அரசியல் சமூகம்

தற்கொலை செய்துகொண்டது நேர்மை. . . . ! கொலை செய்யப்பட்டது நீதி . . . . . !

12794352_1095412363837296_5247951119995309106_nஒராண்டுகளாக மூடிக்கிடந்த வீடு இன்று திறக்கப்பட்டது. புன்சிரிப்புடன் காணப்பட்ட அந்த புகைப்படத்தை துடைத்து, மாலையிட்டு அவர்கள் வணங்கினர். அம்மாவும், அவரது பிள்ளைகளும் கண்ணீர் மல்க அந்த மனிதனை நினைத்துக் கொண்டனர். அவரது மரணச்செய்தி வந்த ஒராண்டுக்கு முந்தைய அந்த நாளின் அந்த நொடிப்பொழுதை விட, நேற்றும் இன்றும் மிக அதிகமாகவே அவர்கள் கலங்கிப் போனார்கள். ஒராண்டுக்கு முந்தைய அந்த நாளில் தான் பாசத்திற்குரிய தன் கணவனின் மரணச்செய்தி அந்த தாய்க்கு வந்து சேர்ந்தது. அன்போடு தங்களை அரவணைத்த தந்தையின் மிக கோரமான மரணம் இடி போல் பிள்ளைகளின் தலையில் இறங்கியது, கட்டிப்பிடித்து அழக்கூட முடியாத முகமற்ற மனிதனாக வீழ்த்தப்பட்டு கிடந்த தந்தையின் கைவிரல் பிடித்து வளர்ந்த பிள்ளைகள் அந்த நாளில் மிகவும் துடித்து போனார்கள். அந்த நாளின் துயரத்தை விட இன்று மிகவும் இறுகிய மனதோடு அவர்கள் அந்த புகைபடத்தின் முன்னால் நின்றார்கள். எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து போயிற்று அவர்களுக்கு. ஒராண்டுக்குள் இப்படியா ஒரு தீர்ப்பு வர வேண்டும்!

மார்ச் 8 அன்று அந்த தீர்ப்பு வந்தது. வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கின் முதல் குற்றவாளி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசார் நிருபிக்க தவறியதால், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடாமல், அக்ரி விடுதலை செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலிசார் குற்றத்தை நிருபிக்க தவறி விட்டனர். இந்த வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை கிடைத்தவுடன், இந்த வழக்கில் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என அறிக்கை உள்ளது, எனவே இந்த வழக்கு விசாரணையில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கடந்த டிசம்பரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு, அவ்விதமே அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அப்போதே தெரிந்தது விசாரணை எந்த லட்சணத்தில் நடந்திருக்கும் என்று.

சி.பி.சி.ஐ.டி விசாரணை அலாதியானது. ஒரு உதாரணம். 2005-ல் விருதுநகரில் வணிக வரித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி எபநேசரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டனர். அவரது வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2005 என்பது 2006 ஆனது 7 ஆனது 8 ஆனது. காலம் உருண்டோடி 2015ம் வந்தது. குற்றவாளிகள் பிடிபடவில்லை. எபநேசரின் மகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டார். பத்து ஆண்டுகள் கடந்தும் எனது தகப்பனாரையும், தாயரையும் கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மதுரை உயர்நீதிமன்றம் சிபிசிஐடிக்கு சில வாரம் அவகாசம் கொடுத்தது. சில நாட்களில் கொலையாளிகள் பிடிபட்டனர். குற்றவாளிகள் எங்கிருந்தனர்? வெளி மாநிலத்தவரா? வெளிநாடா? ஒன்றுமில்லை. எபநேசரின் வீட்டிலிருந்து பத்தாவது வீடு குற்றவாளியினுடைய வீடு. இதை கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆயிற்று. என்ன வேகம் பார்த்தீர்களா! ஆவின் பால் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் சிபிசிஐடிக்கு எச்சரிக்கை விடுத்தார். விரைந்து செயல்படுங்கள் இல்லையேல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவேன் என்று. ராமஜெயம் வழக்கு என்னாயிற்று. நிற்க!

இப்படியாகத்தான் முத்துக்குமாரசாமியின் வழக்கும். விசாரணை குற்றவாளிகளை சிக்க வைப்பது அல்ல. ஊழல் 08-1454909300-muthukumarasamys4-600பெருச்சாளிகளை எப்படி காப்பாற்றுவது என்பது தான். கள்ளன் போலீஸ் விளையாட்டில் கூட சிறு பிள்ளைகள் கண்டுபிடித்து விடும் கள்ளனை. ஆனால் அரசு எனும் அதிகாரத்தில் இருக்கும் ஆளும்கட்சி சிபிசிஐடி மூலம் கள்ளனை தப்ப விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. 2015 பிப்ரவரி 20ல் அது நடந்தது. வழக்கம் போல தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலி நகரத்தை நோக்கி தடதடத்து வந்து கொண்டிருந்தது. பயணிகளுக்கு கைகளை ஆட்டி ரசிக்கும் சிறுவர்களையும், ரயில்வே தடுப்புகளுக்கு பின்னால் காத்து நிற்கும் மக்களையும் கடந்து வரும் ரயில், அன்றைய தினம் நேர்மையான ஒரு அரசு அதிகாரியின் உடலை ரத்த சேறாக்கி தச்சநல்லூர் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றது. வானில் திரிந்த பறவைகளும் அச்சமுற்று தனது திசைகளை மறந்து குரல் எழுப்பின.

அந்த தற்கொலை ஒரு மனிதனின் சொந்த சுகதுக்கத்தில் நிகழ்ந்தது அல்ல. அது நம் தேசத்தின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தின் அசுர பிள்ளையான ஊழலின் மிக கோரமான குணத்தின் வெளிப்பாடு. அவயக்குரல் எழுப்பவும், தனது தோள் வரை வளர்ந்து நிற்கும் பிள்ளைகளையும் நினைத்து பார்க்கவும் அவகாசம் கொடுக்காமல் உயிர் பறித்த அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை, திமிரை மற்றுமொருமுறை இந்த உலத்துக்கு எடுத்துக்காட்டிய துன்பியல் நிகழ்வு.

ரயிலின் சக்கரங்களிலும், தண்டவாளத்திலும் சிதையுண்டு போன அந்த மனிதனின் இதயத்தில் இருந்த ஒராயிரம் கனவுகளும் வழிந்தோடிய குருதியோடு கரைந்து போனது. சக ஊழியருக்கு சத்திய சோதனை புத்தகத்தை தன் நினைவாக கொடுத்த அனிச்சமலர், அள்ளியெடுக்க  முடியாமல் சிதறுண்டு போகுமென அந்த சக ஊழியரான செந்தில்குமாரவேலுக்கு 33 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர் உண்டு அவரது வேலையுண்டு என தனக்கான குணத்தை வடிவமைத்து ஒரு மனிதன் வாழ்ந்திட முடியாது என அந்த மரணம் இன்றும் ஓங்காரமிடும் குரலை எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை. அதிகார வர்க்க நிர்வாக பல்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த ஒராயிரம் உயிர்களின் பட்டியலில் பிப் 20 இன்னும் ஒரு பெயரை தன்னோடு சேர்த்துக் கொண்டது. அந்த பட்டியல் சமூகத்தின் மனசாட்சியை உற்று நோக்கியபடியும், மற்றுமொரு மனிதனை தேடியபடியும் இருக்கிறது.  மெளனம் அதிகார வர்க்க அடக்குமுறையைவிட மிக கொடூரமானது.

தாங்கள் நேர்மையானவர்கள் என அதிமுக அரசு நாடகம் நடத்த என்னவெல்லாம் நடந்தது. கட்சி பொறுப்பிலிருந்து அக்ரி நீக்கப்பட்டார், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. வழக்கை சிபிசிஐடி போலீசார் வுசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் அக்ரி கைது செய்யப்பட்டார். தலைமை செயற்பொறியாளர் செந்தில், அமைச்சரின் உதவியாளர் பூவையாவும் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் அதிமுக பிரமுகர்களும் விசாரிக்கப்பட்டனர். முத்துக்குமாரசாமியின் இரு சக்கர வாகனம் உள்ளூர் அதிமுக பிரமுகர் வீட்டருகே கைப்பற்றப்பட்டதாக செய்தி வந்தது. போலீஸ் அறிக்கையில் ரயில்வே ஸ்டேசனுக்கு முன்பாக கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சில வாரங்களாகவே நிம்மதியற்று அவர் இருந்ததாக வீட்டாரும், அவரது கார் டிரைவரும் கூறியுள்ளனர். சென்னையில் அமைச்சரை சந்திக்கவும் சென்றுள்ளார். லஞ்சம் பெற்று பணம் கொடுக்க முடியாது என தன் சொந்த பணத்தை கொடுக்க சென்றுள்ளார். நாயினும் கீழாக நடத்தப்பட்டுள்ளார். அச்சமயத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்குத்தான் பணம் எடுத்ததாகவும், வீடு கட்டியதில் பணப்பிரச்சனை என்றும் எதிரிகளின் செய்திகள் கசிய விடப்பட்டன.

சென்னைக்கு சென்றவர் தம் பிள்ளைகளை கூட பார்க்கவில்லை. வேளாந்துறையில் 7 தற்காலிக ஒட்டுநர் காலி பணியிடங்களுக்கு ஆள் நியமிப்பதில் தான் ஆளுங்கட்சி தலையீடு இருந்துள்ளது. பணிக்கு 3 லட்சம் வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளார். சகல துறைகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை சாவுகள், எத்தனை கொள்ளைகள். நெல்லையில் ரயிலில் விழுந்து மாண்டு போன அம்பை வட்டாட்சியர் தியாகராஜன், சில டெண்டர்களை ரத்து செய்து உத்தரவிட்ட அடுத்த சில தினங்களில் மர்மமான முறையில் தன் காரில் இறந்து கிடந்த நெல்லை மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். சென்னையில் மருத்துவ அதிகாரி, தஞ்சையில் கிராம நிர்வாக அதிகாரி என ஊழலின் கொடுங்கரங்கள் பறித்த மனித உயிர்கள் எத்தனையெத்தனை.

உள்ளூர் பிரமுகர்கள் 10 பேர் என ஏப்ரல் 8-10 நக்கீரன் இதழ் பெயரை வெளியிட்டது. சிபிசிஐடி விசாரணையில் உள்ளூர் பிரமுகர்கள் நான்கு பேர் சிக்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. நீதிமன்றத்திலும் சிபிசிஐடி இதனை ஒப்புக்கொண்டது. முத்துக்குமாரசாமி மரணித்து  ஒராண்டு கடந்து விட்டது. மதுரை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணை குறித்து தனது கடும் கண்டனங்களை வேறு பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. உண்மை வெளிவர சிபிஐக்கு இவ்வழக்கு மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலுவான வரலாற்று பின்னணி உள்ளது.

நாளும் பொழுதும் நம்மை கடந்து செல்லும் செய்தியல்ல இது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதும், விடுதலையானதும் அதிமுகவிற்கும், அரசாங்கத்திற்கும் சம்மந்தமில்லாத விசயமாக்க முயற்சிக்கப்படுகிறது. இது தனி மனிதனொருவனின் மரணமாக மறக்கடிக்கும் முயற்சியும் நடக்கிறது. இது தான் அரசியல். முதலாளித்துவ அரசியல். இதற்கு எதிர்வினை அவசியம். எதிர் அரசியல் தேவை.

ஊழலும், கொள்ளையும் இங்கு நீக்கமற நிறைந்துள்ளது. கிரானைட் கற்களாகவும், தாதுமணலாகவும் அனுதினமும் இங்கு கொள்ளை அரங்கேறி கொண்டிருக்கிறது. சில பகட்டு வேலைகள் மக்களின் கண்களை மூடி மறைக்க முயல்கின்றன. தாதுமணல் கொள்ளை குறித்த சுதீப்சிங்பேடியின் அறிக்கை அரசாங்கத்தின் மேசையில் கொள்ளையர்களின் நலன் கருதி கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் கிடக்கிறது என்கிற சொத்தை காரணம் இதற்கு மட்டுமே பொருத்தப்படுகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எனவே யாம் பதவியிலிருந்து விலகுகிறோம் என ஒருவரும் சொல்வதில்லை. ஆனால் ஊழலை மறைக்க வழக்கு காரணமாக்கப்படுகிறது. இன்றளவும் கப்பலில் பயணிக்கிறது உலகில் மிக அரிதான, மிக அதிக மதிப்புள்ள தாதுமணல். ஒவ்வொரு வேலைக்கும் கமிசன் என்பது நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. நேர்மையானவர்களை பார்த்து, நீங்க வேணா கண்டுக்காதீங்க என மிரட்டலோடு, அதிகாரத்தோடு ஊழல் சிம்மாசனமிட்டு தலையில் உட்கார்ந்திருக்கிறது.

முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு பத்தோடு பதினொன்று அல்ல. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயல்லிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஊர்வலமும், உண்ணாவிரதமும் நடந்தால் அறநெறி இங்கு என்னாயிற்று? 2ஜி வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்த ராஜாவுக்கு சென்னையில் மேளதாளத்துடன் வரவேற்பு என்றால் நீதி, நியாயமெல்லாம் எங்கே தொலைந்து போனது? நாட்டுக்காக சிறைக்கு சென்று அதன் மூலம் அரசியலில் தலைவரான காலம் போய், ஊழலில் சிறைக்கு சென்று வந்தால் கனிமொழிக்கு எம்பி பதவி என்றால் தியாகத்திற்கு மதிப்பு எங்கே?

மக்களே எஜமானர்கள். அவர்களே வரலாற்றை தீர்மானிக்கிறார்கள் எனில் தேர்தலில் தீர்மானிக்கட்டும். உச்சநீதிமன்றத்திற்கு முன்னதாக மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ள நபர்களை விரட்டியடிப்போம் என சபதமேற்கட்டும். நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு எதிர்வினையாற்றட்டும். நீங்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும். முத்துக்குமாரசாமியின் மரணத்தை பேசினால் அது அரசியல் என்றால் நாம் அரசியல் பேசியாக வேண்டும். முடிவெடுத்தாக வேண்டும்.

– கே.ஜி.பாஸ்கரன்

திருநெல்வேலி

Related Posts