சமூகம்

விஞ்ஞானிகளான குழந்தைத் தொழிலாளிகள்: சுடர்விடும் அறிவொளி!

“ஆற்றல்” என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், அணு, மின்சாரம் என இயற்கையில் கிடைக்கும் சக்திகள் தான். உலகம் இன்று ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஆற்றல் தொடர்பான ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றலை பயன்படுத்துவது, பாதுகாப்பது, புதிதாகக் கண்டறிவது உள்ளிட்ட பொருளில் மாணவர்கள் ஆய்வைச் சமர்ப்பிக்கலாம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களும் விதவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி கொங்கடை மலைப்பகுதியில் உள்ள ஜீயன்தொட்டி மலைகிராம மாணவர்கள்”ஆற்றல்” என்ற தலைப்பை யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு புதுமையாகவும், அதேசமயம் மிகப் பொருத்தமாகவும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த குறிப்பான தலைப்பு, “குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு.” என்பதாகும்! இந்த தலைப்பின் மூலம் அடிப்படையான ஆற்றலாகத் திகழ்வது மனித ஆற்றல் தான் என்பதை தெள்ளத்தெளிவாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இயற்கை விஞ்ஞான ஆய்வில் சமூக சக்தியான மனித ஆற்றல் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆற்றல் இழக்கப்பட்டால் வேறு எல்லா ஆற்றல்களும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்பது மெய்யல்லவா?

இந்த ஆய்வுப் பொருளைத் தேர்ந்தெடுத்ததும்கூட உயிரோட்டமான முறையில் அமைந்திருந்தது. ஆம், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையே இந்த ஆய்வுக்குழுவின் தலைவராவார். அவர் பெயர் கவின். அவரது தந்தையின் பெயர் சக்திவேல். ஜீயன்தொட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை அவர் மணக்கிறார். அந்த சிறுமியின் 13வது வயதில் கவின் பிறக்கிறார். இவர் பிறக்கும்போதே தாய் இறந்து விட்டார். உடல்ரீதியாக பக்குவமடையாத குழந்தையைத் திருமணம் செய்ததால் நேரிட்டது இந்த இழப்பு. ஆனால் மூடநம்பிக்கை காரணமாக, தாயை இழந்தை கவினையே, பிறக்கும்போதே தாயை கொன்றவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிட்டு தந்தை பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொள்கிறார்.

பிறந்தபோதே அநாதையாக்கப்பட்ட கவின் அவரது அத்தையின் அரவணைப்பில் வளர்கிறார். படிப்பில்லாமல் ஒர்க்ஷாப் ஒன்றில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு குழந்தைத் தொழிலாளியாக கவினின் வாழ்க்கை தொலைக்கப்பட்டது. சுடர் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் குழந்தைத்தொழிலாளியான கவின் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்படுகிறார். ஜீயன்தொட்டியில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளியில் தற்போது 6ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த 12 வயது மாணவர்.

இவர் தலைமையிலான குழுவில் இடம்பிடித்தவர்கள் மீனா, நந்தினி, விஜய் ஆகிய மலைகிராம மாணவர்கள்தான். இவர்களும் மீட்கப்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் தான். குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் ஆற்றல் இழப்பு என்ற தலைப்புக்காக ஜீயன்தொட்டி, கொங்காடை கிராம மக்களிடம் இந்த குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இப்பள்ளி ஆசிரியர் சி.கனகராஜ் ஆய்வுக்கான வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டார்.

அறிவியல் ஆய்வுக்கு தேவையான தகவல்களை முதலில் திரட்டினர். இந்த கிராமங்களில் உள்ள மொத்த மக்கள் 432 பேர். இதில் திருமணம் முடித்தவர்கள் 257 பேர். இவர்களில் 18 வயதுக்குக் கீழ் அதாவது குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் 206 பேர். அதாவது 80 சதவிகிதம் திருமணங்கள் குழந்தைத் திருமணம்தான்! இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி 45 சதவிகிதம் ஆகும். அப்படியானால் இங்குள்ள நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை அறியலாம். இதன் விளைவு என்ன? 93 குடும்பங்களில் முதல் பிரசவத்தில் குழந்தை இறப்பு மட்டும் 27!

சத்துக் குறைபாடு, ரத்தசோகை, கல்வி இழப்பு, சிந்தனை வளர்ச்சியில் ஏற்படும் தடை, பேறு கால இழப்பு, குறைப்பிரசவம், பக்குவமின்மை, மணமுறிவு, கருக்கலைப்பு, சராசரி வாழ்நாள் குறைதல், பெற்றோர் இழப்பால் குழந்தைகள் அநாதையாதல் என ஒன்றைத் தொட்டு ஒன்றாக இந்த ஒட்டுமொத்த கிராமச் சமூகமும் பல்வேறு ஆற்றல் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதே இந்த குழந்தைகள் ஆய்வில் கண்டறிந்த விளைவுகள்!

இந்த விசயத்தை பொருளாதார அம்சத்திலும் இக்குழுவினர் மதிப்பிட்டுள்ளனர். அதாவது குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் இறப்பு காரணமாக ஒரு குடும்பத்தில் 23 லட்சம் ரூபாய் வருமான இழப்பும், உழைப்பு இழப்பும் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது தாயின் ஆரோக்கியம். ஆனால் இத்தகைய குழந்தைத் திருமணங்களால் தாய் – சேய் இருவருமே இழப்பைச் சந்திக்கின்றனர்.

குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது என்பது அரசின் உத்தரவின் மூலமாக மட்டும் நடக்கக்கூடிய விசயமல்ல. அதற்கான சமூகக் கட்டுமானம், கல்வி உள்ளிட்ட பண்பாட்டுத் தேவையும் சேர்ந்தே இதைத் தடுக்க முடியும் என்கிறது இவர்களது ஆய்வு. ஆம், இந்த மலை கிராமத்தில் குழந்தை திருமணம் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டறிக்கை விநியோகித்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மாதன் என்ற முதியவர் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“18 வயசுக்கு முன்னாடி எங்க குழந்தைங்களுக்கு கல்யாணம் பண்ணவேணாம்னு சொல்றீங்க.. அதுக்கு எங்களுக்குத் தேவை எங்க ஊர்ல 12ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம். அதாவது எங்க ஊருக்கு அருகே 8ம் வகுப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு மேல படிக்கணும்னா 60 கி.மீட்டர் அந்தியூருக்குப் பயணிக்கனும். அதனால எங்க குழந்தைங்க 8ம் வகுப்புக்கு மேல படிக்க முடியிறதில்ல. ஆடு, மாடு மேய்க்கப் போயிருவாங்க. பாதுகாப்பில்லாத நிலைமையினால நாங்களும் சட்டுப்புட்டுனு கல்யாணத்தைச் செஞ்சு வச்சிருவோம். 12வது வகுப்பு வரை ப ள்ளிக்கூடம் இருந்துச்சுன்னா, எங்க குழந்தைங்கள படிக்க வப்போம். அங்க அவங்க படிச்சு முடிக்க 17 வயசு ஆயிரும். அப்புறம் ஒரு வருசத்துல கல்யாணம் பண்ணிடுவோம். நீங்க சொன்னமாதிரி குழந்தை திருமணமும் நடக்காது, எங்க பிள்ளைங்களையும் காப்பாத்த முடியும். அதனால நோட்டீசுக்கு பதிலா, பள்ளிக்கூடம் கொடுங்க!” என்று மாதன் பேசியதுதான் தீர்வுக்கான முடிச்சு.

எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதுமானதல்ல, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்வதுடன், பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும். இதைச் செலவாகக் கருதாமல் மனித ஆற்றலை பாதுகாத்து பயன்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தோடு பல்வேறு அம்சங்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய குழந்தைகள் மாநாடு 1இந்த ஆய்வை திருப்பூர் அருகே சசூரி கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தபோது, மதிப்பிட்ட ஆசிரியர்களே ஒரு கணம் திகைத்துப் போய் இவர்களது சிறப்பான ஆய்வைப் பாராட்டி அகில இந்திய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டதில் இவர்களது ஆய்வும் ஒன்று. குறிப்பாக 21 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்து தேசிய அளவிலான மாநாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது ஆய்வுக்கு பேருதவி புரிந்த சுடர் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ் மன நிறைவோடு இந்த குழந்தைகளை, இல்லை..இல்லை.. இளம் விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்தி மகிழ்கிறார்.

வாய்ப்பு வழங்கப்பட்டால் மிகச்சிறந்த அறிவியல் சுடரொளி பரவும்

என்பதற்கு இது சிறப்பான உதாரணமாகும்

Related Posts