கலாச்சாரம் காதல் சமூகம்

கெளரவமாகிறது கொலை . . . . . . ! கழுத்தறுபட்டு சாகிறது காதல் . . . . . !

1018_541703022669973_796159796804415827_n”மத்த ஸ்டேட் மாதிரியெல்லாம் கிடையாதுங்க”, ”தமிழ்நாடு இந்த விஷயத்துல ரொம்ப முன்னேறிடுச்சி” என்று பேசித்திரியும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லித் திரியும் தமிழ்நாட்டில், நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் உடுமலையில் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 43-ல் மேலும் ஒன்று என்று கடந்து போக முடியாத அளவிற்கு விமலாதேவி, கண்ணகி-முருகேசன், கோகுல்ராஜ், இளவரசன் என ஏதோ ஒரு வகையில் தொடர்கதையாகிக் கொண்டே வருகிறது.

சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக, திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (22), பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) தம்பதியனர் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். உடுமலை பஸ் நிலையம் அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மூவர்  திடீரென அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியதில் சங்கர் இறந்து விட, கெளசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூகத்தின் பொது மனசாட்சி எந்த விதத்திலும் அலட்டிக்கொள்ளப் போகாத இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மறைந்து ஒழிந்து போனதாக இப்போதும் நாம் அறிவு ஜீவித்தனமாய் பேசித்திரியும் சாதி. “இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா?” என்று அடிமனதில் வன்மத்தை ஒளித்து வைத்து ஒரு கேள்வியை எழுப்பி, அதே நேரத்தில் ரிசர்வேஷன ஒழிச்சா இந்தியா செவ்வாய் கிரகத்த போல ஒரு பெரிய நாடாகிருங்க என்ற பேச்சில் தன்னை ஆகச்சிறந்த அறிவாளியாய் காட்டிக் கொள்ள துடிக்கும் மேட்டுக்குடிக்கு இந்த சம்பவம் எந்த விதத்திலும் உரைக்கப்போவதில்லை.

ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் ஒரு ஓரத்தில் பெட்டி செய்தியாய் இந்த சம்பவம் சுட்டிக் காட்டப்படும். இருவேறு பிரிவினை சேர்ந்த இருவர் காதலித்த்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இது போன்ற ஒரு செயலை செய்து விட்டார்கள் என்று அந்த செய்திகள் பூசி மெழுகப்படும். தேவேந்திரகுல வேளாளர் சாதிப் பையனை காதலித்த தேவர் சாதி பெண் என்று பட்டவர்த்தனமாக எழுதப்போவதில்லை ஏனென்றால் இவர்களெல்லாம் சாதிப் பெயரை சொல்லி சாதியை வளர்க்க விரும்பாதவர்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தை பிறக்கும் போது, ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசத்திற்குள்ளாகிறது. ஒரு வாரிசு பிறந்து விட்டது என்று மகிழ்ச்சி கொள்கிறது. ”என் குலப்பெருமைய காக்க” ஒரு பொண்ணு பொறந்திருக்கா பாரேன் என்று ஆசையோடு அப்பா குழந்தையை கையில் ஏந்தும் இடத்தில் இருந்து பெண் மீதான சாதிய திணிப்புகள் நேரடியாக மறைமுகமாக வளரத் தொடங்குகிறது.

அன்றிலிருந்து சாதியை பெண்ணின் யோனியில் வைத்து காப்பாற்றும் ஆகப்பெரும் பொறுப்பிற்கு ஆளாகிறார் தந்தையும், உறவினர்களும். எப்பாடுபட்டேனும் ஆதிக்க சாதி ஆண்குறிக்கு தாரைவார்த்துக் கொடுத்து தன் குலப்பெருமை அழியாமல் காக்க வேண்டும் என அரும்பாடு படத்தொடங்குகிறார்கள். இது மீறிப்போகும் இடத்தில் ஆத்திரம் கொண்டு எல்லா சாதி பெண்களையும், தலித் ஆண்களையும் வெட்டிக் கொன்று தன் குலப்பெருமையை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.1917318_541703269336615_1082128699902498306_n

இந்தியாவை பொறுத்த வரையில் குடும்பம் என்பதே சாதி மற்றும் பெண்ணடிமைத் தனத்தை காப்பாற்றுகிற ஒரு வன்முறை கட்டமைப்புதான் என்பது வெவ்வேறு நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் கொங்குமண்டலத்தை சேர்ந்த பெண்ணை தொலைப்பேசியில் மிரட்டும் ”வீரம் விளைந்த பரம்பரை” க்கு சொந்தக்கார அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனாகட்டும், ஒற்றையாளாக மாட்டிக்கொண்ட கோகுல்ராஜை கூட்டமாக சென்று கொன்று வீசிய கூட்டமாகட்டும், இளவரசனைக் கொன்று தண்டவாளத்தில் வீசி தன் வெறியை தணித்துக் கொண்ட ஆண்ட பரம்பரை பெருமை பேசித் திரியும் பைத்தியங்களாகட்டும், இங்கே பிரச்சனையாக முன் வைப்பது சாதி மறுத்த காதலும் திருமணங்களுமே.

காதல் உலகின் அற்புதமான விஷயம், காட்டுமிராண்டிகளாய் சுற்றித் திரிந்த கூட்டத்தை மனிதனாக்கி அழகு பார்த்தது காதல். இருப்பினும் ஏன் மூர்க்கத்தனமாய் சாதி மறுத்த காதல் எதிர்க்கப்படுகிறது. :நானே சாகப்போறேன், எனக்கெதுக்குப்பா இந்த நகையெல்லாம்” என்று அழுது கொண்டே கழட்டிக் கொடுத்தப் பெண்ணை, தான் சீராட்டி பாராட்டி வளர்த்த ஒரு உயிர் என்று கூட பார்க்காமல் கண்ணெதிரே எரித்துக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணம் என்ன? அத்தனைக்கும் காரணம் “சாதி”. ஐம்புலன்களால் உணர முடியாத சாதி.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் சமூகத்தில் எந்த வித சமரசமுமின்றி தொடர்ந்து வரும் சாதி என்றால் என்ன? என்கிற கேள்விக்கு, ”இந்த சாதியின் தோற்றுவாய் எதுவாக இருந்தாலும், சாதியின் இயங்குநிலை அகமணமுறையிலேயே இருக்கிறது” என்று இந்திய  சமூகத்தை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்வு செய்து சொன்ன அண்ணல் அம்பேத்கர், சாதி ஒழிப்பிற்காய் முன் வைக்கும் காரணங்களில் முதன்மையானதாக அகமணமுறை ஒழிப்பை வைக்கிறார்.

அகமண முறை ஒழிந்தால் சாதி ஒழியும் ஆகவே சாதி மீறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எப்போதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஒரு கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலம் ”பாத்தியா அந்த மாதிரி, அப்டி கல்யாணம் பண்ணின அவனுக்கு என்னாச்சினு” என்று அச்சுறுத்தி வைப்பதன் மூலம், சமூகத்தில் எந்த ஒரு காதலையும் கொன்று புதைக்கவே இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

கெளரவக்கொலைகள் என கெளரவமாக அழைக்கப்படும் இது போன்ற சாதிய ஆணவ காட்டுமிராண்டிக் கொலைகளில் பாதிக்கப்படுவது தலித் ஆண், பெண் அல்லது ஆதிக்க சாதிப் பெண்களாகவே உள்ளனர். ”என்னதான் இருந்தாலும் நாங்க” எட்டு ஊரு கட்டி ஆண்ட டேஷ் பரம்பரையாக்கும் என்று பெருமை பீற்றிக் கொண்டாலும் ஒவ்வொரு ஆதிக்க சாதி குடும்பப் பெண்களும் இழிநிலையிலேயே வைத்துப் பார்க்கப்படுகிறார்கள் என்பதையே இது போன்ற கொலைகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

உலகமயமாக்கலுக்கு பின்னான சூழலில் உயிர் வாழ தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கைக்கெட்டா தூரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது, கோடி பேர் வறுமையில் வாழ 100 பேரின் வருமானம் லட்சம் கோடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, வேலையில் உரிய சம்பளம் இல்லை, நடுத்த வர்க்கங்கள் குடும்பத்தை நடத்த முடியாத அளவிற்கு மாத பட்ஜெட் கழுத்தை நெரிக்கிறது, விலைவாசி உயர்வு கண் பிதுங்குகிறது, எல்.கே.ஜி துவங்கி லட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்ற நிலைமை வந்து விட்டது. இதையெல்லாம் எதிர்த்துப் போரிட வக்கின்றி இன்னமும் நாங்கதான் எட்டு ஊர கட்டி ஆண்டோம், கருவேலங்காட்டுல கூட்டமா பேண்டோம் என்று பெருமை பீற்றித் திரியாதீர்கள்.

சாதி என்பது அடையாளமல்ல, அவமானம் என்று உணர். உன்னை உசுப்பேத்தி கொலை செய்யத்தூண்டும் உன் சாதித் தலைவன் சொகுசு கார்களில் பயணிவருவது எப்படி என்று யோசி.

நிலபிரபுத்துவம் தன் உழைப்பு சுரண்டலுக்காக பயன்படுத்திக் கொண்ட அவமான சின்னமான சாதி, இன்னமும் முதலாளித்துவ சமூகத்தில் சுரண்டலை பாதுகாக்கவே பயன்பட்டு வருகிறது என்று உணர். விழி . . . . ! எழு . . . .! சமூக அநீதிகளுக்கெதிராய் பொங்கிடு . . . . !

தன் துணையை தேர்ந்தெடுத்திடும் உரிமை பெண்களுக்கு உண்டு எனும் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள். சாதி மறுத்த காதல் திருமணங்கள் கொண்டாடப்பட வேண்டியவை, கொலை செய்யப்பட வேண்டியவை அல்ல என்பதை புரிந்து கொள்.

ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்குமான போராட்டத்தில் முற்போக்காளர்களும், அறிவுஜீவிகளும் இன்னும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டுவது அவசியம் என்பதை உணர வேண்டிய தருணமிது.

Related Posts