இதழ்கள் இளைஞர் முழக்கம்

வேர்களை நோக்கி நம் கவனம் திரும்பட்டும் – எஸ்.பாலா

tqwvp_278730

நாம் வாழும் சமூக அமைப்பு உறவுகளால் ஆனதாகும். மனிதர்களிடையே மட்டுமல்ல உலகின் பிற உயிரினங்களிடையேயும் இவ்வுறவு என்பது பிணைக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான உயிரினங்களுடன் மனிதனுக்கு நெருங்கிய உறவு உள்ளது. மனித சமூகத்தில் ஆதிமுதல் இன்று வரை தொடரும் உறவாக தாய்க்கும் சேய்க்குமான உறவு உள்ளது.

உறவு என்பது உணர்வுகளின் சங்கமாகும். ஏராளமான உறவுகள் இருந்து வருகின்ற போதும் தோழர் என்ற சொல் தரும் உத்வேகத்திற்கு ஈடுஇணை இல்லை. தோழமை உறவை விட அற்புதமான உறவு வேறேதும் இல்லை. ஆனால் இன்று உலகமயம் உருவாக்கியுள்ள புதிய சமூக, பொருளாதார அமைப்பானது மனிதனை பணத்தை நோக்கி, பொருளை நோக்கி, தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் சிந்தனையை நோக்கி மனிதனை ஓடவைக்கின்றது. இத்தகைய காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இது இன்றைய அரசியலின் பிரதிபலிப்பு ஆகும்.

தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிமுகவும்,இரண்டாண்டுகளை பூர்த்தி செய்துள்ள மோடி அரசு எப்படி ஆட்சிக்கு வந்தது? இதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்றால், மீடியாவிற்கு பெரும் பங்கு உள்ளது. அரசியல் இயக்கங்கள் தங்களுடைய கருத்துக்களை கொண்டு செல்ல மீடியா என்ற தொடர்பு சாதனம் வழியாக முயற்சிக்கின்றன. அதேசமயம் தன்னுடைய பொருளை விற்பனை செய்ய விரும்பும் சக்திகளும் அதனை செய்கின்றன.

1990களுக்கு முன்பு, அச்சு, ஒலி ஊடகங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தது. நவீன விஞ்ஞான தொழிநுட்பத்தின் வளர்ச்சி புதிய வாசலை திறந்துவிட்டது. ஊடகங்கள் தொடர்ந்து தன்னுடைய பரப்பை அனுதினமும் விரிவாக்கி வருகிறது. அச்சு ஊடகம், ஒலி ஊடகம் இருந்தவரை எழுத்தறிவு பெற்ற, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கே இதனை பெறக்கூடிய நிலை இருந்தது. பஞ்சாயத்தில் வைக்கப்பட்ட தொலைக்காட்சி துவங்கி தனியார் தொலைக்காட்சி, இணையதளம்,கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் வந்தன. நவீன சாதனங்கள் அதனுடைய எல்லைகளை, வீச்சை, தாக்கத்தை தற்சமயம் பன்மடங்கு அதிகரிக்க கூடியதாக மாறியுள்ளது. தங்களுடைய கருத்துகளை எங்கும், எப்போதும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தடையில்லாமல் தொடர்ந்து பரப்பி வருகின்றன. இன்றைக்கு தமிழில் மட்டும் 10க்கும் மேற்பட்ட செய்தி சேனல்கள் உண்டு. இதிலிருந்து செய்தியும் ஒரு வணிகம் தான் என்பதை அறியமுடியும். எந்த செய்தியை எப்படி தருவது என்பதுதான் இப்போது மிக முக்கிய அரசியல்.
தொலைக்காட்சி நடத்துகிறவர்கள் அனைவரும் பெருமுதலாளிகள் ஆவார் யாருடைய கருத்தை பரப்புவதற்காக நடத்துகிறார்கள். முதலாளித்துவ சாதனையை மக்களிடம் பரப்புவதற்காக, அவர்களின் விருப்பத்திற்கேற்ப சிந்தனையை உருவாக்கிடவும் மிகத் தந்திரமான முறையில் இடைவிடாது இயங்கி வருகின்றனர். இவர்கள் இடைவிடாது இயங்கிவருவதன் நோக்கங்களில் முதன்மையானது. முதலில் இடதுசாரி இயக்கத்தை பற்றிய தவறான கருத்தை பரப்புவதும், மக்களை திசை திருப்புவதும்தான். உண்மையான மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பது போல் சில காட்சிகளை காட்டுவதும், அதற்கான முடிவை மக்களிடையே விடுவதாகவும் இவர்கள் நளினமாக எடுத்துரைப்பார்கள்.

உண்மையில் மீடியாக்கள் விவாதிக்கின்ற முறையும் இறுதியில் எந்த தீர்வும் இல்லாமல் கலைகின்ற ஏற்பாடும், மக்களை குழப்புவதாகவே உள்ளது. தங்களை நடுநிலையாளர்கள், எந்தப்பக்கமும் சாயாதவர்களாக காட்டிக்கொள்கிறார்கள் நம்மில் சிலரின் முகத்தையும், அதில் காட்ட தயங்குவதில்லை அதே சமயம் முக்கிய விவாதங்களில் நம் பங்கு இல்லாமல் பார்த்து கொள்வார்கள்.

நம்முடைய போராட்டங்களை காட்டி பரபரப்பை உருவாக்கும் ஊடகங்கள் நம்மை தேர்தலில் எப்படி காட்டியது? மிகவும் திட்டமிட்ட அவதூறுகள் செய்வதும், தோல்விதான் கிட்டும் எனும் அவநம்பிக்கை, கேலி, கிண்டல் செய்து நம்முடைய மதிப்பை அசிங்கப்படுத்துவது என்பதுதான் அதிகம். இத்தகைய வளர்ந்து வருகிற ஊடகத்தை முதலாளித்துவம் சரியாக பயன்படுத்தி தன்னை பலப்படுத்தி வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக மதம் இருப்பதை போன்று தற்சமயம் மக்களின் கோபக்கணையை நீர்த்து போக செய்ய ஊடகங்கள் அயராது முயற்சி செய்கிறது. சாதாரண மக்களை ஆசுவாசப்படுத்த தரமற்ற நகைச்சுவை, பாடல் அளித்து சிந்தனை ரீதியாக மட்டுப்படுத்த கூடிய காரியத்தையும் ஆற்றி வருகிறது குறிப்பாக பெண்களை நுகரக்கூடிய பொருளாக தொடர்ந்து காட்டி வருகிறது.

விளையாட்டை, மக்களின் அறிவுபூர்வமான திறன்களை வளர்க்க கூடிய தமிழ் அலை வரிசைகளை தேடினாலும் கண்டறிய முடியாது. இத்தகைய ஊடகங்கள் தான் மக்களிடையே நெருக்கமான உறவை வளர்த்து வருகிறது. இந்நிலையில் தான் தோழர்களாகிய நாம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றோம். மனித சமூகத்தில் உறவு மிக முக்கியமானது. புதிய உறவுகள் உருவாக்கவும், பழைய உறவுகளை பராமரிக்கவும் மனித வாழ்க்கையில் விழாக்களும், நிகழ்வுகளும் இருக்கிறது.

நாம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம். சுதந்திரமான, சமத்துவமான அமைதியான உலகை படைக்க விரும்புகிறோம். உயர்ந்த லட்சியத்திற்காக நம்முடைய பயணம் தொடர்கிறது. இப்பயணத்தை மேலும் வேகப்படுத்த இன்றைய தினம் இரண்டு பணிகள் அவசியமாகிறது.

நமக்கிடையிலான உறவையையும், நமக்கும் மக்களுக்கும் இடையிலான உறவையையும் நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நமக்கிடையே உள்ள அற்புதமான உறவு தோழமை உறவாகும். தோழமைக்காக எதையும் இழக்கவும், எதற்காகவும் தோழமையை இழக்காத உன்னதமான உறவாகும். மற்ற அத்துனை உறவுகளும் அதற்கு பின்புதான்.

தோழமை, உறவை தொடர்ந்து நெருக்கமாக வளர்ப்பதும், மேலும் விரிவாக்குவதும் இன்றைய அவசர பணியாகும். நம்மிடையே அரசியலாக, தத்துவமாக, நட்பாக உள்ள இந்த உறவை மேலும் மேம்படுத்திட முயற்சிகள் எடுக்க வேண்டிய காலமாக இக்காலம் உள்ளது.

நம்முடைய உறவுகளில் ஏற்படும் இடைவெளியும், மக்களிடம் உள்ள உறவை துண்டிப்பதும் நாம் மரணிப்பதற்கு ஒப்பானது. என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன? தடைகள் என்ன? தடைகளை உடைக்க வழிகள் என்ன? அதற்கான கருவிகள் என்ன? நம்மிடம் உள்ள ஆற்றல்கள் என்ன? நம்முடைய ஆற்றல்களை பலப்படுத்த என்ன செய்யலாம்? என முன்னுக்கு வந்துள்ள கேள்விகள் மூலம் விவாதத்தை உருவாக்குவோம். புதிய விவாதம் மூலம் புதிய சிந்தனையை உருவாக்குவோம். நம்முடைய சிந்தனைய புதிய செயல்களை திட்டமிடுவோம். கடந்த 36 ஆண்டுகாலம் சவால்களை சந்தித்து வளர்ந்து வருகின்ற வாலிபர் இயக்கம்தான் நம்முடைய இயக்கம். நாம் நடந்து வந்த ஒவ்வொரு அடியும் வரலாறாக நம்முன்னே உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய இயக்கத்தின் பணிகள் எழுதப்படாத வரலாறாய் நீண்டுகிடக்கறது. இதற்காக நம்முடைய இயக்கம் செய்த தியாகமும், சந்தித்த இடர்பாடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. நாம் நடத்திய லட்சக்கணக்கான இயக்கத்தின் பின்பும் உழைப்பும், தியாகமும் பொதிந்து கிடக்கின்றன. மக்களுக்காய் நடந்து நடந்து வலிமைபெற்றவை நம் கால்கள்.

நமக்குள் கிடக்கும் அனுபவம் எனும் ஆற்றலையும், கொள்கை எனும் வலிமையும், அமைப்பு எனும் ஆயுதமும் நம்மிடமே உள்ளது. இன்றைய புதிய சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி புதிய போராட்டங்களை முன்னெடுப்போம். சூழல், நெருக்கடி என்ற பெயரில் எதுவும் நம்மை முழுங்கிவிடாமல் தடுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இனியும் நம்மை அடக்கி ஒடுக்கும் ஆற்றல் எந்த தத்துவத்திற்கும் இல்லை. இடதுசாரி சக்திகளை அடக்கியும், ஒடுக்குமுறைகளையும் மேற்கொண்டு அப்புரப்படுத்த நினைக்கும் சக்திகளை வலிமையான செயல்களின் மூலமாக வீழ்த்திடுவோம். மானுடத்தின் மகத்தான தத்துவம் காதலும், அன்பும்தான் என உரத்து முழங்குவோம். சக மனிதனின் மீதான காதலை, அன்பினை வளர்த்தெடுக்க நமது வாலிபர் சங்கத்தைவிட சிறந்த இயக்கம் இங்கு இல்லை.
உலகில் எது அழகு என்றால் உண்மையும், தியாகமும்தான். அத்தகைய அழகே நமது இயக்கத்தின் பேரழகு. அதிகாரத்தில் இருந்தாலும், அரிதாரம் பூசினாலும், ஆடம்பரத்தில் திளைத்தாலும் அவர்கள் பொய்யர்களே என்பதை இந்த உலகம் அறியும். இந்த உண்மை வெற்றி அடைவதற்கு தேவை வலுவான ஆயுதம். போராட்டமே நமக்கான ஆயுதம், போராட்டமே நமக்கான மொழி, போராட்டமே நமக்கான பாதை.

புதிய கருத்துகளையும், புதிய செயல்பாடுகளையும் மேற்கொண்டு புதிய வலுவான போராட்டங்களை உருவாக்குவோம். சின்ன சின்ன அடிகள், முயற்சிகள் மூலம் மிகப்பெரிய பாய்ச்சல் வேக முன்னேற்றத்தை ஏற்படுத்திட நம்முடைய வேர்களை நோக்கி நம்முடைய கவனம் திரும்பட்டும்.தோழர்களே, வலுவான இளைஞர் இயக்கமாக தமிழகத்தில் பரிணமிக்க சவால்களின் காலத்தில் சவால்களை நேருக்குநேர் சந்தித்து முறியடிக்க நம் பங்கினை ஆற்றுவோம்.

Related Posts