அரசியல்

வியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மெகா ஊழலான ‘வியாபம்’ வழக்கில் தொடர்ந்து மர்ம மரணங்கள் நடைபெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வியாபம் ஊழலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குமான தொடர்பை என்.டி.டி.வி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது.

வியாபம் ஊழல் என்பது என்ன?

வியாபம் – என்ற பெயர் மகாராஷ்டிர மாநில தேர்வு வாரியத்தின் பெயர் சுறுக்கமாகும். [Professional Examination Board (MPPEB) or MP Vyavsayik Pareeksha Mandal ]
அரசுப் பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்குவது பற்றிய குற்றச்சாட்டு எல்லா மாநிலங்களிலும் உள்ளது. ஆனால், வியாபம் ஊழலின் பிரம்மாண்டமே அதனை தனித்துக் காட்டுகிறது.

மாநில அரசுப் பணியிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வுகள் பற்றி 2009 ஆம் ஆண்டில் கடுமையான புகார்கள் வந்தன. அவற்றை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கை வெளியான பிறகு 100 பேர் கைது செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு “சிறப்புப் படை” (Special Task Force) நியமித்தனர்.
மாநிலம் முழுவதும் பல்வேறு நிலைகளில் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் இவ்வழக்கில் தொடர்புடைய, ஆளுனரின் மகன் மற்றும் பத்திரிக்கையாளர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான், அவரின் குடும்பத்தார் என முக்கியப் புள்ளிகள் பலருக்குமான தொடர்பு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே இந்தக் கொலைகள் நடப்பதாக ஊடகங்கள் கேள்வியெழுப்பின.

சில மரணங்கள் …

வியாபம் ஊழலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவ மாணவி நம்ரதா தாமோர் ரயில் தண்டவாளம் அருகே மர்மமாக இறந்து கிடந்தார். இது கொலையாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தற்கொலைதான் என காவல்துறை சொல்கிறது.

அந்த மாணவியின் பெற்றோரை நேர்காணல் செய்து திரும்பிய ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபர் வாயில் நுரை கக்கி உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேச மாநில ஆளுநரின் மகன், சைலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம்’ ஊழல் குறித்த விசாரணைக்கு உதவிவந்த மருத்துவக் கல்லூரி டீன் மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் ஜூலை 6 ஆம் தேதி காலை இறந்து கிடந்தார்.

என்னென்ன மோசடிகள் நடந்தன?

  • 1) அரசுத் தேர்வுகளுக்கு ஆள் மாறாட்டம் செய்வது. அதற்கு ஒத்துழைக்க லஞ்சம்.
  • 2) திறமையானவர்கள் தேர்வில் வெற்றிபெற – அவர்கள் பணியில், கல்லூரியில் சேராமல் பார்த்துக் கொண்டு. அந்த இடங்களை விலைபேசுவது.
  • 3) காப்பியடித்து தேர்வெழுத்த உதவுவது.
  • 4) இவற்றிலும் தேர்ச்சியடையாதவருக்கு மதிப்பெண் திருத்தி வழங்குவது.

இந்த முறைகேடுகளில் பல கோடி ரூபாய்கள் வரை, பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன.
வியாபம் ஊழல் முறைகேட்டில் தொடர்புடையோரின் இத்தகைய மர்ம மரணங்கள், மற்றவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. இந்தூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில் நுட்ப நிபுணர், வியாபம் வழக்கில் சம்பந்தப்பட்ட கணினிகளையும் ஒரு சில தகவல்களையும் கண்டு பிடித்திருக்கிறார். முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களின் பெயர் பட்டியலும், இது பற்றிய எஸ்.எம்.எஸ் பரிமாற்றங்களையும் கண்டுபிடித்தார். அவரும் கொல்லப்படலாம் என்ற அச்சம் எழுந்ததால் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தொடர்பு:
இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையோரின் தொடர் மரணங்கள் யாரைக் காப்பாற்றுவதற்காக? என்பது முழுமையாக வெளிப்படவில்லை. பாஜக முதல்வர் மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல தலைவர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

24pradhan

வியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம் பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற்கான சான்றுகள் கிடைத் துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச கல்வி அமைச்சராக பத்தாண்டுகள் பதவியில் இருந்த லட்சுமி காந்த் சர்மா வியாபம் குற்றவாளி பட்டியலில் உள்ளார். அவருக்கு முன், சிவராஜ் சிங் சவுகான் கல்வியமைச்சராக இருந்தார். லட்சுமி காந்த் சர்மாவால் மாநில கல்வித்துறை சிறப்பு இயக்குநராக பதவிநியமனம் செய்தார். சுதிர் சர்மா அப்போது சாதாரண தனியார் பயிற்சிக்கல்லூரி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். எனவே, இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சுதிர் சர்மா 2007-ஆம் ஆண்டு 4000 கோடிக்கு அதிபதியானார். சுரங்கத் தொழிலில் கால் பதித்தார்.

சுதிர்சர்மா ஆர்.எஸ். எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அவர் ஆர்.எஸ்.எஸ் மத்திய பிரதேச சிக்சாமண்டல் என்ற பிரிவில் உயர் பொறுப்பை வகித்துவந்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பெருமளவில் நிதியை மாதம் ஒருமுறை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் பங்கஜ் திரிவேதி என்பவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனை நடந்தபோது கல்வியமைச்சர் லச்சுமிகாந்த் சர்மா, சுதிர்சர்மா போன்றோர் பெயர் வெளியாயின. முக்கியமாக வியாபம் ஊழல் தொடர்பான பணம் அனைத்தும் சுதிர்சர்மா மூலம்தான் கைமாறியது தெரியவந்தது. இந்த நிலையில் 2013 தேர்தலில் லக்ஸ்மிகாந்த் சர்மா தோல்வியடைந் தார். பின் லட்சுமி காந்த் சர்மா வியாபம் ஊழல் வழக்கில் கைதானார்.

என்.டி.டி.டி தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்கும் வருமான வரி அறிக்கைகள் அவர் வியாபம் வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து பணம் பெற்று வந்ததையும் அவருக்கும் லட்சுமி காந்த் சர்மாவுக்கும் இடையில் வலுவான பிணைப்பு இருப்பதையும் காட்டுகின்றன.

பின் சுதிர் சர்மா கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியதலைவர்களின் பெயர்கள் வெளியாகின, சுரேஷ் சோனி, தர்மேந்திரப் பிரதான், பிரமோத் ஜா, விக்ரம் பட் போன்றோர் வியாபம் ஊழலின் முக்கிய பங்கு வகித்ததாக தெரியவந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மத்தியப் பிரதேசம் வருகை தரும் போதெல்லாம் சுதிர்சர்மாவை சந்தித்ததும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை இலவசமாக கொடுத்ததும் தெரியவந்தது.
2013 ஆம் ஆண்டு முதலான ஆவணங்கள் “விமான டிக்கெட்டுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக மிகப்பெரும் பணம்” செலவு செய்துள்ளதாகக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரபாத் ஜா மற்றும் பாஜக மாநிலத் தலைவரின் பெயர்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் வீர் சிங் பூரியா சுதிர் சர்மாவிடம் இருந்து தொடர்ந்து பணம் பெற்றிருக்கிறார் என்கிறன அவரின் நாட்குறிப்புகள்.

திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஊழல் விசயத்தில் பிரதமர் மெளனம் காப்பது, யாருக்கு சாதகமாக என்பது தெளிவாகிவருகிறது.

Related Posts