அரசியல்

ஒருநாள் புனிதர்களும் வாழ்நாள் அயோக்கியர்களும்!

மனிதவள மேம்பாட்டிற்கான ஒரேயொரு ஆக்கப்பூர்வமான பணிகளைக்கூட செய்யத்துனியாமல், ஏற்கனவே வாக்களித்தபடி உரிய வேலைவாய்ப்புகளையும் இதர சமூகவாழ்வாதார பிரச்சனைகளிலும் கவணம் செலுத்தாமல், வெறும் ஐந்துமாநில தேர்தல் தோல்வியின் படிப்பினைகளை உட்கிரகித்தும் எதிர்வரும் தேர்தலை கணக்கில் கொண்டும் வடமாநில உயர்சாதியினரின் ஓட்டுகளை குறிவைத்தும் மிகவும் அவசர அவசரமாக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்காக பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் 10% இட ஒதுக்கீட்டை இடதுசாரிகள் ஆதரித்ததில் எந்த வகையிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு எந்த காரணங்கள் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதுமில்லை.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 124ஆவது சட்டத்திருத்த மசேதாவிற்கு பின்னால் உள்ள அரசியல் அனைவரும் அறிந்ததே என்றாலும், இதை ஒரு சாக்காக வைத்து பிற அரசியல் கட்சிகளை உயர்சாதியினருக்கு எதிராக திருப்பிவிடும் நோக்கில் பா.ஜ.க மிகப்பெரிய அரசியல் விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்றாலும் இது முழுக்க முழுக்க வடமாநில உயர்சாதியினரின் வாக்குவங்கியை இலக்காக கொண்டே நிகழ்த்தப்படுகிறது என்பது தெளிவாகிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காமல் அதைவெறும் பொருளாதார வரையறையாகவும் அரசு நிர்ணயித்துள்ள டெட்லைனுக்குள்ளும் நிகழ்த்தப்படவேண்டிய விவாதமாக சிறுக்கிவிடமுடியாது.

இது நூற்றாண்டு கால பிரச்சனை. சமூக ஏற்றத்தாழ்வுகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒருபோதும் இணையாக முடியாது. இது நூற்றாண்டு ஒடுக்குமுறை சார்ந்தது.உளவியல் பிரச்சனை சார்ந்தது. மனிதமனங்களில் இதுநாள் வரையில் ஏற்றிவைத்திருக்கும் கருத்தியல் பிம்பத்தின் சாரத்தை தகர்க்கும் பிரச்சினை சார்ந்தது. இதுவொரு நீண்ட நெடிய கருத்தியல் போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி இதை பலவாறாக அனுகவேண்டிய நிர்பந்தமும் தேவையும் நம்முன்னே இருக்கும் போது, வெறும் பொருளாதார காரணிகளை மட்டுமே மையப்படுத்தி இதுநாள் வரையிலான ஒடுக்குமுறைக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், தீண்டாமைக்கும், சாதி ரீதியிலான புறக்கணிப்புகளும் தீர்வுகண்டுவிடமுடியாது. அப்படி செய்வது சாத்தியமுமில்லை.அது ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை குழிதோன்டிப் புதைப்பதற்குத் தான் உதவும். மாறாக ஒரு அரோக்கியமான முடிவுக்கும் விவாதத்திற்கும் வழிவகுக்காது.இப்படியான ஒரு சென்ஸ்டிவான பிரச்சனையில் இது போன்றதொரு வரலாற்று தவறை இடதுசாரிகள் செய்திருக்கக்கூடாது என்பது சரியே. இதில் எந்த வகையிலும் யாருக்கும் மாற்று கருத்து இருந்துவிடமுடியாது. உடனடியாக இதை சரிசெய்யா விட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

அதே நேரத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் குறிப்பிட்ட இந்தமசோதாவை திமுகவும் அதிமுகவும் எதிர்த்து வாதிட்டதாலேயும் ஒட்டுபோட்டதாலேயும், சமூக நீதி களத்தில் குறிப்பாக தொடரும் ஆணவப்படுகொலைகளிலும், சாதிய பாகுபாட்டு பிரச்சினைகளிலும்,தலித் பெண்களின் மீதான வன்புணர்வு சம்பவங்களிலும் நேரடியாக களத்தில் நின்று போராடிவருவது திமுகவும் அதிமுகவும் தான் என்பது போன்ற மாயைகளை இதை சாக்காகவைத்து திராவிடம் காக்கும் மார்க்சியம் அழிக்கும் போன்றதான பரப்புதல்களும் சமூகவலைதளங்களில் இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவொரு வேடிக்கை என்றால் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இதற்கு முன்பாக இடதுசாரிகள் தேர்தலில் நின்ற தொகுதிகளிலெல்லாம் ஏதே மக்கள் கொத்துக்கொத்தாக வாக்களித்து இடதுசாரி ஊழியர்களை தலையில் தூக்கி கொண்டாடியது போலவும் ஏதே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அது பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானது போலவும் இடதுசாரிகளின் வாக்கு வங்கி இதன்காரணமாக சரிந்துவிட்டதைப்போன்று கதையளப்பது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இவர்கள் எந்த வகையில் சேர்ப்பது. விசிலடிச்சான் குஞ்சிகள் என்பதைத்தவிர வேறு எந்த வார்த்தைகளும் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கமுடியது.

திராவிடத்தின் பெயரால் பெரியாருக்கு பின்பாக திராவிட கட்சிகள் சட்டத்தின் பெயராலும் ஆட்சியின் பெயராலும் இட ஒதுக்கீட்டிற்காக வரிந்து கட்டிக்கொண்டு சமர்புரிந்ததும், சாதிய சமத்துவத்திற்காக அன்னந்தண்ணி பருகாமல் தெருத்தெருவாய் திரிந்ததும், சுயசாதிக்கு திரோகமிழைத்து வாழ்ந்து வந்ததும், உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றியதும் ஊரறியும். தமிழகத்தின் முதுகுளத்தூர் சம்பவத்திலிருந்து சமீபத்திய சேலம் ராஜலட்சுமி படுகொலை வரை, இவர்கள் எதனை-எங்கெங்கு-எப்படியெல்லாம் கிழித்தெடுத்தார்கள் என்பதை பட்டியல் வைத்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா. இல்லையென்றால் இவர்களின் லட்சணம் நமக்கு தெரியாது போய்விடுமா.

மக்கள் நலத்திட்டங்களில் இருந்து அரசு ஒப்பந்தங்கள் வரை தமிழகத்தின் ஒட்டுமொத்த செல்வ வளங்களையும் சரிபாதியாக பங்கிட்டுகொண்டிருக்கும் இவர்களின் யோக்கியதை ஒவ்வொன்றாக சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஒரேநாளில் ஒரு குறிப்பிட்ட அதி முக்கியமான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வாதிட்டதாலேயும் அதற்கு எதிராக ஓட்டுபோட்டதாலேயும் திராவிட கட்சியினர் புனிதர்களாகவும் இந்த 124ஆவது சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து வாதிட்டதாலேயும் ஓட்டுபோட்டதாலேயும் மார்க்சிஸ்டுகள் அயோக்கியர்களாகவும் சமூகநீதிக்கு எதிரானவர்களாகவும் முகநூலில் மட்டுமே கம்பு சுற்ற தெரிந்த வாய்ச்சொல் வீரர்கள் கட்டமைக்க விரும்புவது இடதுசாரிகள் மீதான அவர்களின் பலநாள் வன்மம் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

வரலாறு அறியாதவர்கள் வரலாற்றை பயிலட்டும். தமிழக அரசியல் களத்தில் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பாட்டாளிகளுக்காவும் விவசாய கூலித்தொழிலாளிகளுக்காவும் ரத்தம் சிந்தியது யார்? களப்பலியானது யார் என்பது தெரியவரும். வெறுமனே ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கணக்கில்கொண்டு ஒரு இயக்கத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் உதாசினப்படுத்திவிட முடியாது. ஆனாலும் இந்த வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டே ஆகவேண்டும். சரி செய்யப்பட வைக்க கூடிய, ஜனநாயகப்பூர்வமான விவாதத்தை, இடதுசாரி கட்சிகளுக்குள் உள்ளும் புறமும் முன்னெடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

– மதுசுதன் ராஜ்கமல்.

Related Posts