இதழ்கள் இளைஞர் முழக்கம்

வாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்

நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் இளம் தலைமுறையான இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் இளைஞர்கள் பறப்பதற்கான இறகுகளை அவர்களுக்குக் கொடுப்போம் என்று வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியை உருவாக்கிய மன்மோகன்சிங் ஆட்சிக்காலம் குறித்து கிண்டல் அடித்த நரேந்திர மோடி 2014-ல் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்பேன் என்று வாக்குறுதிகளை அள்ளிவீசினார்.

2014 சுதந்திரதின உரையின் போது இன்று நாம் விரும்புவது வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை இளைஞர்களுக்கு மேலும் மேலும் உருவாக்குவதே. அதற்காக நாம் உற்பத்தி துறையை வளர்த்தெடுப்போம் என்று செங்கோட்டையில் நின்று அழகான வார்த்தைகளை அடுக்கி பேசினார் மோடி., அந்தாண்டு செப்டம்பர் 25-ம் தேதி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்து உலக முதலாளிகளே இந்தியாவில் தொழில் துவங்க வாருங்கள். இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று பகட்டான அறிவிப்பை வெளியிட்டார்.
வேஷம் போடும் பொய்கள்

தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட மோடியின் ஆட்சியின் முதல் ஆண்டு நிறைவில் என்ன நடந்தது என்று பார்த்தால் அவர் 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது மட்டுமே நடந்தது. ஆண்டுக்கு 120 லட்சம் பேர் உழைப்புச் சந்தைக்கு வந்து கொண்டிருக்கும் இந்தியாவில் மோடியின் முதல் ஆண்டு இறுதியில் காங்கிரசு ஆட்சிக்காலத்தையும் சேர்த்து 4.20 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இது மலைக்கும் மடுவுக்குமானதாகவே இருந்தது.

உற்பத்தித் துறையை பெருக்குவோம், வேலைவாய்ப்பை கூட்டுவோம் என்று அள்ளிவிட்ட மோடி ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் எவ்வளவு இந்த காலத்தில் வந்தது என்று பார்த்தால் சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வந்தது. அதில் 40 பில்லியன் டாலர்கள் ( 54 சதவீதம் ) நேரடியாக பங்குசந்தையில் மூதலிடு செய்யப்பட்டது. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 22 பில்லியன் டாலர் வந்ததில் 5 பில்லியன் டாலர் ( 22 சதவீதம் ) மட்டுமே பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டது. இந்த புள்ளிவிபரம் உரைப்பது மோடியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதற்கு மாறாக இரவு நேர பணமாக பங்குசந்தைக்கு வந்து பகல் நேரத்தில் வெளியேறும் பறக்கும் பணமாகவே முதலீடுகள் செய்யப்பட்டது. இதனால் எந்த வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நாங்கள் நடிக்க விரும்பவில்லை, செயல்படுகிறோம்

இடதுசாரிகளின் கடுமையான நிர்பந்தத்தின் காரணமாக 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கிராமப்புற வறுமையை போக்கும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழான திட்டத்தின் மூலம் ஒரளவு நிவாரணம் பெற்று வந்தார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மோடியின் முதலாண்டு ஆட்சி நிறைவுகாலத்தில் 2015 – 2016ல் 2.27 கோடி பேருக்கு வேலைவழங்கப்பட வேண்டிய நிலையில் 1.1 கோடி பேருக்கு ஆண்டுக்கு 50 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அதுவும் கடுமையாக தேவையான நிதி ரூ 60000 கோடிக்கு பதில் 42000 கோடி ரூபாய் மட்டுமே இந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளனர்.

நில எடுப்பு சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவாதத்திற்கே கொண்டு வராமல் அவசரச் சட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருந்த மோடி அரசு, அந்த சட்டம் அமலானால் 30 கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை பெறுவார்கள் என்று அள்ளி விட்டது. உண்மையில் உழைக்கும் சக்தியோடு இருப்பவர்களே 46 கோடி பேர்தான். இப்படி பட்டியல் போட்டால் இவர்கள் துறைவாரியாக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று எண்ணிக்கையில் சொன்னதைக் கூட்டினால் இன்னொரு இந்திய தேசத்தை புதிதாக உருவாக்கிட முடியும்.
இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி தள்ளுகிறது. அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்., என்பதில் தான் அதன் சூட்சமம் அடங்கியுள்ளது.

ஒற்றை குடையில் பன்மை இந்தியா

மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா என அறிவித்த மோடி இதன் மூலம் தனது வாய் ஜாலத்தை வெளிப்படுத்தினாரே தவிர எந்த முன்னேற்றத்தையும் வேலைவாய்ப்பு சந்தையில் உருவாக்க முடியவில்லை. கார்ப்ரேட்களுக்கான இந்தியாவை உருவாக்க பல இந்தியாக்களை மோடி அறிவித்துக்கொண்டே இருக்கிறார். ஒற்றை குடையின் கீழ் பன்மை இந்தியாவை கொண்டுவரும் கார்ப்ரேட் பண்பாட்டின் செயல்வடிவமே மோடியின் ஆட்சி. வியக்கத்தகு இந்தியாவை நான் உருவாக்குவேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தியா வருவதற்கு விசா எடுக்க எழுந்து நின்று வரிசையில் நிற்பார்கள் என்ற மோடியின் முழக்கம் சிரிப்பதா அழுவதா என்று தெரியாத அளவிற்கு இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது என்ற சினிமா வசனமே ஞபாகத்திற்கு வந்து தொலைக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் வேண்டுவது தேவையான நல்ல வேலைவாய்ப்புகளையே, சமூக பாதுகாப்பும். நல்ல வருமானமும் மிக்கதாகவும், வேலையின் மீது ஊக்கத்தையும், ஆக்கத்தையும், முழு திறனையும் உற்பத்தியையும் வெளிப்படுத்தக்கூடிய தன்மையிலும் தொழிலாளர்களுக்கு உருவாக்குவதாக அமைய வேண்டும். ஆனால் இந்த தன்மையில் இந்த வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.
2009ம் ஆண்டில் 12. 8 லட்சம் வேலை வாய்ப்புகளும், 2010ல் 8.70 லட்சமும், 2011ல் 9.29 லட்சமும். 2012ல் 3.21 லட்சமும், 2013ல் 4.19 லட்சம் வேலைவாய்ப்புகளும் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக இந்திய தொழிலாளர் நலத்துறை தெரிவிக்கிறது. ஆனால் மோடியின் இந்த மூன்றாண்டில் 2014ல் 4.35 லட்சமும், 2015ல் 1.35 லட்சமும், 2016ல் முதல் 9 மாதத்தில் சொற்பமான அளவே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரதான வேலைவாய்ப்பு பகுதிகளாக தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, சில்லரை வர்த்தகம் போன்ற துறைகளில் அதிகளவில் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நிலைமை என்னவோ எதிர்மாறாகவே உள்ளது. மோடி அரசின் திட்டங்கள் அனைத்தும் எண்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் எந்த பலனும் அற்ற முறையிலேயே உள்ளது.

இருக்கு ஆனா இல்ல

தற்போதைய உத்தரபிரதேச தேர்தலின் முடிவுகளுக்கு பின்னால் இவர்களின் குறுகிய மதவெறி அரசியலின் வெளிப்பாடாய் மாட்டுக்கறி பிரச்சனையை கையில் எடுத்ததன் விளைவு 25 லட்சம் பேருக்கு உபியில் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. மாட்டுக்கறி வெட்டும் கடைகளை மூடுவது என்ற பிஜேபி அரசின் நடவடிக்கை கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. 1000ரூ, 500ரூ பணமதிப்பு நீக்க நடவடிக்கைக் காரணமாக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சிறுபான்மை மக்களில் ஒரு பகுதியின் கடும் பாதிப்பையும் வேலையிழப்பையும் சந்தித்தனர்.

மோடி அரசின் அறிவிப்புகளால் இன்று இந்திய நாட்டின் கிராமப்புற வேலைவாய்ப்பை ஒரளவு வழங்கி வந்த விவசாயம் அது சார்ந்த துறைகள் அனைத்தும் மூடமாகிப் போயுள்ளன. வளர்ச்சி முன்னேற்றம் என்ற முழக்கங்களை வைத்து 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் தங்களுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் திரளிடம் பொய்யை மட்டும் அரிதாரமான வார்த்தைகளை மூலதனமாக கொண்டு ஏமாற்றி வருகிறார்கள், மக்களும் தங்களுக்கு விடிவு வாராதா என்ற நம்பிக்கையில் பொய்யை உண்மை என்று நம்பி காத்திருக்கிறார்கள்.
பொய் உடையும்

பொய் உடையும், உண்மை விளங்கும் நாள் வரும் போது இந்த எத்தர்கள் இருக்கும் இடட் எதுவென்று வரலாறு பல முறை நிரூபித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உழைப்பு சந்தைக்கு 120 லட்சம் பேர் வந்து சேரும் இந்தியாவில் இரண்டு கோடிபேருக்கு வேலை தருவேன் என்ற மோடியின் ஆட்சியில் 3 ஆண்டுகளிலும் சேர்த்து 7 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட தாண்டவில்லை என்ற நிதர்சனமான உண்மைக்கு பின்னால் ஏற்கனவே வேலையில் இருந்தவர்களில், 100 நாள் வேலைத்திட்டத்தில், இந்தியாவின் பிரதானமான தொழில்களில் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள் பல லட்சங்களை தாண்டும். வளர்ச்சி முன்னேற்றம் என்பதை அவர் பேசிக்கொண்டே இருக்கட்டும். நாம் வளர்ச்சி, மேம்பாடு ஏழைமக்களுக்கானது என்பதில் அழுத்தத்தோடு உரிய திட்டங்களோடு வெகுமக்களை, இளைஞர்களை சந்திப்போம். தேவையும், அளிப்பும் குறித்த பார்வை இல்லாத ஆட்சியாளராகவே மோடி காட்சி அளிக்கிறார்.

Related Posts