புதிய ஆசிரியன் மார்ச் 2015

வினாவுதலும் பங்கேற்புக் கற்றலும்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
– அறிவியல் மனப்பான்மைக்கு அடிப்படையை வள்ளுவர் வகுத்துத் தந் துள்ளார். இக் குறட்பாக்கள் தமிழ் வகுப்போடு நின்று விடுகின்றன. தமிழ் வகுப்புகளில்கூட பிற பாடப்பகுதிகளில் இக்கூற்றைக் கொண்டு ஆய்வு நடப்ப தில்லை. அறிவியல், வரலாறு வகுப்புகளில் ஆசிரியர் கூறுவதையும், பாட நூலில் உள்ளதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை நம் கல்விமுறையில் வளர்க்கப்பட்டுள்ளது. நிறைய கேள்விகளைக் கேட்கும் குழந்தைகளுக்குப் பொறுமையுடன் பதிலளிக்கும் பெற்றோர் வெகு சிலரே. குழந்தைகள் சந்தேகங்களோடேயே வளர்கின்றனர். பள்ளியிலும் சந்தேகம் கேட்டால் முட்டாள் என்று பட்டம் கட்டப்படும் என்பதால் வாய் மூடி இருப்பதே உத்தமம் என்று பேசாமல் இருந்துவிடுகின்றனர். சந்தேகம் கேட்டால் ஒரு நிமிடத்திற்கு முட்டாள் பட்டம் கிடைக்கலாம். கேட்காமலிருந்தால் வாழ்நாள் முழுவதும் முட்டாளாக இருப்போம் என்று ஒரு சீனப் பழமொழி கூறுகின்றது. நமது தேர்வு முறைகளும் சிந்திக்காது கற்பதை ஆதரிக்கின்றன. வினாக்களில் ஒருவகை சிந்திக்க வைக்கும் வினாக்களாகும்.
சாக்ரடீ° தன கருத்துகளைப் பிறர் மீது திணிக்காது நண்பர்களோடு நடைப்பயணத்தின்போது வினாக்களை அடுக்கிக் கொண்டே போவாராம். வினாக்களுக்கு விடை தேடும்போது அவர்கள் தாமாக ஞானம் பெறுவார் களாம். ஆகவே வினாக்களின் மூலம் கற்றல் சாக்ரடீ° முறை என்றே அழைக்கப்படுகின்றது. இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கணிதநூல் வரிசையைப் பள்ளிக்கு வாங்கினேன். பிற புத்தகங்களினின்று முற்றிலும் மாறுபட்டது. எதனையும் வெளிப்படையாகக் கூறாது வினாக்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வினாக்களுக்கு விடை தேடும்போது மாணவர் தாமாகவே புத்தறிவு பெறுவார்கள். ஆசிரியர் துணையின்றி கற்க முடியாது என்று நினைக்கப்படும் பகுதிகளையும் அந்நூல்கள் வினாக்கள் மூலம் கற்பித்தலை உறுதிப்படுத்திய பாங்கு வியப்பை அளித்தது. கற்றலில் மாணவர் முழுமையாக ஈடுபடுவதால் கற்றது நிலைத்து நிற்கும்.
தச்சுப் பட்டறையில் சப்தமில்லை யென்றால் வேலை நடக்கவில்லை என்று அர்த்தம். அதுபோல வகுப்பறை நிசப்தமாக இருந்தால் கற்றல் நடை பெறவில்லை என அறியலாம். ஏனென்றால் அமைதியாக இருப்பது குழந்தைகளின் இயல்பல்ல என்று சர் பெர்சி நன் (ளுசை ஞநசஉல சூரnn) என்ற கல்வியாளர் தனது நூலொன்றில் தெரிவிப்பார். ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதற்கு நாம் அளிக்கும் விளக்கத் திற்கு இது மாறாகவல்லவோ இருக் கின்றது? ஆந்திரப் பிரதேச தொடக்கக் கல்வித் திட்டத்தில் ஒவ் வொரு நாளும் குழந்தைகள் குறைந் தது ஆறு வினாக்களையாவது கேட்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது. நல்கொண்டா மாவட்டத் தில் அத்திட்டம் செயல்படுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. விதவிதமான வினாக்களைக் குழந்தைகள் எழுப்பி ஆசிரியர் களைத் திணறடித்தனர். உயிருள் ளவை மட்டுமே இயங்கும் என்று ஆசிரியர் கற்பிக்க ஒரு மாணவர் °கூட்டருக்கு உயிருண்டா என்று கேட்டார், உயிருள்ளவர் தயவில் தான் அது இயங்கும் என்று ஆசிரியர் சமாளித் தார். உடனே மற்றொரு மாணவர் மரத்திற்கு உயிருண்டல் லவா, ஆனால் இயங்குவதில்லையே என்று மடக்கினார். ஆசிரியர் திணறு கையில், எங்கள் குழுவில் இருந்த ஒரு இயக்குநர் வளர்ச்சி என்பதும் இயக்கம்தான் என்று விளக்கினார்.
மற்றொரு வகுப்பில் எச்சில் ஜீரணத்திற்கு உதவும் என்று முன் னர் சொன்னீர்கள், இன்று எச்சில் துப்பினால் நோய் பரவும் என்கின்றீர் கள், அப்பொழுது நாம் எச்சிலை முழுங்கினால் நமக்கு நாமே நோயை வரவழைத்துக் கொள்கிறோமா என்று கேட்க ஆசிரியர் விடை கூற இயலாத நிலையில், நாயும் பூனையும் காயம் பட்டால் என்ன செய்கின்றன? தம் நாக்கால் நக்குவதில்லையா, அவற் றின் எச்சில் ஒரு நோய் எதிர்சக்தி யாக விளங்கும் என்று கொடுத்த விளக்கம் மாணவருக்கு ஏற்புடைய தாக இருந்ததா என்று தெரிய வில்லை. மதநூல்களைப் பற்றிய பாடத்தை நடத்தும்போது இந்துக் களின் மதநூல் எது என்று ஒரு மாண வர் கேட்டார். ஆசிரியர் சிறிது யோசித்தபின் பகவத் கீதை என்றார். சக மாணவர் ஜோசப் சர்ச்சுக்குப்                  போகும்போது பைபிளை எடுத்துச் செல்கின்றார். இ°லாமியரிடமும் குரான் இருக்குமென்று நினைக் கின்றேன். எங்கள் வீட்டில் பகவத் கீதை இல்லையே, அதனின்று நீங்கள் எதையாவது ஒப்புவிப்பீர்களா என்று கேட்டார். ஆசிரியர் முழித்தார். அப்பொழுது இந்துக்களின் புனித நூல் எதுவென்று நானும் சிந்தித் தேன். எனக்கும் விடை தெரிய வில்லை. இம்மாதிரியான இக் கட்டான சூழ்நிலைகளினின்று தப்பிக் கத்தான் வகுப்பறையில்  வினாக் கேட்டல் தடை செய்து வைத்திருக் கின்றோமோஎன்றுஎனக்குத்    தோன்றியது.
வினாக் கேட்கத் தெரியாது பல மாணவரும் இருப்பார்கள். அவர் களுக்கு வினாவெழுப்பக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  அன்பு தனது தந்தையுடன் திருச்சிக்கு இரயிலில் சென்றார். இவ்வாக்கியத்தை கரும் பலகையில் எழுதி இது விடையாகக் கூடிய வினாக்களைத் தயாரிக்கும்   படிக் கேட்டுக் கொள்ளலாம். இது போன்று மேலும் பல வாக்கியங்கள் கொடுத்து அவற்றிற்கான வினாக் களைத் தயார்ப்படுத்த மாணவர்க்குப் பயிற்சி அளிக்கலாம். பாலோ பிரையரே விவாதமுறைக் கல்வியை வலியுறுத்தினார். ஆசிரியர் எல்லாம் அறிந்தவர், மாணவர் ஏதும் அறியா தவர் என்பதே பள்ளியமுறையின் அடிப்படை. உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகளை மறுத்து இரு சாராரும் சமநிலையில் நின்று விவா திக்கும்போது மாணவர்க்கு மட்டு மல்ல, ஆசிரியர்க்கும் தெளிவு கிடைக்கும் என்பது அவரது கோட் பாடு. கத்தோலிக்க மதம் பற்றி கற் பிக்க அவர் விவாதமுறையைச் செயல்படுத்தினார். 1980-களில் பள்ளிய விலக்கு இயக்கத்தின்போது (னுநளஉhடிடிடiபே ஆடிஎநஅநவே) அவரது நூல் வெளிவந்து கல்வி உலகத் திலேயே ஒரு பெரும் சிந்தனைப் புரட்சியைக் கொணர்ந்தது.
பஞ்சாப் மாநிலக் கல்விக் குழு விற்கு ஒரு ஆலோசகராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். காலி° தான் இயக்கம் தீவிரமாக இருந்த காலம் அது. கலவரங்களுக்கிடை யிலும் கல்விக்கூடங்கள் இயங்கி வந்தது கண்டு நான் அதிசயித்தேன். பஞ்சாப், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்துதான் மிக அதிகமான பேர் ஐ.ஏ.எ°. தேர்வு களில் வெற்றி பெற்று வந்தனர். அதனை அறிந்திட நான் ஒரு கல்லூ ரிக்குச் சென்றேன். ஒவ்வொரு கல் லூரியிலும் ஐ.ஏ.எ°. பயிற்சி மையம் இயங்குவதாகவும், அவற்றிற்கென மாநில அரசு சிறப்புப் பேராசிரியர் பணி யிடங்கள் உருவாக்கி இருந்ததாக வும் அறிந்தேன். நமது மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் என்பவை மாணவர் தேர்விற்கு முன்னிலை வகிக்கும்போது, பஞ்சாபில் கலையி யல் பாடங்கள் பெரிதும் விரும்பப் பெற்றன. போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அவை உதவும் என்ற கருத்து நிலவியது. ஒரு வரலாற்றுப் பாட வகுப்பிற்குச் சென்றபோது மாண வர்கள் தாம் நூலகத்திலும், பிற வகைகளிலும் கண்டறிந்தவற்றை விளக்கிக் கொண்டிருந்தனர். ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண் டிய மாணவர்கள் ஐந்து குழுக் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் அத்தலைப்பைப் பற்றி விவா தித்து அறிக்கை அளிக்க வேண்டு மென்பது அக்கல்லூரியில் நடை முறை. குழுக்களின் அறிக்கைகள் அளிக்கப்பட்டவுடன் பேராசிரியர் ஏற்கத் தக்கவை, தவறானவை ஆகி யவற்றை விளக்கினார். வரலாற்றில் புதிய செய்திகளை ஆய்வுகள் மூலம் அறியும்போது, நாம் அறிந்தவற்றில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்க வேண்டுமென்றும் பேராசிரியர் விளக் கினார். எனக்கு ஒரு நல்ல அனுபவ மாக இருந்தது. மாணவர்கள் தாமே கற்க ஊக்குவிக்கப்பட்டனர்.
பங்கேற்புக் கற்றல் மிக அதிக அளவில் நடைபெற வேண்டும். விரும்பத்தகாத பல வளாக நிகழ்வு களையும் தவிர்க்க அது உதவும். ஆசிரியர்-மாணவர் உறவு வலிமை யாக அமையும்.

  • ச.சீ. இராஜகோபாலன்
    (rajagopalan31@gmail.com  044-23620551)

Related Posts