அரசியல்

”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . ?

3000 கோடியில் எதற்கு பட்டேலுக்கு சிலைன்னு கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் உடனே சம்பந்தமே இல்லாமல் பெரியாருக்கு எதுக்கு சிலை என்று கேள்வி  கேட்டு திசைதிருப்புகிறார்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக காரர்கள். இவர்களுக்கு எப்போதுமே இது கைவந்த கலைதான். ஏண்டா கொலை செஞ்சீங்கன்னு கேட்டால், “அதோ ஒருத்தன் பல்லு தேய்க்காம தோசை திங்குறான், அவனைக் கேட்டியா, என்னை மட்டும் கேக்குறியே” என்பார்கள். இதுதான் காலம் காலமாக அவர்கள் கையாளும் உத்தி.

சரி, வழக்கம்போல நாமும் முடிந்த அளவிற்கு நேர்மையாகவும் பொருமையாகவும் நிதானமாகவும் நேரடியாகவும் கேள்வி கேட்டும் பதில் சொல்லியும் பார்ப்போம்…

  1. குஜராத் அரசு ஐந்து இலட்சம் கோடி ரூபாயை டெப்பாசிட் செய்திருப்பதாகவும் இந்த சிலைக்காக செலவு செய்த 3000 கோடியெல்லாம் ஒரு பணமே இல்லை என்று பாஜககாரர்கள் பரப்பும் செய்தியே முழுப்பொய். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே அதிகக் கடன் இருக்கும் முதல் மூன்று மாநிலங்களிலும் பாஜக தான் ஆளும் கட்சியாக இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம். 1995 ஆம் ஆண்டு பாஜக முதன்முதலாக குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, குஜராத் அரசின் கடன் 9853 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே மோடி முதல்வதாக 2001-02 இல் பதவியேற்றபோது, 45000 கோடியாக உயர்ந்தது. மோடியின் 2014 இல் முதல்வர் பதவியிலிருந்து விலகும்போது, அம்மாநிலத்தின் கடன் சுமை நான்கு மடங்காக உயர்ந்து 2,00,000 கோடியாக அதிகரித்தது. இன்றோ, குஜராத்தின் கடன் அதைவிடவும் அதிகரித்து 3,00,000 (மூன்று இலட்சம்) கோடியாக வந்து நிற்கிறது. ஆக, ஒரு கடன்கார மாநிலத்தின் தண்ட செலவு தான் இந்த பட்டேல் சிலைக்கான 3000 கோடிகள்.
  2. பொதுவாக சிலை வைப்பதை முற்றிலுமாக தவறு என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சிலைகளின் வழியாக வரலாற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது உலக வழக்கம். அந்த சிலைகளின் காலில் விழுந்து வழிபட்டு வேண்டிக்கொண்டிருப்பதை ஊக்குவிப்பதல்ல அதன் நோக்கம். அதற்கு பதிலாக, யாருடைய சிலை வைக்கப்படுகிறதோ, அவர் இந்த உலகுக்குக் கொடுத்த தத்துவத்தை காலங்கடந்தும் நிலைநாட்டுவதே சிலை வைப்பதற்கான உண்மையான காரணம். அப்படித்தான் காந்தி சிலைகளும், பெரியார் சிலைகளும், அம்பேத்கர் சிலைகளும், புத்தர் சிலைகளும், பகத்சிங் சிலைகளும் மற்றும் இன்னபிற தலைவர்களின் சிலைகளும் காலந்தோறும் வைக்கப்படுகின்றன. அவையனைத்தும் தெருமுனையிலோ சாலையின் மையப்பகுதியின் திருப்பத்திலோ வைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான பணத்தில் செலவு செய்யப்பட்டிருக்காது. வானுயர சிலை அமைத்து பெருமை பேசப்பட்டிருக்காது. பட்டேலுக்கு சிலை அமைப்பதில் இங்கே யாரும் தடையாக இருக்கவில்லை. மற்ற சிலைகள் போன்றே, சில ஆயிரங்களில், சில இலட்சங்களில் குஜராத்தின் மையப்பகுதியிலோ அல்லது இப்போது வைக்கப்பட்டிருக்கும் இடத்திலோ ஒரு சிலை வைத்திருந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கப் போவதில்லை. அதைவிடுத்து, மக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை இப்படி வீணாக்கினால் எல்லோரும் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இது எங்கள் பணம், நம் பணம், நம் உழைப்பில் சம்பாதித்த பணத்திலிருந்து வரியாக பிடுங்கப்பட்ட பணம்.

  1. ஆர்எஸ்எஸ் இயக்கம் எதற்காக காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டத் தலைவரைத் தேர்ந்தெடுத்து ஒரு சிலை வைக்கிறது? என்று நாம் யோசிக்க வேண்டும். அதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முதற்காரணம், ஆர்எஸ்எஸ் இயக்கம் சுதந்திரத்திற்காகப் போராடவே இல்லை, அதனால் அதற்கு சுதந்திரப் போராட்டத் தலைவர்களே இல்லை. 1930களில் காந்தி சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியபோது, நாடு முழுவதிலுமுள்ள தனது உறுப்பினர்களுக்கு, ‘ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடக்கூடாது’ என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் கட்டளையிட்டது. அதேபோல,  1940களில் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் துவங்கும் நேரத்தில், அதில் இணைந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடக்கூடாது என்று ஆங்கிலேய அரசு பல்வேறு இயக்கங்களுக்கு கடிதம் அனுப்பியது. யாருமே அதனைக் கண்டுகொள்ளாத போது, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஆங்கிலேயர்களுக்கு பதில் கடிதம் அனுப்பியது. என்ன அனுப்பியது தெரியுமா? “ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடும் எந்த எண்ணமும் எங்களுக்கு எப்போதும் இல்லை” என்று அனுப்பியது. அதனை ஏற்றுக்கொண்டு பகிரங்கமாகப் பாராட்டும் தெரிவித்தது ஆங்கிலேய அரசாங்கம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் துவங்கிய ஹெட்கேவர், “இந்துக்களாகிய நாம் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக எல்லாம் போராடி நம் சக்தியை வீணடிக்கக்கூடாது” என்றார். அடுத்து வந்த ஆர்எஸ்எஸ் இன் இரண்டாவது தலைவரான கோல்வால்கரைப் பற்றி சொல்லவே தேவையில்லை, அவர் ஆங்கிலேயர்களின் முழு அடிமை. “பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போராடுவது முற்றிலும் தேவையில்லாத வேலை” என்றார் கோல்வால்கர். இந்துத்துவா என்கிற பெயரை இவர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்த இவர்களின் குருவான சாவர்க்கரோ, வெள்ளையர்களின் காலில் விழுந்து கெஞ்சிக்கேட்டு, மன்னிப்புக் கடிதங்கள் பல எழுதி, ‘காலம்பூராவும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக வாழ்வேன்’ என்று பத்திரமெல்லாம் எழுதிக்கொடுத்து சிறையில் இருந்து விடுதலையானார். வெள்ளையர்களுக்குக் கொடுத்த வாக்குப்படியே நடந்தும்காட்டினார். இவர்களின் மற்றொரு பெருமைமிகு(?) தலைவரான இந்துமகாசபை இயக்கத்தலைவர் மூஞ்சேவும் இதேகதைதான். இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேய இராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காகவே ஒரு இராணுவப் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார் மூஞ்சே. அதுதான் போன்சாலா இராணுவப்பள்ளி. அது இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 10-20 ஆண்டுகளில் மாலேகான் உள்ளிட்ட பல இந்துத்துவா குண்டுவெடிப்புகளில் குண்டு வைத்தவர்களுக்கு அங்குதான் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

சுதந்திரத்திற்காக போராடாமல் இருந்தது மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகப் போராடியவர்களைக் கொல்வது, காட்டிக்கொடுப்பது போன்ற இழிவான வேலைகளையும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் செய்துவந்தனர். காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவும், உடனிருந்து திட்டமிட்ட அவரது சகோதரருமான கோபால் கோட்சேவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அதுமட்டுமல்ல, காந்தியைக் கொல்வதற்கான திட்டமிடலையே ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தான் செய்தனர். இதனை நான் சொல்லவில்லை. காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வந்த கோபால் கோட்சே சொல்லியிருக்கிறார். “கோட்சேக்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தான் என்று சொன்னால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மக்களும் அப்போதைய காங்கிரஸ் அரசும் அழித்துவிடும் என்று பயந்தே ஆர்எஸ்எஸ் இன் அப்போதைய தலைவரான கோல்வால்கர் மறைத்துவிட்டார்” என்றும் நான் சொல்லவில்லை, கோபால் கோட்சே எழுதிய சுயசரிதை நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் நாடுமுழுவதும் மக்கள் ஆங்கிலேய அரசுக்காகப் போராடிக்கொண்டிருந்த போது, நமது முன்னாள் பிரதமரும் ஆர்எஸ்எஸ்காரருமான வாஜ்பாய் அந்தப்பக்கம் சாலையில் போராட்டப் பாதையில் சும்மா சென்றுகொண்டிருந்திருக்கிறார். வெள்ளைக்காரர்கள் போராடியவர்களைக் கைது செய்தபோது, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாஜ்பாயையும் சேர்த்தே கைது செய்துவிட்டனர். அவரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார். ஆனாலும் நீதிமன்றத்திற்கு கொண்டு போய்விட்டது ஆங்கிலேய காவல்துறை. நீதிமன்றத்தில் வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா? தான் போராடவில்லை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய ஊரில் யாரெல்லாம் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள் என்கிற பெயர்ப்பட்டியலையும் முகவரிகளையும் கொடுத்து போராட்டக்காரர்களைக் காட்டியும் கொடுத்திருக்கிறார். தான் வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஒருபோதும் போராடியதும் இல்லை, போராடும் எண்ணமும் இல்லை என்று கைப்பட மன்னிப்புக் கடிதமும் எழுதிக்கொடுத்திருக்கிறார். அதன் ஆதாரம் சமீபத்தில் ப்ரண்ட்லைனில் வெளியானபோது, அதனை வாஜ்பாயும் மறுக்கவில்லை. ஆக, இவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த சுதந்திரப் போராட்டத் தலைவரும் இல்லை, இவர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக எந்தவொரு போராட்டமும் நடத்தியது இல்லை. அதனால் தான் தலைவர்களைக் கடன் வாங்கி சிலைவைக்கிறார்கள்.

4. இவர்களுக்கு சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் இல்லை என்பதால் தான் தலைவர்களைக் கடன் வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தோம். ஆனால் ஏன் குறிப்பாக, சர்தார் வல்லபாய் பட்டேலைத் தேர்ந்தெடுத்தனர் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். தலைவர்களைக் கடன் வாங்குவது என்று முடிவு செய்துவிட்டபின், காந்தியை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் அவரது கொலையில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது. நேருவை எடுத்துக் கொள்ளவே முடியாது, ஏனெனில் நேருவின் மதச்சார்பினை, மதஒற்றுமை, சோசலிசம், சமத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கருத்துகள் ஆர்எஸ்எஸ் க்கு ஆகவே ஆகாது. அம்பேத்கரையும் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் அவர்தான் இவர்களது சனாதன வரலாற்றை பல்லாயிரம் பக்கங்களில் எழுதி கிழிகிழியென கிழித்தெடுத்தவர். பகத்சிங் கடவுள் மறுப்பாளர் மற்றும் சோசலிசவாதி. ஆக காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு சனாதன தர்மத்திற்கு ஓரளவாவது முட்டுக்கொடுத்தும் ஆர்எஸ்எஸ் க்கு முற்றிலுமாக பிடிக்காத மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலைவர்களோடு முரண்படும் வேறு ஏதாவது ஒரு தலைவரைத் தான் இவர்கள் தத்து எடுக்க முடியும். அப்படித்தான் பட்டேலைப் பிடித்துக்கொண்டார்கள். நேரு பேசிய சமத்துவத்தில் வல்லபாய் பட்டேலுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. நேருவை எப்போதும் எதிர்த்துக் கொண்டேதான் இருந்தார். அந்த ஒரு காரணமே நேர்மையான தலைவர்கள் இல்லாத ஆர்எஸ்எஸ்க்கு போதுமானதாக இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட மிகமுற்போக்கான சட்டங்களை அம்பேத்கர் இயற்ற முயன்றபோது, அதற்கு எதிராகக் குரல் எழுப்பியதோடு, அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்வதற்கும் வல்லபாய் பட்டேல் முக்கியக் காரணமாக இருந்தார். இதுவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, ஏனெனில் பெண்களுக்கு எதிரான எந்தவொன்றையும் தான் இவர்கள் ஓடிப்போய் ஆதரிப்பார்களே. கோவிலுக்குள் சாமி கும்பிடவே பெண்களை விடமாட்டார்கள், சொத்திலா பங்குதர ஒப்புக்கொள்வார்கள் இவர்கள். காந்தி கொல்லப்பட்ட போது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நாடு முழுவதும் மக்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. அதனால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் வேறுவழியின்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்.

  1. இது ஏதோ ஒரு மாநில மக்களின் பணம் வீணாக்கப்பட்ட சிலை மட்டுமல்ல. நம்முடைய பெட்ரோல் விலை ஏற்றத்திலும் பங்குகொண்ட சிலை. இந்த பட்டேல் சிலைக்காக இந்தியாவின் எண்ணை நிறுவனங்களில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், ஓஎன்ஜிசி, பாரத் பெட்ரோலியம், கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, பவர் க்ரிட், குஜராத் மினரல் டெவலப்மண்ட் கார்ப்பரேசன், இஞ்சினியர்ஸ் இந்தியா, பெட்ரோ நெட், பால்மர் இந்தியா ஆகிய இந்தியாவின் எண்ணை நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் பணத்தை எடுத்துள்ளனர். அதன் விளைவை நாம் பெட்ரோல் விலை உயர்வில் நேரடியாகவே பார்த்தோம். இதில் வேடிக்கை என்னவென்றால், இதைத் தெரிந்தும் தெரியாமலும் ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்களும் கூட அதிக விலைகொடுத்து பெட்ரோல் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். வெளியே முட்டுக்கொடுத்தாலும், உள்ளுக்குள்ளேயே புழுங்கி அழுதுகொண்டிருக்கின்றனர் என்பது தனிக்கதை.

  1. மோடிக்கும் பாஜகவுக்கும் விளம்பரம் செய்வதும் உண்மையான பிரச்சனைகளைத் திசைதிருப்புவதும் சர்வசாதாரணம். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதேகூடா அப்படித்தான். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து “வைப்ரண்ட் குஜராத்” என்னும் பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து, அடுத்த ஆண்டு இத்தனை இலட்சம் கோடி முதலீடு குஜராத்துக்கு வரப்போகுது என்று ஊர்முழுக்க போஸ்டர் அடித்தும் எல்லா ஊடகங்களில் தொடர்ந்து விளம்பரம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆண்டில் கூட, கடந்த ஆண்டு கொடுற்ற வாக்குறுதி அளவுக்கு முதலீடு குஜராத்துக்கு வந்துசேர்ந்ததா என்று சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் வந்தால் தானே சொல்வதற்கு. அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒரு சதவிகிதம் கூட வந்திருக்காது. அதே காலகட்டத்தில் அமைதியாக எவ்வித அளப்பறையும் இல்லாமல் தமிழகத்தில்கூட அதைவிட அதிக முதலீடு வந்துகொண்டிருந்தது. ஆக பாஜகவும் மோடியும் எதையும் செய்வதற்கு முன்பே வெறும் வெற்று விளம்பரம் தான் செய்வார்கள். சரி விளம்பரத்தைத் தேடிக்கொண்டு அந்த காரியத்தையாவது செய்துமுடிப்பார்களா என்றால் அதுவும் இல்லை. கருப்புப் பணத்தை மீட்கிறோம், 15 இலட்சம் தருகிறோம், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு தருவோம், பெட்ரோல் விலையைக் குறைப்போம், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம், அப்படி இப்படியென அவர்கள் கொடுத்த எல்லா வாக்குறுதிகளும் காற்றில்தான் பறக்கின்றன. அதனால் அதுகுறித்தெல்லாம் நாம் எந்தக் கேள்வியும் எழுப்பிவிடக்கூடாது என்பதாலேயே, சம்பந்தமே இல்லாமல் சிலையை அமைத்து, அதுகுறித்தே நம்மை பேசவைத்து முற்றிலுமாக நம்மை திசைதிருப்புவது அவர்கள் வேலை. சிலைக்கு செய்வதை உயிருள்ள மனிதருக்கு செய் என்று நாம் தான் அவர்களின் திசைதிருப்பலையும் சேர்த்தே கேள்விகேட்க வேண்டும்.

  1. இந்த சிலையின் மிகப்பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? சிலைக்கு அவர்கள் வைத்த பெயர் தான். “Statue of unity” அதாவது ஒற்றுமையின் சிலை. அடேங்கப்பா, இவர்களுக்கு ஒற்றுமையில் அவ்வளவு அக்கறையா என்ன? குஜராத் கலவரத்தின் போது அரசின் உதவியோடு்ம் காவல்துறையின் ஆதரவோடும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் இதே குஜராத்தில் தான் அவர்கள் காலங்காலமாக வாழ்ந்துவந்த ஊர்களிலிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். 3000 த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை வெளியே எடுத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். காங்கிரஸ் எம்பி ஜாஃப்ரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வீட்டோடு கொளுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான மசூதிகள் மற்றும் தர்க்காக்களை குதிவைத்து இடித்துத் தரைமட்டமாக்கினர். ஆனால் அப்போதெல்லாம் இந்த ஒற்றுமை சிலை வைப்பவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தபட்சமாவது அமைதி நிலவவும் ஒற்றுமையை உருவாக்கவும் இந்த மோடியும் அவரது அரசும் கலவரத்தை நிகழ்த்துவோரை அழைத்துப்பேசி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார்களா? இல்லையே. மிகச்சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலின் போதும், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக குஜராத்தில் தங்கியிருந்த மக்களின் மீது “அந்நியர்கள் வெளியே போங்க” என்று முழக்கமிட்டு 84000 த்திற்கும் மேற்பட்ட எளிய ஏழை மக்களை அடித்துவிரட்டினார்களே, அப்போதாவது ஒற்றுமை சிலை வைத்தவர்கள் பேசியிருக்கலாமே, ஏதாவது செய்திருக்கலாமே. அதுவும் அந்த உத்திரப்பிரதேசத்திலும் இவர்கள் ஆட்சிதானே, இவர்களுடைய மக்கள் தானே, இந்தியர்கள் தானே. ஏன் எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் ஓட்டுக்காகவும் ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கவும் எதைச் செய்யவும் தயங்கமாட்டார்கள். இந்த பட்டேல் சிலையும் கூட அப்படியொரு உத்திதான்.

  1. பட்டேல் சிலையையும் அதனைச் சுற்றி பாதையையும், ஓட்டல்களையும் அமைப்பதற்காக அங்கே 72 கிராமங்களைச் சேர்ந்த 75000 பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கின்றனர். அதிலும் 32 கிராமங்கள் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அம்மக்களில் சிலருக்கு பணமும் மாற்று இடமும் வேலையும் தருகிறோம் என்று போலியான வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கின்றனர். அவ்வாக்குறுதிகளை நம்பிய சிலரில் பலருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்காதவர்களும் வலுக்கட்டாயமாக அடித்து விரட்டப்பட்டனர் என்பதையும் கவனிக்க வேண்டும். பட்டேல் சிலையை அமைப்பதற்காக, இயற்கை எழில்கொஞ்சிய அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 2,00,000 (இரண்டு இலட்சம்) மரங்களை வெட்டிவீசியிருக்கின்றனர். இதுபோதாதென்று நர்மதை ஆற்று மையக் கால்வாய்க்கு வலதுகரையில் வாழும் 28 கிராம மக்களுக்கு நர்மதை ஆற்றிலிருந்து இனி ஒருதுளி தண்ணீர் கூட எடுக்கக்கூடாது என்று தடையும் போடப்பட்டிருக்கிறது. இதனையெல்லாம் எதிர்த்து அமைதியாகக் கேள்விகேட்டும் போராடிய வந்த பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார கிராமத்து மக்களை காவல்துறையை வைத்து குஜராத் அரசு தொடர்ந்து மிரட்டி வருகிறது. பட்டேல் சிலையை திறப்பதற்கு மோடி வருவதற்கு முந்தைய நாள் கூட 90க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். பட்டேல் சிலை திறப்பைக் கண்டித்து 75000 பழங்குடி மக்களும் சிலை திறக்கப்படும் அதே நாளில் யாரும் வீட்டில் சமைக்காமலும் உண்ணாவிரதம் இருந்தும் அமைதியாகப் போராட்ட்டம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தங்கள் நிலத்தில் வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமித்து, அவர்களின் வாழ்வாதாராத்தை அழித்து, ஒட்டுமொத்த தேசத்தின் பெரும்பாலான மக்கள் ஏழ்மையில் வாழ்கையில் அவர்களது வரிப்பணமான 3000 கோடியை அப்படியே அபகரித்து உலகிலேயே மிகப்பெரிய சிலையை அமைக்கிறோம் என்று பெருமை பீத்திக்கொள்வதில் என்ன பயன்? இதே தேசத்தில் தான் 50,00,000 (ஐம்பது இலட்சம்) மக்கள் கையால் மலத்தை அள்ளி துப்புறவு பணி செய்யும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதி தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் தெரியுமா இருக்கிறார்கள்? குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் என அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தான். கையால் மலம் அள்ளும் வேலையை, தொழில்நுட்ப கொண்டு சீர்செய்ய வக்கில்லாத இந்த அரசுகள் தான் வெட்டியாக நிற்கப்போகும் சிலைக்காக 3000 கோடிப்பணத்தை தண்ட செலவு செய்கின்றன. மனசாட்சியும் மனிதநேயமும் நேர்மையும் அறிவும் புத்தியும் உள்ள எந்த மனிதரும் இப்படியொரு சூழலில் இப்படி சிலைக்கு செலவு செய்வதை ஆதரிக்கவே மாட்டார்கள்.

-இ.பா.சிந்தன்.

Related Posts