இதழ்கள் இளைஞர் முழக்கம்

வெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தனது முதலாம் ஆண்டை மே 25 ஆம் தேதி நிறைவு செய்தது. 140 சட்டமன்ற தொகுதியில் 91 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரும்பான்மையோடு கடந்த ஆண்டு அது ஆட்சியை பிடித்தது. கனடா நாட்டிற்கு சற்றேறக் குறைய ஜனத்தொகையான 3 கோடியே 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலம் இது.

பாசிச அமைப்பின் பின்புலத்தோடு இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜகவின் தூண்டுதலோடு நாடு முழுவதும் வெறுப்பரசியல் பரப்பிவிடப் படுகிறது. இந்தியாவின் சரி பகுதி பேர் வறுமையில் வாடுகிறபோதும் இவர்கள் பசு பாதுகாப்பு அரசியலில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். வறுமை மற்றும் நம்பிக்கையின்மையை எதிர் கொள்வதைவிட அவர்களுக்கு குறுகிய தேசியவாதத்தை தூண்டிவிடுவது எளிதாகவுள்ளது. பாதுகாப்பு என்பது முழுமையான நல்ல வாழ்க்கை வாழும் சூழல் என்பதாக இல்லாமல் துணிவான ராணுவமும், காவல்துறையும் இருப்பதே பாதுகாப்பு என்று உலகம் அர்த்தப்படுத்திக் கொள்கிறது.

உலக நிலைகளுக்கே மாற்றை போதிக்கும் கேரளா

கேரளா இது போன்ற தற்கால அலைகளுக்கு எதிராகவும், விதிவிலக்காகவும் திகழ்கிறது. சக்திவாய்ந்த சமூக சீர்திருத்தங்களும், வலுவான கம்யூனிஸ இயக்கமும் கடந்த 60 ஆண்டுகளில் கேரளாவில் சமூக முன்னேற்றத்தை உருவாக்கும் சிறப்பான அடித்தளத்தை கட்டமைத்துள்ளது.

சான் மாரினோ குடியரசுக்கு பிறகு உலகிலேயே தேர்தல் மூலம் 1957 ல் ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாநிலம் கேரளாவாகும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவார்த்த நிலைகளை கட்டமைத்த சிற்பி இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் இவ்வரசு அமைந்தது. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் சாமானிய மக்களின் நலனை முன்னேற்ற இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இவ்வரசின் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த அரசு 1959 ல் சட்டவிரோதமாக மத்திய அரசால் ஆட்சிக் கலைப்பு செய்யப்பட்டது. ஆனால் இது இடதுசாரிகளை தடுத்து நிறுத்திட முடியவில்லை. மீண்டும் 1965, 1967, 1980, 1987, 1996, 2006 மற்றும் 2016 களில் மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். 1982 க்கு பிறகு இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மாறி, மாறி ஆட்சியில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. கேரள மக்கள் தங்களின் அரசு நிர்வாகத்தை இடது மற்றும் வலது ஆகிய இரு பெரும் சக்திகளிடையே சமன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் உள்ள இடதுசாரிகளின் வலுவான தாக்கம் மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தையே இடது திசையில் மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பிற்கே வந்தால் கூட இடது சார்ந்த அரசின் பொதுத் தன்மையை வலதின் பக்கம் திருப்பிட முடியாது. இதுவே அம்மாநிலத்தின் சமூக குறியீட்டை வியக்கத் தகும் வகையில் முன்னேற்றியுள்ளது. இந்தியாவில் அதிகப்படியாக கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளா (93.9 சதவீதம்) அதிகப்படியான உயிர்வாழும் காலம் (77 வயது). அதிகப்படியான ஆண், பெண் விகிதாச்சாரம் (1084 பெண்களுக்கு 1000 ஆண்கள்) எனவே கேரளா மனிதவள குறியீட்டில் சிறந்த மாநிலமாக உள்ளது.

இடதுசாரி அரசின் திட்டங்கள் முழுமையையும் காங்கிரஸ் அரசால் நீர்த்து செய்துவிட முடியாத போதும், பல்வேறு சமூக நல திட்டங்களை அவை குறைத்தும், வெட்டியும் மோசமடைய செய்தனர். மீண்டும் இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சமூக நலன் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை மறுவரையறை செய்து பழைய நிலைக்கு அதைவிட மேம்பட்ட நிலைக்கு மீட்டு வருவதை செய்கின்றனர்.

உதாரணமாக 2010 ல் இடது அரசு இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் சார்ந்து அவர்களுக்கு சட்டரீதியான உரிமை, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கும் கொள்கையை உருவாக்கியது. வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை நீர்த்துப்போகச் செய்தனர். மீண்டும் இடதுசாரிகள் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இத்திட்டங்களை வழங்கியதோடல்லாமல் இதை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் இடம் பெயர்ந்து வருபவர்களுக்கு எதிரான நிலை எடுத்து வருகின்றனர். ஆனால் கேரளாவோ இடம் பெயர்ந்து வருபவர்களுடன் சமூக உறவை ஏற்படுத்தாவிட்டால் சமூகம் சீர்கெட்டுவிடும் என்று கருதுகிறது.

அனைவரும் உள்ளடங்கிய சமூகத்தை உருவாக்க பள்ளிகளில் இருந்தே அதற்கான துவக்கம் அமையும் தனியார் கல்வி மீதான நம்பிக்கை மோகம் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில், கேரள இடதுசாரி அரசு, பொதுப்பள்ளிகளை (அரசு பள்ளிகள்) வலுப்படுத்த முடிவெடுத்துள்ளது. தனியார் கல்விநிலையங்கள் பல்வேறு வசதிவாய்ப்புகளை தரலாம். ஆனால், அதை பெறக்கூடிய அளவு வசதி வாய்ப்பு உடையவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும். கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து தனியாருக்குத் தாரைவார்ப்பது, அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்தும், ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு முன்மாதிரி மாநிலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. எனவே கேரளாவில் கல்விக்கான சந்தை இல்லாமல் போனது. பல தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை வலுப்படுத்த அரசு பல முன் முயற்சிகளை எடுப்பதோடு, மூடப்பட்ட தனியார் பள்ளிகளையும் கையில் எடுத்துள்ளது. கல்வியை சந்தைபடுத்துவதை அரசு தடுத்துள்ளது.

சுய மரியாதை இன்றி கல்வி இல்லை. சாதிய கொடுமை, பாலியல் பாகுபாடு தொடரும் வரை இளம் சமூகம் கல்வியறிவு பெறமுடியாது. இடது ஜனநாயக முன்னணி இதை சமூக கொடுமைக்கு எதிரான நடவடிக்கை என்பதோடு மட்டும் நிறுத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளையும் உருவாக்கித் தருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசு பள்ளிகளிலும் பெண்கள் கழிப்பறையில் சானிட்டரி பேட் அழிப்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களை உத்வேகம் ஊட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் சமூக கலாச்சார குழுக்கள் அமைக்கவும் திட்டங்கள் உள்ளது. அதே போல் விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் குளங்கள் அமைக்கும் திட்டமும் உள்ளது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு கெட்டு விடகூடாது என்ற நோக்கோடு மே 29 அன்று கேரளா முழுமையான மின்சார இணைப்பு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 150000 மின் வினியோக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திற்கான நிதி

1990களில் மக்களுக்கான திட்டமிடல்கள் என்பதற்கான முன்முயற்ச்சிகள் எடுத்த கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளார். அதில் ஒன்று 1000 அரசு பள்ளிகளை சர்வதேச கல்வித் தரத்திற்கு உயர்த்துவது என்பதாகும்.

இதற்கான நிதி எங்கிருந்து திரட்டப்படும்? வசதியானவர்களிடமிருந்து வரிகள் மூலமும், வர்த்தகத்தின் மூலமும் இது திரட்டப்படவுள்ளது. வசதியானவர்கள் வரி கட்ட மறுப்பார்கள். இடதுசாரி அரசு அதன் பலத்தை கொண்டு அதை எதிர்கொள்ளும். அதே சமயம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வர்த்தக வருமானத்தையும் உயர்த்தும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாசம் செய்யப்பட்ட 13 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது புத்துயிர் பெற்று லாபத்தில் இயங்கத்துவங்கியுள்ளது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அரசின் முன்முயற்சிக்கு உறுதுணையாகவும் இவை உள்ளன.

கேரளாவில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்ககத்தான் செய்கிறது. அது ஒன்றும் சொர்க்கம் அல்ல. கேரள மாதிரி என்று ஒன்றில்லை. 2006 லிருந்து 2016 ல் வரிவருவாயின் பங்கு குறைந்துள்ளது. ஆனாலும் பொதுத்துறை நிறுவனத்தை லாபகரமாக இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கருவூலத்தின் இதயம் போன்ற வர்த்தக வரி வருவாயும் குறைந்து வருகிறது. ஆனபோதும் அரசை இவை பெரிதாக சிந்திப்பதை தடுக்க முடியவில்லை. கேரள கூட்டுறவு வங்கி என்பதை புதிதாக உருவாக்கி அதன் மூலம் பெரிய அளவில் நிதிதிரட்டி மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீட்டுருவாக்கம் செய்கின்றனர். பெரிய பிரச்சினைகளுக்கு தைரியமான சிந்தனை தேவைப்படுகிறது.

ஆனபோதும் பெரிய செய்கைகளுக்கான சைகைகளை மேற்கொண்டே பயணிக்கிறது. கொச்சி மெட்ரோ ரயிலில் திருநங்கைகள் மற்றும் பெண்களை பயணச்சீட்டு பரிசோதகர்களாகவும், ரயில் ஒட்டிகளாகவும் நியமித்து பல தடைகளை இடதுசாரி அரசு உடைத்துள்ளது. இது திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டை தகர்க்கிறது. இது போதுமானது அல்ல என்றாலும் இந்தியாவில் இது ஒரு சமூக வெற்றி. இது கேரள அரசால் 1998 ல் உருவாக்கப்பட்ட குடும்பஸ்ரீ (சுயஉதவி குழு போன்றது) திட்டத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். இத்திட்டம் வறுமை ஒழிப்பிற்கான ஒரு அடிப்படை கட்டமைப்பாக அமைந்தது. இக்குழுவில் இருந்த பெண்கள் அவர்கள் இருந்த பகுதியில் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்தனர்.

பெண்களையும், திருநங்கைகளையும் சமூகத்தோடு உள்ளிணைக்கும் கோரிக்கையை உருவாக்கியுள்ளது. அது இன்னும் நிறைவடைந்திடவில்லை. மாநிலத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் ஒரு வேளை உணவையும் அனைவருக்கும் வீடு என்பதையும் முழுமையாக உத்தரவாதப்படுத்திட வேண்டியுள்ளது. குடும்பஸ்ரீ திட்டமும் அது போன்ற மற்றபல திட்டங்களுமே கேரள இடதுசாரி அரசின் முதுகெலும்பாகும்.

வெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில், அமைதி, நீதி மற்றும் மக்கள் நலன் என்கிற எதிர்காலத்தோடு கேரளா எனும் சிறுபகுதி தன்னை சோதனை களமாக மாற்றிக் கொண்டுள்ளது.

தமிழில் – ச.லெனின்

Related Posts