மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”

கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஐரோப்பிய தலைவர்களுடன் பல தீர்மானங்களில் கையெழுத்திட்டார். அதில் 17ஆவது தீர்மானத்தில், நேப்பாளம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கவேண்டிய தேவை இருப்பதை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொள்கிறது”

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த நேப்பாள மக்களையும் இத்தீர்மானம் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நேப்பாளத்தின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதன் இறையாண்மையை பாதிக்கிற ஒன்றாகத்தான் அம்மக்கள் இதனை பார்க்கிறார்கள்.

நேப்பாளத்தின் அயல்துறை அமைச்சகம் இவ்வொப்பந்தத்தினை கடுமையாக கண்டித்திருக்கிறது.

“அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதென்பது ஒரு நாட்டின் உள்விவகாரம். இந்திய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் போடப்பப்பட்ட ஒப்பந்தமானது, நேப்பாள மக்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஐ.நா. சபை மற்றும் சர்வதேச சட்டங்களின் விதிமீறலுமாகும்.”

நேப்பாளத்தின் அமைச்சரவை கூடி, இவ்வொப்பந்தத்தை கடுமையாக கண்டிருத்திருக்கிறது. நேப்பாளத்தின் அனைத்து ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக விமர்சித்திருக்கின்றன. ஆனாவூனா சீனா உள்ளே நுழைந்துவிட்டது என்றும், பாகிஸ்தான் பாய்ந்துவிட்டது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள் அனைத்தும், நேப்பாளத்தினை தனியாக செயல்படவிடாமல் தடுக்கும் இந்திய அரசு குறித்து வாயே திறப்பதில்லை.

பத்தாண்டுகளாக நடந்துவந்த ‘மக்கள் போர்’ 2006இல் முடிவுக்கு வந்தபின்னர் நேப்பாளம் ஒரு ஜனநாயகக் குடியரசாக மாறியிருக்கிறது. அதன்பின்னர் இரண்டாவது முறையாக அரசியலமைப்புச் சட்டம் அமைக்கும் திட்டத்தில் வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நேபாளத்திற்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை மேம்படுத்த நேப்பாளத்திற்கு நேரடியாக ஆலோசனைகள் கொடுப்பதை அம்மக்கள் நிச்சயமாக வரவேற்பார்கள். ஆனால், நேப்பாளமே கலந்துகொள்ளாத ஒரு மாநாட்டில் யாரோ இரண்டு நாடுகள் ஒப்பந்தம் போட்டுகொள்வதை என்னவென்று சொல்வது. அதிலும் தெற்காசியப் பிராந்தியத்தில் நேப்பாளத்தை இந்தியா எப்படி நடத்துகிறது என்பதன் பின்னனியில் இதுபோன்ற ஒப்பந்தங்களை பலவகையில் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிவரும்.

BRITAIN-INDIA/நேப்பாளத்தின் எல்லைக்குட்பட்ட 60,000 ஹெக்டேர் நிலத்தினை கலப்பனி உள்ளிட்ட 54 பகுதிகளில் இந்தியா ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இந்திய-நேப்பாள எல்லையில் போடப்பட்டிருந்த 3558 எல்லையோர தூண்களில் 2358 தூண்கள் தான் தற்போது இருக்கின்றன. அப்பகுதிகளிலெல்லாம் அடிக்கடி திருட்டு, பாலியல் வன்கொடுமை, நிலங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட எல்லைதாண்டிய சமூகவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. நேப்பாளம் இப்பிரச்சனைகளை பலமுறை இந்தியாவிடம் எழுப்பியும், இந்திய தரப்பிலிருந்து சரியான பதிலில்லை.

நேப்பாளம் ஒருகாலத்தில் இந்து நாடாக இருந்தது. ஆனால் இன்று நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின்னர், இன்று கூட்டாட்சிக் குடியரசு நாடாக மாறியிருக்கிறது. இந்த உண்மையினை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நேப்பாளத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து நாடாக மாற்றிவிட இந்தியாவின் மோடி அரசு பெரியளவு நெருக்கடியெல்லாம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்னர், நேப்பாளத்தின் நலனுக்கு எதிரான ஏராளமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே போடப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சர்வதேச சமூகத்துடனும் இன்னபிற நாடுகளுடனும் சுதந்திரமாக வர்த்தக மற்றும் அரசியல் உறவை ஏற்படுத்திக்கொள்ள பழைய இந்தியா-நேப்பாள ஒப்பந்தங்கள் எல்லாம் தடையாக இருந்திருக்கின்றன. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால், அவையும் தற்போது மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பழைய ஒப்பந்தங்களை மாற்றி புதுப்பிக்க நேப்பாளம் கொடுக்கும் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தும் வருகிறது.

ஜனநாயகத்தைப் பொருத்தவரையில் நேப்பாளம் இளந்தேசம் தான்; ஆனால், அதனைப் பெறுவதற்கான பாதையில் நேப்பாளத்திற்கு நீண்ட நெடும் வரலாறும் அனுபவமும் இருக்கிறது. அவர்களின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மாதேசி இனமக்களுக்கு சமவாய்ப்பு அளிக்கவில்லை என்று குறைகூறிவருகிறது இந்தியா. மாதேசி இனமக்களுக்கு மட்டுமல்ல, தாழத்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் இசுலாமிய மக்கள், அனைத்துத் தரப்பு பெண்கள் என பலருக்கும் இப்புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சமமான அங்கீகாரம் வழங்கப்படவில்லைதான். அதற்கான போராட்டங்களும் விவாதங்களும் அங்கே பெரியளவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்குள்ளே தலையிடும் உரிமையோ தகுதியோ இந்திய மோடி அரசுக்கு இருக்கிறதா என்று நேப்பாள மக்கள் கேட்டால் நம்மால் என்ன பதில் சொல்லமுடியும்? ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் ஆதரவளிப்பதுபோல இந்தியாவின் மோடி அரசு குரல்கொடுப்பது, நேப்பாள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியேயன்றி வேறில்லை.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில், நேப்பாளத்திற்கான வர்த்தகப்பாதையினை இந்தியா அடைத்துவிட்டது. இதனால் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பலவும் நேப்பாளத்திற்குள் நுழையமுடியாமல் போனது. அந்நாட்டின் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். இன்றளவும் அதிகாரப்பூர்வமாக அப்பிரச்சனையை தீர்க்க இந்தியா தயாராக இல்லை.

“இந்தியப் பிரதமர் எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கக்கூடாது” என்றொரு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்டால் இந்திய அரசு சும்மாயிருக்குமா?

ஆகையால், மோடி அரசே! தேவையே இல்லாமல் அடுத்த நாட்டின் இறையாண்மையைக் கெடுத்து அவர்களது உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்…

About இ.பா.சிந்தன்