இதழ்கள் இளைஞர் முழக்கம்

வெண்ணிற இரவில் ஒரு முதியவரின் புறப்பாடு – கமலாலயன்

வெண்ணிற இரவில் ஒரு முதியவரின் புறப்பாடுகமலாலயன்

                மானுட சமுதாயத்திற்கு சோவியத் ஒன்றியம் பல கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது இலக்கியம். குழந்தை இலக்கியத்திற்கும், நாவல் குறுநாவல் இலக்கியத்திற்கும் அதனுடைய பங்களிப்பு அளப்பரிய ஒன்று. சிறுகதைகள் விஷயத்திலும் அவ்வாறே. ஆண்டன் செகாவ் ஒருவர் போதுமே, குறிப்பான ஓர் எடுத்துக் காட்டிற்கு நாவல் என்கிற பேரிலக்கிய வடிவம் தோன்றி வளர்ந்த தொடக்க காலத்திலேயே, இரண்டு மகத்தான, சமகாலத்திய நாவலாசிரியர்களைத் தந்த பூமி, சோவியத் மண். ஒருவர் லியோ டால்ஸ்டாய், மற்றொருவர் ஃபியோதர் மிகைலோவிச் தாஸ்தயேவ்ஸ்கி. இந்த இருவரின் படைப்புகளும் இன்றளவும் உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளைக் கவர்ந்திழுப்பவையாக அமைந்திருக்கின்றன. இவ்விரு தரப்பினர் மட்டுமின்றி, அனைத்து விதமான இலக்கிய ரசிகர்களையும், வாசகர்களையும் இவர்களுடைய நாவல்களும், கிற படப்புகளும் தொடர்ந்து வசீகரித்து வருகின்றன.

லியோ டால்ஸ்டாய், 09/09/1828 அன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 220 கி.மீ. தெற்கே அமைந்துள்ள யாஸ்னயா போல்யானா என்னும் பெரிய நிலப்பிரபுத்துவப் பண்ணைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் நிகலோய் இலியிச் டால்ஸ்டாய்க்கு 5 குழந்தைகள். அவர்களுள் நான்காவதாகப் பிறந்தவர் லியோ டால்ஸ்டாய். இளமையிலேயே பெற்றோர்களை இழந்ததால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். காஸான் பல்கலைக் கழகத்தில், 1844 இல் சட்டம், கீழைத்தேச மொழிகள் ஆகியவற்றைப் பயிலத் தொடங்கினார். இவரது ஆசிரியர்களின் மதிப்பீடு இது, “ இவரால் படிக்க முடியாது; படிக்க வேண்டும் என்கிற விருப்பமும் இவருக்கு இல்லை” பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, யாஸ்னயா போல்யானாவிற்குத் திரும்பி திரும்பி விட்டார். அதன்பின், அவரது வாழ்வின் பெரும் பகுதியை மாஸ்கோவிலும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் செலவிடுகிறார். சூதாடுவதில் பெரும் பணத்தை இழந்து கனாளியான நிலையில், காகஸஸ் என்ற நகரிலிருந்த தனது மூத்த சகோதரரிடம் போய்ச் சேருகிறார். இராணுவப் பணியில் சேர்கிறார். இவர் எழுதத் தொடங்கிய காலகட்டம் இதுதான்.

சுயசரிதைத் தன்மையில் அமைந்த மூன்று நாவல்களை ஒரே தொடராக 1852 – 1856 காலகட்டத்தில் எழுதினார் டால்ஸ்டாய். அவை : குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், இளைய பருவம் ஆகியவை. நடுவே கிரீமியப் போரில் இவர் பங்கெடுக்க நேர்ந்த சமயம். ‘செவஸ்தபோல் சித்திரங்கள்’ (1855) எனும் தொகுப்பை எழுதினார். இராணுவ சேவையிலும், 1857 மற்றும் 1860-61 ஆம் ஆண்டுகளின் போது ஐரோப்பா முழுவதிலும் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திலுமாக டால்ஸ்டாய் ஏராளமான அனுபவங்களைப் பெற்றார். பாரிஸ் நகரத்தில் ஒரு பொது இடத்தில் தூக்கிடுதல் காட்சியை 1857 இல் அவர் காண நேர்ந்தது. அது அவரது எஞ்சிய வாழ்நாள் முழுமையிலும் பாதிப்பைச் செலுத்திய ஒன்று. மேற்கண்ட காலகட்டத்தின் அனுபவங்களே பிற்காலத்தில் அவரது சிந்தனைகளின் மூலவளங்களாய் அமைந்தன. பாரிசில் தான் கண்ட அந்தக் காட்சியைப் பற்றி டால்ஸ்டாய் தனது நண்பர் வாஸிலி போட்கினுக்கு பின்வருமாறு எழுதினார்: “..மக்களைச் சுரண்டுவதற்கு மட்டும் அரசு சதி செய்யவில்லை; அதோடு கூட தனது குடிமக்களை ஊழல் நிறைந்தவர்களாக்கவும் சதி செய்கிறது. ஆகவே இனிமேல் எந்த வகையிலும், எந்த இடத்திலும் நான் அரசாங்க சேவையில் ஈடுபடவே மாட்டேன்.” பிரான்சில் 1861 இல் அவர் சந்தித்த பியர்ரெ ஜோஸப் புரூதோன், ‘பிரெஞ்சில் போரும் அமைதியும்’ என்ற புத்தகத்தை எழுதியவர். டால்ஸ்டாய், தனது மாபெரும் எதிர்கால நாவலின் தலைப்பை புரூதோனின் அந்த நூலிலிருந்துதான் கடனாகப் பெறுகிறார். இவ்விருவரின் சந்திப்பின் போது நிகழ்ந்த விவாதங்களின் போது, கல்வி அச்சு இயந்திரம் ஆகிய இரண்டு அம்சங்களே முதலிடமும், முக்கியத்துவமும் பெறுகின்றன. டால்ஸ்டாய், கல்வி குறித்த தனது சிந்தனைகளில் இச்சந்திப்பைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “புரூதோனுடன் எனது உரையாடலை நான் மீண்டும் நினைவு கூர்ந்தால், எனது சொந்த அனுபவத்தில் அது எனக்குக் காட்டுவது, நமது காலத்தில் கல்வி – அச்சியந்திரம் இரண்டின் முக்கியத்துவத்தையும் முழுமையாக உணர்ந்தவர் அவர் ஒருவர்தான் என்பதே.”

இந்தச் சந்திப்பின் உத்வேகம் டால்ஸ்டாயை உந்தித் தள்ளியது. தனது யாஸ்னயா போல்யானாவிற்குத் திரும்பியதுமே அவர், ரஷியாவின் ஏழை விவசாயிகளின் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தரும் பொருட்டு, 13 பள்ளிகளை நிறுவினார். அந்த விவசாயிகள், நிலத்துடன் பிணையடிமைகளாக வாழ்ந்திருந்தவர்கள். அந்த 1861 ஆம் ஆண்டில்தான் விடுதலை பெற்றிருந்தனர். தான் நிறுவிய பள்ளிகளின் நோக்கங்களையும், கொள்கைகளையும் “யாஸ்னயா போல்யானாவில் அமைந்துள்ள பள்ளி” என்ற தன் கட்டுரையில்(1862) டால்ட்hய் வரையறுக்கிறார். ஜார் அரசின் காவல்துறையின் தொடர்ச்சியான கெடுபிடிகளால் இப்பள்ளிகளின் ஆயுள் மிகக் குறைந்த காலமே நீடித்தது. ஜனநாயகபூர்வமான, உடலுழைப்புக்கும், தாய்மொழிவழிக் கல்விக்கும் முன்னோடியாய் அமைந்த பள்ளி இது.

விக்டர் ஹியூகோவின் “லெ மிஸரபிள்ஸ்”(தமிழில்: ஏழை படும்பாடு கவியோகி ச.து.சுத்தானந்த பாரதி) நாவலைப் படித்து விட்டு அவரைப் பாராட்டி, சந்தித்தபின் இவருடைய அரசியல், இலக்கிய வளச்சிப் போக்கு ஒரு வடிவம் பெறுகிறது. போர்க்கள வருணனைகளில் ‘லெ மிஸரபிள்ஸ்’ நாவலிலும், டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலிலும் காணப்படும் ஒற்றுமையில் இருந்து இத்தாக்கம் புலப்படும். போரும் அமைதியும் நாவல் மிகப்பிரம்மாண்டமானது. 580 பாத்திரங்களைக் கொண்டது. பலர் வரலாற்றில் இடம் பெற்றிருந்த உண்மை மனிதர்களே. மற்றவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். குடும்ப வாழ்க்கையிலிருந்து, நெப்போலியனின் தலைமையகம் வரை கதை செல்கிறது. ரஷியாவின் முதலாம் அலெக்ஸாண்டரின் அரசவையிலிருந்து ஆஸ்டெரிஸிட்ஸ், போரோடினோ போர்க்களங்கள் வரை பயணிக்கிறது. டிசம்பர் புரட்சிக்கான காரணங்களை ஆராய்வது தான் டால்ஸ்டாயின் நோக்கம் என்பது நாவலினுடைய கடைசி அத்தியாயங்களில் தெளிவாகிறது. நெப்போலியன், அலெக்ஸாண்டர் போன்ற தனிநபர்கள் முக்கியத்துவமிக்கவர்களாகக் கருதப்படவில்லை.

‘அன்னா கரீனினா’ நாவல் டால்ஸ்டாயின் படைப்புகளில் மிகவும்புகழ்பெற்றது. முக்கோணக் காதல் கதையான இதில், அன்னா தன் கணவனுக்கும் காதலனுக்கும் நடுவே தன்னை மையமாகக் கொண்டு நடக்கும் மனப்போராட்டங்களில் படும் அவதிகளே நாவலின்மையம். டால்ஸ்டாயின் கருத்திலேயே ‘அன்னா கரீனினா’ தான் தனது உண்மையான முதல் நாவல் எனவும், ‘போரும் அமைதியும்’ ஒரு நாவலுக்குரிய மதிப்பைப் பெறாது என்றும் தெரிகிறது. இதன் பிறகு வந்த ‘இவான் இலீயீச்சின் மரணம்’, ‘என்ன செய்ய வேண்டும்?’ போன்ற படைப்புகள் கிறிஸ்தவ மதத்தில் கலகத்தன்மை மிக்க சிந்தனைகளை முன் வைத்தவை. எனவே அவர் கிறிஸ்தவ பழமைவாத தேவாலயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். பின் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவலில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவாலயத்தின் இரட்டை வேடத்தையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அநீதியையும் அம்பலப்படுத்த முயன்றார்.

மனைவி சோபியா டால்ஸ்டாயாவிடம், திருமணமான உடனேயே தனது முந்தைய வாழ்க்கை பற்றிய டயரிகளை டால்ஸ்டாய் தந்திருந்தார். ஆரம்பகால குடும்ப வாழ்க்கை மழ்ச்சியாகத்தான் இருந்துள்ளது. போரும் அமைதியும், அன்னா கரீனினா போன்ற பெரிய நாவல்களை எழுதுவதற்குறிய சுதந்திரமும், ஓய்வும் டால்ஸ்டாய்க்குத் தரப்பட்டுள்ளன. இந்தத் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள்.

1870 இல், ஆன்மிகரீதியான ஒரு விழிப்புணர்வு பெற்றதாக உணர்ந்த டால்ஸ்டாய், மென்மேலும் கலகத் தன்மையுடையவராக மாறத் தொடங்கிய போதிலிருந்துதான் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் நேர்ந்தன. அவருடைய பண்ணை நிலம் சார்ந்த பெருஞ்செல்வத்தை ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதென முடிவு செய்தது, அவரது இல்லற வாழ்க்கையைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. இறுதிவரை சீர் செய்ய முடியாமற் போன இந்தத் துயர வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, பனி கொட்டிக் கொண்டிருந்த ஓர் இரவில் இரயிலில் பிரயாணம் செய்கிறார் டால்ஸ்டாய். அப்போது அவருக்கு வயது 82. எங்கே போவது என்பதில் எவ்வித திட்டமிடலும் இல்லாமல், அஸ்டபோவோ என்ற ஒரு சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடை பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்து விடுகிறார். பனிக் குளிரின் கடும் தாக்குதலால் நிம்மோனியா கண்டு, அந்த ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரின் உதவியால் மருத்தவ சிகிச்சை பெறுகிறார். ஆனாலும் அங்கேயே காத்திருப்போர் அறையில் டால்ஸ்டாய் மரணமடைகிறார்.

வன்முறையற்ற எதிர்ப்பு முறையைப் போதித்த இவரின் எழுத்துக்கள், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங்-ஜீனியர், ஜேம்ஸ் பீவெல் போன்றோரின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவரது உடலுக்கு, வழியெங்கும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் கூடி அஞ்சலி செலுத்தினர். இவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல், 2009 ஆம் ஆண்டில் “கடைசி நிலையம்” என்ற திரைப்படமாகியது. அவர் மறைந்த இரண்டாண்டுகளில், “முதிர்ந்த ஒரு மனிதரின் புறப்பாடு” (1912) என்று ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வெளியான இன்னொரு படம்: “ரோஜக்கள் எவ்வளவு அழகாகவும், புத்தம் புதிதாகவும் இருக்கின்றன?”(1913).

ஃபியோத்தர் தாஸ்தயேவ்ஸ்கி:

டால்ஸ்ஸ்டாயின் சம காலத்தவர்; அன்றைய காலம் வரை வாழ்ந்த நாவலாசிரியர்களுள் டால்ஸ்டாயே மிகச்சிறந்தவரென்று கருதியவர். ரஷ்ய இலக்கியம் என்றவுடன் நினைவுக்கு வருகிற இரண்டு மகத்தான படைப்பாளிகளுள் டால்ஸ்டாய் மூத்தவர் என்றால், தாஸ்தயேவ்ஸ்கி இளையவர். இவரின் முழுப்பெயர் ஃபியோத்தர் மிகைலோவிச் தாஸ்தயேவ்ஸ்கி. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் 1821 ஆம் ஆண்டு, நவம்பர் 11 அன்று பிறந்தவர். பெற்றோரான மிகையில்/மரியா தாஸ்தயேவ்ஸ்கி தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள். இரண்டாவது குழந்தை-ஃபியோத்தர் தாஸ்தயேவ்ஸ்கி. தந்தை வேலை பார்த்து வந்த மரின்ஸ்கி மருத்துவமனை ஏழைகளுக்கானது. மருத்துமனை ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதியில்தான் 16 வயது வரை தாஸ்தயேவ்ஸ்கி வாழ்ந்திருக்கிறார். அவர் வளர்ந்து ஆளானதே ஓர் அனாதை விடுதி-குற்றவாளிகளுக்கான கல்லறை போன்ற பகுதிகளில்தாம், நோயாளிகளுடன் பேசக்கூடாது என பெற்றோர் தடை செய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல், மருத்துமனைத் தோட்டங்களுக்குச் சென்று நோயுற்றவர்களுடன் உரையாடியிருக்கிறார். தாயார் காசநோயினால் 1837 இல் மரணமடைகிறார். அடுத்த இரண்டாண்டுகளில் தந்தையும் மறைந்தார். இது கொலை எனவும் கருதப்பட்டது.

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை, டால்ஸ்டாயினுடையதற்கு நேர் எதிரான தன்மையுடையது. சூதாடி, கடனாளியான ஒற்றுமை இருவருக்குமே நேர்ந்திருந்த போதிலும், தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை சூறாவளிகளால் அலைப்புண்ட ஒன்று. கடைசி வரை பொருளாதாரச் சிக்கல்கள் இவரை வாட்டி வதைத்துள்ளன. கடுமையான மனப்போராட்டங்கள், கடன்காரர்களின் தொல்லை-இப்படிப் பல. செய்யாத ஒரு குற்றத்திற்காகத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, சைபீரியா பகுதியில் சிறைவாசம் அனுபவித்தவர். கடைசி நிமிடத்தில் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியவர். ‘குற்றமும் தண்டனையும்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’, ‘முட்டாள்’ – இவை மூன்றும் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ் பெற்ற படைப்புகள். பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யர்களின் வாழ்க்கையினுள் ஆழ்ந்து பரிசீலனை செய்கிறவை. ரஷ்யாவில் மட்டுமின்றி, மேற்கத்திய-உலகளாவிய இலக்கியங்களில், நிலைபேறான ஓர் இடத்தை தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் பெற்றுள்ளன. தனது நாவல்களின் பாதிரங்களுடைய இயல்புகளை உளவியல் ரீதியாக இவர் ஆராய்கிறார். சமூக-பொருளாதார-அரசியல்-ஆன்மிக அம்சங்கள், ஒரு மனிதரின் உளவியலில் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்கிறார். இவரின் நாவல்களில் வருகிற பாத்திரங்கள், எதார்த்த வாழ்க்கையில் ஊடாடும் மனிதர்கள் மட்டுமின்றி, தத்துவம் சார்ந்த கருதுகோள்களே பாத்திரங்களின் வடிவில் முன்வைக்கப் படுகின்றன என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை, உலகில் இதுவரை எழுதப்பட்ட நாவல்களிலேயே தலைசிறந்ததென காபிரியேல் கார்சியா மார்க்வெஸ் வர்ணிக்கிறார். ஒரு தந்தை எகாலை செய்யப்படுகிறார். இறந்தவர்க்கு நான்கு மகன்கள். கொலை செய்தவன் யார் என்ற கேள்வி எழுகிறது. மகன்கள் ஒவ்வொருவருக்குமே கூட அவரைக் கொலை செய்வதற்கான காரணங்கள் உள்ளன.வவழக்கு மன்ற நடவடிக்கைகள், மகன்களின் குற்ற உணர்வு, வாழ்க்கையின் அவலங்கள் மீது எழும் எரிச்சல் என உளவியல் தேடலில் நாவல் வளர்கிறது. தமிழில் இந்நாவலை கவிஞர் புவியரசு மொழி பெயர்த்திருக்கிறார். அவர் தனது மொழிபெயர்ப்பு அனுபவத் திளைப்பிலேயே விரிவானதொரு முன்னுரை எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையையே ஒரு சிறு நூலாக என்.சி.பி.எச்.நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விரிவானதொரு நாவலைப் புரிந்து கொள்வதற்கு ஒரு கையேடாக அப்பிரசுரம் விளங்குகிறது.

முதல் மனைவியின் மறைiக்குப் பின், கடன் தொல்லைகள் கழுத்தை நெரிக்க, ஒரு பதிப்பாளரிடம் பணம் கடன் கேட்கிறார். ஒரு நாவல் எழுதித் தந்தால் பணம் தருவதாகப் பதிப்பாளர் கூறவே அந்த முயற்சியில் ஈடுபடுகிறார். இவருடைய சொந்தக்கையெழுத்து மோசம் என்பதாலும், சிந்தனை வேகத்தில் எழுத முடியாமல் தாமதம் ஆனதாலும் 1867 இல் ஓர் உதவியாளரை நியமனம் செய்து கொள்கிறார் தாஸ்தயேவ்ஸ்கி. 25 வயதான அன்னா கிரிகோரெவ்னா நிட்கினாதான் அந்தப் பெண். உதவியாளராகப் பணியாற்ற வந்த அன்னா, தாஸ்தயேவ்ஸ்கியைப் பராமரித்துக் கொண்டு, இலக்கியப் படைப்புகளை அவர் சொல்லச் சொல்ல எழுத்தில் வடித்துப் புத்தக உருவில் கொண்டு வரும் உதவியாளராகவும் அன்னா வாழ்கிறார். எழுத்தாளரின் டயரிக் குறிப்புகள்; சிறுகதைகளை 1873-1881 காலகட்டத்தில் எழுதிய தாஸ்தயேஸ்கியின் எழுத்துக்களை, தமிழில் ரா.கிருஷ்ணையா, புவியரசு போன்ற முன்னோடிகளும், சமகாலத்தில் எம்.ஏ.சுசிலா, அரும்பு சுப்ரமணியன் போன்றவர்களும் மொழிபெயர்த்துள்ளனர்.

தமிழின் நவீன கதை சொல்லியும், கல்குதிரை இதழாசிரியருமான கோணங்கி 1991 ஆம் ஆண்டு மே மாதம், தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழிலக்கிய வாசகர்களின் கவனத்தை அவர் மீது திருப்பிய செறிவான மலர் அது.

ஒரு புதிய அடி எடுத்து வைக்க, புத்தம் புதிய ஒரு வார்த்தையை உதிர்க்கத்தான் மக்கள் மிக அதிகபட்ச அச்சங் கொண்டிருக்கிறார்கள் – என்று மக்களின் அச்சத்தைச் சுட்டிக்காட்டிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்கி. நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணம், இந்த உலகினுள் புரிந்து கொள்வதில் ஏற்படும் குழப்பத்தினால், சொல்லப்படாமல் விடப்பட்ட விஷயங்களால்தான் என்கிறார் அவர்.

வெண்ணிற இரவுகள் – தாஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல். வாழ்ந்த காலம் வரை ஒரு குற்றவாளியாக, ஏழையாக, கடனாளியாக வாழ்ந்து, துயர் சுமந்து மறைந்த தாஸ்தயேவ்ஸ்கியின் இறுதிக் காலத்தில் அன்னா ஒரு வசந்தமாய் வந்து சேர்ந்தவள். தனது நினைவுகளை ஒரு நூலாக அவள் எழுதிச் சென்றிருக்கிறாள். தமிழில் யூமா வாசுகியின் மொழியாக்கத்தில், மிகச் சிறப்பான நூலாக அதை பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டுள்ளனர்.

அழகு, புதிர்த்தன்மையும் அதே போல பயங்கரமும் நிரம்பியது; கடவுளும் சாத்தானும் அங்கு போரிடுகின்றனர்; மனிதனின் இதம்தான் போர்க்களம்-எனக் குறிப்பிடும் தாஸ்தயேவ்ஸ்கி, தனது படைப்புகளின் மூலம் நிரந்தரமாய் வாழ்கிறார். அவரது படைப்புகளிலும் இதே புதிர்த்தன்மையும், பயங்கரமும் நிரம்பியிருக்கின்றன; அவற்றுக்கு அழுகு சேர்த்து அணிசெய்பவை என்றும் தோன்றுகிறது. டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி இருவரையும் புரிந்து கொள்வதற்கு, அன்னாவின் நூலும், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செகாவின் மீது பனி பெய்கிறது நூலும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை.

Related Posts