அரசியல் நிகழ்வுகள்

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.

2008 இல் 166 பேர் கொல்லப்பட்ட மும்பை வெடிகுண்டு தாக்குதல், டெல்லி செங்கோட்டையின் மீது தாக்குதல், மும்பை ரயில் மீது தாக்குதல், பாராளுமன்றத்தின் மீது தாக்குதல், டெல்லி மார்க்கெட்டில் தாக்குதல், மும்பை ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் என இந்தியாவில் உலகத்தையே அதிர்க்குள்ளாக்கிய பல தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்ட அமைப்பு.

2009 இல் மும்பை வெடிகுண்டு வழக்கில் கசாபை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஹபீஸ் சயீத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் பிறகு பேட்டியளித்த ஹபீஸ் சயீத் “இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்கள் இன்னும் நடத்தப்படும் என்றும் இந்தியாவை துண்டு துண்டாக சிதறிப்போகச் செய்வதுதான் எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார். அமெரிக்கா இவரது தலைக்கு 60 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது. இவரைத்தான் பிரதாப் வேதிக் ஜூலை மாதம் 2 ஆம் தேதி பாகிஸ்தானில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

யார் இந்த பிரதாப் வேதிக்?

பாபா ராம்தேவ் என்கிற அவக்கேடான யோகா குருவின் நண்பர். “மும்பை தாக்குதலில் தண்டனை விதிக்கப்ட்ட அப்துல் கசாபை தூக்கில் போடக் கூடாது. சித்திரவதை செய்து கொல்ல வேண்டும்“ என்று 21.11.2012 இல் பேட்டியளித்தவர்.

தற்போது விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ளார். இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ள மற்ற முக்கியான மூன்று பேரில் ஒருவர் நிருபேந்திர மிஸ்ரா. இவர் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர். மற்றொருவர் பி.கே.மிஸ்ரா. இவர் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர். மூன்றாமவர் அஜீத் தோவல். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.

“உனது நண்பன் யாரென்று சொல். நீ யாரென்பதைச் சொல்கிறேன்” என்பது ஆங்கிலத்தில் உள்ள சொலவடை. மேற்கண்ட மூன்று பேரும் மோடியால் தேர்வு செய்யப்பட்ட முக்கியமான நபர்கள். அதிலும் குறிப்பாக நிருபேந்திர மிஸ்ரா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்தவர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவராகவோ உறுப்பினராகவோ இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின்பு எந்த அரசுப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது என்பதற்காக சட்டமே இயற்றப்பட்டிருந்தது. அந்த சட்டத்தை ரத்து செய்ய பதவியேற்கும் முன் அவசர சட்டம் பிறப்பித்து இப்போது நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு சட்டத் திருத்தம் செய்து முதன்மைச் செயலாளராக நியமிக்கிற அளவிற்கு மோடியோடு நெருக்கமானவர் இந்த மிஸ்ரா. எனவே, மோடிக்கும் வேதிக்குக்கும் சம்மந்தமே இல்லை என்று சொன்னால் சட்டம் போட்டுத்தான் நம்ப வைக்க வேண்டும். இவர்தான் ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர்.

என்னதான் பேசினார்கள்?

இந்தப் பிரச்சனை வெளிவந்ததும் ஹபீஸ் சயீத் கீழ்க்கண்டவாறு பேச்சுவார்த்தையின் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். “மோடியை நானாக அழைக்காவிட்டாலும் அவர் பாகிஸ்தான் வரும்போது அவரை வரவேற்க வேண்டுமென்று வேதிக் குறிப்பிட்டாராம்” மோடியை ஹபீஸ் மோசமானவர் என்றாராம். வேதிக் நல்லவர் என்று சான்றளித்தாராம். இதுதான் தங்களுக்குள் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார் ஹபீஸ்.

பிரதாப் வேதிக் தான் ஒரு பத்திரிகையாளர். யாரை வேண்டுமானாலும் சந்திக்க தனக்கு உரிமையுண்டு. மாவோயிஸ்டுகளைச் சந்தித்திருக்கிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காந்தகார் விமான நிலையத்தில் இந்தியர்களை கடத்தி பிணையாக வைத்திருந்த தீவிரவாதிகளிடம் பிரதமர் வாஜ்பாய் சொன்னதன் பெயரில் பேச்சுவார்த்தை நடத்தினேன். எனவே, இதில் ஒன்றும் தவறில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வேதிக்குக்கும் மோடிக்கும் நெருங்கியவரான பாபா ராம்தேவ் ஹபீஸின் மனதை வேதிக் மாற்றியிருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.அருண் ஜேட்லி “ஒரு தனிமனிதனின் சொந்த முயற்சியில் எடுக்கப்பட்ட தோற்றுப்போன இராஜதந்திர சாகசகம் (னுiயீடடிஅயவiஉ ஆளையனஎநவேரசந டிக ய ஞசiஎயவந iனேiஎனைரயட)” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழும் கேள்விகள்?

  1. பத்திரிகையாளர் என்கிற முறையில் சந்தித்தார் என்றால் ஜூலை 2 ஆம் தேதி சந்திப்புக்குப் பின்னர் 3 நாள் கழித்து பாகிஸ்தான் பயணம் குறித்து இந்தி பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதிய திரு வைதிக் ஏன் ஹபீஸ் உடனான சந்திப்பை தெரியப்படுத்தவில்லை. ஹபீசும் வைதிக்கும் சந்தித்த புகைப்படம் வெளியாகும் வரையில் வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்?
  2. பத்திரிகையாளர் என்ற முறையில் சந்தித்தவர் “மோடி நல்லவர். அவரை வரவேற்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டது ஏன்?
  3. அருண் ஜேட்லி “பத்திரிகையாளர் என்ற முறையில் சென்றால் என்று சொல்லாமல், தோற்றுப் போன ராஜதந்திரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் இந்த ராஜதந்திரம் யாருடைய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது?
  4. பாபா ராம்தேவ் ஹபீஸ் சயீத்துனுடைய மனதை மாற்றுவதற்கு சென்றதாகக் கூறுகிறார். என்னவிதமான மாற்றத்திற்காக அவர் சென்றார்?
  5. இதற்கு முன்னரும் கூட இவர் பிரதமர் வாஜ்பாயின் தூதுவராக தீவிரவாதிகளிடம் சென்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். எனவே, இது பத்திரிகையாளர் என்கிற முறையில் சென்றிருக்க முடியாது.

சந்தித்தால் என்ன தவறு?

பத்திரிகையாளர் என்ற முறையிலோ, தனிப்பட்ட முறையிலோ வைதிக் ஹபீஸை சந்தித்தது என்ன தவறு என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியென்று தோன்றும். ஆனால், 2012 ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக் ஹபீஸை சந்தித்த போது மாண்புமிகு. வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்? என்ற வெளிச்சத்தில் இதைப் பார்ப்பது நல்லது.

ஹபிஸை சந்தித்ததால் யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும், அதைத் தாண்டியும் மற்றவர்கள் இத்தகைய தீவிரவாதத் தலைவர்களை சந்திக்க நினைக்காத அளவிற்கு தண்டனை தர வேண்டும் என்று திரு.வெங்கய்யா நாயுடு கேட்பவர் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கும் நெஞ்சம் கொதிக்கும் அளவிற்கும் பேசினார்.

இப்போது தனிநபர் சந்திப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்கமே அப்படி சொல்லிவிட்ட பிறகு ஏற்க வேண்டியதுதானே? என்கிற கேள்வியையும், ஒருவேளை ரகசிய சந்திப்பாக இருந்தால் அது அரசின் ஏற்பாட்டில் நடந்திருந்தால் இப்படி பிரபலமான நபரையா அனுப்பியிருப்பார்கள் என்றும் வேதிக் சத்தியமாக ஆர்.எஸ்.எஸ்.காரர் இல்லை என்றும் சம்மன் இல்லாமல் ஆஜராகி பல பேர் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

அரசாங்கம் சொன்னால் ஏற்க வேண்டும்தான். ஆனால், ஆர்எஸ்எஸ்.காரர்களின் அரசாங்கம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சோற்றுப் பதத்தை சொல்லலாம்.

சமீபத்தில் பிடிஐ நிறுவனம் அரசாங்கத்தின் ஒன்றரை லட்சம் கோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில் மகாத்மா காந்தியின் இறுதி நிகழ்ச்சிக்கு முன்னர் கூடிய மத்திய அமைச்சரவையின் கூட்ட குறிப்புகள் அடங்கிய கோப்புகளும் எறிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதுபற்றி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சிபிஐ(எம்) உறுப்பினர் திரு.ராஜீவ் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி ஒரு கேள்வி எழுப்புகிறார். கேபினட் வரிசையில் மிக முக்கியமான பொறுப்பிலுள்ள திரு.ரவிசங்கர் பிரசாத் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் எந்தக் கோப்புகளும் அழிக்கப்படவில்லை என்றும் பதிலளித்தார்.

இந்தப் பிரச்சனை 14 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் மீண்டும் எழுப்பப்பட்ட போது உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஜூன் மாதம் 9 ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 8 ஆம் தேதி வரை வேண்டாத கோப்புகள் எறிக்கப்பட்டதாகவும், எறிக்கப்பட்ட கோப்புகளின் எண்ணிக்கை 11,500 என்றும் குறிப்பிட்டார்.

8 ஆம் தேதியோடு முடிந்துபோன ஒரு மாத காலமாக நடந்து முடிந்த கோப்பு எரிப்பு கரசேவை கேபினட் அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்திற்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் அவர் சொன்னது பொய். அமைச்சர் அவையில் பொய் சொல்வாரா? என்று கேட்கலாம். அமைச்சர்கள் அவையில் பொய் சொல்லக் கூடாது? அது மரபு. பிஜேபி அவையில் மட்டுமல்ல பாபர் மசூதி பிரச்சனையை நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன கட்சி என்பதை யாரும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. 30 நாளில் 8 மணி நேரம் வேலை செய்து 11,500 கோப்புகள் எரிக்கப்பட வேண்டுமென்றால் ஒரு கோப்பை பார்த்து, பரிசீலித்து எரிப்பதற்கு 75 வினாடிகள்தான் ஆகியிருக்கும். இது சாத்தியமா என்று யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. பெரும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உயிரோடு இருந்தவர்களெல்லாம் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போது, கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது மலைகளில் மீட்புப் பணிகளில் அனுபவமும் திறமையும் மிக்க ராணுவ வீரர்கள் எல்லாம் 24 மணிநேரம் போராடி 400 பேரை மட்டுமே மீட்க முடிந்ததோடு, அதே 24 மணி நேரத்திற்குள் மலைப் பிரதேசத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களில் குஜராத்திகளை மட்டும் சரியாக அடையாளம் கண்டு 15,000 பேரை காப்பாற்றியவர் நரேந்திர மோடி. அப்போது அவர் ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் மட்டுமே. இப்போது அவர் இந்திய நாட்டின் பிரதமர். அவர் நினைத்தால் இமயமலையையும் குமரி முனையையும் ஒரு நொடிக்குள் இடம் மாற்றி வைத்துவிட முடியும். எனவே, 75 வினாடிகளுக்குள் கோப்பை பரிசீலித்து எரிப்பது மனிதர்களால் சாத்தியமல்ல. ஆனால், பாஜகவால் சாத்தியம். ஆர்எஸ்எஸ்.காரர் இல்லை வேதிக் என்று சொல்வதை நம்பலாம். ஆனால், அனுபவமும் வரலாறும் நம்பாதே என்று எச்சரிக்கிறது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்.காரர் இல்லை என்று ஆர்எஸ்எஸ் மறுத்தது. நாதுராம் கோட்சேவும் மறுத்தார். ஆனால், பிற்காலத்தில் இதே வழக்கில் சம்மந்தப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே நானும் நாதுராமும் ஆர்எஸ்எஸ்.காரர்கள் என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை கோபால் கோட்சே சொன்னது பொய்யாக இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு விடையை நிகழ்கால சாட்சியமாய் திகமும் அசீமானந்தாவின் கேரவன் பேட்டியிலிருந்து அறிந்து கொள்ளலாம். அசீமானந்தா தவறு: சுவாமி அசீமானந்தா சம்சதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இப்போது சிறையிலிருக்கிறார்.

சுவாமிகள் குண்டு வைப்பார்களோ. சுவாமிகள் வைக்கமாட்டார்கள். ஆனால், அசீமானந்தா சாதாராண சாமியல்ல: ஆர்எஸ்எஸ்இல் உறுப்பினராக உள்ள சாமியார். அவர் சொல்கிறார். “சம்சதா எக்ஸ்பிரசை வெடிகுண்டு வைக்க முடிவு செய்தது ஆர்எஸ்எஸ் தலைவருக்கு தெரியும். இப்படி சில திட்டங்களை தீட்டிவிட்ட பிறகு ஆர்எஸ்எஸ்க்கும் எங்களுக்குமான தொடர்பை துண்டித்துக் கொள்வோம். இதுதான் ஆர்எஸ்எஸ்சின் விதி” என்று கூறியிருக்கிறார்.

விதவிதமான சுவாமிகளையும் சந்நியாசிகளையும் ஆர்எஸ்எஸ்இல் பார்க்க முடியும். உலக பந்தத்தை மறந்து, திருமணத்தைத் துறந்த செல்வி உமாபாரதிக்கு கூந்தல் சாயத்தின் மீது மட்டும் தாளாத காதல்.

இன்னொருவர் இருக்கிறார் பிரயாக் சிங் தாகூர். இவர் ஒரு இளம் வயது பெண். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏபிவிபியில் தொடங்கிய அவரது பயணம் ஆர்எஸ்எஸ் வழியாக பயணித்து இப்போது சிறையிலிருக்கிறார். காரணம் குண்டு வைத்ததற்காக. எனவே, இவர்கள் சொல்கிற எந்த சமாதானமும் கூடுதல் கேள்விகளையே எழுப்புகிறது.

பிரபலமான நபரை ரகசியமாக சந்திக்க அனுப்புவார்களா என்ற கேள்வி பெரிய நியாயம் போல தோற்றமளிக்கும். ஆனால், ஆர்எஸ்எஸ் பற்றி அறிந்தவர்களுக்கு அது ஆச்சர்யமளிக்காது.

1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா சுதந்திரமடைவதற்கு 100 நாட்கள் கூட இல்லாதிருந்த நிலையில் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் காஷ்மீர் ராஜா ஹரி சிங்கை ரகசியமாக சந்திக்க ஒருவரை அனுப்பினார். அந்த ஒருவரின் பெயர் கோல்வால்கர்: குருஜி. கோல்வால்கர்.

கோல்வால்கரை மட்டுமே ஆர்எஸ்எஸ்இல் குருஜி என்றழைப்பதுண்டு. வேறு எந்த சர்சங்கசாலக்கையும் அப்படி அழைப்பதில்லை.

படேல் அவரையே ரகசிய தூதுக்கு அனுப்பினார். அவருடைய சிஷ்ய கோடிகளின் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளர்தானே அனுப்பட்டிருக்கிறார்.

நடைபெற்ற ஹபீஸ்-வேதிக் சந்திப்பை பற்றி அரசாங்கம் சொல்வதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமானால் நாம் முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது கேழ்வரகில் நெய் வழிந்து புரண்டோட வேண்டும்.

இது வந்துவிட்ட நல்ல காலம்தானா (அச்சா தின்)?

 

Related Posts