அரசியல்

இந்தியாவின் இருண்ட காலம் நெருங்குகிறது – நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.

இன்று சிந்திப்பதே குற்றம். எதிர்த்து கேள்வி கேட்டால் நீங்கள் தேசத்துரோகி. நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்க இது நேரமில்லை. இப்பொழுது நாம் இருக்கும் இந்த தேசத்தின் நிலை – அறிவிக்கப்படாத எமர்ஜென்சி. எதிர்தெரியும் இருண்ட காலத்தைப் பற்றி, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் பார்வை:

இந்தியாவின் இருண்ட காலம் நெருங்குகிறது. செயல்படாத அரசு ஃபாசிசத்தை திணிக்கும்

அடிக்கட்டுமானத்தில் மாற்றம் (உற்பத்தி உறவுகள்) வந்தால் மேற்கட்டுமானத்தில் (கலாச்சாரம், சடங்குகள், சிந்தனைகள், சட்டம், சட்ட இயந்திரம்) மாற்றம் வரும் என்பது மரபு சார்ந்த சமூகவியல் கோட்பாடு,

ஆனால், 1947-க்கு பிறகு ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன் விளைவாக நிலவுடமை அடிகட்டுமானம் பெரும்பாலும் சேதமடைந்தது. சாதியம் மற்றும் மதவாதம் போன்ற நிலவுடமைக் கோட்பாடுகள் அப்படியே தங்கள் இருப்பினைத் தக்க வைத்துக் கொண்டதோடு, சகிப்புத்தன்மை இல்லாத தற்காலத்தில் இருப்பதைப் போலவே முன்னிலும் அதிகமாக வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையை ஒருவர் எப்படி விளக்குவது?

சில தகவல்களைக் குறித்து புரிதல் இல்லாமல், அடிக்கட்டுமானத்தில் நிகழும் மாற்றம் மேற்கட்டுமானத்தில் பிரதிபலிக்கும் என்னும் சூத்திரத்தை எப்பொழுதும் அப்படியே இயந்திரத்தனத்தில் பொருத்த முடியாது.

இது தொடர்பான கீழ்க்கண்ட தரவுகள் கவனிக்கத்தக்கவை:

பலநேரங்களில், அடிக்கட்டுமானத்தில் நிகழும் மாற்றத்தாலேயே உடனடியாக சமூகத்தில் புழங்கிவரும் சடங்குகளும், மக்களின் மனநிலையும் உடனடியாக மாறிவிடுவதில்லை. எடுத்துக்காட்டாக, 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாக இங்கிலாந்தின் அடிக்கட்டுமானத்தில் மாற்றம் நிகழ்ந்தும், நிலவுடமை சடங்குகளும், சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இங்கிலாந்தின் மனம் மாறுவதற்கு நவீனமாக முன்னேற்றமடைந்தவர்களின் நீண்ட நெடிய போராட்டம் தேவைப்பட்டது.18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஃபிரான்சில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டாலும், நிலவுடமைக்கு எதிராக வால்டைர், ரூசோபோன்ற சிறந்த சிந்தனையாளர்களால் நீண்ட தத்துவார்த்த ரீதியான போராட்டம் நிகழ்த்த வேண்டியதாக இருந்தது. அதன் விளைவாக 1789 ஃபிரஞ்சு புரட்சி நிகழ்ந்தது. அது நிலவுடமையை தகர்த்து எறிந்தது. ஆனாலும், 1815-ல் மன்னர் 18ம் லூயிசின் ஆட்சியில் தற்காலிக நிலவுடமை மீட்பு நிகழ்ந்தது.

இங்கிலாந்திலும், ஃபிரான்சிலும் நவீன நிறுவனங்கள் ( நாடாளுமன்றம்) மற்றும் நவீன கோட்பாடுகள் ( பேச்சு சுதந்திரம், சமத்துவம், சுதந்திரம், மத வழிபாட்டுரிமை) உள்ளிட்ட அனைத்தும் வரலாற்று போக்கில் உருவாகி வளர்ந்தன. ஆனால், இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த நவீன நிறுவனங்களும், கோட்பாடுகளும் நம் மக்களின் போராட்டங்களின் வெளிப்பாடாய் வந்தவை அல்ல. மாறாக, மேற்கத்திய பண்பாட்டிலிருந்து நவீன சிந்தனை கொண்ட நேரு போன்ற தலைவர்களால் கடன் பெறப்பட்டு, மேலிருந்து நிலவுடமை சமூகத்தில் நிறுவப்பட்டவை அவை. ஆனாலும், நம் சமூகத்தில் உடனடியாக மாறிவிடாத நிலவுடைமைக் கருத்துக்கள் நிலவிவந்தன. இதன் விளைவாக மேற்சொன்ன நவீன நிறுவனங்களும் நிலவுடைமை தன்மை உடையவனவாக மாற்றப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, சாதியின் அடிப்படையில் வாக்களிப்பது என்பதுதான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பொதுவிதியாக இருக்கிறது. மக்களாட்சி என்பது இப்படி செயல்படுத்தப்படுவதுதானா?

நம்முடைய அரசியல் சாசனத்தில் சமத்துவம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதி அமைப்பு முறை (தலித்துகள்) போன்ற சமூகத்தினருக்கு எதிராக பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகிறது. மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் உள்ளடக்கமாக இருந்தாலும், மதவாதம் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. அரசியல் சாசனத்தில் எழுதிவிடுவதால் மட்டும் இந்த சமூகத்தின் தீமைகள் காணாமல் போய்விடாது. சாதியம், மதவாதம், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான, மக்கள் போராட்டம்தான் இவற்றை நீக்கவேண்டும்.kash_1712137c

நவீன சமூக உருவாக்கத்தில் இங்கிலாந்திலும், ஃபிரான்சிலும் அரசு கற்பிக்கும் பங்கை செய்தது. எடுத்துக்காட்டாக, பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் நிலவுடைமைக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாக இருந்ததால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும், மத சுதந்திரம் போன்ற நிலவுடைமைக்கு எதிரான சிந்தனைகளை உயர்த்திவைத்துப் போராடினர்.

இந்தியாவிலும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நேரு போன்ற தலைவர்கள் நவீன சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், வாக்கு வங்கி அழுத்தம் நமது அரசியல் வெளியை பழமைவாதத்தில் தள்ளியதன் விளைவாக இன்று அரசியல் என்பது சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் இயங்கி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இன்று இருப்பவர்கள், முந்தைய ராஜாக்கள் என்ற நினைப்பில், தங்களது பிற்போக்கு கருத்துக்களை சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சுமந்து வந்து, அந்த அமைப்புகளையும் பின்னுக்கு இழுத்துவிடுகிறார்கள்.

தற்காலத்தில், இந்துத்வத்தை தமது கோட்பாடாக முன்வைக்கும் கட்சிதான் அரச அரியணையில் ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறது. சமூகத்தை நவீனப்படுத்துவதற்கு மாறாக, மதவாதம் என்னும் பிற்போக்குத்தனத்தைப் பரப்புவதன் மூலம் சமூகத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவு இருக்கும் கட்சி என்ற வகையில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது எல்லோருக்கு தெரிந்தது. பின் எப்படி அது நவீனப்படுத்தும் பங்கை ஆற்றும்? உண்மையைச் சொன்னால், சர்ச்சையை உருவாக்கும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறது. கஜேந்திர சௌஹான் என்னும் பாஜக உறுப்பினரை புனே திரைப்பட கல்லூரிக்கு தலைவராக நியமித்திருக்கிறது. அதற்கெதிராக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாத்வி நிரஞ்சன் ஜோதி, மகேஷ் ஷர்மா, மத்திய அமைச்சர்கள் ஆதித்யாநாத், நாடாளுமன்ற உறுப்பினர் சங்கீத் ஷோம், சட்டமன்ற உறுப்பினர் சாத்வி பிராச்சி, மாட்டுக்கறி அரசியல் என தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி இந்தியாவை பின்னால் இழுப்பதி குறியாக இருக்கிறது.

இது போன்ற சர்ச்சைகள் வரும் போது, அது தனிப்பட்ட கருத்து என்ற கூறிவிட்டு பாஜக தலைவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவின் பிரதமரும் அவ்வப்போது சமூக நல்லிணக்கத்தை (இக்லாக்கின் படுகொலைக்கு மிக நீண்ட காலத்திற்கு பின்பாக இருந்தாலும்) வலியுறுத்தி பேசி வருகிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், அந்நிய முதலீட்டாளர்களின் அச்சத்தை போக்குவதற்கு இதுபோன்ற உரைகள் அவருக்கு தேவைப்படுகின்றதன. பாஜக சிறுத்தையைப் போல, தன் உடம்பில் உள்ள புள்ளியை அதனால் மாற்றிக் கொள்ள முடியாது.

சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் பேச்சுரிமை, ஊடக சுதந்திரம், குடிமக்கள் உரிமை என அனைத்தையும் ஒடுக்கும் வகையில் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இந்தியாவை ஃபாசிசத்தின் இருள் நெருங்கி வருகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

Dark days are coming – Markandeya katju வின் ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம்.
தமிழில்: குணவதி.

Related Posts