இதழ்கள் இளைஞர் முழக்கம்

வேலைவாய்ப்பு உருவாக்குவது சாத்தியமே!!!! – எஸ். கண்ணன்

நாடுதழுவிய முறையில் வறுமை, கல்வி வியாபாரம், சுகாதாரமின்மை, விலைவாசி உயர்வு, சமூக ஒடுக்குமுறை, என அனைத்துப் பகுதி மக்களையும் தாக்கும் பிரச்சனைகள், குறையாமல் நீடித்து வருகின்றன. இதில் ஒன்று வேலையின்மை என்ற பார்வை நமது பொதுபுத்தியில் ஏற்றப் பட்டுள்ளது. முதலில் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு, இரண்டாவது குறிப்பிட்ட வேலையின்மை தீர்க்கப்பட்டால், உடணடியாக பாதி வலி குறைந்து விடும். எஞ்சி நிற்பதை, கொள்கை மாற்றத்திற்கான போராட்டத்தின் மூலம் தீர்க்க முடியும்.

ஆனால் முதாலாளித்துவ லாபவெறிக்கு, வேலையின்மை நீடிக்க வேண்டும். வேலையின்மை, சமூகத்தில் சுரண்டல் முறையை வலுப்படுத்திக் கொள்ள, முதலாளித்துவத்திற்கு உதவுகிற பேராயுதம். எனவே முதலாளித்துவ சமூகத்தில், வேலையின்மைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கப் போவதில்லை. மாற்று சமூக அமைப்பான சோசலிச சமூக அமைப்பே அதற்கான தீர்வை அளிக்க முடியும். அரசியல் கொள்கை ரீதியில் மாற்று சமூகத்தை கட்டமைப்பதற்கான போராட்டத்தில், இளைஞர்கள் பங்களிப்பு, மகத்தானது.

வாங்கும் சக்தியின் உயர்வும் உடனடி நிவாரணமும்:

தமிழகத்தில் சுமார் 95 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து இருக்கின்றனர். நாடு முழுவதும் 10 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கான வேலையின்மை இந்த விவரம். கரத்தால் உழைக்கும் கிராமப்புற, உழைப்பாளி மக்களும் வேலையின்மைக்கு தள்ளப் பட்டு வருகின்றனர். குறிப்பாக, கிராமப் புற விவசாயத் தொழிலாளர்கள் வருடத்திற்கு 55 முதல் 60 நாள்கள் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். அந்தக் குடும்பம் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள இயலாமல், பட்டினி மற்றும் துயரங்களைச் சந்திக்கின்றனர்.

சந்தையில் பொருள்கள் இருந்தும், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி குறைந்த காரணத்தால், பொருள் உற்பத்தியில் தேக்கமும், உற்பத்தி நிறுத்தமும் ஏற்படுகிறது. இது விருப்ப ஓய்வு மற்றும் வேலை நீக்கத்திற்கு வழிவகுக்கிறது. எனவே வேலையில்லா பட்டாளத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கையுடன், இந்த விவரங்களையும் கணக்கில் கொண்டால், நாடு, மீள முடியாத பொறிக்குள் சிக்கிக் கொள்கிற ஆபத்தை நோக்கிப் பயணிப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதை கடந்த காலங்களில் இடதுசாரிகள் உணர்ந்து, வலியுறுத்தியதே, கிராமப்புற வேலை உறுதிச் சட்டம். திரிபுராவில் உள்ள இடதுசாரி அரசு நகர்புறத்திற்கும் வேலை உறுதி சட்டத்தை விரிவு படுத்தி உள்ளது. இது அந்த மாநிலத்தில் வாங்கும் சக்தியை வலுப்படுத்தி உள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களில், கிராமப்புற வேலை உறுதிச் சட்ட அமலாக்கத்தில் முறைகேடுகள் உள்ளன. சரியாக அமலாகி இருந்தால், சமீபத்திய பெருமழையின் பாதிப்பு கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறைவாக இருந்திருக்கும்.

இந்த நிவாரணம் அளிக்கும் கொள்கைக்கு மத்திய பாஜக அரசு, வேட்டு வைத்துத் தகர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. சட்ட அமலாக்கத்திற்கான பகுதிகளைக் குறைத்து செலவிடும் தொகையையும் குறைத்து வருகிறது. கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் ஓரளவு அமலில் இருந்த போது, மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்தது, சந்தை விற்பனை அதிகரித்தது, தொழில் உற்பத்தி வளர்ந்தது, வேலைவாய்ப்பும் ஓரளவு பெருகியது. எனவே பொருளாதார சுழற்சிக்கு, வாங்கும் சக்தி மிக முக்கியமானது. இப்போது அது பாதிக்கப் பட்டு இருப்பதில் மத்திய பாஜக அரசின் கொள்கை முக்கியக் காரணம் ஆகும்.

படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு எப்படி உயரும்?:

சோசலிச சமூகம் என்றால், வேலையின்மை தீர்க்கப்படும் என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அங்கு சுரண்டல் இருக்காது. எனவே லாப குவிப்பு, அங்கே இருக்க வாய்ப்பில்லை. இப்போதைய இந்திய சமூக அமைப்பில், லாப குவிப்பு அதிகரித்து வருகிறது. 6500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் 100 நபர்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு இந்தியாவில் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய். 131 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 100 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து எப்படி உயர முடிகிறது? என்ற கேள்வி இடதுசாரிகளால் மட்டுமே கேட்கப்படுகிறது.

இதில் ஆளும் அரசுகளின் கொள்கை உடந்தையாக இருக்கிறது. வரிச் சலுகை என்ற பெயரில் அப்பட்டமாக, லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி வழங்குகின்றன. மாநில அரசுகளும் இதற்கு துணை போகின்றன. விளைவு அரசு கஜானாவில் பணம் இல்லை, என்ற புலம்பலை முன்வைத்து, வேலை உருவாக்கும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றன. மத்திய மாநில அரசுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் சுமார் 50 லட்சம். இவை பூர்த்தி செய்யப்பட்டால், மக்களின் வாங்கும் சக்தியில் பல மடங்கு வேகம் உருவாகும். இது தொழில் உற்பத்தித் துறையில் பிரதிபலிக்கிற போது உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு, உற்பத்தி, சேவைத் துறை, மற்றும் விவசாயத் துறையிலும் பெருகும் வாய்ப்பு உள்ளது.

இது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்குள்ளேயே சாத்தியம் ஆகும். ஆனால் லாபத்தின் அளவைக் குறைக்க வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள லாபத்தைக் குவிப்பது, என்ற கொள்கையில் தளர்வு ஏற்பட்டாலே, மேலே குறிப்பிட்ட மாற்றம் வரும். இதை இளைய தலைமுறை தங்களின், சாதி, மத, அடையாளங்களைக் கடந்து, போராட்டங்களின் மூலம் அரசுகளை நிர்பந்திக்க வேண்டும். முதலில் இளைஞர்கள் அமைப்பு ரீதியிலான செயல்பாட்டிற்கு, முன்வருவதன் மூலமே அத்தகையப் போராட்டங்கள் சாத்தியமாகும்.

இயந்திரமயமாக்கல் பறிக்கும் வேலைவாய்ப்பு:

லாபத்தை அதிகரிப்பதில் பங்களிப்பு செய்வது ஒன்று உற்பத்தி அளவை பெருக்குதல், இரண்டு போட்டியை எதிர்கொள்ள தரமான உற்பத்தி, மூன்று தொழிலாளருக்கு உரிய சம்பளத்தை குறைக்க ஆட்குறைப்பு ஆகியவை ஆகும். இந்த மூன்றிற்கும் அடிப்படையில் பங்களிப்பு செய்வதாக இயந்திரமயமாக்கல் உருவாகிறது. தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் சம்பள பேரம் பேசும் உரிமையை குறைக்க ஆட்குறைப்பு அவசியமாகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணம் மத்திய அரசுகளின் கொள்கை, எந்த அளவிற்கு லாப அளவை அதிகப்படுத்த, எப்படி ஊழியர்களுக்கான சம்பளவிகிதம் குறைக்கப் பட்டுள்ளது என்ற விவரத்தை குறிப்பிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டில் லாபத்தில் சம்பளத்தின் பங்கு 30ரூ என்றும், 2001ம் ஆண்டில், அது 20ரூமாக குறைந்தது என்றும், 2011ம் ஆண்டில் 10ரூஆக குறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. இக்காலத்தில் இந்திய பெரு முதலாளிகளின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது, என்பதையும் தெளிவு படுத்தி உள்ளனர்.

மேற்கண்ட விவரத்தில் இருந்து, மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் கொள்கை சமமானது அல்ல. ஒருவருக்கு பெருத்த லாபத்தையும் மற்றொருவருக்கு, பெருத்த நட்டத்தையும், வேலையில்லா இளைஞர்களுக்கு, மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதை அறிய முடியும். இங்கு இயந்திரமயமாதல் என்ற அனுகுமுறை முதலாளித்துவ வளர்ச்சியில், கூடுதல் பங்களிப்பு செய்துள்ளதை தெரிந்து கொள்ள முடியும். நாம் தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில், மனித உழைப்பை வெளியேற்றும் தொழில் நுட்பம், முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டும். நம்முடைய நாட்டின் அனைத்து நகரம் மற்றும் பேரூராட்சிகளில், மனிதர்களைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் போக்கிற்கு எதிராக இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. இது விவாதமும் ஆகவில்லை.

ஒட்டுமொத்தத்தில் பாரபட்சமான அனுகுமுறை அனைத்திலும் வெளிப்படுகிறது, குறிப்பாக சுரண்டலை உயர்த்திப் பிடிக்கிற கொள்கைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை தருகின்றன. அது உழைப்புச் சுரண்டலாகவோ அல்லது சமூக ஒடுக்குமுறை மூலமான சுரண்டலாகவோ இருக்கிறது. வேலைவாய்ப்பிற்கான போராட்டத்துடன் உழைப்பு மற்றும் சமூக சுரண்டலையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

எஸ். கண்ணன்

Related Posts