தலையங்கம்

வாழவே நாம் போராடுகிறோம் ! (தலையங்கம் 2)

1024px-3D_Full_Spectrum_Unity_Holding_Hands_Conceptகடந்த 3 தினங்களில் 3 விதமான தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். முதலாவது தோழர் நீலவேந்தனுடையது, இரண்டாவது இலங்கைப் போராளி திலீபனது, மூன்றாவது புரட்சியாளர் பகத்சிங்கினுடையது.

மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்ட அளவில் இந்த ‘உயிர்த் தியாகங்கள்’ சமமானவை என்ற போதிலும், கூர்ந்து உள்வாங்கினால் அவற்றிற்கிடையே கூர்மையான வேறுபாடுகள் இருப்பதை அறியமுடியும். இவை மூன்றும், வெவ்வேறு காலத்தவை, வெவ்வேறு கோரிக்கைகளுக்கானவை.

இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தத்தை (1987 ஜூலை) புலிகள் ஏற்க மறுத்த பின்னணியில் திலீபனின் உண்ணாவிரதம் தொடங்கியது (1987 செப்டம்பர்). இப்போராட்டத்திற்கு பின்புலமாக ஒரு இயக்கம் செயல்பட்டது. அஹிம்சை வழி மரணமாக இருந்தபோதிலும், அந்த மரணம் ஏற்படுத்திய இன உணர்ச்சிப் பிரவாகம், இலங்கை வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபையை நிராகரிக்கச் செய்து, தமிழர்களின் ஒரு பகுதியை ஆயுதப் போராட்டப் பாதைக்கு வலுசேர்த்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை வலுவிலக்கச் செய்தது. 25 ஆண்டுகளில் எல்டிடிஇ நடத்திய அரசியலற்ற ஆயுதப் போராட்டம், இதர தமிழர் குழுக்களுக்கு இடையிலேயே படுகொலைகளை அதிகரித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் திலீபன் மரணத்தைப் பார்க்கவேண்டியுள்ளது.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின், தங்களின் புரட்சிகர நோக்கங்களை பரவச் செய்திட ஒரு பிரச்சார உத்தியாக பாராளுமன்றத்தில் கலகம் செய்வதென முடிவு செய்தனர். கைதுக்குப் பிறகு பகத்சிங் சொல்கிறார் “நாம் கைது செய்யப்பட்டுவிட்டோம் என்பதாலேயே எல்லாம் முடிந்துவிட்டதென்று நினைக்கக் கூடாது. முடிந்த அளவு தோழர்களை விடுதலை செய்ய வைக்க முயற்சித்துக் கொண்டே, ஒரு அரசியல் நோக்கத்தோடு, அரசியல் ரீதியிலே நாம் போராட வெண்டும்.”. அவர்களின் போராட்டம், மரணம் ஏற்படுத்தும் கொந்தளிப்பை மட்டும் நம்பியிருக்கவில்லை. மாறாக வழக்கு விசாரணை தொடங்கி, சாவுக்கு முந்தய சில நிமிடங்களிலும் தங்கள் அரசியல் நோக்கங்களை பரப்பவே பயன்படுத்தினர்.

தோழர் பகத்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார் “புரட்சி உலகத்தின் விதி … அதற்கு ரத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனி நபர் பலாத்காரத்துக்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கி ரவைகள் கொண்ட சம்பிரதாயமல்ல… புரட்சியின் உண்மையான வலு சமுதாயத்தை பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மாற்றவேண்டுமென்ற மக்களின் தீவிர விருப்பத்திலேயே இருக்கும்.”

நீலவேந்தனின் தற்கொலை மிக சமீபத்தியது. அது திட்டமிட்ட எழுச்சியை ஏற்படுத்தும் பின்னணியைக் கொண்டது அல்ல. ஆனால் அவரின் இறுதிக் கடிதத்தில் இருந்த வரிகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. சலிப்பூட்டக் கூடியதும், அளப்பரிய தியாகங்களை வேண்டி நிற்பதுமான ‘மக்களைத் திரட்டி, அரசியல்படுத்துதல்’ என்ற கடமையை தவிர்த்துவிட்டு, ‘தன்னை மாய்த்துக் கொள்ளுதல்’ என்ற எளிய பாதையில் ஒரு புதிய வரலாற்றை படைக்க முடியுமென, இளம் போராளிகள் எண்ணுகிறார்களோ? என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது.

போராட்டக் களம் நம்மிடத்தில் தியாகத்தைக் கோருவது உண்மைதான். அந்தத் தியாகம், பிழைப்புவாதம் தலைதூக்கியுள்ள அரசியல் களத்தில், அனைத்து மக்களுக்குமான கொள்கை லட்சியங்களை ஒளிரச் செய்வதாகும். வாழ்வதே நமது போராட்டம்!

Related Posts