சமூகம்

ஸ்வாதி – ராம்குமார்: பொதுப்புத்திக்கு இரைபோடும் ‘நீதி பரிபாலனம்’

ராம்குமார்…

கடந்த ஜீன் மாதத்தில் இருந்து, தமிழகத்தில் மிகவும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட, கவனிக்கப்பட்ட பெயர். நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில், அதிகாலையில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட நாள் தொடங்கி, சிசிடிவி கேமிரா ஆதாரங்கள் வெளியீடு, அதைத் தொடர்ந்து நெல்லையில் ராம்குமார் கைது, தன்னைத் தானே கழுத்தறுத்துக் கொண்டார் என்கிற செய்தி, அவர் தந்ததாக வெளிவந்த வாக்குமூலங்கள், பிணை மனு அளித்தது, ஒரு ஞாயிற்றுக்கிழமை திடீரென, “ராம்குமார் தற்கொலை ” என்று முற்றுப்புள்ளி, பின்னும் தொடர்ந்து, அவரது தந்தையின் பிணக்கூராய்வு குறித்த  மனு நிராகரிப்பு என்று, இறுதியாக, மூன்று நாட்களுக்கு முன், ராம்குமார் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார். கெடுபிடிகளுக்கு நடுவிலும் ஏறக்குறைய 5000 பேர் இவ்விறுதிச் சடங்கில் கூடினர். இது வெறும் பரிதாபத்தினால் கூடியதாக இருக்க முடியாது.

இந்நிகழ்வை, இரண்டு விதமாக அணுகலாம். பொதுப்புத்தியின் உளவியல் மற்றும் அரசின் வளர்ச்சியடைந்த எதேச்சதிகாரப் போக்கு.

பொது உளவியல் எப்போதும் ஒரு வடிகாலைத் தேடி, வலிந்து தன்னை வடித்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ளும். நிலவுகிற இந்த முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில், தாராளவாத போக்கில் மக்களின் பொதுப்புத்தியில், சிந்தனை, கருணை கூட வெளியே இருந்து கட்டமைக்கப்படுகிறது.

“தேவரும் மூவரும் அறிய முடியாத சந்திரமதியின் தாலியை, வெட்டியனாக இருக்கும் அரிச்சந்திரன் அறிகிறான். இருவரும் தங்களை அறிந்து கொள்கிறார்கள். மன்னன் மகனைக் கொன்ற குற்றத்திற்காக, சந்திரமதியை வெட்டி வீழ்த்த பணிக்கப்படும், அரிச்சந்திரன், வெட்டத் துணிந்து, தன் உண்மை மாறாத் தன்மையை நிறுவ முற்படுகையில், தேவரும் மூவருள் ஒருவரான சிவனும் வந்து தடுத்து, அயோத்தியைத் திரும்பத் தருகின்றனர். இது சத்தியத்தை வலியுறுத்தும் அரிச்சந்திரன் மயானகாண்ட பெருங்கதை. இக்கதையில் கூறப்படும், அரச உண்மைத் தன்மை, சந்திரமதி வாயைத் திறந்திருந்தால் நொறுங்கிவிடும். அரச உண்மைக்காக, தான் செய்யாத கொலைக்கு, தன்னைப் பலியிடுவதோடு, உண்மையையும் சேர்த்துக் காவு கொடுக்கிறாள். வெட்டியானாக விசுவாசம் காட்டுபவன் அவன் மனதளவில் அரியணை அரசன். தேவியாகவே இருந்தாலும், சந்திரமதி, குடிமகள். அவள் அரச நீதிக்கு உடன்படுகிறாள். உண்மையினை எளிதாக, அரசதிகாரத்திற்கு விட்டுக் கொடுக்கிறாள். இவளது குரலை மயான காண்டம் ஒலிக்கவிடவில்லை. அரிச்சந்திரன் நம்புகிற, சார்புள்ள உண்மையே இன்றும் சத்திய தர்மமாக உரைக்கப்படுகிறது.

இந்நிலப்பரப்பின் நீதி பரிபாலனம்  இப்படித்தான். வல்லான் வகுத்ததே வழி. வல்லானால் வல்லனுக்காக வகுக்கப்பட்ட வழி.

சுவாதி படுகொலை குறித்து, பலவிதமான ஐயங்கள், யூகங்கள், நிலைப்பாடுகள், மக்களிடமிருந்தும், ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டன. நீதிமன்றங்கள் தாமாகவே வழக்கைத் துரிதப்படுத்த உத்தரவிட்டன. பிலால் மாலிக் குறித்த பரப்புரை, சுவாதியின் குடும்பம், பெண்கள் பாதுகாப்பு, மாதர் சங்கங்களின் போராட்டங்கள் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கையில், நெல்லையில் ராம்குமார் என்கிற இளைஞர், நள்ளிரவில் கைது செய்யப்படுகிறார். அவர் தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டார் என காவல்துறை சொன்னது.

அவ்வளவு தான். பொதுசனம், தன் மொத்த பாரத்தையும் ராம்குமார் மீது இறக்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. தோற்றம், நடவடிக்கை,  சாதி என்று எல்லா வகையிலும் ராம்குமார் இழிவுபடுத்தப்பட்டார். அவரது தாய், சகோதரிகளையும், ஊடகங்கள் இழிவுபடுத்தத் தயங்கவில்லை. கவிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுபவர்களும், ஊடகவியலாளர்களும் இன்னும் இருக்கிற பொதுசனமும் ராம்குமாரைக் குற்றவாளி என்று எழுதி வசைபாடி, தங்களைத் திருப்திப்படுத்திக் கொண்டனர். ஊடகங்கள் மொத்தமும், தங்களது அதிகார வர்க்கச் சார்பை வெளிக்காட்டின. பொதுப்புத்திக்கும் இதனைப் பொதுக் கருத்தாக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்தன.

Journalism investigation என்பதை மறந்த, மறுத்த ஊடகங்கள், காவல்துறையின் பிரதிநிதியாக, ஆளும் வர்க்க எடுபிடியாக, பிழைப்புவாதம் செய்தன.

பொது உளவியலைக் கட்டமைக்கிற ஆளும் வர்க்கத்தின் வெற்றி இது. முதலாளியம் முழுமையாகாத, நாடுகளில் இது வீரியத்துடன் இருக்கும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கும், குற்றவாளி என்று நிறுவப்பட்டவருக்குமான வேறுபாடுகளைத் துணிந்து புறந்தள்ளிவிட்டு, “இந்த வழக்கை யாராவது முடித்து வைங்கப்பா!” என்கிற மனோபாவத்தைப் பொதுப்புத்திக்கு விதைத்து, வழக்காடும் உரிமை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டான சட்ட உரிமைகள் என்று எல்லாவற்றையும் மறுத்து, இறுதியில், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், பிணக் கூராய்வுக்குக் கூட அவரது தரப்பு வாதங்களைப் பின்னுக்குத் தள்ளி ஒரு வழக்கை மிகத் துணிச்சலாக, எதேச்சதிகாரமாக இந்த அரசமைப்பு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

விழித்துக் கொண்ட வெகுசனத்தின் ஒருபகுதி, ராம்குமாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகக் குரல் கொடுத்தது. தன்னியல்பாக 5000 பேர் வரைக் கலந்துகொண்ட, இறுதிச்சடங்கில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் எட்டும் நிலையில் அரசின் தலைமை இல்லை என்பது கூடுதல்.

சிறைக் கொட்டடி மரணங்கள் இயல்பாக நடக்கிற இந்நாட்டில், வெகுமக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப, இம்மரணங்கள் தேவைப்படுகின்றன என்பது கவலையானது. இந்நிலையை மாற்றவேண்டியது, ஜனநாயக சக்திகளின் கடமை.

அரசு எவ்வாறு சுயம்புவாக வளர்ச்சி பெற்று, தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இவ்வழக்கு ஒரு சான்று. தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் அரசின் சர்வவல்லாதிக்க வளர்ச்சியின் கடும்போக்கினை நாம் காணமுடியும்.

குற்றவாளியே ஆனாலும் ஒருவருக்கு வாழும் உரிமை இருக்கிறது என்பதை மறுத்து, ஓங்கி அடித்து இவ்வழக்கை அணுகியிருக்கிறது அரசு.

ராம்குமாரை இறுதி வரைப் பேசவிடாமல், தொடக்கம் முதலாகக் கழுத்தை அறுத்துக் கொண்டார் என்றும், மின்கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இறுதி வரை, காவல்துறைதான் பேசியது.

மக்களின் குடிமையியல் வாழும் உரிமைகளுக்கும், அதை மறுக்கும் அரசுக்குமான போராட்டம் இது. “அரசு நினைத்தால் எவரையும் குற்றவாளியாக்க முடியும் என்றும், அரசை எதிர்த்து யாரும் எதுவும் செய்யமுடியாது என்றும்” கட்டமைப்பதே அரசின் நோக்கமும், செயல்பாடும். இவ்வழக்கு வழியாக அரசு நமக்கு உணர்த்த வருவது இதைத்தான். அதிகாரம் மத சிறுபான்மையினரையும், பட்டியலின, பழங்குடிகளையும் எளிதாகப் பலிகடாக்களாக்கும். முதல் தகவல் அறிக்கை கூட இல்லாமலும் இவர்கள், சிறைக்கொட்டடி மரணங்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கிறது. நாளை, இது யாவருக்கும் நிகழலாம்.

சமூக உளவியலின் ஒப்புதலோடு வளர்ச்சி பெற்ற அரசு நிறுவனம், தன்னை நிறுவிக் கொண்ட பின், சமூக உளவியலைக் கட்டமைக்கிற தனி உறுப்பாக வளர்ச்சி பெறுகிறது. அது தனது மந்திரக்கோலால் எவரையும் எதுவும் செய்துவிடுகிறது.

இது பெரிதும் விவாதிக்க வேண்டியது. சர்வவல்லமை அரசை விவாதப் பொருளாக்க வேண்டும். நிலவுகிற அமைப்பு முறையின் கோளாறுகள் ஒருபுறம், பன்முக இந்தியாவின் வெவ்வேறான இறைமைகள் ஒருபுறம். இதற்கிடையே, அரசை விவாதப் பொருளாக்க வேண்டும்.

முடியாட்சியின் போதே, அரசனைக் கேள்வி கேட்ட சிலப்பதிகாரக் கதையும் இங்கேதான் இருக்கிறது. பிரச்சனைகளின் மூலம் எது?, இயங்கியல் போக்கு எது? என்று பொது வெளியில் விவாதத்தை முன்னெடுப்பதும், மாற்று சிந்தனையினை வலுப்படுத்துவதும் காலத் தேவையாக இருக்கிறது.

– ரபீக் ராஜா

இளந்தமிழகம்.

Related Posts