இதழ்கள் இளைஞர் முழக்கம்

விலகி இருப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்து – தாமு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் படித்தவர்கள் குமிழ்ந்திருக்கும் மாவட்டங்களில் வாக்குபதிவு குறைந்துள்ளது என்பது வருத்தமளிக்கிறது. மாநிலத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 81 சதவீத வாக்குபதிவு பதிவாகியுள்ளது. மெட்ரோ பாலிட்டன் சிட்டி என்று சொல்லக் கூடிய சென்னையில் வெறும் 57 சதவீதம் வாக்குபதிவு பதிவாகியுள்ளது வாக்களிக்காத மக்களில் பெருவாரியானோர்கள் நடுத்தர மற்றும் மேட்டுக் குடி மக்களாவர்.
இது எதை காட்டுகிறது என்றால் படிக்காத பாமர மக்கள் ஜனநாயகத்தை பற்றி அறியாமலேயே ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையையும், ஜனநாயகத்தைப்பற்றி நன்கு அறிந்த நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்கள் ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையின்மையும் இருப்பதை காட்டுகிறது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மை வளர்வது போராடி பெற்ற ஜனநாயகத்திற்கே ஆபத்தாக அமையும்.
தமிழக தேர்தல் ஆணையம் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை குறிவைத்து வீதிகள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைகாட்சி, மீம்ஸ் போன்ற விளம்பர தட்டிகள் போஸ்டர்கள், ஆல்பம் பாடல் என பல்வேறு வகையில் தேர்தல் ஆணையம் விளம்பரபடுத்தப்பட்டு வாக்களிக்கும் அன்று விடுமுறையும் விடுக்கப்பட்டது. விடுமுறையை கொண்டாடியவர்கள் வாக்களிக்கு முன் வரவில்லை, வாக்களிக்க முன் வந்தவர்கள் விடுமுறையை கொண்டாடவில்லை வாக்குபதிவு குறைந்த பகுதிகளில் காண முடிந்தது தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை அதிகப்படுத்த ஏராளமான நடைமுறைகளை பயன்படுத்தினாலும் வாக்காளர்கள் அச்சம் இல்லாமல் வாக்களிப்பதையோ பணம் கொடுத்து வாக்கை பெறுவதை பற்றியோ போதிய அளவு கவனம் செலுத்தவில்லை என்பதை பார்க்க முடிந்தது சென்னையில் சில வட்டங்களில் அமைந்த பூத்துக்களில் ஏற்பட்ட ஆளுங்கட்சியினர்களின் அசம்பாவிதங்களும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளாமல் இருந்ததும் வாக்குப்பதிவு குறைவுக்கு ஓர் காரணமாகும்.
வாக்காளர்கள் வாக்களிக்க பணம் பெறுவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம், ஆனால் கண்டெய்னர் மூலம் பணத்தை கொட்டி கொடுப்பவர்களை கண்டும் காணாமல் இருந்துள்ளது முதலாளித்துவ சமூக அமைப்பில் உயிர்நாடியே பணம் தான். பணம் பலம் இருந்தால் அனைத்து வெற்றிகளையும் சுலபமாக பறித்துவிடலாம் என்கிற சித்தாந்ததை உருவாக்கப்பட்டுள்ளது. 100 சதம் வாக்குப்பதிவு என்பது தற்போது உள்ள தேர்தல் நடைமுறையினால் சாத்தியமாகாது. பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் வேட்பாளருக்கு தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே செய்திடும் நடைமுறை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே 100 சதம் வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகும்.
வாக்களிக்காத பெருவாரியான வாக்களர்கள் முன் வைக்கும் மற்றொரு வாதம் அரசியல்வாதிகளும், அரசியலும் மோசம், தேர்தலில் நல்லவர்கள் இல்லை அனைவரும் ஊழல்வாதிகள் பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்கள் என முன் வைக்கிறார்கள் இவர்களின் வாதம் நியாயமானது தான். பல லட்சம் செலவில், டிவிக்களில் விளம்பரம் செய்து, சாலையை மறைக்கும் வகையில் விளம்பர தட்டிகள் வைத்து வாக்காளர்களுக்கு 500, 1000 என பணம் பட்டுவாடா செய்து தேர்தலை சந்திப்பவர்களை மட்டும் பார்த்து பழகிய வாக்களர்களுக்கு எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் தேர்தலில் பெரிய அளவு பணம் செலவு செய்யாமல் மக்களுக்காக அணுதினமும் போராடி வருபவர்கள் தேர்தலில் நின்றால் வாக்காளர்களின் கடைக்கன் பார்வை கூட விழ மறுக்கிறது அப்படி மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளனர். நாம் தேர்வு செய்யும் வேட்பாளர் தனிநபர் ஒழுக்கம் உடையவரா, நல்லவரா, சட்டமன்ற கூட்டத் தொடர்களில் மக்களின் பிரச்சனைகளை பேசுபவரா அல்லது வெறும் மேசையை மட்டும் தட்டுபவரா என சீர்தூக்கி பகுப்பாய்வு செய்து வாக்களித்தால் நல்லவர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்வு செய்ய முடியும். இவைகளை பார்க்காமல் கண்ணை மூடிகொண்டு வாக்களிப்பதால் தான் ஊழல்வாதிகளையும், பொதுச்சொத்தை கொள்ளையடிப்பவர்களையும் தேர்வு செய்து விட்டு அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மோசம் என கூறுவது எப்படி சரியாகும்.
வாக்களிக்கும் உரிமை சாதாரணமாக கிடைத்ததல்ல
நாம் தற்போது சுதந்திரமாக வாக்களிக்கும் தன்மை அவ்வளவு எளிதாக நமக்கு கிடைக்கவில்லை. மனிதர்கள் இனக்குழுக்களாக வாழும் காலம் தொட்டெ தனக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் இருந்து வந்துள்ளன. இனக்குழுக்கள் காலத்தில் மிகவும் வலிமையானவர்களையும், அதிசயத்தை நிகழ்த்துபவர்களையும் தலைவர்களாக தேர்வு செய்தார்கள் முதன்முதலில் இனக்குழுக்களுக்கு பெண்கள் தான் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின் சொத்துடமை என்கிற ஒரு அம்சம் உருவெடுத்த போது நிலப்பிரப்புத்துவ சமூக அமைப்பு உருவெடுக்கிறது இச்சமூகத்தில் மக்களுக்கு தலைமை தாங்குபவர்களாக நிலப்பிரப்புக்கள் தங்களை தாங்களே முன்னிருத்தி மக்களை ஏற்று கொள்ள செய்தார்கள்
அதிகார எல்லைகள் வரையருக்கப்பட்டு தனக்கான தேசம் என உருவாக்கப்பட்டு மன்னராட்சி உருவாக்கப்படுகிறது மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர் வம்சத்தில் வந்தவர்கள் தங்களை தாங்களே முடி சூட்டி கொண்டு இந்நாட்டு மக்களுக்கு நான் தான் மன்னன் என்பதை அறிவிப்பார்கள் அந்த மன்னர் மந்திரி சபையை உருவாக்கி ஆட்சி செய்வார். தமிழகத்தில் சேர சோழ ஆட்சி காலத்தில் குடவோலை மூலம் கிராமத் தலைவனை தேர்வு செய்யும் நடைமுறை இருந்தது அப்படி தேர்வு செய்யப்படும் தலைவன்களில் ஒருவர் கூட தாழ்ந்த சாதியை சார்ந்தவர்களாக இருக்க முடியாது.
15 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாஸ்கோடாகாமா இந்தியாவின் கடற்கரையில் காலடி எடுத்து வைத்தான் அதன் பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள் மன்னர்களையும், பேரரசுகளையும் வென்று இந்தியாவை காலனி நாடாக மாற்றினார்கள் உலகத்திலேயே தேர்தல் நடைமுறையை உருவாக்கிய இவர்கள் இந்தியாவிலும் புகுத்தினார்கள். மாகாண சட்டமன்றங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்திட வாக்களிக்கும் முறையை உருவாக்கினார்கள், நிலபிரப்புக்கள், மன்னர் வாரிசுகள், உயர்சாதியை சேர்ந்தவர்களுள், படித்தவர்கள் மட்டும் தான் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது தலித்துக்கள், பெண்கள் நிலமற்ற ஏழைகள், படிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. விடுதலை போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்கள் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என போராடினார்கள்
1947 ல் இந்தியா விடுதலை பெற்றதும் மக்கள் தனக்கான அரசை தேர்வு செய்து கொள்ள கடை கோடி மனிதனுக்கும் வாக்களிக்கு உரிமை என்கிற அதிகாரம் வழங்கப்பட்டு வாக்களிக்கும் வயது 21 என நிர்ணயம் செய்யப்பட்டது. இப்படி பல கட்ட மாற்றங்களுக்கு பிறகும், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சமுதாய வாழ்க்கை நிலைபெற்று முன்னேறுவதற்கும், நல்லது நடப்பதற்கும், தேவையான நிலைமைகளை வகுப்பதில் நேரடியாகவும், தீவிரமாகவும் பங்கெடுப்பது தான் வாக்குரிமை. நாம் உண்மையான பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் நாம் சுதந்திரத்தையும், நல்லாட்சியையும் அனுபவிக்க முடியாது என்றார் அண்ணல் அம்பேத்கர்
ஆம் நாள்தோறும் மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பவர்களை கண்ணை மூடிக்கொண்டு சீர்தூக்கி பார்க்காமல் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் மறுப்பதும் நமது வாழ்வை நாசப்படுத்துபவர்களுக்கு அதிகாரம் என்கிற செங்கோலை கொடுப்பதற்கு சமமாகும் ஜனநாயகத்தின் அடிப்படையை உயர்த்தி பிடிப்பது தேர்தல் தான் தேர்தல் நடைமுறை என்று இல்லாமல் போனால் எவ்வித உரிமையும் எவருக்கும் கிட்டாது என்பது உண்மை. ஜனநாயகத்தின் பலமே தேர்தல் தான் அந்த தேர்தலில் பங்களிக்காமல் இருப்பது பலமான ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவே இட்டுச் செல்லும்.

Related Posts