அரசியல்

கார்ப்பரேட் காவிமயமாக்கலின் ஆறாத ரணம் “சில்லா கடார்” . . . . !

467541-worldculturefestival

சில்லா கடார்….இது ஒரு குடியிருப்பு பகுதியின் பெயர். இந்த பகுதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நாடு முழுவதும் பேசப்பட்ட , தொலைக்காட்சிகளில் பெரும் விவாதங்களின் மையப்பொருளாக இருந்த ஒரு முக்கிய நிகழ்வு நடந்த இடம். 130 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களும் பெரும் செலவந்தர்களும், அரசியல் பிரமுகர்களும் வாழும் கலையை புரிந்து கொண்ட இடம். இந்தியாவின் செல்வாக்கு மிக்க கார்ப்பரேட் சாமியாரான ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் ந்டத்திய உலக கலாச்சார திருவிழாவையொட்டி, நமது தலைநகரான புதுடில்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் இருக்கும் பல நூறு குடும்பங்கள் வாழும் இடம்.

சில்லா கடாரையும், அங்கிருந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிடுவதற்கு முன்னால் மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி பதவியேற்றதிலிருந்து இந்துத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களின் அன்றாட வாழ்வில் திணித்திட பல நூதன வகைகளை காவிக்கூட்டம் கையாண்டு வருகிறது. கல்வியில் ஒரு வழி, பண்பாட்டில் ஒரு வழி, கலாச்சாரத்தில் ஒரு வழி, என அனைத்து வாழ்வியல் விடயங்களிலும் பல முனை தாக்குதல்களை ந்டத்தி வருகிறது. அவையனைத்தும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு அரசியல் சர்ச்சைகளாக , விவாத பொருளாக, வன்முறையாக, கொலைகளாக, என்று பலத்த எதிர்ப்புக்களையும் மீறி சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு வழி ரவிசங்கரின் வாழும் கலை பயிற்சி. இந்தியா முழுவதும் இதற்கான கிளைகளை உருவாக்கி, மக்களை அதில் யோகாசனம், மூச்சுப் பயிற்சி, பல்வேறு தியான முறைகள், என வாழ்வின் சிக்கல்களுக்குகெல்லாம் தீர்வு இருக்கிறது எனும் பெரும் மூளை சலவை நடைபெறுகின்றது.

இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில், மனிதனின் துயரங்களுக்கு, அமைதி தான் தீர்வு எனும் ஒற்றை வரியோடு முடித்து வைத்து , அவர்களை அந்த வலைப்பின்னலில் சிக்க வைத்து விடுகின்றனர். இதை ஒரேமாதிரியாக சொன்னால் சலிப்பு தட்டாதா? மேலும் செய்யும் சுரண்டலை விரிவு படுத்த வேண்டாமா? அதன் ஒரு பகுதி தான் உலக கலாச்சார திருவிழா………

சந்தைப்படுத்துதல்…..எப்படி?

ஒவ்வொரு கார்ப்பரேட் சாமியாரும் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அதற்கென தனி சாம்ராஜ்யத்தை உலகம் முழுவதும் அமைத்திட பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் ரவிசங்கர் ஒரு வழி….. அதை மென்மேலும் சந்தைப்படுத்திட ஏற்பாடு செய்யப்பட்டது தான் உலக கலாச்சார விழா.. இவர் யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தவுடன் சர்ச்சைகள் துவங்கியது.. நதிக்கரையில் விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கியவுடன் தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது எதிர்ப்பை தெரிவித்தது… நதிகள் மாசுபடும், சுற்றுசூழல் பாதிப்படையும், என்று தனது கருத்தை முன்வைத்தது. நாட்டின் அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.. ஆனால் பல தளங்களில் விவாதம் துவங்கியதால் இந்தியாவின் முதல் குடிமகன் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்தார். தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிமன்றத்திற்கு சென்று நிகழ்ச்சிக்கு தடை வாங்கியது. டில்லி அரசும் தன் பங்குக்கு சில வேலைகளை செய்வது போல் பாசாங்கு காட்டியது. ஆனால் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த யாரும் முன் வரவில்லை. மாறாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள், என பலரும் எதிர்த்தும் மத்திய அரசு வெளிப்படையாக நிகழ்ச்சி நடைபெற விதிகளை மீறி, அனுமதி கொடுத்தது. இன்று ரவிசங்கருக்கு போட்டியாக பலரும் களத்தில் குதித்துள்ள நிலையில் எப்பாடுபட்டாவது நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் அவருக்கு… பல கார்ப்பரேட் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள், துவங்கி கீழ்மட்டம் வரை பலர் அவர் வழியினை பின்பற்றுபவர்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 5 கோடி ரூபாயை அபராதமாக கட்ட சொன்னது. அதையும் ரவிசங்கர் கட்ட வில்லை… ஏன் தெரியுமா? அவர் அறக்கட்டளை மிகவும் வறிய நிலையில் உள்ளதாம்….சரி சில்லா கடார் பிரச்சினையை பார்போமா?

எல்லாமே தற்காலிகம்…………

எங்கள் குடியிருப்பு பகுதி மூன்று நாட்களுக்கு மிகவும் அழகாகவும், வெளிச்சமாகவும் காட்சியளித்தது…… என சொல்கிறார் பிங்கி யாதவ்… புது டில்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் தொகுதிக்குள் தான் இருக்கிறது சில்லா கடார்… யமுனை நதிக்கரயில் உள்ள பகுதியில் இருக்கும் பெரும்பாலான மக்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு ரேசன்,ஆதார், வாக்காளர் அடைய்யாள அட்டை என அனைத்தும் இருக்கிறது ….ஆனால் என்ன பயன்? ஒரு அடிப்படை வசதி கூட செய்து தரப்படவில்லை. இந்தப்பகுதியை அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு பகுதியாக டில்லி அரசு அறிவித்துள்ளது. முறையான சாலை வசதிகள் கிடையாது..இங்குள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பு கிடையாது….காரணம் கேட்டால் இதெல்லாம் விளைச்சல் பூமி …மேலும் ஆற்று படுகையில் இருப்பதால் மின்சார வசதி ஏற்படுத்த் முடியாது என கை விரித்து விட்டனர்…

இன்று பெரும் சுற்றுலா தளமாக மாறியுள்ள அக்‌ஷர்தாம் கோவில் கூட விளைச்சல் பூமியில் கட்டப்பட்டது தான். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது..ஆனால் மனிதர்கள் வாழும் பகுதிக்கு பல தடைகள்….

சில்லாகதாரில் ரவிசங்கரின் விழாவுக்காக நாங்கள் பயிரிட்டு வைத்திருந்த கத்தரி, முட்டைகோஸ்,வெண்டை பயிர்களை எங்கள் கண்முன்னரே புல்டோசர்களை வைத்து அழித்தனர்…நாங்கள் என்ன தவறு செய்தோம்?என்று அப்பகுதியின் அப்பாவி மக்கள் கேட்கின்றனர்.

ஆறாத வடுக்கள்…..

ஒன்பதாவது வகுப்பு மாணவன் விகாஸ் குமார் தான் கலையில் பள்ளிக்கு செல்லும் போது எங்கள் தோட்டத்தில் காலிஃபிளவர் செடிகள் பூத்து , அறுவடைக்கு தயாராக இருந்தது.. ஆனால் மாலையில் நான் வீடு திரும்பும் போது அனைத்துமே தரைமட்டமாகி, பயிர்கள் இருந்த இடத்தில் எல்லாம், மண் கொட்டப்பட்டு, அடையாளங்கள் மாறி போனது. என்னுடன் படிக்கு சக மாணவர்களிடம் எங்கள் வீட்டில் தனிஅறைகள், மின்சாரம் ,குடிதண்ணீர் எதுவும் இல்லை என சொன்னால் நம்ப மறுக்கின்றனர்.

இந்த பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலனவர்கள் பல வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி டில்லிக்கு வந்தவர்கள். வேலையோடு தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் விவசாயமும் செய்தனர்… இப்படி இரண்டையும் சேர்த்து செய்ததால் தான் எங்கள் குழந்தைகளை, படிக்க வைக்க முடிந்தது…. எங்களால் யாருக்கும் தொல்லைகளே இருந்ததில்லை…. என புலம்புகிறார் கட்டிட பணிகளில் பகல் பொழுதில் வேலை செய்து விட்டு, மாலையில் வீட்டருகில் விவசாயம் பார்த்த அஜய்…. இது போல் கண்ணீர் சிந்தும் மேலும் பலர் உண்டு…..

ஒரு நாள் இரவு … எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது… காலையில் வேலைக்கு சென்ற போது அறுவடைக்காக காத்திருந்த பயிர்கள் அனைத்தும் புல்டோசர்களால் அழிக்கப்பட்டன. நாங்கள் பெரும் சுவர் எழுப்பி, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பல கோடி ரூபாய் முதலீட்டில் பண்ணை விவசாயம் செய்யவில்லை..ஏதோ எங்களுக்கு கிடைத்த சிறு நில பகுதியில் காய்கறிகளை விளைவித்தோம். அது தவறா? என புலம்புகிறார் வினோத் கன்னா…..

பந்தலும், மேடையும்……

சுமார் 6 ஏக்கர் நிலபரப்பில் மேடையும், அதை அனைவரும் பார்க்கும் வகையில் அரை வட்ட வடிவில் கேலரி போன்ற பார்வையாளர்கள் அமரும் இடமும் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டது. அந்த மேடையை அடையவும், கேலரிகளை அமர்ந்து கொள்ளவும்  4 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டு, ராணுவ வீரர்களின் துணையோடு பாலம் அமைக்கப்பட்டு, இரவோடு இரவாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த இடத்தின் வெளிச்சத்தில் எங்களின் மூன்று நாள் பொழுது போனது. வண்ண விளக்குகள், ராட்சத கோபுர மின் கோபுரங்கள் என களை கட்டியிருந்தது…எங்கள் பகுதி முழுவதும் வந்திருந்த மக்களுக்காக தற்காலிக தண்ணீர் , பழம், பழச்சாறு விற்கும் கடைகள் முளைத்தன. எங்கள் பகுதியில் தான் நகழ்ச்சி நடந்தது என்றாலும் நாங்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சத்தம் மட்டும் விடிய விடிய கேட்டுகொண்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு அங்கிருந்த அனைத்தையும் எடுக்கும் பணி மேலும் நான்கு நாட்களுக்கு நடந்தது. மலை போல் குப்பை கொட்டப்பட்டுள்ளது. கழிவுகள் , பிளாஸ்டிக் பொருட்கள் என சுற்றிய பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் தேவையற்ற பொருட்கள்….. இப்போது நாங்கள் புழங்கிய பகுதி என்பதற்கான அடையாளமே இல்லை…மீண்டும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து துவக்க வேண்டும் என்கிறார்கள் சில்லா கதாரின் மக்கள்.

வாழ்வாதாரத்தை தொலைத்து, இருந்த இருப்பிடங்களை இழந்து இன்று மீண்டும் அன்றாட வாழ்வை ஆரம்பிக்கும் சில்லா கடார் கார்ப்பரேட் காவிமயமாக்கலின் ஒரு ஆறாத ரணம்……

– என்.சிவகுரு தஞ்சாவூர்.

Related Posts