சினிமா தமிழ் சினிமா

“வாழ்வியல் அர்த்தங்களை சொல்லும்” தர்மதுரை . . . . . . . !

சென்ற வாரம் திரைக்கு வந்துள்ள தர்மதுரை திரப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தேன். படத்தை பார்த்துவிட்டு வெள்யே வரும் பொழுது ஒரு நல்ல திரைப்ப்டத்தை நிம்மதியாக பார்த்தோம் எனும் எண்ணம், சில கதாபாத்திரங்கள் இன்னும் நம் முன் நிழலாடுகின்றன.. சில முக்கிய வசனங்கள் நம்மை அசை போட்டு இப்படத்தை பற்றி பேச வைக்கின்றன. தமிழ் திரையுலத்துக்கு நல்ல இயக்குனர்களும், கலைஞர்களும் மேலும் மேலும் வந்து சேருவார்கள் எனும் நம்பிக்கை துளிர்விட்டது.

தர்மதுரை…. கதாநாயகனின் பெயர். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியே அவரின் பாத்திரம் பற்றி பாதி சொல்லிவிடுகிறது. பகல் நேரத்தியிலேயே மதுபானக்கடையில் அவர் செய்யும் கேலி, கிண்டல், அதிலும்  அவர் அக்காட்சியிலேயே கேட்கும் சில கேள்விகள் ..ஆஹா..வாழ்வின் சில அப்பட்டமான உண்மைகளை போட்டு உடைக்கிறது. மருத்துவம் படித்து விட்டு தினசரி குடிக்கும் பழக்கம் கொண்டவர்..ஊரில் நடக்கும் நல்லது, துக்க நிகழச்சிகளில் தன்நிலை தெரியாமல் நடந்து கொள்பவர்.  கூட்டு குடும்பம். சகோதரர்கள், சகோதரி என இருக்கும் அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதையொட்டிய விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்..தன் கல்லூரி கால நண்பர்களை தேடி என பிளாஷ் பேக் பகுதிக்குள் செல்லுகிறது படம்.

மதுரை மருத்துவ கல்லூரியில் சேரும் நாயகன் தன் பேராசிரியர் முதல் நாளன்று சொல்லும் அறிவுரைகளை மனதிற்குள் ஏற்றி, அதையே தன் லட்சியமாக கொள்கிறார். அதாவது நாம் பிறந்த மண்ணுக்கும் அதை சார்ந்த மக்களுக்கும் நாம் கடமைபட்டிருக்கிறோம், வரிப்பணத்தில் படித்த நாம் இச்சமூகத்திற்காக பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்திட நினைக்கிறார். தனக்கு உயர் கல்வி கிடைக்க காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தனது பெயராக வைத்து கொண்டதின் பின்னணியை சொல்லும் பேராசிரியரை ரோல் மாடலாக ஏற்று கொள்ளுகிறார்.  சக மாணவர்களுடன் கிடைக்கும் தொடர்பு, அதில் உருவாகும் நெருக்கம், பிரச்ச்சனை என அனைத்திலும் ஒரு நேர்த்தி தெரிகிறது. கல்லூரி காட்சிகளை அழகுற அதன் யதார்த்த தன்மையோடு பதிவிடுகிறார் இயக்குநர்.

பிரிவு உபச்சார விழா, அதன் தாக்கம் நம்மை கல்லூரி நாட்களுக்கு அழைத்து செல்லுகிறது. கல்லூரியில் கிடைக்கும் தோழமை,அதிலிருந்து கிளம்பும் மெல்லிய காதல் , என மிகை இல்லாமல் திரையில் காட்சிகளாக வருகிறது. அதில் நெருக்கமாக இருந்த இரு தோழிகளை சந்திக்க கிளம்புகிறார் நாயகன் .

ஸ்டெல்லா எனும் தோழியின் வீட்டுக்கு சென்று அங்கு ஏற்படும் சோகம், அதை உள்வாங்கி கொண்டு குடிபோதையிலேயே தென்காசி சென்று சுபாஷினியை ஒரு மருத்துவமனையில் சந்திக்கிறார்.  ஏன் குடிகாரனாக மாறினேன் என்பதற்கான மீண்டும் ஒரு பிளாஷ் பேக்….தான் பணியாற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஒரு பெண்  தன் தாய்க்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காக செய்யும் ஒரு சிறு பொது நல சேவை அதன் தாக்கம் ஏற்படுத்தும் உணர்வினால் உருவாகும் காதல், அதில் ஏற்படும் உறவு, இன்னும் பல குடும்பங்களில் நிலவும் வரதட்சிணை பிரச்சனை, ஏற்படும் பிரிவினை என்பதை கண்கள் குளமாக்க சித்தரித்திருக்கிறார் இயக்குனர்..அதை திரையிலும் திறம்பட கண் முன் காட்டியிருக்கிறார்கள் கலைஞர்கள்…ஆஹா இந்த பகுதியில் எத்தனை விஷயங்களை பொது புத்திக்கு உரைக்கிறார்…..வரதட்சனை, கிராமத்து பெண்களுக்கு இருக்கும் பொது அறிவு, அதனால் கிடைக்கும் அறிமுகம், தொடர்பு, வாசிக்கும் பழக்கம், என எல்லா விஷயங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அன்புசெல்வி நடிப்பில் அத்துணை அழகு. அதேபோல், எம்.எஸ். பாஸ்கரின் அற்புத நடிப்பு நம்மை நிலை குலைய வைக்கிறது. அன்புசெல்வி தற்கொலை செய்து கொள்வதற்கு தானே காரணம் எனும் கடித்தத்தை தாசில்தார், காவல்நிலைய ஆய்வாளர், நூலகர் என மூன்று பேருக்கும் அனுப்பியுள்ளதை சொல்லும் விதம் கிராமத்து பெண்களுக்கு உள்ள பொது அறிவை அப்பட்டமாக ,அற்புதமாக காட்டுகிறது.

தன் கல்லூரி தோழி சுபாஷினியோடு ஒரே வீட்டில் தங்கும் தர்மதுரை எப்படி சில குடி பழக்கத்திலிருந்து விடுபட்டு தன் பேராசிரியர் பெயரிலேயே துவங்கும் மருத்துவமனை, அதில் தென்காசியில் முகவரி தேடும் போது ச்ந்திக்கும் திருநங்கைக்கு வேலை, தேவையில்லாமல் மருந்துகள் எடுத்து கொள்வதை கற்பிக்கும் விதம், எந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் அற்புதாமாக படமாக்கியிருக்கிறார்கள்….. அந்த மருத்துவமனைக்கு வரும் பாடம் எடுத்த பேராசிரியர் ….நிற்க அந்த காட்சியில் கல் நெஞ்சக்காரன் கூட கண்டிப்பாக கலங்கியிருப்பான். அதனூடே சுபாஷினிக்கு வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பம் ..அதனால் ஏற்படும் மண வாழ்வு முறிவு  என செல்லும் கதை கதாநாயகனும் சுபாஷினியும் புது வாழ்வை துவக்குவது ….தான் ஊரை விட்டு கிளம்பும் போது தவறுதலாக பயணப்பையில் இருக்கும் சகோதரர்களின் சீட்டு பணம் ..அதை மீண்டும் கொடுக்க செல்லும் போது அவசரப்பட்டு இளைய சகோதரன் அடிப்பது ..மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது..  ..சிகிச்சை.. இயலாத நிலையிலும்  தன்னோடு இருக்கும் சக நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது என மருத்துவர்களின் மேன்மையை படத்தின் அடிநாதமாக சொல்லியுள்ள பாங்கு வியக்க வைக்கிறது.  தர்மதுரை ஒரு சாதாரண திரைப்படம் தான் என்று வரையறுத்து விடலாம்…ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம்.

ஒரு திரைப்படம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் மனதில் நிலை கொள்கிறதோ அதுவே அப்படத்தின் முழு வெற்றி… தாக்கம் பல வகைப்படும்…பிரம்மாண்டம்.. எடுத்த பாணி… விளம்பரம். திரைக்கதை ..மையக்கரு…. புது வடிவம்.. கலைஞர்களின் படைப்பாற்றல் என பல கோணங்களில் வரையறுக்கலாம். இந்தப்படம் அன்றாட வாழ்வியலின் பல அம்சங்களை கோடிட்டு காட்டுவதாலும், இயல்பாக மனிதர்களின் குணாம்ச குறியீடுகளை மிகை படுத்தி காட்டாமல், இருப்பதால் மனதில் நிற்கிறது. உதாரணமாக, ஒரு காட்சி  கதாநாயகன் தெரியாமல் சீட்டு பணத்தை எடுத்து செல்வதால் வீட்டுக்குள் மக்கள் கூட்டமாக வந்து சத்தம் போட்டு கொண்டிருப்பார்கள்….கதாநாயகனின் தாய் ( ராதிகா சரத்குமார்) அநாயசமாக பழைய சோற்றையும் மிளகாயையும் கடித்து கொண்டு சாப்பிடுவார்…தனக்கு பிடிக்காததை செய்யும் பிள்ளைகளுக்கு எதிராக ஒரு தாய் காட்டிடும் வெறுப்பின் வெளிப்பாடு.

இப்படத்தில் சிலர் நடித்திருக்கிறார்கள் என்பதை விட கொஞ்ச நாட்களுக்காவது நம்முடன் வாழ்வார்கள் என கருதுகிறேன்…..அன்புசெல்வியின் தந்தையாக நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர்  ..ஆஹா என்னே ஒரு நேர்த்தி….மிகைபடுத்தாமல் நடிக்கும் கலைஞன்…நீண்ட காலம் நல்ல பாத்திரங்களில் நடித்திட வாழ்த்துவோம்..

அழகு பொம்மையாக மட்டும் பார்க்கப்பட்ட தமண்ணா  இந்த படத்தில் பல காட்சிகளில் கண்களால் பேசுகிறார்… ஒரு தரமான நடிகையை தமிழ் திரை உலகம் காண வேண்டும்… முனியாண்டி எனும் பெயரை மாற்றி காமராஜாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் ராஜேஷ்….கை தேர்ந்த நடிப்பு….

ராதிகா சரத்குமார் தாயாக வாழ்ந்திருக்கிறார்.. என்னே ஒரு அநாயாசம்,,,காட்சிகளுக்குள் வந்து செல்லும் அவர் கடைசி வரை நெஞ்சில் நிற்கிறார்… நகைச்சுவையை இரட்டை அர்த்தம்களின் பொருள் கொள்ளாமல்  ரசிப்பு தன்மையுடன் இருக்கிறது   இதோ ஒரு உதாரணம்….கதாநாயகனை தேடிச்செல்லும் ஒரு காட்சியில் வேனை பின்பக்கம் எடுக்கும் போது ஒருவர் மீது ஏறி விடும் …அக்காட்சியில் கஞ்சா கருப்பு ஓட்டுனரை பார்த்து ஆயில் தானே வேணும்னு சொன்னே  ஏண்டா ஆயுளையே எடுக்கறே என கேட்கும் காட்சி..இது போல் பல காட்சிகள்..கதாநாயகனின் அக்காவுக்கும் அவர் கணவருக்கும் நடக்கும் குடும்ப உரையாடல்கள் நகைச்சுவையும், பொருள் பொதிந்தும் இருக்கிறது.

விஜய் சேதுபதி மீண்டும் ஒரு நல்ல நடிகர் என்பதை நீரூபித்திருக்கிறார்..எந்த காட்சியிலும் மிகையும் இல்லை..குறையும் இல்லை… மேலும் பல சிகரங்களை அவர் தொட வேண்டும்.. எடிட்டிங், இசை ( யுவன் சங்கர் ராஜா) என எல்லாம் தரம்…. ஒளிப்பதிவாளரை பற்றியும் அவசியம் சொல்ல வேண்டும்  ஒரு காட்சி  கலக்கி விட்டார்….வைகை அணையை மேலிருந்து படம் பிடித்த் அழகு …..கை குலுக்கி கொண்டே இருக்கலாம்.

இப்படத்தை பற்றி சிலாகித்து பேசவைத்த இயக்குநர் சீனு ராமசாமியை பாராட்டாமல் இருக்கவே முடியாது..படம் ரொம்ப நீளம் எனும் விமர்சனம் இருந்தாலும் இப்படம் பல கருத்துக்களை முன்வைக்கிறது.

மருத்துவமும் மருத்துவர்களும் சேவை நோக்கில் பணி புரிய துவங்கினால், என்னவெல்லாம் மாற்றங்கள் கண் முன் நிகழும் என்பதையும் , வறி நிலையில், அரசுகளால் கண்டு கொள்ளப்படாத மக்களுக்கு உதவும் ஒரு வேலையை மருத்துவர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும் எனும் கருத்து ஆழமாக பதிவிடப்படுகின்றது.

மனித நேயம் என்பது எப்போதும் ஜெயிக்கும் என்பதற்கு இரண்டு காட்சிகள்..

  1. கல்லூரியில் நடக்கும் ஒரு மோதலில் சக மாணவரை கதாநாயகன் அடித்து விடுகிறார்…பலத்த காயம்…பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் புகார் கொடுக்க..அதனால் பின் விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரை சந்திக்கும் காட்சி……பேராசிரியர் மாணவன் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என்று சொன்னவுடன் ..அமைதியாக தொலைபேசியை எடுத்து பேச எத்தனிக்கும் காட்சி…
  2. படத்தின் இறுதி காட்சிகளில் கதாநாயகனால் பாதிக்கப்பட்ட சக மாண்வன் தன்னுடன் படித்தவரை காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகள்….ஒன்றோடு ஒன்று சங்கிலி போல இணைவது மகிழ்ச்சியளிக்கிறது…

வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டும் வேலையல்ல….மாறாக மனிதர்களை சம்பாதிப்பதும் எந்த மனிதர்கள் நம்மை உருவாக்கினார்களோ அவர்களுக்கு மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் உயரிய கருத்தை வெளிப்படுத்தும் படம் .

இது போன்ற வாழ்வியல் அர்த்தங்களை சொல்லும் படங்கள் தான் பிற மொழிகளில் வெற்றி படங்களாக மாறுகின்றன…தமிழ் திரையுலகத்திலும் அது போன்ற மாற்றங்கள் நிகழ தர்மதுரை ஒரு துவக்கமாக அமையவேண்டும்,…சீனு ராமசாமி அவர்கள் அதை தொடர்ந்து செய்வார் என காத்திருப்போம் …நம்பிக்கையுடன்….

           என்.சிவகுரு

Related Posts