இதழ்கள் இளைஞர் முழக்கம்

விரும்பிப் பிரிந்தவர்களின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் – முத்துவேல்

விரும்பிப் பிரிந்தவர்களின்

கறுப்பு வெள்ளை

புகைப்படங்கள்

 

திரும்பத் திரும்ப

பழைய மொந்தையில்

புதிய கல்லாய்

நுரைபொங்கி வழிகிறது

காதல்

 

ஓவியத்தில், இசையில், எழுத்தில்

நீரில், மலரில், இலையில்,

பனியில், வியர்வையில், காற்றில்,

கண்ணீரில், சிரிப்பில், தற்கொலையில்

தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது

அது.

 

விரும்பிப் பிரிந்தவர்களின்

கறுப்பு வெள்ளை புகைப்படங்களை

தன் பாழடைந்த வீட்டுக்குள்

பத்திரமாய் மாட்டி வைத்திருக்கிறது.

 

தன்னை கடந்து செல்லாத யாரையும்

கற்களாகவும் மரக்கட்டைகளாகவும்

பெயர் பட்டியல்

தயாரித்து வைத்திருக்கிறது.

நினைவுகளின் அரசவையில்

துயரமெனும் பெரும் பதவியை

யாருக்கும் விட்டுத்தராமல்

கவனமாய்

பாதுகாத்துக் கொள்கிறது.

 

ஆயிரமாயிரம்

ஆண்டுகள் கடந்தும்

தற்போதும் தானெடுக்கும்

திரைப்படத்தில்

கண்ணீர் காட்சியொன்றை

தவறாமல் வைத்துவிடுகிறது.

 

அப்படி ஒருத்தி

ஓடும் பேருந்தில்

இளவட்டங்களின்

குறுஞ்சிரிப்பில் சலசலப்பில்

எண்பதுகளின் இளையராஜா பாடலொன்றில்

தன்னைத் தேடிய படி

போய் கொண்டிருக்கிறாள்

தன் பேத்தியோடு

இந்த பிப்ரவரி 14 லும்

-முத்துவேல்

 

Related Posts