இதழ்கள் இளைஞர் முழக்கம்

வேலை தருவது யாருடைய வேலை? – க.சாமிநாதன்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது உரையாற்றிய சீதாராம் யெச்சூரி இந்திப்பட இயக்குநர் மன்மோகன் தேசாய் அளித்த பதிலொன்றைக் குறிப்பிட்டார். உங்களின் திரைப் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைவதற்குக் காரணம் என்ன? என்பது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி. “நான் ரசிகர்கள் சிந்திப்பதற்கு நேரம் தருவதில்லை. ஒரு காட்சியை உள்வாங்குவதற்குள்ளாக அடுத்த காட்சிக்கு நகர்த்தி விடுவேன்; இதுதான் வெற்றியின் ரகசியம்” என்று பதில் அளித்தார். அதுபோலவே மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா… என அடுத்தடுத்த முழக்கங்களுக்கு நீங்களும் தாவித்தாவி செல்கிறீர்கள் என மோடியைப் பார்த்து யெச்சூரி கூறினார்.

மன்மோகன் தேசாய் “அமர் அக்பர் அந்தோணி”, “கங்கா ஜமுனா சரஸ்வதி” போன்ற வெற்றிப் படங்களை எடுத்தவர். தமிழில் வந்த சங்கர் சலீம் சைமன், கங்கை யமுனா காவேரி அவர் படங்களின் ரீமேக்தான்.
இது அரசின் உத்தியாக மாறிப் போயுள்ளது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தரப்படுமென்று கூறியதும் இது போன்ற அறிவிப்புதான். பட்ஜெட் 2017 அவர்களின் வெத்து அறிவிப்பை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

சிதம்பர ரகசியமும் அதுவே

அருண்ஜேட்லியின் பட்ஜெட்டை ப.சிதம்பரம் தொலைக்காட்சி பேட்டிகளில் நார் நாறாகக் கிழித்து விட்டார் என்று பலரும் பேசினார்கள். ஆண்டுக்கு 2 கோடி என்றவர்கள் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகளையே தந்துள்ளனர் என்று புள்ளி விவரங்களோடு சிதம்பரம் புட்டுபுட்டு வைத்தார்.

சிதம்பரம் ஜேட்லியைக் கிழித்தது சரிதான். ஆனால் ஏற்கனவே ஜேட்லி போட்டிருந்ததே கிழிந்து போன பழைய சிதம்பரத்தின் சட்டைதான் என்பது உண்மை. உலகமயப்பாதை வேலையற்ற வளர்ச்சியையே உருவாக்கும்; வேலை பறிப்பு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். மன்மோகன்சிங் – யஷ்வந்த்சின்கா – சிதம்பரம் – அருண்ஜேட்லி என மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் மாறினாலும் பொருளாதாரப் பாதை மாறவில்லை என்பது தானே பிரச்சனை.

ஆகவே அறிவிப்பிற்கும் – அமலாக்கத்திற்கும் இடையிலான மேடு பள்ளங்கள், அதிகாரவர்க்கம் அதற்கேற்ற வகையில் தயாரித்துத் தரும் மேற்பூச்சுக்கள் எல்லாம் அன்று சிதம்பர ரகசியம். இன்று ஜேட்லி சீக்ரட்.

செல்லாப்பணமும், இல்லா வேலையும்

அறிவிப்புகள் – பட்ஜெட் – நடப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளிகள் சுவாரஸ்யமானவை. கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம்; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்பது அவர்களின் தேர்தல் அறிவிப்பு. நவம்பர் 8 செல்லாப்பண நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின்புலத்தில் 4 லட்சம் கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் வெளிக்கொணரப்படுமென்பது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) வெளியிட்ட கணிப்பு. அதற்கு ஆகிற செலவு 1.20 லட்சம் கோடிகள் என்பதும் கணக்கு.
முதலில் நிதித்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செல்லாப்பண நடவடிக்கையின் விளைவுகள் பற்றிய அறுதியிட்ட தகவல்கள் இல்லை என்றார். சொல்வதற்கு தகவல் இல்லையா? சொல்லுகிற மாதிரி அந்தத் தகவல்கள் இல்லையா? என்பது நமக்கு எழுகிற சந்தேகம்.

ஆனால் நாடாளுமன்ற நிதி இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் ரூ.5400 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக (பிசினஸ் ஸ்டாண்டர்ட் – 09.02.2017) தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியான 15 லட்சத்தை 28 கோடி குடும்பங்களுக்கு கணக்குப் போட்டால் 420 லட்சம் கோடி கறுப்புப் பணம் என்று அர்த்தம். ஆனால் இவ்வளவு செல்லாப்பண ரகளைகளுக்குப் பிறகும் வந்திருப்பது 5400 கோடி தான். 28 கோடி குடும்பங்களுக்கு பிரித்துப் பாருங்கள். ரூ.192 தான் வருகிறது. 15 லட்சம் எங்கே! 192 ரூபாய் எங்கே! இதுவும் உங்கள் கணக்குகளுக்கு வராது. காரணம் 5400 கோடிகளுக்கு கணக்குக் கேட்டு நோட்டிஸ் விட்டு அதை ஆராய்ந்து எவ்வளவு கறுப்பு என்று முடிவுக்கு வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!

ஆனால் செல்லாப்பண நடவடிக்கை நவம்பர் 8 லிருந்து நவம்பர் 24க்குள்ளாகவே 4 லட்சம் அன்றாடங் காய்ச்சிகளின் வேலைகளை ஜவுளி, ஆயத்த ஆடை, தோல், ஆபரணத் தொழில்களில் காவு வாங்கி விட்டது. (பைனான்சியல் எக்ஸ்பிரஸ் – 24.11.2016)

3 லட்சம் குறு, சிறு தொழிலகங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் கணிப்புப்படி மார்ச் 2017க்குள்ளாக 60 சதவீத வேலைவாய்ப்புகளும், 55 சதவீத வருமானமும் சரிவைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 9, 2017)

யானையை விற்று அங்குசம் வாங்கிய அதிபுத்திசாலிகளாக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்பின்புலத்தில் வந்துள்ள பட்ஜெட் செல்லாப் பணத்தை சிலாகிக்கும் போது வேலைவாய்ப்புகளைப் பற்றி உதட்டைப் பிதுக்காமல் வேறு என்ன செய்யும்!

ஆப்பிளுக்கு நல்லது… மக்களுக்கு?

அந்நிய நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு ஓரளவு கடிவாளம் போடுகிற வாய்ப்பாக இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு மையத்தின்  அனுமதிகள் இனி தேவைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள ஏர்டெல் – டெலினார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்பினால் 30 சதவீத ஊழியர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள் என்றும், அடுத்த 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டுக்குள்ளாக இந்த நிகழ்வுகள் அரங்கேறுமென்றும் (இந்து பிசினஸ் லைன் – 24.02.2017) தெரிவித்து உள்ளது. டெலினார் ஓர் நார்வே நாட்டு நிறுவனம். 8 ஆண்டுகளுக்குள் கடையை மூடவுள்ளது.

இப்படிப்பட்டவர்களுக்கு தரப்படும் சலுகைகள் இன்னும் அதிகமாகும் என்பதை தொழிற் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் செயலாளர் சந்தோஷ் அபிஷேக் எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்!

“ஆப்பிளுக்கு எது நல்லதோ
அதுவே எல்லொருக்கும் நல்லது”

அமெரிக்கவில் ஜெனரல் மோட்டார்சுக்கு எது நல்லதோ அது அந்நாட்டிற்கு நல்லது எனச் சொன்னவர் ஜி.எம். நிறுவனத்தின் சீப் எக்சிகியூட்டிவ் சார்லஸ் இ.வில்சன். ஆனால் இங்கே சொல்வதோ அரசின் உயர்மட்ட அதிகாரி. இது அரசியல்வாதிகள் – அதிகாரவர்க்கம் – தொழிலதிபர்கள் என்கிற புனிதமற்ற கூட்டணியின் ஒரு வெளிப்பாடு. இது எங்க டயலாக்குபா… என்று கார்ப்பரேட்டுகள் ரசித்துச் சிரித்தாலும் சிரிப்பார்கள்.

இன்னொரு புறம் ரூ.72000 கோடி ரூபாய் பங்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, இடஒதுக்கீட்டு உரிமைக்கு வைக்கப்படும் குறியாகும் அது. “ஓப்பன்” என்கிற ஆங்கில சஞ்சிகையில் (13.02.2017) பட்ஜெட்டுக்கு பிந்தைய தொழிலதிபர்களுடனான சந்திப்பு பற்றிய கட்டுரை உள்ளது. அருண்பூரி என்பவர் நிதியமைச்சரைப் பார்த்து பங்கு விற்பனையில் உங்களின் குரல் முனைப்போடு இல்லையே என்கிறார். அதற்குப் பதிலளித்த அருண்ஜேட்லி,

“அரசாங்கம் ஆட்டபாட்டத்தோடு அறிவிக்காது.
குறைவாகப் பேசி நிறையச் செய்வோம். அதிகமாகப்
பேசினால் அது பொது வெளியின் கவனத்தை ஈர்க்கும்.
அநாவசிய சர்ச்சைகளை எழுப்பும்” என்று கூறியுள்ளார்.

எவ்வளவு கொஞ்சல்! மக்களிடம் விவாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை எவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார்கள். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ரயில்வே துணை நிறுவனங்கள் குறி வைக்கப்படுகின்றன.

காலிப் பானை… கரண்டியின் சத்தம்

இந்த பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீடுகளில் எல்லாம் கத்தியைப் போட்டுள்ளது.
கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்திற்கு ரூ48000 கோடி ஒதுக்கீடுதான். 2016-17க்கான திருத்தப்பட்ட மதிப்பீடே ரூ47499 கோடிகள். 500 கோடி ரூபாய் உயர்வை பணவீக்கமே ஊதித் தள்ளிவிடும். 2011ல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டிற்கு பணவீக்கக் கணக்கைப் போட்டுப் பார்த்தால் 2017-18ல் ரூ65000 கோடி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே கிராமப்புறத் தற்கொலைகள். இழவு வீடுகளில் கூட மனம் இறங்காதவர்கள். ஏற்கனவே திட்டக் கமிஷனின் கதையை முடித்து விட்டார்கள். 2017-18 க்கான செலவு என்ற பகுப்பினைக் கைவிட்டு விட்டார்கள். பட்ஜெட் டூ பட்ஜெட் மதிப்பீடுகளைத்தான் ஒப்பிட வேண்டும். திருத்திய மதிப்பீடுகளோடு ஒப்பிடக் கூடாது என நிதித்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் பேசுவதும் திட்டமிடலை, பட்ஜெட்டின் ஆன்மாவை நீர்த்துப் போகச் செய்வதே ஆகும். அரசின் தலையீடு வேலைவாய்ப்பிற்கான உருவாக்கம் பற்றிய முன்முயற்சிகள் ஆகியனவெல்லாம் அடிபட்டுப் போவதற்கான மணியோசைகள் இவை.

பட்டியலின மக்களுக்கான துணைத்திட்டம், பழங்குடி மக்களுக்கான துணைத்திட்ட ஒதுக்கீடுகளில் 1,96,479 கோடிகள் மறுக்கப்பட்டுள்ளது. அம்மக்களுக்கான பிரத்யேகத் திட்டங்களும் 294லிருந்து (2015) 269 (2017) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பட்டியல் சாதி மக்களுக்கான திட்டங்கள். பழங்குடி மக்களுக்கான பிரத்யேகத் திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், மதிய உணவுத் திட்ட ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான சதவீதத்திலொ, ஒதுக்கீட்டுத் தொகைகளிலொ சரிவுகள் உள்ளன.
காலிப் பாணைக்குள் கரண்டியை விட்டால் என்ன வரும்? இப்படிப்பட்ட பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கான பட்ஜெட்டாக எப்படி இருக்கும்!

உலகமயப்பாதையின் மூலவர்களில் ஒருவரான மார்கரெட் தாட்சரின் வார்த்தைகளில்,
“அரசின் தொழிலே,
தொழில்களில் இல்லாமல் இருப்பது தான்”

மக்கள் நலனுக்காக அரசு பொருளாதாரத்தில் தலையிடுவது கூடாது என்பதே அதன் சாரம்.
2017 பட்ஜெட்டும் அட்சரம் பிசகாமல் சொல்கிற செய்தி, “வேலை தருவது அரசின் வேலை அல்ல”.

Related Posts