அரசியல்

வீதி தோறும் மோதல்? உள்ளம் தோறும் மதவெறி?

வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது பேச்சோடு சும்மா திரும்பப் போவதில்லை இவர்கள்… குஜராத் மாநிலத்தில் அமையப் போகும் வல்லபபாய் படேல் சிலைக்காக கலப்பை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளையும் திரட்டி வரப் போகின்றனராம்.

மக்கள் பிரச்சனைகளை பாஜக ஒருபோதும் பேசப் போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களது பிரச்சார உத்திகளின் வரலாற்றுத் தொடர்ச்சியை நாம் உற்று நோக்கத் தவறக் கூடாது. நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறைகளை முற்றாக அறிந்திருந்தும், இவர்கள் அத்வானி, வாஜ்பாய் என்ற தனி நபர்களைத் தான் முன் நிறுத்தி பிரச்சாரம் செய்தனர். நடக்கப் போவது ஏதோ அமெரிக்க குடியரசுத் தேர்தல்கள் போல நேரடியாக அதிபர் ஒருவரை (இங்கே பிரதமர்) தேர்ந்தெடுக்க நடத்தப் படும் தேர்தல்கள் போன்ற ஒரு கருத்தோட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் மனத்தில் படிய வைப்பதில் குறியாயிருக்கின்றனர். இந்த முறை தேர்தல் பந்தயக் குதிரையாக நரேந்திர மோடி என்ற குதிரையின்மீது நம்பிப் பணம் கட்ட களத்தில் இறங்குகின்றனர்.

ஒரே பெயர், ஒரே முகம், ஒரே நோக்கம் ,ஒரே முழக்கம் என்பதாக அவர்களது நடவடிக்கைகளை திரும்பத் திரும்ப ஒரே கதியில் அமைக்கின்றனர். இவரை விட்டால் வேறு கதி கிடையாது, தேசத்தைக் காக்கும் வோட்டு உங்கள் ஒட்டு என்றும் பேசத் தொடங்கி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் வளர்ச்சியை அசுர வேகத்தில் சாதித்தவர் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லி அதன்மீது தேசிய அளவில் ஒரு ‘கருத்தொற்றுமை’ கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எப்படி அயோத்தி பாபர் மசூதி விஷயத்தில் சர்ச்சை கிளப்பி ராமர் கோவில் கட்டுவோம் என்று புறப்பட்ட நேரத்தில், இந்தியா முழுக்க செங்கல் திரட்டப்பட்டதோ, அதே போன்று, இப்போது விவசாயக் கருவிகளைத் திரட்டும் வேலை நடக்கிறது. இந்த மாதிரியான குறியீட்டு உத்திகள் மிக மோசமானவை என்றாலும்,பெருவாரியான மக்களை இது நம்ப வைக்க உதவும் என்றே அவர்கள் தொடர்ந்து இத்தகைய செய்கைகளில் இறங்குகின்றனர்.

அது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற இணையதளம் எப்படி வெற்றிகரமாக பயன்படுத்தப் பட்டதோ அதை இங்கேயும் பிரதி எடுத்து படித்த நடுத்தர வர்க்க மேல்தட்டு இளைஞர்களை வசப்படுத்தவும், அவர்கள் மூலமாக வேகமாகத் தங்கள் செய்திகளைப் பரவலாகக் கொண்டு செல்லவும் பா ஜ க இறங்கியுள்ளது. அதில் எக்குத் தப்பாக தகிடுதத்தங்கள் செய்யபடுவது தொடர்பான புகார்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.

பிம்பங்களைக் கட்டமைத்தல், எதிரி என்ற உருவகத்தை வலுவாக சித்தரித்து அதைத் தகர்க்க இலக்கு தீர்மானித்தல், எதைப் பற்றியும் கவலை கொள்ளாது வரலாறு, பண்பாடு, நம்பிக்கை, மரபு அனைத்தின் மீதும் தாங்களே ஏகபோகமாக எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறுவுதல் போன்றவை பாசிசத்தின் உட்கூறுகள். தேசத்தின் உடலாக, ஆன்மாவாக, உயிர்த் துடிப்பாக, உள்ளத்தின் மொழியாக எல்லாமாக உருப்பெறும் வண்ணம் ஒரு தத்துவார்த்த பிடிப்பை உட்செலுத்துவது ஆதிக்கத்தின் தேர்ச்சியான ஆயுதம். அதன் பாட திட்டத்தைத் தான் பா ஜ க தமிழகத் தலைவர்கள் மென்மையான குரலெடுத்து அப்பாவிகள் போல புறப்பட்டுள்ளனர் இந்த பாத யாத்திரையில்.

வறுமை, பட்டினிச் சாவு, விவசாயிகள் தற்கொலை… இவற்றைப் பற்றியோ, பொதுத் துறை ஒழிப்பு, தனியார்மய மோகம், பன்னாட்டு நிதி மூலதனத்தின் நிர்பந்தத்திற்கு அடிபணிவது ஆகியவை குறித்தோ பா ஜ க தலைவர்கள் தங்களது புரிதல் என்ன, முன்னேற்றத்திற்கான மாற்றுக் கொள்கை உண்டா என்று வாயைத் திறக்கப் போவதே இல்லை. ஊழலின் ஊற்றுக்கண் நவீன தாராளமயக் கொள்கை தானே, அது பண்பாட்டுத் தளத்திலும் புகுந்து சிதைத்துக் கொண்டிருக்கிறதே என்றெல்லாம் விவாதம் நடத்த அழைத்தால் அவர்கள் எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது என்பதைப் போன்ற பதில் அன்றி வேறு சொல்லப் போவதில்லை.

கல்வி, சுகாதாரம் இரண்டும் சாதாரண மக்களுக்கு இழுத்து மூடப்பட்டு வருகிறதே, பொருள் இல்லார்க்கு இந்த உலகம் ஒருபோதும் எல்லை என்று பகிரங்கமாக முழங்கப்படுகிறதே என்று சத்தம் போட்டுச் சொன்னாலும் அவர்கள் காதில் அது விழப் போவதில்லை. பாலின சமத்துவம் குறித்தோ, தீண்டாமைக் கொடுமை பற்றியோ, இட ஒதுக்கீடு விஷயமோ இவற்றுக்கெல்லாம் அவர்களது நிகழ்ச்சி நிரலில் நேரம் குறிக்கப்படப் போவதே இல்லை.

மதத்தின் பேரால் தங்களது கை வரிசை காட்டப்பட்ட எந்த கோரமான நிகழ்வுக்கும் அவர்கள் வருந்தவோ, மன்னிப்பு கேட்கவோ, திரும்ப நடவாது என்று உறுதி அளிக்கவோ ஒரு போதும் தயாரில்லை. ஏகாதிபத்திய உலகமயத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, மாற்றுக் கொள்கைகளால் உலகை ஆரோக்கியமாக சமைக்க முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டவோ பாஜக தரப்பில் கிஞ்சிற்றேனும் சிந்தனை இருக்கப் போவதில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், பெருகும் ஏற்றத் தாழ்வுகள், அதிகரிக்கும் சமூக நெருக்கடிகள் போன்றவற்றால் அம்பலப்பட்டு நிற்கிறது; ஆனாலும், ஆளும் வர்க்கம் தனது பிடியை விட்டுவிடாது வேறு அரசியல் தலைமை மூலம் அதே கொள்கைகளையே தொடர விரும்பும் சதுரங்க விளையாட்டில் பா ஜ க அந்த இடத்தில் வந்து அமரத் துடிக்கிறது. பெருவாரியான சாதாரண மக்களுக்கு இந்த மாற்றத்தால் ஒரு பலனும் விளையப் போவதில்லை. அவர்கள் வாழ்வில் மேலும் கொடுமைகள் தீவிரமடைவதைத் தவிர முன்னேற்றம் என்பது தட்டுப் படப் போவதில்லை. மாறாக, மக்களிடையே சமூக ரீதியான பிளவும், பிரிவினையும், மோதலுமே விதைக்கப்படும்.

உத்தரபிரதேசத்தில் முசாபர் நகரில் இந்தக் கும்பலின் கைவரிசை எத்தனை உயிர்களை மாய்த்தது என்பது அண்மைக் கால நிகழ்வு. குஜராத் 2002 கலவரங்கள் மறக்க முடியாத வரலாற்று அராஜகம். மாற்றுக் கொள்கைகளால் தேசத்தின் புதிய விடியலை உருவாக்கும் திசை நோக்கி மக்களை ஒற்றுமைப்படுத்த இடதுசாரி ஜனநாயக சக்திகள் அணிதிரளும் நேரத்தில், மதவாத பிற்போக்கு அரசியலை முன்னெடுத்துப் புறப்படுகிறது ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பா ஜ க.

வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்பதன் மொழி பெயர்ப்பு, வீதி தோறும் மோதல், உள்ளம் தோறும் மதவெறி என்பதாகத் தான் இருக்க முடியும். மகத்தான சமூக சீர்திருத்தங்களின் வளமிக்க மண்ணில் அந்த வேலைகளை அனுமதிக்க முடியாது.

வீடு தோறும் நெத்தியடி,
உள்ளம் தோறும் நிராகரிப்பு

என்ற அனுபவத்தை சங் பரிவாரக் காவிக் கும்பலுக்கு தமிழக மக்கள் பாடமாக்கி அனுப்பட்டும்.

Related Posts