பிற

வாழும் மூதாதையர்கள் குறித்து வாழும் இளைஞன்…!!

உலகளவில் 5000த்திற்கும் அதிகமான பழங்குடி இனங்கள் உள்ளன என்றும், பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 37 கோடிக்கும் அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 11கோடி பழங்குடியின மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.


உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடியினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 36 பட்டியல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சுமார் 72 லட்சம் பேர் வாழ்கின்றனர். காடுகளில், மலைப்பகுதியில் மட்டுமல்ல பரவலாக அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் குறித்து ஆளும் அரசும் பெரும்பான்மையான சமூக மக்களும் கண்டுகொள்ளாத சூழலில்.அம்மக்கள் குறித்து பெரும்பான்மையான சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் முயற்சியாக வாழும் மூதாதையர்கள் புத்தகம் வெளிவந்திருப்பதாக பார்க்கிறேன்.


இப்புத்தகத்தின் ஆசிரியர் முனைவர்.அ.பகத்சிங் ஏற்கனவே முள்கிரிடம், சோளகர் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார் முந்தைய புத்தகங்களை போலவே இதுவும் கள ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது .
தொடர்ந்து உயிர் மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு தான் இப்புத்தகம்..
உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பழங்குடியினர் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுப்புத்தியில் ஊறிப்போன விஷமங்களை புத்தகத்தில் உள்ள தகவல்கள்தகர்தெறிகிறது.எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அடர் இருட்டில் வாழ முற்படும் இருளர்கள், துவங்கி வேட்டையாடி உணவு சேகரிக்கும் வாழ்வியல் முறையில் முழுமையாக ஈடுபடும் காடர்கள், மூலிகையை ஆய்வாளர்களுக்கு அறிமுகப்படுத்திய காணிகள், குறுமன்ஸ்கள், தோடர்கள், வரை 13 பழங்குடியின சமூக மக்களின் வரலாறு, பன்பாடு, அவர்களின் சமூக பொருளாதார நிலை, என பல தகவல்களை கள ஆய்வின் மூலமாகவும் பல்வேறு புத்தகங்களின் துணைகொண்டும் சுவாரஸ்யமான விஷயங்களை அள்ளி அள்ளித்தெளித்திருக்கிறார் புத்தக ஆசிரியர்.
ஒவ்வொரு சமூக பிரிவினர் குறித்து வாசிக்கும் போது ஆச்சர்யத்தில் நம் புருவங்கள் உயர்கின்றன.

1909ஆம் ஆண்டு எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும் புத்தகம் முதல் சிறு வெளியீடாக வெளிவந்த
கல்யானி எழுதிய
இளருனா எளக்காராமா..? எனும் புத்தகம் வரை
பழங்குடியின சமூக மக்கள் குறித்து ஏற்கனவே வெளிவந்த புத்தகங்களையும் இதில் அறிமுகப்படுத்துகிறார்.

இருளர்களின் இனக்குழுவிற்கு “கோவன்” என்னும் தலைவன் இருந்ததால் அவனது தலைமையின் கீழ் உள்ள வாழிடதிற்கு கோவனபுதூர் என்ற பெயர். இந்த பெயரே இன்று மருவி கோயம்புத்தூர் என்றானது. அதேபோல் தோடர் சமூக மக்கள் குடியிருக்கும் பகுதியை “ஒத்தைக்கல் மந்து” என்று அழைப்பார்கள் இதுவே தற்போது உதகமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பிற முக்கிய நகரங்களின் பெயருக்கு காரணமான இப்பூர்வகுடிகளின் வாழ்க்கை நிலை இன்னுமும் சாதி சான்றிதழ் பெறுவதற்கே பெறும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. பழங்குடியின மக்களின் பெயரில் உருவான எந்த நகரத்திலும் அவர்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும் அவர்கள் தன் உழைப்பின் மூலம் தன்னையும் தன் பண்பாடு மொழி கலாச்சாரம் அனைத்தையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சோளகர்கள் வாழும் பகுதியை வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில் வனத்துறை முழுவதும் கட்டுப்படுத்தி அம்மக்களை துன்புறுத்தியுள்ளனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் காவல்துறையினர், வருவாய் துறை அதிகாரிகளே இதில் ஈடுபவடுதால் அவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை, வாச்சாத்தி போன்ற சில இடங்களில் எதிர்த்து நின்றாலும் 20ஆண்டுகளுக்கு பிறகுதான் நீதி தவனை முறையில் கிடைக்கிறது.


ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 22 தமிழக பழங்குடியினர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். செம்மரம் கடத்த சொன்ன முதலாளிகளின் பெயர் கூட வெளியில் தெரியாது. அரசிற்கு பலியாடுகளாக பழங்குடியின மக்கள் மாறியுள்ளனர். இதில் மொழி வேறுபாடின்றி எல்லா மாநில அரசும் பழங்குடியினரை வேட்டையாடுகிறது.

உலகின் பல இடங்களில் காடுகள் திடிரென பற்றி எரிகின்றன அல்லது திட்டமிட்டு எரிக்கப்படுகிறது காடுகளை வன உயிர்களை அழிப்பதோடு முற்றிலுமாக பழங்குடியினரை காடுகளிலிருந்து வெளியேற்றி கார்ப்ரேட்களுக்கு தாரை வார்க்க துடிக்கும் அரசின் கொள்கைகளால் அதிகளவு பாதிக்கப்பட போவதே பழங்குடியின மக்கள் தான்.

ஒற்றை கலாச்சாரம் தான் இந்தியா என பேசி வரும் கூட்டத்திற்கு எதிராக பழங்குடியின சமூக மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரம் குறித்து பாடம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு இப்புத்தகம் நிச்சயம் உதவும்.புத்தகத்தின் வடிவமைப்பு குறித்தே அதிகம் எழுதலாம் இருளாக இருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை புத்தகத்திலாவது வண்ணமயமாக காட்டலாம் என்ற முயற்சியாக புத்தகம் முழுவதும் அம்மக்களின் புகைப்படங்கள் வண்ணமயமாக மிகச்சிறப்பாக அச்சிடப்பட்டுள்ளது அம்மக்களின் அழகியலை அப்படியே புகைப்படங்கள் பிரதிபலிக்கிறது.


புத்தக தாளின் தரமும் படமும்கூடுதல் செலவு என்றாலும் புத்தகத்தின் விலை நியாயமானதுதான் அனைவரும் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்…

-மோசஸ் பிரபு

Related Posts