இதழ்கள் இளைஞர் முழக்கம்

வெல்லற்கரிய தத்துவம் – செ.முத்துக்கண்ணன்

170 ஆண்டுகளை கடந்தும் இன்றும் உயர்ந்து நிற்கிறது.

அனைத்து நாட்டு சகோதர்களே ஒன்று சேருங்கள் என்று நீதியாளர் கழகத்தில் முழக்கம் முன் வைக்கப்பட்ட போது ” உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ” என வர்க்க அடிப்படையில் எழுப்பிய முழக்கத்தில் துவங்கியது மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரின் உலகை மாற்றும் பயணம். 1847ல் கம்யுனிஸ்ட் லீக்கை உருவாக்கிய போது அதற்கான கோட்பாடுகளை தோழர் ஏங்கல்ஸ் ம், அறிக்கையை மார்க்சும், ஏங்கல்ஸ்ம் இனணந்து உருவாக்கினார்கள்.

1848 மாண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட பின் பல்வேறு மொழிகளிலும் மார்க்ஸ் ஏங்கல்ஸ் முன்னுரைகளோடு மொழி பெயர்த்து வெளிவந்தது.. உலகில் மதபீடங்களின் புத்தகங்களை விட அதிக நாடுகளில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டு இன்றும் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவ ஆயுதமாக இருந்து வருகிறது.

“இச்சிறு பிரசுரமானது பல தொகுதிகளுக்கு சமமானதாகும். இன்று வரையில் அதன் உயிரோட்டமான தன்மை நாகரீக உலகத்தின் போராடும் பாட்டாளிகள் மற்றும் அணி திரட்டப்பட்டோர் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது”. என தோழர் லெனின் எழுதினார்.

கம்யூனிஸ்ட் அறிக்கை உருவாவதற்கான பின்னணி என்பது அன்றைய ஜெர்மன். பிரான்சு, பிரிட்டீஸ் அரசுகளின் கீழ் தொழிலாளி வர்க்கம் சந்தித்துவந்த சொல்லெணா துயரங்களை சந்தித்து வந்த தருணத்தில் பல்வேறு போராட்டங்கள் ஆங்காங்கு தொழிலாளர்களே நடத்தி வந்தனர். இங்கிலாந்தில் சாசன இயக்கமும் குறைந்த வேலை நேரம், சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த தருணமாக இருந்தது. இந்த சூழலில் நம்பிக்கை குறித்து ஒரு கம்யூனிஸ்டின் வாக்கு மூலத்தின் நகல், பின்னர் இதனையும் திருத்தி கம்யூனிசத்தின் குறிக்கோள்கள் அல்லது கோட்பாடுகள் என ஏங்கல்ஸால் எழுதப்பட்டது. ஏங்கல்ஸ் 1890 ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் இந்த அறிக்கையின் அடிநாதத்திற்கு காரணம் மார்க்ஸ்தான் என அடி கோட்டிட்டு எழுதினார்.
அறிக்கையானது மார்க்சியத்தின் தத்ததுவத்தை முதலாவதாகும், முழுமையாகவும் விளக்குகிறது. நீண்டகால மற்றும் நடைமுறை உத்திகளை கொண்டதாக உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்கு வதற்கான தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஆயுதமாக உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கையானது வரலாற்று ரீதியான வேர்களைப் கொண்டுள்ளது.

இயக்கவியல் பொருள் முதல் கண்ணோட்டத்தில் 170 ஆண்டுகளை கடந்து இன்றும் பொருந்தி வர காரணம் அது உண்மையான தன்மையையும், சூழலையும், முதலாளித்துவத்தின் குணாம்சத்தையும் இதுவரையான சமூக மாறுதல்களுக்கு காரணமாக அமைந்த உற்பத்தி உறவுகள் குறித்து துல்லியமான மதிப்பீட்டிற்கு வந்ததே ஆகும். அடிப்படையில் சமூக, அரசியல், பொருளாதாரம், தத்துவ தளத்தினுள் இருத்தி இதுவரை ஏடறிந்த வரலாறு அனைத்துமே வர்க்க போராட்டங்களின் வரலாறே என்று சொன்னதோடு விஞ்ஞான கம்யூனிசத்திற்கான சாத்தியப்பாட்டை தெளிவாக வரையறுத்தார்கள். அன்றைய நிலையில் சோசலிச அறிக்கையாக வெளியிடக்கூடாதா? என்ற கருத்தாக்கம் இருந்த தருணத்தில் பல்வேறு சோசலிசகுழுக்கள், சோசலிச கற்பனாவாதிகள், கனவு கோட்டைகளை கட்டி அதற்கான ஆலொசனைகளை சொல்லி வந்த தருணத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் மட்டுமே விஞ்ஞான பூர்வமாக சுரண்டலற்ற சமூகத்தை படைப்பதற்கான நிபந்தனைகளை துல்லியமான முறையில் வரையறுத்தார்கள். அதற்காக போராடுபவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று அழைப்பதும் அதனால் அந்த அறிக்கையை கம்யூனிஸ்ட் அறிக்கை என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்தனர்.

கம்யூனிஸ்ட் அறிக்கை இன்று வரை வாய்ப்பந்தல் இடாமல் ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும் கம்யூனிச பூதத்தை கண்டு என்று தெள்ள தெளிவாக பறை சாற்றியது. தற்போதைய உற்பத்தி உறவுகளை அழிப்பதல்ல, இதற்கு முந்தைய அனைத்து சொத்து உறவுகளும் வரலாற்று நிலைமைகளின் மாற்றத்தை தொடர்ந்து உருவாகும் வரலாற்று மாற்றங்களுக்கு தொடர்ந்து உட்பட்டதாக இருந்துள்ளது. அடிமை சமூக உற்பத்தி உறவுகளை நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி உறவுகள் மாற்றியது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மாற்றியது. இதனையும் சோசலி பாணியிலான உற்பத்தி உறவுகள் மாற்றி அமைக்கும் என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கியதே கம்யூனிஸ்ட் அறிக்கை இன்று பொருந்தி வருவதற்கான காரணமாகும்.

இயக்கவியல் முறை, ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், ஜெர்மானிய தத்துவம், பிரெஞ்சு சோசலிசம் ஆகிய அடிப்படைகளையும், புராதன சமூகம் குறித்தும், செல் கொள்கை, எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்கடத்தல் விதி, மனித இன வளர்ச்சி பற்றிய கொள்கை, இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றை கம்யூனிஸ்டு அறிக்கை விளக்கமாக கூறுகிறது.

ஆடம்ஸ்மித் காலம் துவங்கி இன்று வரை பொருளாதார சுரண்டலை முதலாளித்துவம் மிக சாமார்த்தியமாக நடத்தி வருகிறது. லாபம் உறுதியாக கிடைக்க வேண்டுமானால் உபரி மதிப்பை உறுதி செய்ய வேண்டும், அதற்கான உழைப்பு சக்தியில் ஒரு பகுதியை முழுமையாக வேலையில்லாமல் வைத்திருப்பது அவசியம் என ஆடம் ஸ்மித் உபதேசித்தார். அதன் தொடர்ச்சி இன்று வரை முதலாளித்துவம் தன்னுடைய லாப வேட்கைக்காக கொடூரமாக உழைப்புச் சுரண்டலை நடத்தி வருகிறது. வேலையில்லாத திண்டாட்டத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.

சொத்து குவிப்பிற்கு ஆதாரம் உழைப்புதான் என்று சொன்ன ஆடம் ஸ்மித். டேவிட் ரிக்கார்ட்டோ ஆகியோர் உழைப்பின் மதிப்பு குறித்த கொள்கைக்கும் அடிகோலினார்கள். எனினும் சுரண்டலுக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

தன்னுடைய லாப பசிக்காக உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்டு கலகம் புரிந்து விடக்கூடாது என்பதற்காக பல அடையாளங்களுக்குள் போட்டு அடைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது முதலாளித்துவ அமைப்பு முறை. இதனை உடைத்தெறிய தனது ஆய்வின் மூலம் மூலதனத்திற்கும் உழைப்புக்கும் உள்ள உறவின் ஒன்றுக்கொன்றுக்கு உள்ள முரண்பட்ட அம்சங்களை மார்க்ஸ் சுட்டிக் காண்பித்தார். மார்க்ஸ் உபரி மதிப்பை கண்டறிந்து விஞ்ஞான பூர்வமாக நிருப்பித்தார்.

1844 முதல் 1848க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்க்ஸ். ஏங்கல்ஸ் இருவரும் தனியாகவும். கூட்டாகவும் ஏராளமான புத்தகங்கள், கட்டுரைகளை எழுதினார்கள். குறிப்பாக பொருளாதார மற்றும் தத்துவார்த்த குறிப்பேடுகள், 1845ல் பாயர்பார்க் பற்றிய ஆய்வு, 1847ல் தத்துவத்தின் வறுமை.நூல்களையும், 1845ல் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூலையும் எழுதினார்கள்.

1845ல் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூலை ஏங்கல்ஸ் எழுதினார். புனித குடும்பம், ஜெர்மானியத் தத்துவம் என்ற நூல்களையும் எழுதினார்கள். உற்பத்தி உறவுகள் மாறுவதன் விளைவாக சமூகம் மாற்றமடைகிறது என்று அவர்கள் சுட்டி காண்பித்தார்கள். இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டதோடு இயக்கத்தின் வரலாற்று பொருள் முதல்வாத கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினர்.

முதலாளித்துவ வர்க்கமும். பாட்டாளிகளும், பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்களும், சோசலிச மற்றும் கம்யூனிச இலக்கியங்களும், தற்போதுள்ள பல்வேறு எதிர்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுகள் என நான்கு தலைப்பாக பிரித்து விவாதிக்கிறது. இரண்டாம் பத்தியின் முக்கியமான அம்சம் சொத்துடைமை, குடும்பம், நாடுகள்/ தேசிய இனங்கள். மதம் குறித்து விரிவாக அறிக்கை பேசுகிறது. ஒரு வலுவான அரசியல் தலைமையாக கம்யூனிஸ்ட் கட்சி மாறும் போது தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை சாத்தியப்படுத்த முடியும்.

இவற்றில் சொத்துடைமையை தனியார் என்பதில் இருந்து சமூக உடைமை ஆக்க வேண்டும் என போதிக்கும் தருணத்தில் அறிக்கையின் மீது முதலாளித்துவாதிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குடும்ப உறவுகளை கம்யூனிச்ம் அழித்துவிடும் என்று. குறிப்பாக முதலாளித்துவக் குடும்பத்தின் உடன் நிகழ்வுகள் மறையும் போது கூடவே முதலாளித்துவ குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும். மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்துவிடும். ஆனால் தெளிவாக குடும்ப சமத்துவத்தை, உயர்ந்த நாகரிகம் கொண்ட குடும்ப உறவுகளை கொண்டதாக கம்யூனிச சமூக குடும்பங்கள் இருக்கும் என்று கூறுகிறது. பெண்களை வெறும் உற்பத்தி கருவிகளாக மட்டுமே முதலாளித்துவம் பார்க்கிறது. இந்த நிலை ஒழிக்கப்பட வேண்டும். முதலாளித்துவ திருமண முறைகளே உண்மையில் பெண்களை பொதுவாக்கிக் கொள்ளும் முறையாக உள்ளது. இந்த உற்பத்தி முறையை ஒழிக்கும் போது பெண்கள் குறித்த மோசமான சமூக பார்வையும் ஒழிக்கப்படும் என அறிக்கை வலியுறுத்துகிறது.

தாய்நாட்டையும், தேசியத்தன்மையைம் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்ட்கள் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தொழிலாளர்களுக்கு தாய் நாடு என்பது இல்லை. அவர்களுக்கு இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியமாகும். பாட்டாளி வர்க்கம் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் அதிகாரம் பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாய் மாற வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொள்ள வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வர்த்தக சுதந்திரம், உலகச் சந்தை, பொருள் உற்பத்தி முறையிலும் ஒருப்படித்தானவையாக உள்ளது. இவற்றின் காரணமாக வெவ்வேறு நாடுகளது மக்களுக்கும், தேசிய வேறுபாடுகள், பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன. இவற்றை பாட்டாளி வர்க்க மேலாண்மையானது மேலும் துரிதமாக்கும். என்று சொன்னது இன்றும் பொருந்து வருகிறது.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான் ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈடடுவதுதான் தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி என்பதை அறிய முடிகிறது. அறிக்கை வெளிவந்து 170 நாடுகளுக்கு பின்பு இன்று உலகின் மூன்றில் ஒருபகுதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தத்துவமாக மாறியுள்ளது. மொத்த உலக நாடுகளில் சரி பாதி நாடுகளில் ஆட்சியிலும், கூட்டணியிலும், ஆதரவோடும் கம்யூனிஸ்ட்களால் அரசாங்களில் பாட்டாளிகளின் நலன்களை பேண முடிகிறது என்ற வரலாற்று உண்மையை புறந்தள்ள முடியாது.

1917 ல் ரஷ்ய புரட்சியினை நடத்தி முடித்த லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி தெளிவாக கூறியது. கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு என்பது,
1. நிலத்தின் சொத்துடைமையை ஒழித்தலும் நில வாடகைகள் அனைத்தையும் பொது காரியங்களுக்காகப் பயன்படுத்தும்
2. கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி
3. பரம்பரை வாரிசாய் சொத்துடைமையை பெறும் உரிமை அனைத்தையும் ஒழித்தல்
4. நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோர், கலக்காரர்கள் ஆகியோரது சொத்தையும் பறிமுதல் செய்தல்
5. அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலமாய் கடன் செலவாணியை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்
6, செய்தி தொடர்பு, போக்குவரத்து சாதனங்களை அரசின் கைகளில் கொண்டு சேர்த்தல்
7. பொதுத்திட்டத்தின் பிரகாரம் ஆலைகளையும், உற்பத்திக் கருவிகளையும் விரிவாக்குதலும். தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டு வருதலும், பொதுவாய் மண் வளத்தை உயர்த்துதலும்
8. உழைப்பதை சரிசமமாய் எல்லொருக்கும் உரிய கடமையாக்குதல், முக்கியமாய் விவசாயத்திற்காக தொழிற் பட்டாளங்களை நிறுவுதல்
9. விவசாத்தைத் தொழில் துறையுடன் இணைத்தல், தேச மக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவச் செய்து நகரத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான பாகுபாட்டைப் படிப்படியாக அகற்றுதல்.
10, எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுக் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல், ஆலைகளில் குழந்தைகளது உழைப்பின் தற்போதைய வடிவை ஒழித்திடல், கல்வியை பொருள் உற்பத்தியுடன் இணைத்தல் இன்னபிற.,,
இவற்றை சாத்தியப்படுத்த வர்க்கங்களையும், வர்க்க பகைகளையும் கொண்டிருந்த பழைய முதலாளித்துவ சமுதாயத்த்துக்குப் பதிலாய் ஒவ்வொருவரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதையே எல்லொரும் நிபந்தனையாய் கொண்ட மக்கள் கூட்டு ஒன்று எழுந்து விடும்..

என்ற நடைமுறை உதாரணத்தை ருஷ்யபுரட்சியின் 70 ஆண்டுகால பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நிரூபித்துக்காட்டியது. இன்றும் பல நாடுகளில் நடைமுறையில் இதனை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. உண்மையை மூடி மறைப்பவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள், தமது கருத்துக்களையும், நோக்கங்களையும், குறிக்கோள்களையும் பட்டவர்த்தனமாக வெளிப்படையாக சொல்லும் திறன் படைத்தவர்கள். அதனால் தான் அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று, பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியை தவிர இழப்பதற்கு எதுமில்லாதவர்வள், அவர்கள் வென்று அடைவதற்கு அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் …

Related Posts