அரசியல்

வேலை செய்வதைப் பற்றி பேச ஒரு அருகதை வேண்டாமா ஆசானே..!

ஊரில சிலபேரு வாயைத்திறந்து பேசவே மாட்டாங்க… ஆனால்  எப்பயாவது பேசினா… இவனெல்லாம் ஏண்டா பேசுறாங்கிற மாதிரி ஆகிடும்…! அதிலும் தெரிஞ்சோ தெரியாமலோ சிலர் எழுத்தாளர்ன்னு சுயமா நாமகரணம் சூட்டிக்கொண்டு, அருள்பாலித்துக் கூறும் அருள்வாக்கு இருக்கே… எப்பவுமே பேசாத புள்ள திடீர்ன்னு ‘அப்பன் தலையில எப்போ இடி விழுந்து சாவாரு… நீ எப்பம்மா தாலியறுப்பே’ன்னு அம்மாவைப் பார்த்து கேட்கிற மாதிரி தான் பேசுவாங்க…! இப்படி வாய்க்குள்ள ஏழரைச் சனி சாய்வு நாற்காலி போட்டு உக்காந்திருக்கிற லூசு மாதிரியான கிரிமினல் கேசுங்க உள்ளூர் முதல் தேசிய,  சர்வதேச அளவில இருந்திட்டே இருப்பாங்க…! உதாரணமா சுப்பிரமணிய  சாமின்னு ஒருத்தர்,  இதுமாதிரியே அருள்பாலிப்பவருதான். தப்பித்தவறி கல்யாண வீட்டுக்கு பெரியமனுஷன்னு மதிச்சு கூப்பிட்டாங்கன்னு வைங்க இவங்களே புதுபொண்ணுக்கு தாலியக் கட்டி குடித்தனம்  நடத்துற லெவலுக்கு போயிருவாங்க…!

இப்படித்தான் ஒருத்தர் எப்படியோ எழுத்தாளர்ன்னு ஃபாம் ஆகி தொலைச்சிட்டு பண்ணுற அழிச்சாட்டியம் இருக்கே சொல்லி மாளல…! அவரு சில வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு ஒண்ணு போட்டார்…

நாகர்கோவிலில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஏதோ ஒரு பள்ளி மாணவர்களுக்கான போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றாராம், அங்கே வேலை செய்யுறவங்க பொறுப்பாவே நடக்கலைன்னு தனது ஞானக்கண்ணால கண்டறிந்து ஒரே ஒப்பாரி… இவருதான் பெரிய எழுத்தாளர் ஆச்சே ரத்தினக்கம்பளம் விரிச்சு பூரணகும்ப மரியாதையோடு ஏதோ வரவேற்பை எதிர்பார்த்திருப்பாரு போல… அங்க யாரும் அப்படி செய்யலையா… உடனே வலைதளத்தில வந்து இது மாதிரி ஆட்களை எல்லாம் எவண்டா அரசு வேலைக்கு வச்சிருக்கிறதுன்னு பொங்கினாரு…(அதுக்கு நல்லா  வாங்கி கட்டினாருங்கிறது வேற விஷயம்…)

அது மாதிரியே இப்போ, எவனோ வேலைவெட்டியில்லாத பய எப்போவோ எடுத்த ஒரு வீடியோவ, இந்தா இப்போ கொஞ்ச நேரத்தில திருப்பிக் கொடுதிறேன்னு, இரவல் வாங்கிட்டு வந்து தனது வலைதளைத்தில போட்டு அருள்வாக்கு பாலிச்சிருக்காரு…! எப்படியும் இவரு எதை வாந்தி எடுத்தாலும் அப்படியே அல்வா மாதிரி சாப்பிடுறதுக்கு கொஞ்சம் பேரு இவருக்கு தொண்டரடிப் பொடிகளாக வாய்ச்சிருக்கிற தைரியத்தில, காளைமாடு குட்டி போடுதுன்னு யாரோ சொன்னதைக்கேட்டு, கன்னுக்குட்டியக் கட்டிப் போட கயிறையும் பால கறந்து வைக்க கோயமுத்தூரில திருடிட்டு போன பிரியாணி அண்டாவையும் எடுத்திட்டு கைப்புள்ள கணக்கா கிளம்பிட்டாரு…! கிளம்பினாரா…

அப்புறம் என்ன பின்னாடி நிக்கிற வருத்தமில்லா வாலிபர் சங்க தொண்டர்களின் தைரியத்தில்… செம சவடாலு… வங்கியில வேலை செய்யுறவங்க அதிலும் குறிப்பா பெண் ஊழியர்களுக்கு செம ரைடு… கீரை ஆய்ற வேலைக்குக் கூட லாயக்கு இல்லைன்னு சாபம் வேற… அப்புறம் நிறைய ஆலோசனகள்… தப்பா நினைசுக்காதீங்க… எல்லாம் இலவசம்தான்… கொஞ்ச நேரம் எங்க இருந்தும்  எந்த ரீயாக்ஷனும் இல்ல… ஒரு செகண்ட் இடைவெளிவிட்டு… போறவன் வாறவன் எல்லாம் அட அடிச்சிருந்தா பரவாயில்லையே… தேஞ்ச தொடைப்பத்த செப்டிக் டேங்கில முக்கி முக்கி அடிச்சிருக்கான்… போதாக்குறைக்கு போன் போட்டு பக்கத்தூருல உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு வரிசையில நிக்க வச்சு தொடைப்பத்த கையில குடுத்திருவாங்களோங்கிற நிலைமை…

அவருக்குத்தான் ஏகப்பட்ட தொண்டரடிப்பொடிகள் இருக்கிறார்களே கைகொடுக்காமலா இருப்பாங்க… இருந்தாலும் வேண்டாம் நிலைமை மோசமா இருக்குன்னு நினைச்சு… வாங்கடா கெளம்பலாம்ன்னு தொண்டரடிப் பொடிகளைத் திரும்பிப் பார்த்தால் அங்க வாயில வட சுடுற ஒரு பயலையும் காணோம்… அப்புறம் என்ன எஸ்கேப்..!

யாரும் சிரிக்கலன்னா இன்னொரு சம்பவம்… கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு BSNL அலுவலகத்தில் ஒருத்தர் வேலை செஞ்சாரு… தானுண்டு தன் வேலையுண்டுன்னு (நோட் த பாயின்ட் “தன் வேலையுண்டு”) எப்போதுமே ரொம்ப “கடமையுணர்ச்சி” நுரைதள்ளக் காட்சியளிப்பவர்… சங்க நடவடிக்கையில் எல்லாம் ஆர்வமே இல்லாதவரு… அவரைப் பொறுத்த வரை சங்கத்தில இருப்பவங்க சோம்பேறிகள்… சங்கமா ஊவ்வே… ஆளப் பார்க்க கொஞ்சம் ஸ்மார்ட்டா இருப்பாரு… (குணத்தைப் பற்றி கேட்காதீங்க கொஞ்சம் சைகோ மாதிரி நடந்துப்பாரு) தினமும் காலையில சாப்பாடு பொட்டலம் இத்தியாதிகளோடு வேலைக்கு வருவாரு… அவரோட வேலை என்னவென்றால், பழுதான தொலைபேசிகள் பற்றிய புகார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று பதிய வேண்டும்… பழுது நீக்கும் மேல் நடவடிக்கைக்கு தொழில்நுட்பப் பிரிவுக்கு அந்த புகார்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும்… ஆனால் வாடிக்கையாளர்கள் அந்த புகார் எண்ணுக்கு எப்போது கூப்பிட்டாலும் பிசியாகவே இருக்கும்… கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப்போகும் வாடிக்கையாளர்கள் தொலைபேசி நிலையத்துக்கு நேரடியாக படையெடுப்பார்கள்… வேறு வழியில்லாமல் மேலதிகாரிகளிடம் ஒரு புகாரை இரண்டு புகார்களாக்கிக் கொடுப்பார்கள்… ஓன்று தொலைபேசி பழுதடைந்தது பற்றியது… இன்னொன்று புகார் தொலைபேசி எண் பற்றிய கூடுதல் புகார்…!

அதிகாரிகள் புகார்களைப் பெற்று பதியும் சம்பத்தப்பட்ட நமது நண்பரைப் போய் பார்த்தால் அவர் போன் ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிட்டு பேப்பரில் எதையோ எழுதுகிறார்… கிழிக்கிறார்… மீண்டும் எழுதுகிறார்… கிழிக்கிறார்… என்னாச்சு “மனப்பிறழ்வு” (மெண்டல்னு சொல்லுறது நல்லாவா இருக்கும்) ஆகிவிட்டதோ என்று அருகில் போய் விசாரிக்கப் போனால் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ஒரு பக்க மீசையில பாதி இல்ல… ஏதோ டென்சன்ல புடுங்கி தள்ளிட்டாரு போலன்னு விவரத்தைக் கேட்டா… “நான் ஒரு எழுத்தாளர்… நான் ஏதாவது ஒரு விஷயத்தை எழுத முடிவெடுத்துவிட்டால்… அதைத் தள்ளிப் போடுவதில்லை… அவ்வாறு நான் தள்ளிப்போட நினைத்தால் என் தலை வெடித்துச் சிதறிவிடும் தெரியுமா… தலையில்லாத என்னைப் பார்க்க நல்லாவா இருக்கும்…” என்று திகிலூட்டுவது மாதிரி பதில் சொல்லுவார்… பணியிலிருந்து விருப்ப ஓய்வு அடைவது வரையிலும் அவர் BSNL நிறுவனத்திற்கு ஆற்றிய பணி இதுதான்…! அந்த நண்பர் வேற யாருமில்லை நம்ம எழுத்தாளரேதான்…!

சாக்கடைக்குள்ள வக்கணையா படுத்துக் கொண்டு ரோட்டில சும்மா போறவனைப் பார்த்து உங்க வேட்டியில சேறுபட்டு அழுக்கா இருக்குன்னு நக்கல் பண்ணுற மாதிரி இருக்கு, நீங்க செய்யுற இது மாதிரிப்பட்ட சில்மிஷங்கள். வேலை செய்யுறவனுக்கு அட்வைஸ் பண்ண ஒரு குறைந்தபட்ச தகுதியாவது வேண்டாமா எழுத்தாளரே…!

இப்போ சொல்லுங்க மாண்புமிகு எழுத்தாளரே உங்களுக்கு இந்த அரிப்புக்கு சொறியுற வேலை தேவையா…? அப்படியும் சொறியுறதவிட முடியலன்னா ஒரு சூப்பர் ஐடியா இருக்கு… கன்னியாகுமரிக்காரரான உங்களுக்கு தெரியாமல் இருக்காது… செஞ்சட்டி இலைன்னு ஒரு இலை இருக்குமே அதை வேரோட புடிங்கிட்டு ஊருக்கு ஒதுக்குபுறமா போய் (தேவையின்னா ஒரு தொண்டரடிப் பொடியையும்  உதவிக்கு கூட கூட்டிட்டு போங்க) முதுகில நல்லா தடவிட்டு ஒரு 5 நிமிஷம் கழிச்சு சொறிய ஆரம்பிச்சீங்கன்னு வைங்க சொறிஞ்சிட்டே இருக்கலாம்… அப்பப்போ செஞ்சட்டி இலையை தடவ மறக்காதீங்க… சொர்க்கத்துக்கே போன மாதிரி ஃபீல் பண்ணுவீங்க…!

நீங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டதைவிட, சூப்பர் வீடியோவெல்லாம் உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட சில கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து… ச்… ச்சே… கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து (உதரணமாக  பங்காரு லட்சுமணன் என்ற “மறைந்த கலைஞர்” நோட்டுகட்டுகளை எண்ணி வாங்குவது, அப்புறம் வருண் காந்தி என்ற “இளம் கலைஞரின்” காதல் லீலைகள் போன்றவை)  அவ்வப்பொழுது வந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி, அவைகளைப் பற்றியும் அருள்பாலித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொள்வதோடு . . . . . .

பாவம்… வங்கியிலும், தொழிற்சாலையிலும், வயல் வெளியிலும், கட்டிடங்கள் கட்டுமானத்திலும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் நோண்டி வம்பு வளர்த்து உதை வாங்கதீங்க என்றும் சொல்ல ஆசைப்படுகிறோம்…!

– சதன் தக்கலை.

Related Posts