நல்லமுத்து வாத்தியார் கையினால் நூறு மதிப்பெண்கள் பெற்றதில் சிவலிங்கத்துக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. சிவலிங்கத்துக்கு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் தன்னை பொறாமையோடு பார்ப்பது போன்ற உணர்வு. முகத்தில் அப்படியொரு பெருமிதம்.

எப்போதும் கையில் பிரம்பை சுழற்றிக் கொண்டு மாணவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் கணக்கு வாத்தியார்தான் நல்லமுத்து. பள்ளிக்கூடத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனந்தான். அவர் அடிக்கிறாரோ இல்லையோ பிரம்பு கையோடு அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்கத் தொடங்கி விடுவார்கள்.

சிவலிங்கம் படிக்கும் பார்வதிபுரம் அரசுப் பள்ளியில் இருக்கும் ஒரே ஆண் வாத்தியார் அவர்தான். ஆறடிக்கு மேல் உயரம். வழுக்கை தலையின் ஓரத்தில் சில முடிகள். மீசை இல்லாத முகம். வெள்ளை வெளேர் என வேட்டி, சட்டை. முழுக்கை சட்டையை சுருட்டி ஏற்றி அதற்குள் செருகியிருக்கும் வெளிறிய கைக்குட்டை. சட்டைப்பையில் நீலம், சிவப்பு மை பேனாக்கள், கையில் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் பிரம்பு என நல்லமுத்து வாத்தியார் அந்த பள்ளிக்கூடத்து மாணவர்களை மிரட்டிக் கொண்டிருத்தார்.

வாத்தியாரைக் கண்டு மாணவர்கள் அரண்டு கிடந்தாலும் வகுப்பறையில் வந்து அவர் கணக்குப்பாடம் நடத்தத் தொடங்கி விட்டால் மாணவர்கள் அனைவருக்கும் அவரை பிடித்துப் போகும். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. வெளியில் பிரம்போடு சுற்றி பயமுறுத்தும் நல்லமுத்து வாத்தியார் வகுப்பறைக்கு பிரம்பை எடுத்து வருவதே இல்லை.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கணக்குதான் நடத்துவார். ஆனால் நடத்தும் கணக்குகள் அத்தனை மாணவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதில் முனைப்பாய் இருப்பார். தெரியாத மாணவருக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுப்பதில் அவர் எப்போதும் சலித்துக் கொண்டதே இல்லை.

கணக்குப் பரீட்சை என்றால் மாணவர்களுக்கு கிலிதான். எப்படித்தான் நன்றாக செய்திருந்தாலும் ஏதாவது தவறு நல்லமுத்து வாத்தியார் கண்ணில் பட்டுவிடும். முழு மதிப்பெண் கிடைக்காமல் போய்விடும்.

அதனால்தான் அவரிடம் முழு மதிப்பெண் வாங்கிய சிவலிங்கத்தால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. பரீட்சை பேப்பரை திரும்பத் திரும்ப பார்த்தான். வாத்தியார் கொடுக்கும் போதே திரும்பத் திரும்ப பார்த்துத்தான் கொடுத்தார். அவர் சிவலிங்கத்தை வகுப்புக்கு முன்னால் அழைத்து நிறுத்தி வெகுவாக பாராட்டினார்.

“பாருங்கல அவன… அப்பா இல்லாத பையன். அம்மா வேலை செய்து படிக்க வைக்கிறாங்க… வீட்டில கரண்டு கூட இல்ல. வீடில்லாம ஆத்தோரம் குடிசையில இருக்கான்… அவன் நூறு மார்க் வாங்கியிருக்கான். உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லியா..” எனச் சொல்லி மாணவர்களைக் கை தட்ட வைத்து ஒரு `ஹீரோ பேனாவை பரிசாகக் கொடுத்தார்.

ஆறாம் வகுப்பில் கடந்த இரண்டு வருடத்துக்கு பிறகு அரையாண்டு தேர்வில் ஒரு மாணவன் நூறு மதிப்பெண் பெற்று விட்டதில் நல்லமுத்து வாத்தியாருக்கும் மனதார மகிழ்ச்சி. தான் கற்றுக் கொடுத்த மாணவன் நூறு மதிப்பெண் பெற்று விட்ட பெருமிதத்தில் தலைமை ஆசிரியையிடம் சிவலிங்கத்தை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

சக ஆசிரியைகளிடத்தில் வந்து “படிச்சு கொடுக்கனும் டீச்சர்… எல்லாவனுக்கும் மூளையிருக்கு… நாமத்தான் சொல்லிக் கொடுக்கிறதில்ல… நல்லா படிக்கிற பையங்கயெல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறாங்க… நமக்கிட்ட கூமுட்டைகளை தந்துட்டு படிச்சுக் கொடுன்னு கொல்லுறாங்கன்னு அழுதுகிட்டிருந்தா ஒன்னும் நடக்காது… படிச்சு கொடுக்கனும்…” எனப் பெருமிதப்பட்டுக் கொண்டார்.

சிவலிங்கத்துக்கு இருப்பு கொள்ளவில்லை. அம்மாவிடம் பேப்பரை காட்டனும். தான் நூறு மதிப்பெண் வாங்கியதை தனது நண்பர்களிடம் சொல்ல வேண்டும், சுகந்தியக்காவிடம் சொல்ல வேண்டும் என்று காத்துக் கிடந்தான். சாயங்காலம் மணி அடித்தவுடன் பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

சிவலிங்கத்தின் வீடு பார்வதிபுரம் கால்வாய் கரையில் இருந்தது. கால்வாய் புறம்போக்குதான். சொந்த வீடு இல்லாத இவனது குடும்பத்தைப் போன்ற நூற்றுக் கணக்கானக்கானோரின் குடிசைகள் அந்த கால்வாயின் கரையில் இருந்தன. அரசாங்கம் அவ்வப்போது நோட்டீஸ் கொடுத்து காலிபண்ணச் சொல்வதும், இவர்கள் வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பிப்பதுமாக நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

சிவலிங்கத்துக்கு இவனது வீட்டுக்கு எதிர்புறத்தில் புதிதாய் வயலில் வீடு கட்டி குடிவந்திருக்கும் சுகந்தி அக்கா வீட்டைப் போல தனது வீட்டையும் பெயிண்ட் அடிக்க வேண்டும், பூந்தொட்டிகள் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனது அம்மா மீனாட்சியின் “இப்பவோ… எப்பவோன்னு… இடிக்க காத்திருக்கானுக… அதில நீ பெயிண்ட் அடிக்கப் போறியாக்கம்… போல சோலியப் பாத்திட்டு போல…” என்ற பேச்சுக்கு வாடிய தொட்டாச் சிணுங்கியாக ஒடுங்கிப் போவான்.

உடனே சுகந்தி அக்கா வீட்டுக்கு ஓடிப்போவான். “அக்கா… அக்கா செடிக்கு தண்ணீர் ஊத்துவோமா…” எனக் கேட்டு வீட்டில் ஏதாவது வேலையில் இருக்கும் சுகந்தியக்காவைத் தொந்தரவு செய்வான். “நீ போயி ஊத்து… நான் கொஞ்ச நேரத்துல வரேன்” எனக் கூறிவிட்டால் போதும். ஓடிப்போய் நல்லியில் குழாயைச் சொருகி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கி விடுவான்.

புதிதாக இந்த வீட்டில் குடிவந்தபோது சுகந்தியும் அவளது வீட்டாரும் சற்று ஒதுங்கியே இருந்தார்கள். சுகந்தியின் அம்மா “என்ன இடம் பாத்து வாங்கினியளோ… காலங்காத்தால முழிச்சா இந்த ஜனங்க மொவத்தில முழிக்க வேண்டியிருக்கு…” என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்ய, கடைக்கு போய் ஏதாவது வாங்கி வர என சிவலிங்கம் பயன்பட்டபோது சற்று ஆறுதலடைந்தாள். கூலியில்லாத வேலைக்காரனாக ஓடி வரும் அவனுக்கு அவ்வப்போது சாப்பிட ஏதாவது கொடுக்கவும் செய்தாள். அவனது அம்மாவையும் அடிக்கடி ஏதாவது வீட்டு வேலைக்கு அழைக்கத் தொடங்கினாள்.

சிவலிங்கத்துக்கு அப்பா இல்லாததும் அந்த பரிவுக்கு ஒரு காரணமாக இருந்தது. பெண் மனதுதானே சற்றே இளகியது. ஆனால் இதெல்லாம் சுகந்தியக்காவின் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில்தான். அவர் வந்துவிட்டால் இவன் தனது வீட்டுக்கு ஓடி வந்து விடுவான். அவரது பார்வையைக் கண்டாலே அவனுக்கு பயம். அதிகம் பேசமாட்டார். எப்போதாவது “என்ன பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா போறியாடா…” என்பதோடு சரி. “ம்…” என்ற சொல்லொடு ஓடி விடுவான்.

சுகந்தியக்காவிடம் “பத்தாங்கிளாஸ் படிக்கயில்ல… நல்லா டிவி பாரு… அவன்கூட சேந்து விளையாடிட்டு இரு… எத்திர மார்க் எடுக்கறன்னு பாக்கத்தானே போறேன்…” என அதட்டுவார். டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சுகந்தி பேசாம எழுந்துபோய் அறையில் உட்கார்ந்து புத்தகத்தை புரட்டுவாள்.

“அம்மா வீட்டில இருக்குமோ… என்னவோ…. இல்லன்னாலும் சுகந்தியக்கா வீட்டுக்கு வந்திருக்கும்… அக்காகிட்ட காட்டலாம்…” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டே வீட்டை நோக்கி வேகமாக நடந்தான் சிவலிங்கம்.

வீட்டை நெருங்க நெருங்க ஏதோ வித்தியாசமாக அவனுக்குள் பட்டது. சிவலிங்கத்தின் வீட்டோடு சானல் கரையில் இருந்த வீடுகளிலிருந்தவர்கள் எல்லொரும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். வீடுகளிலிருந்த பொருட்களை அவசர அவசரமாக எடுத்து வெளியில் போட்டுக் கொண்டிருந்தனர்.

சாலை முழுவதும் சட்டி, பானை, பாய், தலையணை, குழந்தைகளின் தொட்டில்கள், துணிகள், டிரங்கு பெட்டிகள், சூட்கேசுகள், நாற்காலிகள், வீடுகளிலிருந்து அறுத்து எடுக்கப்பட்ட மின் ஒயர்கள், உப்பு டப்பா, மிளகாய்பொடி டப்பா, மஞ்சள்பொடி டப்பா… என வீடுகளிலிருந்த பொருட்கள் அனைத்தும் சாலையில் நிரம்பிக் கிடந்தன.

சிவலிங்கத்தின் அம்மாவுக்கு ஏதாவது உதவிகள் செய்து கொடுக்கும் வேலப்பன் மாமா தனது வீட்டுக் கூரையை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார். வேலப்பனின் வயதான அம்மா, அவன் பிரித்துக் கொடுத்த ஓலைகளை வாங்கி சாலையின் ஒரு ஓரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. “நீ கொடி பிடிச்சியும் ஒரு பிரயோசனமும் இல்ல… இந்த சனங்களுக்கிட்ட ரூவா கொடுக்காதுங்கன்னு சொன்னாலும் கேக்கல… இப்ப ரூவாயும் இல்ல… கூடும் இல்ல…” என்று அவள் புலம்பிக் கொண்டே இருந்தாள். “இப்ப எதுக்கு அழற… எல்லாரும் ஒன்னா நின்னு போராடியிருந்தா இப்டி வருமா… எத்தன தடவை சொன்னேன்… எல்லாவனுக்கும் ரூவா கொடுத்தாதான் வேல நடக்கும்னு நெனைப்பு… வேல செய்து தின்னாம குடிக்காம அந்த பிச்சக்கார நாய்களுக்கு தூக்கிக் கொடுத்தானுவ… இப்ப தெரியிதில்ல… புடுங்கி தின்னதான் வருவானுவ… புடுங்கும்போ வரமாட்டானுவன்னு. இப்ப நீ அழுறத நிறுத்திட்டு ஓலய சரியா அடுக்கி வை…” என்ற அதட்டல் பேச்சால் அவளது புலம்பல் தடைபட்டது.

பகவதி கிழவி, தனது ஏகச் சொத்தான ஒரு அலுமினிய பானையை எடுத்து வெளியில் வைத்து விட்டு அடுப்புக்கு அருகில் எதையோத் தேடிக் கொண்டிருந்தாள். “பகவதி கிழவிக்கிட்ட நெறய பவுன் இருக்கு. அத அவ வீட்டுக்குள்ள பொதச்சி வச்சிருக்கா… ” என அம்மா கூறியது சிவலிங்கத்துக்கு நினைவுக்கு வந்தது.

சிவலிங்கத்தின் அண்டை வீட்டு கமலாக் குட்டி அவளுடைய தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மாவும் அப்பாவும் சேர்ந்து அவர்களது வீட்டு பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய அப்பா குடித்திருப்பார் போல. கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்தார்.

“தேவடியாப்பயல்க… எம்எல்ஏ… பட்டாக் கொடுக்கறேன்னு சொல்லி ஓட்டுப் போடச் சொன்னான். எலசன் முடிஞ்சவுடன் பட்டா இன்னா கொண்டு வாரன்னு சொல்லி பல தவப்பனுக்கு பெறந்த பய ஒருத்தன் வந்து பத்தாயிரம் இருவதாயிரம்னு வாங்கிட்டு போனான். இப்ப ஒரு தேவடியாப் பயலுகளயும் காணல… அவனுக இப்ப எங்கையில கிடச்சா வகுந்து போடுவன் வகுந்து…” எனக் கூறிக் கொண்டே பொருட்களை எடுத்து வெளியே எறிந்து கொண்டிருந்தார்.

“குடிச்சி குடிச்சி குடும்பத்த அழிச்சது போதாதுன்னா எல்லாத்தையும் போட்டு ஒடைக்கிற… n

ஜசிபி வந்துரும் போல இருக்கு. சீக்கிரமா அந்த கம்ப எல்லாம் அவுத்து எடு… ” என்ற மனைவியை எட்டி உதைக்கப் போய் தள்ளாடி கீழே விழுந்தார்.

இவற்றையெல்லாம் கடந்து சிவலிங்கம் தனது வீட்டை அடைந்தான். வீடு இருந்த இடத்தில் நான்கு சுவர்கள் மட்டும் இருந்தன. அம்மா அங்கு இல்லை. வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் சுகந்தியக்கா வீட்டு முற்றத்தில் கிடந்தன. தனது வீட்டுக்கு முன் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுகந்தியக்காவிடம் சிவலிங்கம் போனான்.

“யாங்கா… எல்லாரம் எல்லாத்தயும் வீட்டிலண்டு எடுத்து வெளிய வச்சிருக்காங்க…”

“ஒங்க வீட்டயல்லாம் இடிக்க வாராங்களாம்… அந்தப் பக்கத்தில எல்லாம் இடிச்சாச்சி… கொஞ்ச நேரத்தில இங்க வந்துருவாங்க…” என்ற சுகந்தியக்காவின் பதிலைக் கேட்டு சிவலிங்கத்துக்குள் இனம்புரியாத ஒருவித பயம் தோன்றியது.

“அம்மா எங்கக்கா…” என வினவினான். “அந்தப் பக்கத்தில இருந்தாங்க… போயி பாரு…” எனக் கைகாட்டிய திசையில் அம்மா வயல்வெளியை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

பள்ளிக்கூட பையைக் கீழே போட்டுவிட்டு ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொண்டான் சிவலிங்கம். அவனை அணைத்துக் கொண்ட அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. “ஒங்கப்பனும் விட்டுட்டு போயிட்டான். பெறம்போக்கிலயாது கிடந்து சாகலாமின்னா அதயும் புடுங்கறானுவளே…” என குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

அம்மா அழுவதைப் பார்த்தவுடன் சிவலிங்கத்துக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. மகனைத் தேற்ற நினைத்த அவள் சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு மகனிடம் “நீ அழக்கூடாது… அழக்கூடாது….” எனக் கூறி தேற்றினாள்.

மகனின் சட்டைப்பையில் இருந்த புதுப் பேனாவைப் பார்த்து “யாதுடா இது…” என வினவினாள். “கணக்குக்கு நூறு மார்க் வாங்குனதுக்கு. சார் குடுத்தாரம்மா….” என்ற மகனைக் கட்டிக் கொண்டு ஓவென அழுதாள்.

சட சடவென வந்த பொக்லைன் சிவலிங்கத்தின் வீட்டுக்கு முந்தைய வீட்டின் முன் நின்றது. நெரித்தலும், முறித்தலும், உடைத்தலும், பிடுங்கலும் என ஐந்தே நிமிடத்தில் அந்த வீடு காலியானது. ஒரு சுவரின் அடிப்பகுதி மட்டும் மீதமாய் நின்றது.

அடுத்து சிவலிங்கத்தின் வீட்டின் முன் பொக்லைன் வந்து நின்றது. பக்கத்து வீடு இடிபட்டது போல் தனது வீடும் இடிக்கப்படப் போகிறது என்று நினைத்த மாத்திரத்தில் சிவலிங்கம் அலறத் தொடங்கினான்.

“அம்மா… நம்ம வீடு… அம்மா… அம்மா… நம்ம வீடு…”

நெரித்தலும், முறித்தலும், உடைத்தலும், பிடுங்கலும் தொடர வீடு உடைபட்டுக் கொண்டிருந்தது. சிவலிங்கத்தின் அம்மா அசைவற்று வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

மிகையிலான்

 

Related Posts