பிற

எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் கொலை. யார் குற்றவாளிகள்?

கடந்த இரு வாரங்களில் மட்டுமே தமிழகத்தின் கல்வி நிலையங்களில் ஏறக்குறைய  எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அதில் மூவர் விழுப்புரம் கல்லக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவிகள். ஆரம்பத்தில், மூவரும் ஒன்றாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்று அது கொலை என்று நிருபணம் செய்யப்பட்டு வழக்கு பதியப் பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம் என்று எண்ணிப் பார்த்தேன். இந்த கொலைக்கு யார் பொறுப்பாக முடியும் என எண்ணிப் பார்த்தேன். யாரை குற்றம் சாட்டலாம் என யோசித்துப் பார்த்தேன். ஆனால் நான் யாரைச் சாட்டுவேன்?
IMG-20160217-WA0009
அந்த படுபாதக கொலையில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளியையா?  அல்லது  கல்லூரி நிர்வாகத்தையா?  இல்லையேல் தரமில்லாத கல்லூரிக்கு அனுமதியளித்த அரசையா? யார் இதற்கு பொறுப்பாவார்கள் என சிந்தித்துப் பார்க்கிறேன். யாரையும் என்னால் முற்றும் முழுதாக பொறுப்பாக்க  முடியவில்லை, வெறுமனே அவர்களை பொறுப்பாக்கிவிட்டு கள்ளச்சிரிப்புடன் கடந்து போக நான் ஒன்றும் வியாபார மூளை கொண்டவன் இல்லையே, வெள்ளந்தி மனம் கொண்டவன் ஆயுற்றே. ஆகவே இதன் மூலகாரணத்தை தேடி அழிக்க விரும்புகிறேன். ஆனால் அது வெகுஜன திரளாகிய உங்களின் துணையின்றி நடவாது, ஆகவே உங்களையும் உங்கள் மனசாட்சியோடு துணைக்கு அழைக்கிறேன். வாருங்கள், பிரச்சினையின் ஊற்றுக்கண் தேடி பயணிப்போம்.

என் மனம் கொலையாளியை தாண்டி, கல்லூரி  நிர்வாகத்தை தாண்டி, தவறாக அனுமதி கொடுத்த அமைச்சகத்தை தாண்டி அதை கண்காணிக்க தவறிய அரசையும் தாண்டி பயணிக்கிறது, ஆனால் என் கால்கள் ஏனோ முன்னேறிச் செல்ல மறுக்கிறது, அது மீண்டும் மீண்டும்  உங்களை நோக்கியே என்னை இழுத்து வருகிறது. இந்த ஜனநாயக சமுகத்தின் வெகுஜன மக்களாகிய உங்களை நோக்கியே அழைத்து வருகிறது, அது நம் மிடில் கிளாஸ் மனநிலையை கேள்வி கேட்கிறது. ஆம், எவ்வளவு நாள் தான் தொடரும் உங்கள் கள்ளமௌனம் என்று கேலி பேசுகிறது. நாம் கள்ளமௌனம் சாதித்து கடந்துவந்த தருணங்களை எல்லாம் அது கேலி செய்கிறது, என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

பதில் சொல்ல எத்தனித்து தோற்றுப்  போன நான் மறுபடியும் அதை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கிறேன், என் மனசாட்சியை நானே கேள்வி கேட்டு பார்க்கிறேன். இன்று நம் சமுகத்தில் இருக்கும் அத்தனை ஏற்றத்தாழ்வுகளுக்கும் இழிச் சாற்றல்களுக்கும் காரணம் இங்கே மனு காலத்தில் கடைபிடிக்கப் பட்ட கல்விக் கொள்கைதானே காரணம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அதன் தாக்கத்தை அனுதினமும் உற்று நோக்குபவன் என்கிற வகையில் எண்ணிப் பார்க்கிறேன். என்னால் நிலைகொள்ள முடியவில்லை, என் தலை கிறுகிறுத்துக்கொண்டு வருகிறது. ஆம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்விக் கொள்கையின் தாக்கத்தில் இருந்தே இன்னும் விடுபடாத நாம் மறுபடியும் காலைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாராவதை பார்க்கும் போது நாம் எவ்வளவு சுயநலமாய் இருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. என் மிடில் கிளாஸ் மனநிலை என்னை எப்படி ஆட்டுவிக்கிறது என்று உணர முடிகிறது.
IMG-20160217-WA0010
அம்பேத்கரும் பெரியாரும் இன்னபிற தலைவர்களும் கல்வி கற்றலின் அவசியத்தை ஏன் அவ்வளவு தீவிரமாக வலியுறுத்தினர் என எண்ணிப் பார்க்கிறேன், உங்களால் முடிகிறதா? உங்கள் மிடில் கிளாஸ் மனநிலையை கொஞ்சம்  ஒதுக்கி வைத்துவிட்டு சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் உங்களால் கற்றலின் அவசியத்தை உணர முடியும், கல்விதான் சமுக விடுதலைக்கான ஆயுதம் என்று அவர்கள் சொன்னதற்கான பொருளை உணர முடியும். ஆனால் அந்த கல்வி ஏழைக் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இல்லையென்றால், நீங்கள் கள்ளமௌனம் சாதித்த பொழுதுகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், தெரியவரும்.

ஆம், தன் பிள்ளையின் எல்.கே.ஜி படிப்புக்கு வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கியதில் இருந்து அவர்களின் பள்ளிக் கட்டணம், டியூசன் கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து பயணக் கட்டணம், நன்கொடை என உங்களின் சேமிப்பையெல்லாம் கரைத்து  அவர்கள் கல்லூரி  படிப்பை முடித்து உயிரோடு வெளிவரும் வரை நீங்கள் பணம் கட்டிய தருணங்களில் எல்லாம் நீங்கள் கள்ளமௌனம் சாதித்ததை உணர முடிகிறதா? அதே சமயம் உங்கள் சகோதர சகோதரியின் குழந்தைகள் பணம் கட்ட முடியாமல் இடை நின்றதையும் அரசு பள்ளியில் தொடர்ந்ததையும் நீங்கள் கள்ளமௌனத்துடன் தான் வேடிக்கைப் பார்த்தீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இதை துரோகம் என்று சொல்லாமல், சுயநலம் என்று சொல்லாமல், நமது பொறுப்பற்றத் தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல?

ஈராயிரம் ஆண்டு காலம் பட்டும் இருநூறு ஆண்டு காலம் அதை உணர்ந்தும் கல்வி அடிப்படை உரிமையாகி அறுபதாண்டு காலத்தில் மீண்டும் நாம் கல்வி விசயத்தில் கையறு நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம் என்றால் நமது நேர்மையில் குறை இருக்கிறது என்று தானே பொருள்? நமது சிந்தனையில் சுயநலம் குடிகொண்டு விட்டது என்று தானே பொருள்? நாம் சாதித்து வந்த கள்ளமௌனங்களின் பொருள் சுயநலம் இன்றி வேறென்னவாக இருக்க முடியும்?  நமது சுயநலத்தின் எச்சம் தான் இன்று நமது கல்விக் கொள்கையாய் உருமாறி இருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா? கல்வியில் தனியார் மயம் எப்படி எல்லா குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்யும் என்று உங்களால் நம்பமுடிகிறது? இது பணமுள்ளவனுக்கு மட்டும் தான் கல்வி என்ற நிலையை எதிர்காலத்தில் உருவாக்காது என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்?

சேவையாய் வழங்கப்பட வேண்டிய கல்வி தனியார் மயமாகிப் போனால் அது வியாபாரத்திற்கே வழிவகுக்கும் என்ற எளிய புரிதல்  கூடவா உங்களுக்கு  இல்லாமல் போயிற்று? கல்வி கட்டணத்தை குறைக்க கோரி போராட்டம் நடத்தும் எத்தனை பெற்றோர்கள் “கல்வி அரசுடமை ஆக்கப்பட வேண்டும்” என்று போராட முன்வந்துள்ளீர்கள்? ஏன் அப்படி யாரும் போராட முன்வரவில்லை? உங்களை அத்தகைய கோரிக்கையுடன் போராட முன்வர விடாமல் எது தடுக்கிறது? இதே நிலை நாளை உங்கள் குழந்தைகளுக்கும் வராது என்று எதை வைத்து நம்புகிறேர்கள்? கல்வியில் தனியார்மயம் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியை எட்டாக்கனி ஆக்குவது மட்டுமல்ல, நாளை உங்கள் குழந்தைகளுக்கு அதை மறுக்கவும் செய்யும் அபாயம் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இன்றைய சூழலில் உலக அரங்கில் கல்வியை வியாபார பொருளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோஷத்தை ஒரு தரப்பினர் எழுப்பி வருவதை நீங்கள் அறிவீர்களா? கடந்த ஆண்டு இறுதியில் இதே கோஷத்தை முன் வைத்துக் கென்ய தலைநகரில் கூட்டப்பட்ட  உலக நாடுகளின் கூட்டத்தில் நமது பிரதமரும் கலந்துகொண்டு திரும்பியதை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளேர்கள்? இந்த கோஷம்  அடுத்தடுத்த கூட்டங்களில் உறுதி செய்யப் படலாம், அப்போது நினைத்துப் பாருங்கள்? கல்வி வியாபார பொருளாக அறிவிக்கப்படாத சூழலிலேயே இப்படியென்றால் அது அதிகாரபூர்வமாக வியாபார பொருளாகவே அறிவிக்கப் பட்டுவிட்டால் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், உலக வியாபாரிகள் உங்களை விட்டு வைப்பார்களா? உங்கள் ஒட்டுமொத்த உழைப்பையும் உறிந்துவிட மாட்டார்கள்! அப்போது எந்த நாட்டு அரசாங்கத்திடம் சென்று முறையிடுவீர்கள்? எந்த நாட்டு கோர்ட்டில் சென்று வழக்காடுவீர்கள்? கல்வியில் தனியார்மயத்தின் விபரீதத்தை உங்களால் உணர முடிகிறதா? கல்வி வியாபார பண்டமானால் என்னவாகும் என்பதை ஊகிக்க முடிகிறதா?

ஆம் என்றால் நாம் அடுத்து  செய்ய வேண்டியது என்ன என்பதும் நமது கோஷமும் கோரிக்கையும் என்னவாக இருக்க வேண்டும் என்பதும் புரிந்திருக்குமே. மதுபான கூடங்களை  நடத்தும் அரசாங்கம் ஏன் கல்வியை அரசுடமை ஆக்க மறுக்கிறது என்ற சந்தேகம் தோன்றுமே, ஆம் என்கிறேர்களா, பின்பு என்ன, அதையே கோஷமாக மாற்றுங்கள். அரசின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க கோருங்கள். மக்களின் மூளையை மழுங்கடிக்கும் மதுபானத்தை ஒழிக்கவும் மக்களின் சிந்தனையை கூராக்கும் கல்வியை அரசே ஏற்று நடத்தவும் உங்கள் கோரிக்கையை கோஷமாக்குங்கள். கல்வி வியாபார பொருளாய் அறிவிக்க இருக்கும் அபாயத்தை தடுத்து நிறுத்துங்கள், நமது அடிப்படை உரிமையான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சீராக கிடைக்க இனி ஒரு விதி செய்யுங்கள், “இருக்கிற அத்தனை கல்வி நிலையங்களும் அரசுடமை ஆகட்டும், கல்வித் துறை சேவைத் துறையாய் தொடரட்டும்”. இதுதான் அந்த மூன்று மாணவிகளின் கொலைகாரர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனையாகவும் அவர்களின் உயிர் தியாகத்திற்கு நாம் செய்யும் மரியாதையாகவும் இருக்கமுடியும்.

– ஆதி

Related Posts