இந்திய சினிமா கலாச்சாரம் சினிமா

“கலாபவன்” மணி எனும் கேரள மண்ணின் மகத்தான கலைஞன் . . . . . . . . !

06-1457280331-kalabhavanmani

கேரளாவின் சேனத்துநாடு குன்னிசேரி வீட்டில் ராமன் மணி சாலக்குடியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் கசப்பான சுவையை மட்டும் அறிந்து  வளர்ந்த குழந்தை பருவத்துக்கு சொந்தக்காரர். இளமையில் தனக்கிருந்த வாய்ப்பு வசதிக்கு ஒரு ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையைத் துவங்கவே முடிந்தது. பின்னாளில் பன்முகத் திறமை வாய்ந்த திரைக்கலைஞராக பரிணமித்த “கலாபவன் மணி” என்ற புகழ்பெற்ற திரைக்கலைஞர் தான் அவர்.

மிமிக்ரி செய்வதிலும் நாடகங்களில் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் இளவயதில்  சிறுசிறு மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்துவது நாடகங்களில் நடிப்பதன் மூலம் கலை மீதான  தனது தீராத  தாகத்தை தணித்து வந்தார். கொச்சியில் இயங்கி வரும், ஏராளமான கலைஞர்களை உருவாக்கிய பாரம்பரியமிக்க,  “கலாபவன்” என்னும் உலைக்களத்தில் மெருகேற்றப்பட்டு “கலாபவன்” மணி என்ற பெயருடன் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சிறு சிறு நகைச்சுவை வேடங்களையே செய்ய முடிந்ததென்றாலும், தனக்குக் கிடைத்த அந்த சிறுசிறு வேடங்களையும் தனது பரிபூரண தனித் திறமையின் மூலம் சிறப்பாக்கி  அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து வில்லனாகவும், கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும்  ஏராளமான படங்களை நடித்து மலையாள திரையுலகில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

“காசி” என்ற தமிழ்ப்படத்தின் மலையாள மூலமான வினயன் இயக்கிய “வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்” என்ற படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனக்கே உரிய ரீதியில் நகைச்சுவை உணர்வுகளை வெளிபடுத்துவதிலும், குணசித்திர பாத்திரங்களை தனது நடிப்பால் மெருகேற்றுவதிலும் தனித்துவம் வாய்ந்தவர். தமிழில் ஜெமினி திரைபடத்தில் அவரது கதாபாத்திரம், அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது என்று அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

சுமார் 200  மலையாளத் திரைப்படங்களிலும் 25 தமிழ் திரைப்படங்களிலும் 4 தெலுங்குப் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், ஏராளமான திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளதோடு, தனிப்பாடல்களின் தொகுப்புகளையும் பாடியுள்ளார். ஐயப்ப பக்திப்பாடல்களும், மலபார் முஸ்லிம்களின் பாரம்பரிய பாடல் வடிவமான மாப்பிள்ளை பாடல்களும் அவரது தனித்தொகுதிகளில் குறிப்பிடத்தகுந்தவை. அவரது நாட்டுபுறப் பாடல்களின் தனித்தொகுதிகள் விற்பனையில் சாதனை படைத்தவை. “கண்ணிமாங்ங ப்ராயத்தில்” என்ற அவரது பாடல் பெரும் புகழ் பெற்றது…!

இளமையிலேயே கம்யூனிச இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்த தோழர். கலாபவன் மணி CPIM-ன் தீவிர ஊழியராக செயல் பட்டு வந்தார். எல்லா இடதுசாரி கலைஞர்களையும் போல சமூக அக்கறையுடன் செயல்பட்டவர். தனது பரபரப்பான கலைத்துறை வேலைகளுக்கு நடுவில் எப்போதாவது ஒய்வு நேரங்களில் எல்லாம் சாலக்குடி பகுதியில் கட்சியின் எல்லா இயக்கங்களிலும் பங்கேற்று வந்தார். தேர்தல் காலங்களில் CPIM உட்பட எல்லா இடதுசாரி வேட்பாளர்களையும் ஆதரித்து, தனது திரைப்படத்துறை வேலைகளை தவிர்த்து பிரச்சாரம் மேற்கொள்பவர். அவ்வாறு இயக்கப் பணிகளில் ஈடுபடுவதை தனது சமூகக் கடமையாக கருதியவர்.

தோழர். “கலாபவன்” மணியின் அகால மறைவு முற்போக்கு கலை இலக்கிய சமூகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

தோழர். “கலாபவன்” மணிக்கு வீரவணக்கங்கள்…

– சதன் தக்கலை.

Related Posts