இந்திய சினிமா நிகழ்வுகள் பிற

• இர்பான் : நினைவுகளின் பொக்கிஷமாய்….

google

ருஷிய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின்  எழுத்து பற்றி சொல்லும் போது எப்படி இவ்வாறு எழுதுகிறார் என்பார்கள். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே அடுத்த அத்தியாயம் சேர்த்து எழுதுவாரோ என்று… சொற் குவியும் வேகம் அப்படி…

யதார்த்த நிலைமையின் எதிர் நிலை கற்பனை என்பது போல் நம் எண்ணம் இருக்கிறது. உண்மையில் கற்பனை இல்லாது இந்த உலகில் எதுவுமே இல்லை. எல்லா கண்டு பிடிப்பும் கோருவது அடிப்படையில் கற்பனையை மட்டுமே. கற்பனை கேள்விகளை உருவாக்க செய்கிறது.  

ஸலாம் பாம்பே(1988) என்ற மீரா நாயரின் படம் துவங்கி கரிப் கரிப் சிங்கிள் (2017)வரை  இர்பான் ஓட்டம் அப்படித்தான் என சொல்ல வேண்டும். ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரத்தை  பூர்விகமாக கொண்ட இர்பான், புது டெல்லி தேசிய நாடக பள்ளியின் 1987ம் பேட்ச் மாணவர். தன் வகுப்பு தோழியும், நல்ல ஸ்கிரிப்ட் எழுத்தாளரும் ஆன சுதபா சிக்தர் ஐ மணம் புரிந்து கொண்டார். இவர் பாட்ச்சில் 18 மாணவர்கள் மட்டுமே இருப்பினும் இர்பானுக்கு  சண்டிகரில் இருந்து வந்த மிட்டா வஷிஸ்ட்,டெல்லியை சேர்ந்த i சுதப சிக்தர் இருவர்தான் நெருக்கம்.. பலரும் விடிய விடிய விவாதம், புத்தக விமர்சனம்,,விடியற்காலை 2 மணிக்கு டீ யும் பரோட்டாவும் சாப்பிடுவது ஒரு புறம் நடக்க இர்பான் தன் அறையில் அமர்ந்து ஜன்னல் பார்த்து கொண்டிருப்பாராம். இப்படி  டில்லி நாடக பள்ளியில் அவர் முதல் பகுதி கழிந்தது.மும்பையை சேர்ந்த பிரபல இயக்குனர்  மீரா நாயர் அறிமுகம் மூலம்  ஸலாம் பாம்பே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படத்தை  சென்சார் போர்டு கொத்து பரோட்டா போட்டதில் இர்பானுக்கு சற்று ஏமாற்றம்… மீரா நாயர் படம் என்றாலே சென்சார் நிமிர்ந்து உட்கார்ந்து வெட்டி தள்ளியது தனி கதை…

எப்போதும் கையில் புது புது நாடக ஸ்கிரிப்ட், பல வித புத்தகங்கள் என இர்பான் சுற்றி கொண்டிருப்பார் என நினைவு கூறுகிறார் அவரது நண்பரும் அவரை வைத்து ஹாசில் (2003) என்ற படத்தை இயக்கிய திக்மான்ஷு துளியா. பெரிய அளவிற்கு உடல் மொழி இல்லாத  வசீகரிக்கும் மசாலா பட நாயகன் தோற்றம் அல்லாத தன் கூரிய விழிகள் கொண்டு மாயா ஜாலம் செய்தவர் இர்பான்.

அவரது படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்.. மிக இயல்பு கொண்டு கண்களில் உணர்வு பிரதி பலிக்கும் இர்பான் பாணி நடிப்பு… டில்லி தேசிய நாடக பள்ளி உருவாக்கிய அற்புத கலைஞர் வரிசை இர்பான் பெயரை இணைத்து கொண்டது.

லண்டனை சேர்ந்த இயக்குனர் ஆசிப் கபாடியா இர்பான் ஐ  வைத்து தி வாரியர் (2001) என்ற படத்தை இயக்கினார். இர்பான் நடித்த முதல் ஆங்கில படம் அது. சர்வதேச விருதுகள் பல அதற்கு கிடைத்தது. முதல் படத்திலேயே விருது வாங்கினார் இர்பான். ஆசிப் சொன்னார், “இர்பான் ஒரு இந்திய பெனிசியோ டோரோ, சீன் பென், வின்சென்ட் காலோ… அவரால் எப்படியாகவும் எதுவாகவும் மாற முடியும்.. அவர் பெரும் உயரத்துக்கு செல்ல போவதை பார்க்க போகிறேன்”என்றார். அவர் அந்த இடத்தை அடைந்தார்… கடும் உழைப்பை உரமாக்கி…..

இதன் பின் வந்த ஹாசில், விஷால் பரத்வாஜின் மக்போல்(2004), மீரா நாயரின் நமஸ்கே(2007) என அடங்காத யானை போல் பெரும் தீனி கேட்டார் இர்பான். ஹாசில் படத்தில் சிறிய நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர் தலைவராக வந்து கதையின் நாயகனுக்கு வஞ்சம் செய்து நம் மனதில் நுழைவார் இர்பான். மென்மையான உள் புழுங்கிடும் வங்காளி பேராசிரியர் அசோக்கின் பாத்திரம் நமஸ்கே படத்தில்! அவருக்கு தேசிய விருது வாங்கி தந்த பான் சிங் தோமர் (2012) படத்தில் அத்லெட் வீரர் திருடனாக மாறும் வேடம். பத்ம ஸ்ரீ பட்டமும் அச்சமயம் கிடைத்தது. மனைவியை இழந்து தனிமையில் உள்ள ஒருவன், தனக்கு வரும் மதிய உணவு டப்பா மாறி கிடைக்கியில், (மும்பை நகரில் இன்றும் மதிய உணவு கொண்டு செல்லும் டப்பா வாலா சேவை உண்டு) மற்றொருவருக்கு செல்ல வேண்டிய லஞ்ச் பாக்ஸினை தவறாக பெறும் இர்பான், அது தொடர்ந்து நடக்கும்போது அந்த கதா பாத்திரம் சாஜன் ஆகவே வாழ்வார்.

ஷோஜித் சர்க்காரின் டைரக்ட் இல் வந்த  பிக்கு (2015)மற்றொரு அருமையான படம். அமிதாப், தீபிகா படுகோன் இவர்களுடன் போட்டியிட்டு கீழ் தள்ளுவார் இர்பான். மல சிக்கல் அப்பாவின் எரிச்சல் பிடுங்கல், சமாளிக்க எத்தும் மகள் இருவரையும் டெல்லியில் இருந்து கொல்கத்தா கூப்பிட்டு செல்லும் கார் டிரைவர் ஆக இர்பான் (cab ஓனர் அவரே)…அசத்தல் செய்திருப்பார்….

தல்வார்(2015), அனுராக் பாசுவின் லைப் இன் எ மெட்ரோ (2007), வெஸ் ஆண்டர்சனோடு தி டார்ஜிலிங் லிமிடெட்(2007), டானி போயலின் ஸ்லம்டாக் மில்லினர்(2008), அங் லீ யின் லைப் ஆப் பி(2012), அமேஜிங் ஸ்பைடர் மேன்(2012) என ஜுகல் பந்தி வகை எல்லாம்…

படங்களில் நடிப்பது ஒரு புறம் இருக்க, டிவி தொடர்களில் நடித்து அதிலும் வெற்றி பெற்றார் இர்பான். Banegi apni baat சீரியல் மிக பிரபலம் ஆனது. 1990களில் டிவி தொடர் மூலம் சினிமாவில் இருந்து கொண்டு நடித்தது அவரை மற்ற மசாலா நடிகர் மத்தியில் வேறு படுத்தியது.

தேசிய நாடக பள்ளி ஹாஸ்டலில் இருந்த போது இர்பான் அறை கடைசியாக இருக்குமாம். விடிய விடிய வாதம் செய்வது பிடிக்காத நிலையில் அதை வெறும் நேர விரயம் என்று எண்ணினார் இர்பான். ஆனால் அவர் கண்களில் எப்போதும் கற்று கொள்ளும் வேட்கை இருந்ததாக சொல்லுவார் அவர் இணையர் சுதப சிக்தர்…. தொடர்ந்து கற்று கொள்வதை தன் சுபாவமாக மாற்றி கொண்டார் இர்பான்.. தான் கற்று கொண்டது மற்றவர்கள் அறிந்து கொள்ளும்  வழியினை நிரந்தரமாக தன் தினசரி வாழ்வில் வைத்து கொண்டார்.

நல்ல கலைஞர் மட்டுமல்ல, நல்ல மனிதன் ஆகவும் வாழ்ந்தார் இர்பான். நாட்டில் தற்போது நிலவும் மத வெறி, வெறுப்பு அரசியல் இவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் அவர். “பல நூறு வருடம் படி படியாய் மனித சமூகம் தன்னை நாகரிக படுத்தி என்ன பயன்? நாம் ஒருவருக்கு ஒருவர் இணைந்து வாழும் நிலை இன்னும் வர விட மாட்டார்கள் போலிருக்கு.. மதம், பழக்கம் இவை தனி மனித உரிமை இல்லையா? நாம் ஒருவரோடு பழக மதம் எப்படி முக்கியமாக இருக்க இயலும்? “என சமீப பேட்டி ஒன்றில் கூறினார்.

ஐம்பத்து மூன்றே வயதில் புற்றுநோய் தாக்கி மறைந்தாலும், அவர் தன் குருவாக வரித்த நசுருதின் ஷா வரிசையில் ஓம் பூரி, ஸ்மிதா பாட்டில், ஷபானா அஸ்மி பட்டியலில் இர்பான் பெயரும் இருக்கும்… பொக்கிஷங்களை போல் அவர் படங்கள் நம் நினைவில் ஆடிடும்…

சு. லெனின் சுந்தர்

Related Posts