இதழ்கள் இளைஞர் முழக்கம்

வேலை நிரந்தரத்திற்கு பொதுத் துறை அவசியம்…

எஸ்.கண்ணன்

                நாடு விடுதலை பெற்ற போது, வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாக மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நீர்பாசனம் ஆகியவை மிக அவசியமாக இருந்தது. இந்த தேவையை அரசு நிர்வாகம், கட்டமைத்து தரவேண்டும். மற்ற பல துறைகளில் தனியார் ஈடுபடவேண்டும். என்ற திட்டமே ‘பாம்பே திட்டம்’ அல்லது ‘பிர்லா திட்டம்’ என அழைக்கப்பட்டது. நேருவும் இந்தியாவின் பொருளாதார முறை கலப்புப் பொருளாதாரமாக இருக்கும், என பெருமிதமாக பேசினார். அதாவது, முதலாளித்துவப் பாதையும் இல்லாமல், சோசலிச பாதையும் இல்லாமல் பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கையே, கலப்புப் பொருளாதாரம், என அன்று அழைக்கப்பட்டது.

துரும்பையும் அசைக்காத தனியார்:

இந்தியாவின் வளர்ச்சி குறித்த கனவில், பெரும் பங்களிப்பு செய்தது பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. 3000 மெகாவாட் மின்சார உற்பத்தி மட்டுமே நாடுமுழுவதும் கொண்டிருந்த இந்தியா இன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மெகாவாட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடாக மாறியிருக்கிறது. அன்று தனியார் இந்த அடிப்படை வளர்ச்சியில் பங்களிப்பு செய்யவில்லை. காரணம் முதலீட்டுச் செலவு அதிகம் என்பதுடன், அத்திட்டம் செயல்பட ஆகும் காலம் மிக அதிகம் என்பதால், அன்றைய இந்திய முதலாளிகள் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை. இப்படி இன்றைய இந்தியாவிற்கான அடிக்கட்டுமானத்தில், ஒரு துரும்பையும் அசைக்காதவர்களே இந்திய முதலாளிகள்.

ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் என்ற அரசு நிறுவனங்கள் பெரும் மாற்றத்தை உருவாக்கின. குறிப்பாக நமது நாடு விடுதலை பெறுகிற போது, மக்கள் தொகை சுமார் 35 கோடி, அதில் நடுத்தர வர்க்கம் என்ற வாங்கும் சக்தி கொண்ட மக்கள் பிரிவினர் வெறும் 1 சதம் மட்டுமே. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகி, வேலைவாய்ப்பைத் தந்ததும், உற்பத்தி பெருகியதும், நுகர்வுச் சந்தையை விரிவாக்கியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெருகியது. இது இரண்டு விதத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியது. ஒன்று கல்வி மற்றும் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கியது. இரண்டாவது நாட்டின், ஆலைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உத்திரவாதம் செய்தது.

வேலை வாய்ப்பில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு:

1951ம் ஆண்டில் இந்திய அரசு 5 தொழில்களில், ரூ.29 கோடியை முதலீடு செய்தது. இன்று அது 239 எண்டர்பிரைசஸ் என உயர்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் கொண்டதாக மாறியிருக்கிறது. 2004-05 ஆண்டு இந்திய அரசுக்கு 1,10,599 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டித் தந்தது. இது அன்றைக்கு 10 சதம் ஆகும். இப்போதும் இந்த வருவாய் சதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு மட்டுமல்ல பல லட்சம் குடும்பங்களின் வருவாயை, கல்வியை, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த பெருமிக்குரிய நிறுவனங்களாக இந்த பொதுதுறை நிறுவனங்கள் உள்ளன.

வேலை வாய்ப்பை பொருத்தளவில், ரயில்வே உள்ளிட்டு இந்தியாவில் அன்று கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வருவாய் உத்திரவாதம் அளித்த துறை பொதுத் துறைகள் ஆகும். இவர்கள் புதிய நடுத்தர வர்க்கமாக உருமாறினர். இவர்களுக்கான நுகர்வு அதிகரித்ததும், இதர சமூக செலவினங்களும் அதிகரித்ததன் காரணமாக, ஒட்டு மொத்த சமூக உற்பத்தியும் அதிகரித்தது. பல்வேறு புதிய நகரங்கள் உருவாகின. புதிய வேலை வாய்ப்புகள் சேவைத் துறையிலும், ஆலைத் தொழில்களிலும் அதிகரித்தது.

அன்று 40 கோடி மக்கள் தொகையில் 1 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப் பெரிய செய்தி. ஆனால் இன்று 123 கோடி மக்கள் தொகையில் மேற்படி பொதுத்துறை வேலைவாய்ப்பில், இன்று இருக்கும் எண்ணிக்கையுடன் ஒப்பீட்டால் மிக அதிகம். இன்று க்ஷழநுடு, ழுஹஐடு, க்ஷஞஊடு, ழஞஊடு, ஐடீஊ, ஆகூசூடு, சூகூஞஊ, டீசூழுஊ, ளுஹஐடு ஊடீஹடு ஐசூனுஐஹ, சுஹஐடுறுஹலு, க்ஷளுசூடு ஆகிய 12 அரசுப் பொதுதுறைகளின் மூலம் வேலைவாய்ப்பு 22.17 லட்சம் ஆகும். அநேகமாக 1984 க்குப் பின் புதிய பொதுத்துறை நிறுவனங்கள் எதுவும் , அரசினால் திட்டமிட்டு உருவாக்கப் படவில்லை.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில், ரயில்வே, நிலக்கரி சுரங்கம், பி.எஸ்.என்.எல் ஆகிய மூன்று நிறுவனங்களில் மட்டும் 17 லட்சம் வேலைவாய்ப்பு உள்ளது மற்றவற்றில் குறைவாகவே உள்ளது. இந்த நிறுவனங்கள் ஒருபுறம், தாங்களாகவே ஆட்குறைப்பு செய்து கொண்டுள்ளது. மற்றொருபுறம் அரசு தனது கொள்கை அறிவிப்பின் மூலம் வேலைக்கு ஆளெடுக்கத் தடைச் சட்டம் பிறப்பித்து வஞ்சித்து வருகிறது.

பொதுத்துறையைத் தகர்க்கும் தாராளமயம்:

உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சி நிதி மூலதனமாக மாறிய நிலையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனையை அதிகப்படுத்தின. இது முதலில் கை வைத்த இடம் வேலை வாய்ப்பு ஆகும். அதாவது தொழில் நுட்ப வளர்ச்சி வேலைக்கான ஆட்களின் தேவையைக் குறைக்கிறது என்ற வாதிடுகின்றனர். இது அப்பட்டமான பொய் மூட்டை, ஏனென்றால், இன்று நெய்வேலி ஒரு சிறந்த உதாரணம், அங்கு இந்த 25 ஆண்டுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரத்திற்கும் மேல் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் சட்ட விரோதமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக நீட்டிப்பு செய்யப் படுகின்றனர். ஆட்களே தேவை இல்லாத இடத்தில் ஏன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப் பட வேண்டும்?.

அதே நேரத்தில் நிரந்தர தன்மையுள்ள வேலைவாய்ப்பை குறைக்கிற நிர்வாக ஏற்பாட்டையும் செய்து வருகின்றனர். தொழில் நுட்பம் தெரியாத வேலையின்மையே நம் நாட்டில் உள்ளது என்ற, பிரச்சாரம் சகிக்க முடியாமல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் கல்பாக்கம் அணுமின் நிலையம். இங்கும் 25 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர் செய்யும் அதே வேலையை, ஒப்பந்தத் தொழிலாளரும் செய்யும் நிலையில், ஏன் ஒப்பந்தத் தொழிலாளர்களை, தொடர்ந்து சுரண்டி வருகிறது?. தொழில் நுட்பம் தெரியாத் ஒப்பந்தத் தொழிலாளரை எப்படி நிர்வாகம் பயன்படுத்துகிறது?.

காரணம் ஒன்று தான், இந்தியாவைப் பொருத்தளவில் பொதுத்துறை நிறுவனங்கள் மிகச் சிறந்த ‘மாடல் எம்ப்ளாயர்’, என்று முன்னுதாரணமாக விளங்கியது. இன்று நிதி மூலதன வளர்ச்சி மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைக்கு இரையாகும் பொதுத் துறைகளின் செயல்கள் காரணமாக, தனியார் ஏராளமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக தனியார் நிறுவனங்களில், பெரும்பாலும், 50 முதல் 80 சதமானம் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். இது ஒட்டு மொத்த வேலைவாய்ப்புச் சந்தையை தகர்த்து, தனியாருக்கான லாபத்தை பல மடங்கு உயர்த்தி வருகிறது.

துரும்பையும் அசைக்காதவருக்கு லாபம்:

இன்று தனியார் மூலம் வளர்ச்சி இல்லையா எனக் கேள்வி கேட்கின்றனர். உண்மை வளர்ச்சி இருக்கிறது. வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நிரந்தரம் இல்லை. நல்ல சம்பளம் கொடுத்த ஐ.டி போன்ற துறைகளில் கூட, ஆட்குறைப்பு சாதாரணமாகி விட்டது. காரணம் புதியவர்களின் வருகை. மற்றொரு புறம் வேலையின்மையின் வளர்ச்சி. தமிழகத்தில் மட்டும் 95 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், என்ற நிர்பந்தம் 1980களில் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக தனியாரும் கட்டுக்குள் இருந்து கொள்ளையடித்தனர்.

இன்றைய நிலை, சமூக நிர்பந்தம் குறைந்து உள்ளது. இளைஞர் அமைப்புகளின் போராட்டம் நடைபெற்றாலும், சமூக நிர்பந்தமாக வளரவில்லை. அண்மையில் இணைய தளங்களில் வெளி வந்துள்ள பொதுத்துறை மற்றும் அரசுத் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில், அஸ்ஸாம் போலிஸ் துறைக்கு மட்டுமே, 6748 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. மற்ற அனைத்தும் ஒரிரு நூறுகள், அல்லது இரண்டு இலக்க எண்களில் ஆன காலிப் பணியிடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப் படுகின்றன. ஓய்வு பெறுவோருக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப் படுவதில்லை. பெருகியுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு அதிகரிக்க வில்லை. இது தனியாருக்கான வேலை வாய்ப்பு சந்தையை பல மடங்கு பெருக்கிட உதவுகிறது.

இதைத் தனியார் ‘அமர்த்து பின் துரத்து’, என்ற வகையில் பயன்படுத்தி லாபத்தை மென்மேலும் உயர்த்திட உதவுகிறது. எனவே பொதுத் துறையின் நீட்டிப்பும், ஆள் எடுப்பதும், வேலை வாய்ப்பு சந்தையில் நம்பிக்கை அளிப்பதாக அமையும். இரண்டாவதாக தனியாரைக் கட்டுக்குள் வைத்து, நாட்டின் வளர்ச்சியையும் அதிகப் படுத்தும். பொதுத் துறையை, நமது வேலைவாய்ப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாதுகாக்க ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

Related Posts