்கையாக இந்தக் கொடூரத்தைக் கருத வேண்டும். பெண்களுடனான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த சமூகம் ஒரு அங்குலம் கூட முன்னேறவே முடியாது” என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

– சதன் தக்கலை.

Related Posts