இலக்கியம் சினிமா பிற

விசாரணை, யாரை விசாரிக்கச் சொல்கிறது?

  • முருகன் மந்திரம்

விசாரணை படம் அல்ல. நீதியையும் மனிதாபிமானத்தையும் கொன்று இரத்தக் கறைகளை மட்டுமே சாதனையாய் செய்துகொண்டிருக்கும்காவல்துறையை இனியாவது கொஞ்சம் கழுவ முயற்சி செய்யுங்கள்என்று நிராதரவாக கூக்குரல் எழுப்பும் அப்பாவி உயிர்களின் சார்பில் திரையில் நிகழும் ஒரு அறப்போர் தான் “விசாரணை”.

மக்களுக்கான மிகப்பெரிய பாதுகாப்பு அரண்களாக இன்றும் முன் நிறுத்துப்படுவதும் நம்பிக்கையாக இருப்பதும் காவல்துறையும் நீதித்துறையும் மட்டுமே.

கவுன்சிலர்களை, எம்.எல்..க்களை, எம்.பி.க்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, பிரதமர்களை, ஆளுநர்களை, ஜன அதிபதிகளை சராசரி மக்கள் நம்பிக் குடித்தனம் நடத்த முடியாது என்பது எழுதப்படாத தீர்ப்பாகி விட்டது.

ஒரு கட்சியின் எம்.எல்..,யாக இருப்பவரே, அந்தக்கட்சித் தலைவரை சந்திக்க முடியாத நிலவரம் தான் யதார்த்தம். இதில் சராசரி பொதுமக்கள் எங்கே அரசியல்வாதிகளை சந்திப்பது? அதிலும் பணமும் சாதியும் பெருத்துவிட்ட அரசியலில் நீதிக்கும் நியாயத்திற்கும் எல்லாம் வாசலில் கூட இடம் இல்லை.

அதனால், நீதியையும் நியாயத்தையும் பெற்றுத்தரும் என்று இன்றளவும் நம்பப்படுகிற கட்டடங்கள் இரண்டு வகை, ஒன்று, காவல் நிலையங்கள். இன்னொன்று, நீதிமன்றங்கள்.

எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வத் தீர்ப்புகள் வழங்கி, தன் மீதான மிக மிக மிக மெல்லிய நம்பிக்கையையாவது தக்க வைத்துக்கொள்கிறது நீதிமன்றங்கள்.

ஆனால் காவல்துறை?…

எந்த மாவட்டம், எந்த மாநிலம் என்று பாகுபாடெல்லாம் தேவையில்லை. எல்லா ஊர் காவல்துறையும் ஒரே மாதிரி மனிதாபிமானம் அற்றதாகவே இருக்கிறது என்று மிக வன்மையாக காட்சிப்படுத்தி உறுதிப்படுத்துகிறது, விசாரணை.

இந்திய, தமிழக காவல்துறையைப் பற்றி, அவர்களின் விசாரணை பற்றி, கொஞ்சமாகப் பேசினாலும் நிதர்சனமாகப் பேசுகிறது விசாரணை.

ஆனால், உண்மையில் விசாரிக்கப்படவேண்டியவர்கள். ஒட்டு மொத்த காவல்துறையில் உள்ள ஒவ்வொருவருமே என்கிற உணர்வையே விசாரணையின் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு உணர்த்துகிறது.

முன்னாள், இந்நாள் என்ற வித்தியாசமில்லாமல், ஏட்டு, இன்ஸ்பெக்டர், எஸ்.பி., .ஜி. என்ற பாகுபாடில்லாமல், டிரைவர், அலுவலக வேலை செய்பவர்கள்.. என ஒட்டுமொத்த காவல்துறையினரையும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தினால்

தினம் தினமும் கதறக் கதற, கற்பனை செய்யமுடியாத இரத்தக்களறி சித்ரவதைகளோடு, அப்பாவி உயிர்களும் நீதியும் மனிதாபிமானமும் கொல்லப்படுகிற வன்முறை வரலாறு வண்டியாக வண்டியாக கிடைக்கும் என்று அடித்துச் சொல்கிறது விசாரணை.

விசாரணை, முன்னிறுத்துகிற இன்னொரு அதி முக்கியமான உண்மை., காவல்துறையில் வேலை செய்பவர்களின் கைகளும் இதயமும் அதிகார வர்க்கத்தால் கட்டப்பட்டுள்ள அவல நிலை.

எவ்ளோ பெரிய காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சின்ன அதிகாரியாக இருந்தாலும் தன்னிச்சையாக தன் விருப்பத்திற்கு எதையும் செய்ய முடியாத சுதந்திரமற்ற நிலையில் இருப்பதை அப்பட்டமாக வெளிக்கொணர்கிறது விசாரணை.

தங்களை தற்காத்துக்கொள்ள, தங்கள் வேலையை தற்காத்துக்கொள்ளஅதையும் மீறி தங்கள் உயிர்களையும் தங்கள் பொண்டாட்டி பிள்ளைகளின் உயிர்களையும் அதிகார வர்க்கத்திடம் இருந்து காப்பாற்றுவதற்காக, தற்காத்துக்கொள்வதற்காக அப்பாவிகளையும் நீதியையும் பலி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் நிர்க்கதியாக நிற்கிற காவல்துறை அதிகாரிகள் மீது கோபத்திற்கு சரிசமமாக பரிதாபத்தையும் வரவைக்கிறது, விசாரணை.

எந்த நியாயக்காரனும் இங்கே தாக்குப்பிடிக்கவே முடியாது என்பதற்கு ஒரே ஒரு சாட்சியாக, சமுத்திரக்கனியும்எந்த அதிகாரமும் பணபலமும் தன்னை விட பெரிய அதிகார அரசியல் முன் நீடிக்காது என்பதற்கு ஒரே ஒரு சாட்சியாக கிஷோரும் முன்னிறுத்தப்படுகிறார்கள். அரசியல் வாதிகளுடன் நெருக்கம் என்பது நல்ல பாம்பு நட்பு தான், என்பதற்கு சாட்சியாக ஆடிட்டர் கதாபாத்திரத்தில் கிஷோர்.

‘‘இல்லீங்கய்யாநான் ஆஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போவேங்கய்யா  என மேலதிகாரியிடம் திமிறவும் முடியாமல் விலகவும் முடியாமல் சமுத்திரக்கனி பேசுகையில், கோட்டாவுல வேலைக்கு வந்தவன் நியாயம் பேச வந்துட்டான்என்பதாக ஒரு வசனத்தை போகிற போக்கில் மேலதிகாரி வழியாக சொல்லிச்செல்வதன் மூலம் கோட்டாவில் வேலைக்கு வந்தவர்களுக்குள் கொஞ்சம் கூடுதலாக மனசாட்சியும் மனிதாபிமானமும் இருக்கிறது என்பதாக காட்சிப்படுத்துகிறார் வெற்றி மாறன்.

காவல்நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட செல்வாக்கு மிக்க நபர் ஒருவரை, அவர் தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்ய, வருகிறார்கள் இரண்டு திறமைசாலிகள். அதாவது அந்த மாதிரி செட்டப் தற்கொலைகளை அடிக்கடி கச்சிதமாக செய்யும் காவல்துறை அனுபவசாலிகள். அந்த காவல்நிலைய கொலையில் சற்றும் ஒப்புதல் இல்லாத சமுத்திரக்கனி, அந்த அனுபவசாலிகளைவாங்கண்ணே, எப்டி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?” என நலம் விசாரிக்கும் காட்சி, எங்களைப் போன்ற காவல்துறைக்காரர்களுக்கு இது மிரட்சியோ பதட்டமோ அல்ல. மிக சராசரி தினசரி நிகழ்வு தான் என்று சாதாரணமாக சொல்லிச் செல்கிறது கதை.

அதைப்பபோலவே தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, மூன்று அப்பாவி உயிர்களை செட்டப் செய்து காவு வாங்க செல்கிற இடத்தில் ஒரு அநியாயமாக உயிரைக்கொல்ல முற்படும் போது, ஒழுங்காக வேலை தெரிந்தவன் இப்படி உயிர் இழுத்துக்கொண்டிருக்க்கிறாது, பட்டுன்னு போயிருக்கும் என்ற உரையாடல்கள் எல்லாம், கேட்பவர்களை காவல்துறையில் உள்ளவர்களோடு ஜென்மத்துக்கும் சகவாசம் வைக்க மாட்டார்கள்.

நாளை நமக்கும் இதே போல ஒரு சம்பவம் நடக்கலாம் என்பதும் அவர்கள் அறியாததே அல்ல, என்பது யதார்த்தம் மீறிய யதார்த்தம்.

மனிதாபிமானத்திற்கு எதிராக காவல்நிலையங்களுக்கு வெளியே நடக்கும் அத்துமீறல்களை விட, காவல் நிலையங்களுக்கு உள்ளே நடக்கும் ஆயிரக்கணக்கான அத்துமீறல்களை எவரும் எதுவும் செய்யமுடியாது என்ற நிஜம் பேசுகிறது விசாரணை.

இந்த நிமிடத்தில் கூட எத்தனையோ இரத்தக்களறி சித்ரவதைகளை காவல்நிலையங்களுக்குள் பல அப்பாவிகள் அனுபவிக்கிறார்கள்.. என்பதன் சாட்சியாக அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

விசாரணை, படம் என்பதைத் தாண்டி ஊடகங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேசப்படவேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்கால அவலம் என்பதை எந்தப்பக்கமும் சாயாமல் யதார்த்தமாக சொல்கிறார் வெற்றிமாறன்.

எதைக் குறை சொல்வது, யாரைக் குறை சொல்வதுஎன்பதைத் தாண்டி இதை கொஞ்சமேனும் சரி செய்யாவிட்டால்காவல்நிலையங்கள் என்கிற கட்டடங்களுக்கு நீதி கேட்டோ, நீதி கிடைக்கும் என்றோ நம்பி எவரும் செல்ல மாட்டார்கள். காவல்நிலையங்கள் அருகில் செல்லக் கூட தயங்குவார்கள் என்பதையே விசாரணை சொல்கிறது.

ஏனெனில்அப்படி எந்தப் பின்புலமும் இல்லாத அப்பாவிகள் காவல்நிலையங்களுக்கு சென்றால். என்னவாகும் என்பதைத்தான் தெள்ளத் தெளிவாக காட்சிப்படுத்துகிறதுவிசாரணை.

வழக்கமான படங்களின் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்த்தல், நியாயமானதல்ல. எனினும் படத்தில் எந்த நியாயமுற்ற சித்ரவதையை அனுபவிக்கும் அட்டகத்தி தினேசு, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் நண்பர்களும் தங்களின் வலியை அப்படியே நம் நெஞ்சுக்கு கடத்துகிறார்கள்.

  • இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனியும் ஆடிட்டராக கிஷோரும்… அப்படியே அப்படியே நிற்கிறார்கள். பணம் சேர்த்து வைப்பது பற்றி கிஷோர் பேசுகிற வசனம் எல்லாம்… அதிகாரத்தின் எச்சம். ஆனால் அதே அதிகாரம் கோரமாக கட்டித்தொங்க விடும்போது… கிஷோர் என்கிற நடிகனின் அர்ப்பணிப்பு அபாரம். சக மனிதனுக்காக கண்களுக்குள் நேசக்கண்ணீரை நிறைக்கும் சமுத்திரக்கனி அன்பின் சமுத்திரமாக பரந்து விரிகிறார்.
  • ஜீ.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை… விசாரணையின் வலிகளை ஒலிகளாக இறக்குகிறது இதயத்தில்.
  • எடிட்டர் கிஷோர்… வணிக சமரசத்திற்காக கொஞ்சம் அப்படி இப்படி காட்சிகள் கூட படத்தில் இல்லை என்றாலும் படத் துவக்கத்தில் இருந்து கடைசி நொடி வரை இமைகளை கட்டிப்போட்டு இதயத்தை படபடப்பிலேயே வைத்திருக்கிறார்.
  • ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இது படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு கண்ணெதிரே நடக்கிற நிகழ்வுகளாகவே காட்சிப் படுத்தி இருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன்சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் மிச்சமிருக்கும் மனிதாபிமானத்தின் சார்பில், மிச்சமிருக்கும் சக மனிதன் மீதான நேசத்தின் சார்பில். ஒரு மரியாதைக்குரிய அன்பின் வணக்கம்.

அரசியலோ, அதிகாரமோ.. எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட “காவல்”துறை இப்படி ஆகி விட்டதை அப்படியே விட்டுவிடுவதும், ஒதுங்கிப்போவதும் நியாயமல்ல.

காவல்துறையில் இருப்பவர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தர வேண்டும். நீதியின் பக்கம், நியாயத்தின் நிற்கும் காவல்துறையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் மக்கள் தரவேண்டும்.

ஆனால், அதே சமயம்… காவல் பணிக்கான தேர்வு, பயிற்சி, வேலைக்கான லஞ்ச பணப்பரிமாற்றங்கள் இவற்றை எல்லாம் மறுபரிசீலனை செய்யாமல் இருந்தால், எதிர்காலத்தில் அரசியல்வாதிகளை விட காவல்துறையே மக்களின் நேரடி எதிரிகளாக ஒரு தோற்றம் உருவாகலாம்.

காவல்துறை பயிற்சி என்பது வெறும் உடல் ரீதியான பயிற்சியாக இல்லாமல், மன ரீதியாக, மனசாட்சி ரீதியாக, மனிதாபிமான ரீதியாக… சாதி மதம் பயத்திற்கு அப்பாற்பட்டு நீதியின் பக்கம் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வைக்கிற பயிற்சியாக இருக்க வேண்டும்.

எவ்வளோ ஐ..எஸ். அதிகாரிகள் உள்ள இந்த மிகப்பெரிய நாட்டில், சகாயம் போன்று ஒரு சிலர் மட்டுமே இருப்பது.. நம் நாட்டுக்கும் நம் அரசியல் அமைப்பிற்கும் நம் காவல்துறைக்கும் நம் நீதித்துறைக்கும், நம் மக்களுக்கும் அவமானம் அன்றி வேறென்ன?

குழந்தைகள் இந்தப்படத்தை பார்க்கமுடியாது, எனினும் இந்தப்படம் பேசும் விஷயங்கள் தான் இன்றையசிஸ்டம்என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல சொல்லிக்கொடுங்கள் என்கிறார், இயக்குநர் வெற்றிமாறன்.

அது என்னசிஸ்டம்என்பதை தெரிந்து கொள்ள அனைவரும், விசாரணை பாருங்கள். “விசாரணைபற்றி கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசுங்கள்.

Related Posts